விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்/கும்பெனியாரும் சேதுபதியும்

விக்கிமூலம் இலிருந்து

5
கும்பெனியாரும் சேதுபதியும்

1792-ம் ஆண்டு

மன்னர் முத்துராமலிங்க சேதுபதி தமது முன்னோர்களின் அடிச்சுவட்டில், சேது நாட்டை வளமை மிக்கதொரு தன்னரசு ஆக இருத்தி வைக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கில், வளமையையும் அமைதியையும் நிலவச் செய்யும் ஆக்கங்களில் முனைந்து இருந்த நேரம். அந்தத் திக்கில் தமது எண்ணம் ஈடேறும் நாளை நோக்கி எதிர்பார்த்து இருந்தார். அன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த பழமையான இரண்டு அரசுகளான தஞ்சையும், முகவையும், ஆற்காட்டு நவாப்பின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு வருடப் பணமான பேஷ்குஷ் தொகையை செலுத்த வேண்டிய நிபந்தனைக்குள் இருந்தன. இந்தக் கட்டுப்பாட்டுத் தளையையும் உதறி விட்டால். இதன் விளைவு நவாப்பின் கோபத்திற்கும், படையெடுப்பிற்கும் சேது நாடு மற்றொரு களமாகி விடும். போர் எனில் புளகாங்கிதம் கொள்ளும் புகழ் மறவர் படையெடுப்பு என்றால், அஞ்சிட மாட்டார்கள் அல்லவா? அஞ்சுவது அஞ்சாமை பேதமை ஆகிவிடுமா?

இத்தகைய இக்கட்டான நிலையில் உதவுவதற்காக பாண்டிச்சேரியிலுள்ள பிரஞ்சு நாட்டு கவர்னரை சேது மன்னர் எற்கெனவே அணுகியிருந்தார்.[1] அன்றைய தமிழக அரசியலில் ஆங்கிலேயருக்கு எதிர் அணியாக அரசியலில் போட்டியிட்ட வர்கள் பிரஞ்சுநாட்டவர். ஆற்காட்டு நவாப் அரசு கட்டிலுக்கு போட்டியிட்ட சந்தா சாகிப்பிற்கு பெரும் இராணுவ உதவி வழகி திருச்சி முற்றுகைப் போரில் ஆங்கிலேயருடன் நேரடி யாக பொருதியவர்களும் அவர்களே[2] அன்றைய தன்னரசுகளாக விளங்கிய தஞ்சை மன்னரிடமும், ஹைதராபாத் நிசாமிடமும், மைசூர் திப்பு சுல்தானிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களும் அவர்களே. மறவர் சீமையைப் பொறுத்தமட்டில், பிரஞ்சுக்காரர்கள், விஜயரகுநாத சேதுபதி மன்னர் (கி. பி. 1710-1720) காலம் தொட்டு தொடர்பு வைத்திருந்தவர்கள் கமுதிக் கோட்டையை உருவாக்கி அமைத்துக் கொடுத்தவர்கள் பிரஞ்சு நாட்டு வல்லுநர்கள் ஆகும்.[3] உலகப் புகழ்பெற்ற இராமேஸ்வரம் திருக்கோயிலின் நீண்டு சிறந்த மூன்றாம் பிரகார வடிவமைப்புக்கும் பிரஞ்சு நாட்டுப் பொறியாளர்கள் உதவியிருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிச்சேரியிலிருந்து, பிரஞ்சு நாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற மான்ஷியர் வெல்கோம்ப் மூலம் பிரஞ்சு சக்கரவர்த்தியுடன் பெற்றிருந்த இராஜியத் தொடர்புகளை சுட்டிக்காட்டி நவாப்பிடமிருந்து, மறவர் சீமையில் அரசியல் ஆக்கிரமிப்பை அகற்ற இராணுவ அணியும், வெடி மருந்து வசதிகளையும் கோரி மன்னர் தமது பிரதிநிதியாக மயிலப்பன் சேர்வைக்காரரை பாண்டிச்சேரியிலுள்ள பிரஞ்சு ஆளுநரிடம் அனுப்பி வைத்தார்.[4] இந்த இரகசிய நடவடிக்கைக்கு பிரஞ்சு நாட்டு ஆதரவு இருந்தது. ஆனால் உருப்படியான உதவிகளைப் பெறுவதில் தாமதம் நீடித்தது. ஒரு வேளை அப்பொழுது பிரஞ்சு நாட்டில் வெடித்த மக்கள் புரட்சி, அரசியல் குழப்பங்கள் ஆகிய அசாதாரண சூழ்நிலைகள்பிரஞ்சு ஆயுத அணி, மறவர் சீமைகள் நுழைவதற்கு இடர்ப் பாடாக இருந்திருக்க வேண்டும்.!

