விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/சேதுபதி இல்லாத சீமையிலே
மறவர் சீமையின் முதல் குடிமகனான சேதுபதிக்கே அந்த மண்ணிலே உரிமை இல்லாது போயிற்று. ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்த மண்ணின் ஆதிக்கத்தை, அரசை, நிர்வாகத்தை ஆட்சிபீடத்தை அலங்கரித்தவர்களை, புனித சேதுவின் பாதுகாவலர் எனப் போற்றப்பட்டவர்களை ஆற்காட்டு நவாப் அவரது நாட்டினின்றும் அகற்றி விட்டார். அவர்கள் வழியினருக்கு அவர்கள் நாட்டில் வாழ்வதற்குக் கூட உரிமையில்லையே என மறக்குல மக்கள் பொருமி நைந்தனர். அந்த நிலையில் அதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஆட்சிமுறைக்கு மாறாக நவாப், பல மாற்றங்களைப் புகுத்தினார். இராமநாதபுரம் கோட்டை 'அலிநகர்' என அரசுப் பதிவுகளில் குறிக்கப் பெற்றது. ஆட்சி மொழியாக பாரசீக மொழி புகுத்தப்பட்டது தலைமுறை தலைமுறையாக முற்றுட்டாகவும், இறையிலியாகவும், சர்வ மான்யமாகவும், சீவிதமாகவும் சேது மன்னர்களால் வழங்கப்பெற்று, குடிகளால் அனுபவித்து வரப்பெற்ற கொடைக்காணிகள் புதிய நிர்வாகத்தினரால் பறிக்கப்பட்டு புதிய அரசின் அடிவருடிகளுக்கு கவுல் காணியாக வழங்கப்பட்டன.[1]
நிர்வாகத் தலைவர் அமுல்தார் என வழங்கப்பட்டார். அவரது வசூல் நடவடிக்கைகளில் உதவுவதற்காக அமீன், தாசில்தார், சதர் என வழங்கப்பட்ட புதிய அலுவலர்கள் பொறுப்பு ஏற்றனர். அவர்கள் மறவர் சீமை மக்களிடம் எவ்வித நியதிமின்றி கெடுபிடி வசூலை மேற்கொண்டனர்.[2] மகசூல் வசூலில் சர்க்காருக்கு சேரவேண்டிய மகசூல்தானியத்தை அளந்த பிறகும், எஞ்சியுள்ள மிகுதி தானியத்தை, ஊரில் உள்ள அத்தனை குடிகளுக்கும் பங்கிட்டு கொடுத்து அதன் மதிப்பை அவர்களிடமிருந்து வசூலிக்கும் குடியம்' என்ற முறையையும், அவர்கள் மேற்கொண்டனர்.[3] நிர்வாகப் பிரிவுகள் தாலுகா, கஸ்பா என வரையறுக்கப்பட்டன. அன்றாட நிர்வாகத்திற்கு. இசுலாமிய ஹிஜிரி ஆண்டு முறையும், அரசின் வரவு செலவிற்கு பாரசீக பசலி ஆண்டு முறையும் கையாளப்பட்டன. அதுவரை செலாவணியிலிருந்து சேதுபதிகளது சொந்த நாணயமும், டச்சுக் காரர்களது போர்ட்டோ நோவோ பக்கோடா என்ற நாணயமும் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்டு ஆற்காட்டு வெள்ளி ரூபாய்ப் பணமும், கும்பெனியாரின் ஸ்டார் பக்கோடா என்ற நாணயமும் அரசுச் செலாவணிக்குக் கொண்டு வரப்பட்டன. இவைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கு குழப்பத்தையும், நடைமுறையில் பல சிரமங்களையும் ஏற்படுத்தின. புதிய ஆட்சியாளர் மீது அருவருப்பும் பகைமையும் கொள்வதற்கு அவை உதவின. சீமை முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவியது.
