உள்ளடக்கத்துக்குச் செல்

எனது நண்பர்கள்/தமிழ்த்தென்றல்

விக்கிமூலம் இலிருந்து
தமிழ்த் தென்றல்

மிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த் தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர்.

பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஓய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாதமுதலியார் அவர்களுடன் இருந்து: எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு.

மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள்கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம் கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.

‘தேச பக்தன்’ என்ற ஒரு தினசரியை நடத்தி, அதன் ஆசிரியராக இருந்து, அதன் தலையங்கங்களில் சிக்கலான செய்திகளைக்கூட எளிய தமிழில் முதன் முதலாக எழுதி வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.

அக்காலத்தில் அரசியல் கூட்டங்களில் பல தலைவர்கள் ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். அத்தகையோரை மீறி, நல்ல தமிழில் அரசியல் மேடைகளில் பேசி, பொது மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பெரும்: பாராட்டுதலைப் பெற்றவர் திரு. வி. க. அவர்கள்.

புதுமையான கருத்துக்களைக் கொண்ட சிறந்த நூல்கள் பலவற்றை அழகிய தமிழ் மொழியில் எழுதி அவர் தமிழ் மக்களுக்கு வழங்கியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரியது. அவற்றில் மிகச் சிறந்து விளங்குவது “பெண்ணின் பெருமையும்”, “காந்தியடிகள் வரலாறும்”.

அக்காலத்தில் தமிழகத்தை அரசாண்ட ஆங்கிலேயர்கள் திரு. வி. க. அவர்கள்மீது தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டிச் சிறையில் அடைத்து விட்டனர். அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவர்கள் சர் P. தியாகராஜ செட்டியார் அவர்களும், சர் P. T. ராஜன் அவர்களும், கவர்னர் அவர்களிடம் தூது சென்று அவர்களை விடுவித்து மகிழ்ந்த செய்தி இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஒரு முறை குற்லாலத்தில் நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம். திரு. வி. க. அவர்கள் அருகிலுள்ள வ. வே. சு. ஐயரைப் பார்க்கச் சென்றபோது, என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது, அவர் சொல்லிய, சொற்களைக் கண்டு நான் பெரிதும் வியந்தேன். அச்சொற்கள்:

‘‘இவர் திருச்சி இளைஞர். விசுவநாதம், ஈவேராவின் தொண்டர். நாயக்கருக்கு செல்லுமிடமெல்லாம் இப்படிப்பட்ட நல்ல இளைஞர்கள் கிடைத்து விடுகிறார்கள், நமக்குக் கிடைப்பதில்லை. என்ன செய்வது” என்பது தான.

பெரியாரைக்கொலை செய்யும்படி மறைமலையடிகள் தூண்டினார் என்று அடிகளார்மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அதைக் கண்டு பெரிதும் கவலைப்பட்டுப் பல்லாவரத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போய் மறைமலையடிகளிடம் ஒரு கடிதத்தை வாங்கச் செய்து அதைப் பெரியாரிடம் காட்டி, அவ்வழக்கைத் திரும்பப் பெறச் செய்தற்கு முதற்காரனமாயிருந்து என்னைத் தூண்டியவரும் திரு. வி. க. அவர்களேயாவார்.

திரு. வி. க. அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள தன்னுடைய வரலாற்று நூலில் என்னைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அது அவர் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்திருக்கிறது.

பிறகு வயது முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயல் இழந்து, அவரது இல்லத்தில் இருக்கும் பொழுது பலமுறை சென்று அவர்களைப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அவரைப் பார்க்கும்பொழுது டாக்டர் மு. வ. அவர்களையும் அங்குக் கண்டு மகிழ்வேன். டாக்டர். மு. வ. தமிழ்த் தென்றலைத் தன் தலைவராகவும் தனது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்தவர். அதுமட்டுமல்ல; இறுதிக் காலத்தில் அவரருகில் இருந்து அவருக்குத் தொண்டும் புரிந்து வந்தவர்.

