எனது நண்பர்கள்/அரசரும் நானும்

விக்கிமூலம் இலிருந்து
 
அரசரும் நானும்


செட்டி நாட்டு அரசர் பெரியவர் ராஜா சர்.மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் செட்டி நாட்டு அரசர் மட்டுமில்லை; தமிழகத்தின் மன்னராகவே திகழ்ந்தவர்.

இவர்களை நான் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு அறிவேன். 1921இல் நீதிக் கட்சியின் திருச்சிக் கிளையின் செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தேவையென முடிவு செய்யப்பெற்றது. அச்செய்தி அக்காலத் திராவிடன் நாள் இதழில் வெளி வந்தது. அதன் தொடர்பாகவே அரசரது தொடர்பு ஏற்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமையும் பொழுது, அது ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாக இல்லாவிட்டாலும், அதனை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகவே எண்ணி மகிழ்ந்த தமிழக மக்களில் நானும் ஒருவன்.

பேராசிரியர்கள் கா. சுப்பிரமணிய பிள்ளை, நாட்டார் ஐயா, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் பலர் அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்ததாலும், அப் பல்கலைக் கழகம் தமிழறிஞர்கள் பலரைத் தோற்றுவித்து உலகிற்கு உதவியதாலும், அப்பல்கலைப் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகமாகவே காட்சியளித்ததில் வியப்பு ஒன்றுமில்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே காணமுடியாத ஒரு நிகழ்ச்சி அண்ணாமலைப் பல்கலைக் கழக அமைப்பு ஆகும். செட்டி நாட்டு அரசர் அவர்கள் தம் சொந்தப் பணத்தைக் கொண்டு இப் பல்கலைக் கழகத்தை நிறுவியதைக் கண்டு, தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள மக்கள் பலர் பாராட்டினர். இதன் விளைவாகவே அவருக்குக் “கொடை வள்ளல்’’ என்ற பட்டம் வழங்கப் பெற்றது.

இப் பல்கலைக் கழகத்தில் ‘சாஸ்திரி ஹால்’ என்று ஒன்று உண்டு. அதில் எல்லாக் கூட்டங்களும் நடைபெறும். தமிழ்க் கூட்டம் ஒன்று மட்டும் நடைபெறாது. இச் செய்தியை அறிந்த நான் அரசரிடம் முறையிட்ட பொழுது அவர்கள் என்னையே அழைத்துத் தமிழ்க் கூட்டம் ஒன்றைத் தானே வந்திருந்து நடத்தி, நாவலர் டாக்டர் சோமசுந்தர பாரதியார் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும்படி செய்தும் மகிழ்ந்தார்கள். இது நான் பெற்ற பேறுகளில் ஒன்று.

அப் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் அரசியல் கட்சிக் கொடிகள் பலவற்றைக் பலவிடங்களில் தரையில் மட்டுமல்ல மரத்தின் மீதும் உயர உயரக் கட்டிப் பறக்க விட்டிருந்தனர். இதனைக் கண்ட அரசர் வருந்தி என்னை அங்கு வரவழைத்தார். ஒரு நாள் மாணவருடன் மாலையும் இரவும் பேசி அக்கொடிகள் அனைத்தும் அகற்றப் பெற்றன. அரசர் பெரிதும் மகிழ்ந்தார்கள.

சரியான ஆண்டு என் நினைவில் இல்லை. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி மகாநாடு தஞ்சை நகரில் நடந்தது. அம்மகாநாட்டின் பெரும்பணி அதற்கு ஒரு தலைவரைத் தேர்ந்து எடுப்பது. இதற்காகப் போட்டியிட்டவர் பொப்பிலி அரசரும், V. முனிசாமி நாயுடும் ஆகிய இருவர். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆந்திராவிலிருந்து ஏராளமான வாக்காளர்களைத் தஞ்சையில் கொண்டு வந்து குவித்தார்கள். இதற்காகத் தனி இரயில் வண்டிகளும் பல வந்தன. அக்காலத்தில் தஞ்சை நகர மக்களின் எண்ணிக்கை இப்பொழுது உள்ளதில் சரிபாதிதான். ஆனால் நகரம் முழுதும் ஆந்திரர்களின் எண்ணிக்கையும், அந்நகர மக்களின் எண்ணிக்கையோடு சம அளவில் இருந்து, தஞ்சை நகரமே ஒரு தெலுங்கு நாட்டின் நகரமாகவே காட்சியளித்தது. இத்தனை பேருக்கும் மனம் சலியாமல் பெருஞ்சோறு அளித்து மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். இக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததோடு, பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த தமிழ் மன்னன் உதியன் சேரலாதனையும் நினைப்பூட்டியது.