இவைகளினால் பொறுமையிழந்த குடிமக்கள் பல பகுதிகளில் நவாப்பின் அலுவலருடன் சச்சரவிட்டு கை கலப்பில் ஈடுபட்டனர். வன்முறைகள் வளர்ந்தன. இயல்பாகவே போர்த் திறன் படைத்த மறவர்கள் சிறிய துப்பாக்கிகளையும், வாளையும், வேலையும் கொண்டு, அவர்களுக்கு தொல்லைகள் தந்த நவாப்பின் கூலிப்படையினரை ஆங்காங்கு எதிர்த்து மோதினர்.[4] அந்நியரின் ஆட்சியில் வரி வசூல் கொடுமை எந்த அளவிற்கு பரிணமித்து நின்றன என்பதை, இந்த மக்கள் கிளர்ச்சிகள் கோடிட்டுக் காட்டுவனவாக இருந்தன. இதேபோல, நெல்லைச் சீமைப் பாளையக்காரர்களை அடக்குவதில் முனைந்த ஆற்காட்டுப் படைகளும், ஆங்கிலக் கூலிப்படைகளும், பாஞ்சாலங்குறிச்சி, சிவகிரி, கொல்லங்கொண்டான் ஆகிய பாளைய பட்டுக்களில் அடைந்த தோல்வி மறவர் சீமையிலும் நவாப்பின் ஆதிக்கத்தை நீக்கிவிட இயலும் என்ற நம்பிக்கையை சாதாரண மக்களிடம் வலுப்பெறச் செய்தது. அண்மைப் பகுதியான சிவகங்கைச் சீமையில் நிகழ்ந்து வந்த அரசியல் மாற்றங்களும், அவர்களை ஊக்குவித்தன.
இராமநாதபுரத்தை கைப்பற்றிய நவாப், அடுத்த இருபது நாட்களில் சிவகங்கையையும், காளையார்கோவிலையும் கைப்பற்றி சிவகங்கைச் சீமையை, ஆற்காட்டுச் சர்க்காரில் இணைத்து விட்டார். 25.6.1772ல் காளையார்கோவில் போரில் சிவகெங்கை மன்னர் முத்து வடுகநாத பெரிய உடையார் தேவர் கொல்லப்பட்டவுடன் அவரது ராணி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராய பிள்ளையும் தப்பித்து மைசூர் மன்னருக்குச் சொந்தமான விருப்பாச்சியில் தஞ்சம் புகுந்தனர்.[5] மைசூரில் அப்பொழுது ஆட்சி செய்த ஹைதர் அலிகானும் அவர்களுக்கு ஆதரவு வழங்கினார். அவரிடம் மறவர் சீமையை நவாப்பிடமிருந்து மீட்பதற்கு தமக்கு படை உதவி வழங்க வேண்டுமெனவும் பிரதானி தாண்டவராயப்பிள்ளை கோரினார்.[6]
சிவகெங்கை பிரதானி, ஹைதர் அலிக்கு எழுதிய மடலில்[7] *கர்நாடக நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்து அழிவு ஏற்படுத்தி வருகிறார். தப்பித்து வந்த நான், கள்ளர் அணி ஒன்றுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். இந்தப் பணியில் எனக்கு யார் உதவி செய்தாலும், இன்னும் சிறந்த முறையில் சாதனைகளை ஏற்படுத்த முடியும். ஆகையால் தாங்கள் 5000 குதிரைகளையும் வீரர்களையும் திண்டுக்கல் கோட்டைக்கு அனுப்பி வைத்தால், அவர்களது செலவை நானே ஏற்று, அவர்களுடன் நானும் இணைந்து, அந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற முடியும். அத்துடன் மதுரைக்கும் படை அணிகளை அனுப்பிவைத்து அந்தப் பகுதியிலும் எதிர் நடவடிக்கைகளைத் துவக்க இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும், நமக்கு ஒத்துழைப்பு நல்குவர். தங்களுக்கு செலுத்த வேண்டிய நஜர் பற்றி பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்'. இந்தக் கோரிக்கைக்கு உதவுவதாக ஹைதர் அலி மன்னர் உறுதியளித்தார்.