ஒரு தடவை நான் திரு. வி. க. அவர்களிடம் சென்ற பொழுது, டாக்டர் மு. வ. என்னிடம் கூறினார். “ஐயா அவர்கள் இப்பொழுதும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள் என்றும், அந்நூலுக்கு “படுக்கைப் பிதற்றல்” என்று பெயர் வைத்து ‘உலகை நோக்குமின்’ என்று தொடங்கப் பெற்றிருக்கிறது” என்றும் கூறினார்கள்.

தமிழ்ப் புலவர்கள் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களுக்கென எந்த இலக்கியங்களைச் செய்தாலும், அந்நூல்களுல் முதற் பாட்டில் முதலடியில் முதற் சொல்லாக உலகத்தை வைத்துச் செய்யும் ஒரு மரபை திரு. வி. க. அவர்களின் படுக்கைப் பிதற்றலிலும் கண்டு வியந்தேன்.

மற்றொரு முறை காணச் சென்றபொழுது கூனிக் குறுகித் தரையில் முடங்கிக் கிடந்தார்கள். அப்பொழுதும் டாக்டர் மு. வ. அவர்களை அங்குக் கண்டேன். ‘‘காலமெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்துள்ள இந்தத் தமிழ் உடல் தங்கியிருக்க ஒரு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு. அதிலும் வீட்டைக் காலி செய்யும்படி விட்டுக்காரர் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு விடுத்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியவில்லை. நாமெல்லாம் சேர்ந்து நிதி திரட்டி ஒரு வீடு வாங்கி வைப்பது நலமாகும்” என்று டாக்டர் மு. வ. கூறினார்.

அப்படியே செய்வோமென்று செட்டி நாட்டரசருக்கும், மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாருக்கும், சர். பி. டி. இராஜனுக்கும், W. P. A. சௌந்திர பாண்டிய நாடார் அவர்களுக்கும் நான்கு கடிதங்களை அங்கிருந்து எழுதி அனுப்பி, திருச்சி வந்து சேர்ந்தேன்.

சில நாட்கள் கழித்து கருமுத்து அவர்களிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. உடைத்துப் பார்த்தேன், அவர் திரு. வி. க. அவர்களுக்கு அனுப்பியிருந்த பெருந் தொகைக்குரிய காசோலை ஒன்றும், அவர் அதை ஏற்க மறுத்து திரு. செட்டியாருக்கே திருப்பி அனுப்பி எழுதியிருந்த கடிதத்தின்படியும் இருந்தன. திரு. வி. க. கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சொற்றொடர் என்ன தெரியுமா?

‘‘நான் வாழ்நாளெல்லாம் செய்யாத ஒரு தவறை இக்கடைசி நாளில் செய்யும்படி என்னை வற்புறுத்த மாட்டீர்களென நம்புகிறேன்’’ என்பதுதான். இதை, நான் டாக்டர் மு. வ. வுக்கு அறிவித்தேன். அவரும் என்னைப் போலவே இம்முயற்சியைக் கைவிட்டு விட்டார்.

கடைசியாக ஒரு முறை நான் கண்டபொழுது திரு. வி. க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். ‘‘கி. ஆ. பெ. வந்திருக்கிறார்’’ என்று டாக்டர் மு. வ. அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூறினார். திரு. வி. க. கையை அசைத்து உட்காரச் சொன்னார். நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு,

"ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?"

என்று கேட்டேன்.


அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு

“நாடு இருக்கிறது......மொழி இருக்கிறது...... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள். பார்த்துக்கொள்ளுங்கள்’’

என்று கூறினார்கள். நாங்கள் கண் கலங்கினோம்.

‘இப்போது இவ்வாறு சொல்ல யார் இருக்கிறார்கள்?’ என்று எண்ணும் பொழுது, உள்ளம் வேதனையையே அடைகிறது. என் செய்வது? செய்வது ஒன்றுமில்லையென்றாலும், வாய் திறந்து வாழ்த்தவாவது செய்யலாம் அல்லவா!

வாழட்டும் திரு.வி.க. புகழ்!

வளரட்டும் திரு.வி.க. மரபு!