இதற்கிடையில், மறவர் சீமையின் ஆதிக்கத்தை மிகுந்த பிரயாசையுடன் கி. பி. 1772-ம் ஆண்டு படையெடுப்பின் மூலம் நிலைநாட்டிய நவாப் முகமது அலி, அதனை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஒரு உடன்படிக்கையின் மூலம் தாரை வார்த்துக் கொடுத்தார்.[5] எதிர்பாராத இந்த அரசியல் திருப்பத்திற்கு காரணங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. கர்நாடக நவாப்பின் ஆட்சி பீடத்திற்கு சந்தா சாகிபுவுடன் போட்டியிட்ட முகம்மது அலியை, ஆங்கிலேயர் தங்களது ஆயுத உதவியாலும், இராஜ தந்திரத்தாலும் வெற்றிபெறச் செய்தனர். ஆனால் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்கள்-நெல்லைச் சீமை பாளையக்காரர்களது கிளர்ச்சி, கமமந்தான் கான்சாகிப்பின் மதுரைப் புரட்சி, மதுரைச் சீமை ஆளுநரான நவாப்பின் தமையன் மாபூஸ்கானின் துரோகம், மறவர் சீமை, தஞ்சைத் தரணி படையெடுப்புக்கள், மைசூர் மன்னர் ஹைதரலியுடன் கர்நாடகப் போர், பிரஞ்சுக்காரர்களது சென்னை முற்றுகை-ஆகிய அரசியல் மோதல்களினால் நவாப் முகமதலி முழுமையாக கிழக்கிந்தியக் கப்பெனியாரது படைபலத்தைப் பெற்று சமாளிக்க வேண்டியதிருந்தது. இதன் காரணமாக நவாப் போர் நடவடிக்கைகளுக்கான பெருஞ்செலவை கும்பெனியாருக்கு கடனாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் எழுந்தது. அத்துடன் ஆற்காட்டிலிருந்து சென்னை சேப்பாக்கத்தில் குடியேறுவதற்கு பிரம்மாண்டமான மாளிகையினை, (1783-1771) பல ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் தொகையை ஆங்கிலேயரிடம் மிகக் கூடுதலான வட்டிக்கு (20 முதல் 30 சதவீதம்) பெற்று-அமைத்து கும்மாளம் போட்ட ஆடம்பரச் செலவுகளும்[6] சேர்ந்து நவாப் முகமதலியின் கழுத்தை நெறித்தன.