பிரதானி தாண்டவராயபிள்ளை அப்பொழுது சிவகெங்கைச் சீமைக்கும், தொண்டைமான் சீமைக்கும் இடையில் உள்ள பாய்குடி என்ற காட்டில் தென்னந்தோப்பு ஒன்றில் தங்கியிருந்தார். நவாப்பின் நிர்வாகத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வந்ததுடன், மறைந்த சிவகங்கை மன்னரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சிவகெங்கைக்கு மன்னராக நியமித்து மறவர் சீமையில் ஆட்சியை நிலை நாட்ட பாடுபட்டு வந்தார். ஆங்காங்கு உள்ள நாட்டாண்மைகளுக்கெல்லாம் ஒலைகள் அனுப்பி வைத்தார். '. .தஞ்சாவூராரும், தொண்டைமானும் சேர்ந்து தமக்கு படையும், பொருளும் வழங்க சம்மதித்து இருக்கின்றனர். ஹைதர் அலி நாயக்கரது படை அணிகளும் இங்கு வர இருக்கின்றன. ஆதலால உங்களால் இயன்ற அளவு எல்லா வீரர்களையும், படைக்கலங்களையும் சேகரித்துக்கொண்டு நம்மிடம் வாருங்கள். எல்லோரும் இணைந்து இராமனாதபுரம், சிவகெங்கையைக் கைப்பற்றி விடலாம்' எனக் குறிப்பிட்டிருந்த ஒலை ஒன்றை தொண்டி அமுல்தார் கைப்பற்றிய பொழுதுதான் தாண்டவராய பிள்ளையினுடைய நடவடிக்கைகள் கும்பெனியாருக்குப் புலனாயிற்று. இதனை அந்த அமுல்தார் நவாப்பிற்குத் தெரிவித்துக் கடிதம் எழுதினார். [8]
இவையனைத்தும் மறவர் சீமையில், மக்களது கிளர்ச்சி தீவிரமடைந்ததற்கான அறிகுறிகளாகத் தென்பட்டன. பீதியடைந்த நவாப்பின் பணியாளர்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களில் மட்டும் இருந்து கொண்டு தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.[9] சிவகங்கைப் பகுதியின் நிலைமை இவ்விதம் இருக்க, இராமனாதபுரம் பகுதியில், ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைத் தேவர் தமது எண்ணங்கள் நிறைவேற மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எண்ணிச் செயல்பட்டார். இராமநாதபுரம் சீமையில், வடக்கு மேற்குப் பகுதியிலுள்ள குடிமக்களைத் திரட்டி, நவாப்பின் ஆட்சியை மறவர் சீமையினின்று அகற்றுவதற்கு போர்க்கொடி உயர்த்தினார். இராமநாத புரம் சீமையின் பெரும்பகுதி, அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தது.[10] நவாப்பின் ஆட்சி அங்கு பெயரளவில் தான் நடைபெற்றது. அதனை அடியோடு அகற்றி தலைநகரமான இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார்.
மைசூர் மன்னர் ஹைதர் அலிகானின் இராணுவ உதவியையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.[11] அப்போது மறவர் சீமையில், சுற்றுப்பயணம் செய்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் நாடு முழுவதும் பெரும் மாற்றம் ஒன்றினுக்கு ஆயத்தம் ஆவது போன்ற மாறுபட்ட சூழ்நிலையில் காட்சி அளித்ததாக தமது குறிப்புகளில் வரைந்து வந்துள்ளார்.[12] சேது நாட்டில் சேதுபதி இல்லாவிட்டாலும், சேதுபதியின் மாமனார் மாப்பிள்ளைத் தேவர் மன்னராக வந்தால் போதும் என்ற அளவில் மக்கள் மனநிறைவு கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர். இராமநாதபுரம் சீமையிலிருந்து நவாப்பின் ஆட்சி முழுமையாய் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
கி. பி. 1780-ம் ஆண்டு ஜனவரி மாதம் மைசூர் மன்னர் நவாப்பின் மீது மோதுவதற்குத் திட்டமிட்டார். சூறாவளி போன்று அதனைச் செயல்படுத்தினார். திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, சென்னை மீது மின்னல் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தார். இதற்கிடையில் பிரதானி தாண்டவராயபிள்ளை மரணம் அடைந்து விட்டதால் சிவகெங்கை அரசியாரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த மருது சகோதரர்கள் ஹைதர் அலியின் கர்நாடக படை எழுச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை தளபதி அளித்த ஓர் பெரிய படை அணியைக் கொண்டு சிவகெங்கை ராணியுடன் சீமைக்குள் நுழைந்தனர். நவாப்பில் கெடிபிடியில் சிக்கியிருந்த குடிமக்கள் மருது சேர்வைக்காரர்களையும் ராணியையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன் சிவகெங்கைச் சீமையின் விடுதலைக்கும் உதவினர். சிவகெங்கைக் கோட்டையைக் கைப் பற்றிய மருது சகோதரர்கள் மறைந்து போன சிவகெங்கை மன்னரது மனைவி வேலுநாச்சியாரை சிவகெங்கைச் சீமையின் அரசியாக அறிவித்து அவருக்கு உதவும் பிரதானிகளாக நியமனம் பெற்றனர்.[13]
இராமநாதபுரம் சீமையிலும் இத்தகையதொரு இறுதித் தாக்குதலைத் தொடுத்து இராமநாதபுரம் கோட்டையையும், இதர பகுதிகளையும் கைப்பற்ற மாப்பிள்ளைத் தேவர் முயன்றுவந்தார். அவரது முயற்சிக்கும் மைசூர் மன்னரது உதவி பின்னணியாக இருந்தது. தம்முடைய பிடிப்பினின்றும், சிவகெங்கையைப் போல மறவர் சீமையும் நழுவிச் செல்வதை உணர்ந்த நவாப், அதனைத் தடுப்பதற்கு வழி என்ன என்பதைச் சிந்தித்தார். சிறையிலிருக்கும் சேது மன்னர்தான் இந்தச் சூழ்நிலையில் தனது நிலையை தக்கவைக்க உதவ இயலும் என்ற முடிவுக்கு வந்தார். அந்தத் துறையில் செயல்பட்டார்.
பன்னிரண்டு வயது பாலகனாக இருந்தபொழுது சிறைப் படுத்தப்பட்டு திருச்சிக் கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்ட இளவரசர் முத்துராமலிங்கம், இருபது ஆண்டுகள் நிரம்பிய இளம் மன்னராக இராமனாதபுரத்திற்கு அழைத்து வரப்பட்டார்.[14] சிறையில் அவரது அன்னையார் இயற்கை எய்தியதால் அவாது தமக்கை மங்களேஸ்வரி நாச்சியார் மட்டும் உடன் வந்தார். இராமனாதபுரத்திற்கு திரும்பிச் செல்ல இயலுமா என எண்ணி ஏங்கி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த இளைஞர் முத்துராமலிங்கத்தின் இதயம் இராமனாதபுரம் கோட்டை வாயிலைக் கண்டவுடன் மகிழ்ச்சியால் படபடத்தது.
வரலாற்றுப் புகழ்மிக்க அந்த வாசல் எத்துணையோ வீர நிகழ்ச்சிகளை அவருக்கு நினைவுபடுத்தியது. மறவர் சீமையின் மகுடமாக விளங்கும் அந்த வாயிலில் இருந்து கி.பி. 1659-ல் ரகுநாத திருமலை சேதுபதி தலைமையில் புறப்பட்ட மறப்படை, மதுரையை முற்றுகையிட்ட மைசூர் படைகளை அழித்து. புறமுதுகிட்டு ஒடும்படி செய்ததுடன், அவர்களை கொங்கு நாட்டின் எல்லை வரை துரத்தி சென்று வந்து திருமலை நாயக்க மன்னரது மதுரை அரசை நிலைக்க வைத்தது. மேலும் மதுரை நாயக்கரது தயவிலே பாளையக்காரனாகிய எட்டப்பன், நாயக் கருக்கு அடங்காது கிளர்ச்சி செய்த பொழுது, அவனது பாளையத்தில் புகுந்து அவனது கொட்டத்தை அடக்கியதும், அந்தப் படைதான். மீண்டும் திருச்சிக் கோட்டையிலிருந்த மன்னர் சொக்கப்ப நாயக்கரை கி.பி. 1680-ல் சிறைப்படுத்தி வைத்திருந்த தளபதி ருஸ்தம்கானை கொன்று மன்னரை மீட்கக் கிழவன் சேதுபதியின் வீரர்கள் இங்கிருந்துதான் அணிவகுத்துப் புறப்பட்டனர். காலத்தால் செய்த உதவிகளையெல்லாம் மறந்து, மறவர் சீமை மீது ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட இராணி மங்கம்மாளது படையையும், அவரது தளபதி நரசையாவையும் இதே கோட்டைவாசலின் எதிரில் கி. பி. 1702-ல் வெற்றி வாகை சூடினார் கிழவன் சேதுபதி...