இவைகளை சமாளிப்பதற்காக, அவர் பல சலுகைகளை ஆங்கிலேயர்களுக்கு வழங்கி வந்தார். முதலில் கி. பி. 1763-ல், இன்றைய செங்கை மாவட்டத்தை கும்பெனியாருக்கு நல்லெண்ண நடவடிக்கையாக விட்டுக் கொடுத்தார். நவாப்பின் கைப்பற்றுதலில் உள்ள நெல்லைச் சீமையின் வரி வசூலை மேற்கொள்ளும் உரிமையை அடுத்து, கும்பெனியார் பெற்றனர்.[7] அடுத்து, கர்நாடகத்தில் நவாப்பிற்கு வரவேண்டிய வருவாய் இனங்களை வசூலித்து அதில் ஆறில் ஒரு பகுதியை மட்டும், நவாப்பிற்கு அளித்து விட்டு எஞ்சிய தொகையை அவர் பட்ட கடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வியாபாரத்திற்காக இந்த நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர் இந்த நாட்டு அரசியலில் நேரடியாகப் பங்குகொள்ளத் துவங்கினர். நிர்வாகப் பணிகளை நிறைவேற்ற அவர்கள் தனியான நிர்வாக அமைப்பு ஒன்றினையும் (போர்டு ஆப் அசைன்டு ரெவின்யூவையும்), அதில் பணியாற்ற பேஷ்குஷ் கலெக்டர்களையும், கி. பி. 1786-ல் நியமனம் செய்தனர். கி.பி. 1787-ல் நவாப்புடன் பாதுகாப்பிற்கான உடன்படிக்கையைச் செய்து கொண்டு அவரது ஆதிக்கத்திலிருந்த அனைத்துக் கோட்டைகளையும் பராமரிப்பு செய்வதாக நடித்து தங்களது பொறுப்பில் கொண்டு வந்தனர். அதற்கான நிதி வசதியையும் நவாப்பிடம் பெற்றனர். தமிழக வரலாற்றில் ஒரு புதிய அரசியல் திருப்பத்தைச் சுட்டுகின்ற முக்கியமான ஆவணமாக[8] இந்த உடன்பாடு விளங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர்கள் நவாப்புடன் செய்து கொண்ட உடன்பாட்டினால்[9] எழுந்துள்ள குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக வரையப்பட்டது போன்ற தொடக்க வாசகங்கள் இதில் காணப்பட்டாலும், இந்த உடன்பாடு முழுக்க முழுக்க அந்நாட்டு நவாப் வாலாஜா முகம்மதலியின் இயலாத் தன்மையை பரிதாபமாக பிரதிபலிப்பதுடன், அவரிடம் எஞ்சியுள்ள அரசியல் அதிகாரங்களையும் கும்பெனியாருக்கு கொடுத்துவிடும் தான சாசனமாக உள்ளது.


இந்த உடன்பாட்டின் மூன்றாவது நிபந்தனை, ஏதாவது போர் அபாயம் ஏற்படும் பொழுது கர்நாடகப் பகுதி முழுவதையும் கும்பெனியாரே பொறுப்பு ஏற்க வேண்டியது. நவாப்பினது தனிப்பட்ட ஜாகீர்களைத் தவிர, கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கோட்டைகளின் பாதுகாப்புப் பணியும் கும்பெனியாரைச் சார்ந்தது.


நான்காவது நிபந்தனைப்படி கர்நாடகத்தில் ராணுவ தளங்களைப் பராமரிக்க நவாப் ஆண்டுதோறும் கும்பெனியாருக்கு ஒன்பது லட்சம் ஸ்டார் பக்கோடா பணத்தை பங்குத் தொகையாகக் கொடுக்க வேண்டும். மேலும் பழைய கடன் பாக்கிக்காக 6, 21, 105 ஸ்டார் பக்கோடா பணமும் செலுத்த வேண்டும்.

ஐந்தாவது நிபந்தனைப்படி கும்பெனியார், நவாப்பிற்கு கட்டுப்பட்ட பாளையக்காரர் அனைவரிடமிருந்து ஆண்டு செலுத்த வேண்டிய பேஷ்குஷ் தொகை 2,64,704 ஸ்டார் பக்கோடா பணத்தையும் வசூலித்து முன் கடனுக்காக வரவுவைத்துக் கொள்ள வேண்டியது.

ஆறாவது நிபந்தனைப்படி, கும்பெனியார், நவாப்பின் பெயரால் பாளையக்காரர்களிடத்து அதிகாரங்களை செலுத்திக் கொள்வது.

ஏழாவது நிபந்தனைப்படி, நவாப் ஆண்டுதோறும் பாளையக்காரர் பேஷ்குஷ் தொகையைக் கழித்துக்கொண்டு பத்து தவணைகளில் 12, 56, 400 ஸ்டார் பக்கோடா பணம் செலுத்த வேண்டும்.

இந்த தொகையை குறிப்பிட்ட தவணை நாளுக்கு பதினைந்து நாட்கள் முன்னதாகச் செலுத்த நவாப் தவறினால், நவாப்பிற்குச் சொந்தமான திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நெல்லூர், வடஆற்காடு, பழநாடு, ஓங்கோல் சீமைகள் அனைத்தையும் அல்லது அவைகளில் ஒரு சீமை வரி வசூலை கும்பெனியார் மேற்கொள்ள வேண்டியது. பாக்கி முழுவதையும் வசூலித்த பிறகு அந்தச் சீமையை மீண்டும் நவாப்பிற்கு கொடுத்துவிட வேண்டியது. இரண்டாவது தவணையிலும் நவாப் பணம் செலுத்துவதில் தாமதம் செய்தால், மேலே சொன்னவாறு மேற்கொள்ளப்பட்ட சீமையை கும்பெனியாரே நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டியது என்பது உடன்பாட்டில் எட்டாவது நிபந்தனை.