கோட்டை வாசலைக் கடந்தவுடன் கண்களில் படுவது கொற்றவை இராஜ இராஜேசுவரியின் திருக்கோவில். சேது எனப்படும் புனித திருவணையின் காவலர்களான சேதுபதிகளின் குல தெய்வமாக விளங்கும் அம்பிகை, மைசூர் படைகள் மீது கொண்ட வெற்றியின் நினைவாக மதுரை திருமலை நாயக்கர் மன்னர் ரெகுநாத சேதுபதிக்கு வழங்கிய அன்பளிப்புகளில் ஒன்றான அந்தப் பொற்சிலை அங்கு வைத்து வணங்கப்படுகிறது. இதற்கு எதிரில் உள்ள மரகத பலி பீடம் இராயவேலூரிலிருந்த குமார விஜய ரகுநாத சேதுபதியின் இளவலான தளபதி தெய்வ கண்ணியினால் கொண்டுவந்து நிர்மாணிக்கப் பட்டதாகும்.[15]
அடுத்துள்ள இராமலிங்க விலாசம் அரண்மனை, கிழவன் சேதுபதியும், அவரது அன்புக்குரிய அமைச்சர் வள்ளல் சீதக்காதியும் இணைந்து திட்டமிட்டு அமைத்த கலைப்பேழையாகும் அதன் மணி வாயிலில் அகத்திய முனிக்கும், அதிகம் கற்றபேர்கள் ஆயிரம் கவிவாணர் இருந்தனர்.[16] பன்னூல் வல்லுநர் புலவர் பெருமக்கள் தங்கள் நன்னூலைப் படித்து பொன்னும் மணியும், ஊரும் பெயரும் பரிசிலாகப் பெற்றுச் செல்லும் அரங்கம் அது. அழகிய சிற்றம்பலக் கவிராயரது தள சிங்க மாலையும், அமிர்த கவிராயரது ஒருதுறைக் கோவையும், சொக்கநாதப் புலவரது பணவிடு தூதும், தேவை உலாவும் அரங்கேற்றம் பெற்றதும், அவைகளுக்குப் பரிசிலும், இராஜ சிங்க மங்கலமும் பொன்னாங்காலும், புலவர் மான்யமாக வழங்கப் பெற்றது. அங்குதான். இன்னும் சேது நாட்டின் சீர் அலைவாய்க் கரையில் சங்கையும், முத்தையும் நத்தி வந்த போர்த்துக்கீசியரும் டச்சுக்காரரும், பொன்னையும் மணியையும், நிறைத்த பரிசில்களைத் தாங்கி, சேதுபதி தரிசனத்திற்கு காத்திருந்ததும் அங்குதான்.
அங்குள்ள அரசுக் கட்டிலில் அமர்ந்து, முன்னோர் பலர் பன்னூறு ஆண்டுகள் முறை திறம்பாது ஆட்சி செய்து வந்தனர். அதே அரசு கட்டிலில் அமர்ந்து இருந்த விஜய ரகுநாத சேதுபதி, தமது இரு பெண் மக்களது ஒரே கணவர் என்பதைக் கூட கருதாமல் பாம்பன் ஆளுநர் தண்டத் தேவருக்கு, சிவத்துரோகக் குற்றத்திற்காக தயக்கமின்றி கொலைத் தண்டனை வழங்கினார்.[17] தமிழும், தெய்வீகமும் தழைத்து வாழ நீதியும் வீரமும் நிலைக்க, சேதுபதிகள் பலர் செங்கோல் பிடித்து ஆட்சி செய்தது அதே அரசுக்கட்டில்தான். அந்தகட்டிலில் தாமும் அமர்ந்து, அந்த நீண்ட பெரும் தலைமுறையினரின் நியதியையும் பெருமையையும், காத்து ஆட்சி செலுத்த வேண்டும்...
கோட்டை வாசலைக் கடந்து இராமலிங்க விலாசம் அடைவதற்குள் இளவரசர் முத்து இராமலிங்கத்தின் மனத்திரையில் மின்னி மறைந்த எண்ணத் தொகுப்புகள் அவை. நவாப்பிடமிருந்து வந்த பட்டோலையையும், சேது நாட்டு மன்னராக அங்கீகரித்து வழங்கிய சன்னதையும்[18] பிரதானி சங்கர நாராயண பிள்ளை மன்னரிடம் வணக்கத்துடன் வழங்கிய பொழுதுதான், தாம் இராமலிங்க விலாசம் முன்னர் இருப்பதையும், பொதுமக்களும் அரசு அலுவலர்களும், குழுமியிருந்து தமக்கு வரவேற்பு வழங்க காத்து இருப்பதையும் மன்னர் உணர்ந்தார். கட்டியக்காரர்கள், சேதுபதிகளது விருதுகளை முழக்கவும், சாமரம் பிடித்த பணியாளர் கவரிகளை அசைத்து முன் செல்லவும், அரண்மனை முகப்பிலிருந்து சிங்காதன மேடை வரை விரிக்கப்பட்டிருந்த சீனப்பட்டில் நடந்து அரண்மனையின் தென்மேற்கு மூலையில் உள்ள சேதுபீடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த பீடத்தில் முதலாவது சேதுபதி மன்னர் அமர்த்தப்பட்டு, ஸ்ரீ இராமபிரானால் முடிசூட்டப்பட்டார் என்பது ஐதிகம்.[19] அந்த இருக்கையில் அமர்ந்து, புனித கங்கையில் நீராடி, மங்கலஉடை அணிந்து கொள்ளுதல், சேதுபதிகளது மரபு. தலைமுறை தலைமுறையாக கைக்கொள்ளப்படும் இந்த மங்கலச் சடங்கு முடிந்த பிறகு, வாளும் முடியும் புனைந்து, வாழ்த்தும் புகழ்ச்சியும் முழங்க, அரசு கட்டிலில் அமர்ந்தார் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி.
ஆற்காட்டு நவாப்பின் கொடுங்கோலாட்சியை அகற்ற மாப்பிள்ளைத் தேவர் தலைமையில் முனைந்து நின்ற பொது மக்களுக்கு இந்த முடிசூட்டுவிழா சிறிது ஏமாற்றத்தை அளித்தது. எனினும் தங்களது நாட்டில் பரம்பரை மன்னராட்சி மீண்டும் ஏற்பட்டதில், அவர்களுக்கு ஒருவிதமான மன நிறைவு. தமது திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப் பட்டதில் நவாப்பிற்கும் மகிழ்ச்சி. இளைஞர் முத்துராமலிங்கத்திற்கு சேது நாட்டின் மன்னராக ஆட்சியில் அமர்ந்ததில் பெருமிதம்; பூரிப்பு இன்னொருபுறம் ஆற்காட்டு நவாப்பிற்கு ஆண்டுக் காணிக்கை யாக ரூபாய் 1,75,000/-[20] அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதில் வருத்தம்: வெறுப்பு. இருந்தாலும், அந்நிய சீமையில், ஆண்டாண்டு காலமாக சிறையில் அடைபட்டு, அரசியல் கைதியாக பொழுதைக் கழிப்பதை விட, சொந்த சீமையில் ஆட்சியில் இருந்து கொண்டே, நவாப்பையும் அவர்களது பரங்கி நண்பர்களையும் இந்த புனித மண்ணிலிருந்து விரட்டிவிட ஒரு பெரும் வாய்ப்பு ஏற்பட்டது என்ற தன்னம்பிக்கை.