மேலும், நவாப்பிற்குப் பதிலாக, பாளையக்காரர்களிடமிருந்து தேசகாவல் பணிக்கான, பாரம்பரியமான ஆண்டுக் காணிக்கைகளை அவர்களே பெற்றுக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர். இந்த உடன்பாட்டைத் தொடர்ந்து மறவர் சீமையை மூன்று ஆண்டு கால நிர்வாகத்திற்கு ஒப்படைப்பில் பெற்றனர்.

இத்தகைய, விபரீதமான முடிவிற்கு வர ஆற்காட்டு நவாப்பினை உந்திய காரணங்கள் எவை என்பதை விளக்க உதவும் ஆவணம் எதுவும் இல்லை (ஒரு வேளை இதுவரை மொழியாக்கம் செய்யப்படாமல் பாரசீக மொழியிலுள்ள நவாப்பினது கடிதத் தொகுப்புக்கள் மொழியாக்கம் பெற்றால் விளக்கம் பெற உதவலாம்).

முதுமையிலும் கடன் சுமையிலும் முதிர்ந்துவிட்ட முகமதலி நவாப் கொண்ட அவசர முடிவா? அல்லது மறவர் சீமையின் நிச்சயமற்ற சூழ்நிலையா?

அப்பொழுது இலங்கையில் காலூன்றி விட்ட ஆங்கிலேயருக்கு, எதிர்க்கரையான மறவர் சீமை எதிர்காலத்தில் தங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கருத்தில் அவர்கள் நவாப்பை வற்புறுத்திப் பெற்ற தானமா?

இந்த வினாக்களுக்கு விடை காண இயலாதவையாக உள்ளன. என்றாலும், 9-7-1791ம் தேதியிட்ட கும்பெனியாரது ஆவணத்தின்படி தஞ்சை தரணியையும், எஞ்சியுள்ள தமிழ்நாட்டில் நவாப்பிற்கு ஆதிக்கம் உள்ள அனைத்துப் பகுதிகளையும், தங்களது நிர்வாக கட்டமைப்பில் கொண்டுவர அவர்கள் துடித்துக் கொண்டிருந்தனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.[10] நவாப்பின் முடிவிற்கான காரணம் எதுவாக இருந்தாலும், ஆங்கில ஆதிக்கம் தமிழ்நாட்டில் நிலைகொள்ளுவதற்கு முதன் முதலில் வளமையற்ற மறவர் சீமையின், மண்ணைத் தேர்வு செய்தவர்கள் மதியூகிகள் என்பதை வரலாறு விளம்புகிறது. தமிழக வரலாற்றினை ஈர்த்து இழுத்துச் செல்லும் இத்தகைய எதிர்பாராத உத்திகள் சேதுபதி மன்னரது சாதனைகளுக்கு பெரும் சோதனைகளை உருவாக்கின. அத்துடன் இராமநாதபுரத்திற்கும், சிவகங்கைக்கும் இடையில் எழுந்த பிணக்குகளும், மோதல்களும் இராமநாதபுரம் அரசியலை பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்று விளிம்புகளுக்கு விரைவாக நெருடி நெருக்கின.


  1. Kuthirvol. S. Dr. History of Marawas (1700-1800), р. 2.21.
  2. Robert Oorme, Military Transactions in Indoostan, Vol. I, (1861), p. 200.
  3. Rajaram Row, T., Ramnad Manual (1891) p. 180
  4. Kathirvel, S. Dr. History of Marawas (1977), pp. 220-22
  5. Karnatic Treaty, 1792, 15-7-1792
  6. The Hindu (Madras) The Former Residence of Arcot' (3-0-1963)
  7. Rajayyan. Dr. K., Administration and Society in Carnatic (1966)
  8. Aitchison, Collection of Treaties, Vol. 5
  9. Ibid., Vol. 5, No. 8 L.
  10. Mily. Cons, Vol. 136, 9-7-1791, p. 2066