முடிசூட்டு விழா முடிந்து, அரசுப் பணிகளை முடித்து இராமலிங்க விலாசத்தின் மச்சு வீட்டில் அமர்ந்திருந்தார் மன்னர். குழப்பமான சிந்தனைச் சூழலில், சேதுபதியின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. பாண்டி மண்டலத்தின் பெரு மன்னராக விளங்கிய திருமலை மன்னரது தலையீட்டை எதிர்த்து இராமேஸ்வரம் களத்தில் வீரப் போரிட்டு மடிந்த மாப்பிள்ளை வன்னியத் தேவன்[21] ஆணவம்மிகுந்த இராணி மங்கம்மாளது அக்குரோணிச் சேனைகளை முறியடித்த மன்னர் மன்னன் கிழவன் சேதுபதி,[22] அண்டை நாடாக இருந்துகொண்டு அடிக்கடி தொல்லை தந்த தஞ்சை மராட்டியரை நிர்மூலம் செய்த விஜய ரகுநாத சேதுபதி,[23] தூத்துக்குடிக் கடற்படையை கீழக்கரைக்குக் கொண்டு வந்து நிறுத்தி, மிரட்டிய, டச்சுப் பரங்கிகளை துணிச்சலாக சிறையில் அடைத்த செல்லமுத்து சேதுபதி[24] ஆகியவர்களின் ஒவியங்களைக் கொண்ட அந்த மண்டபத்தில், அவர்கள் அனைவரும் நேரில்வந்து அஞ்ச வேண்டாம் என ஆறுதல் சொல்லுவது போன்ற பிரமையை மன்னருக்கு அப்பொழுது ஏற்படுத்தி இருத்தல் வேண்டும்.
- ↑ Mily. Cons., Vol. 143 (1772), p. 1033.
- ↑ Rajayyan, Dr. K., History of Madurai (1974) р. 2.66.
- ↑ Madurai D1. Records, Vol. 1103, pp. 18-25.
- ↑ Rajayyan, Dr. K. History of Madurai (1974), p. 266.
- ↑ Kathirvelu. Dr. S., History of Marawas (1972) p. 163.
- ↑ M. C. C., Vol. 21 (1772), pp. 282-83.
- ↑ M. C. C., Vol. 21 (1772), p. 282.
- ↑ м, с. с. . Vol. 2 1, 12-12-1772, р. 263.
- ↑ м. С. С., Vol. 21, 2-10-1772, p. 236. : М. С. С. , Vol. 43, 1-12—1772, p. 1033.
- ↑ Correspondence on Southern Polloms (1802), p. 28.
- ↑ м.с.с., Vol. 21, 12-12-1772, p. 282-83.
- ↑ Schwartz, Fr. Lr. Dt. 19–12–1780 (Pudukkottai State Records),
- ↑ Kathirvelu, Dr. S., History of Marawas (1972) p. 166.
- ↑ Mily. Cons. Vol. 74, 30–4–1781, p. 1076.
- ↑ பெருந்தொகை, மதுரை தமிழ்ச்சங்க பதிப்பு (1935) பாடல் : எண் 1300.
- ↑ பெருந்தொகை, மதுரை தமிழ்ச்சங்க பதிப்பகம் பாடல் எண் 1290
- ↑ Rajaram Row, Ramnad Manual. (1891), p. 287.
- ↑ M. C., Vol. 193, A. Sannath dated 7-3-1781, pp. 99-102
- ↑ Vanamamalai Pillai, N.. The Sethu and Rameswaram (1922), pp. 141.
- ↑ Rajaram Row, T., Ramnad Manual (1891), p. 322
- ↑ இராமப்பையன் அம்மானை (1950), பக். 54-58.
- ↑ Ranqucharya K. History of Madurai Nayak (1924), p. 213,
- ↑ Rajaram Row T. Ramnad Manual (1891), p. 238.
- ↑ Souhadri, V. K. Sethupati's of Ramnad (1972), Unpubli shud Thesis, p. 94.