செட்டி நாட்டு அரசர் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக் கோயில்களுக்கும் அளித்த கொடைகள் மிகப் பல. அவை சொல்ல முடியாதவை.

தமிழிசையானது தமிழகத்திலேயே அழிக்கப் பெற்று வரும் கொடுஞ் செயலைக் கண்டு மனம் புழுங்கி வருந்தி அதை மீண்டும் உயிர்ப்பிக்கப்பெரும்பணி புரிந்த மன்னர் செட்டி நாட்டு அரசர். அதற்காக ஒரு இயக்கத்தையே தொடங்கி, அவர் தலைவராக இருந்து, அதற்காக என்னையும் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களையும் கூட்டுச் செயலாளராக வைத்து, எங்களை ஒயவிடாமல் வேலை வாங்கிய பெருமை ராஜா சர் அவர்களைச் சாரும். கும்பகோணத்தில் ஒரு தமிழிசை மகா நாட்டைக் கூட்டி டைகர் வரதாச்சாரியார் அவர்களைத் தலைமை வகிக்கச் செய்து, ஒரு பெரும் புரட்சியைச் செய்தார். அன்று நான் பேசிய பேச்சை பல லட்சக்கணக்கில் அச்சிட்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஆட்களை வைத்து மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். அன்றையப் பேச்சைக் கல்கி மிகவும் பாராட்டி எழுதி, தன் இதழில் வெளியிட்டிருந்ததும் என் நினைவில் இருக்கிறது. “தமிழ் மக்கள் தமிழிசையை வெறுக்க மாட்டார்கள். வெறுப்பவர்கள் தமிழர்களாக இருக்கமாட்டார்கள்” என்று நாங்கள் முழங்கிய முழக்கம் தமிழகம் முழுதும் பரவியது. எதிர்ப்பு அழிந்தது. தமிழிசை இயக்கம் வெற்றி பெற்றது. இது கண்டு தமிழகமே மகிழ்ச்சி அடைந்தது. அடையாறில் உள்ள அவர் அரண்மனை கவர்னர் மாளிகையைவிடப் பெரியது; அழகியது. தம் நண்பர்கள் பலரை அங்கு வரவழைத்து, அன்பும் பண்பும் கலந்து விருந்து அளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ராஜா சர் அவர்கள் காலை 5–00 மணிக்கெல்லாம் எழுந்து தன் அரண்மனைக்குள்ளாகவே ஒரு மணி நேரம் 2 மைல் தூரம் நடந்து உடல் நலம் பெறும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தவர்கள் பலரில் நானும் ஒருவன். தமிழகத்தில் எந்தக் கட்சியினர் அரசாங்கம் அமைத்தாலும், செட்டி நாட்டு அரசர் அவர்களின் உதவியைப் பெரிதும் விரும்புவர். அவர்களுடைய துணையின்றி எந்தக் கட்சியும் அக்காலத்தில் நாடு ஆண்டதில்லை. செட்டி நாட்டு அரசர் என்னைக் கட்சியின் தொண்டனாக மட்டும் கருதாமல், தன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதி நடத்தி வந்தவர். சுருக்கமாகச் சொன்னால், அண்ணன் தம்பி முறையிலேயே வாழ்ந்து வந்தோம் என்று கூறி விடலாம். அவர்கள் என் குடும்ப நலனைக் கருதியும் பொருளாதார யோசனை பலவற்றைக் கூறி என்னை நெறிப்படுத்தியவர். இச்செய்தியில் ஒன்றைக் குமுதம் இதழ் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. என் பொருளாதாரம் நிலை குலைந்து அழியாமல் இருப்பதற்கு அவர்களது ஆலோசனை பெரும் காரணமாகும்.

ஒரு சமயம், நீதிக்கட்சித் தலைவர் ஒருவர் இரண்டு லட்ச ரூபாயை அரசரிடம் கடன் கேட்க என்னுடைய உதவியை நாடினார். நான் அவரை அழைத்துக் கொண்டு போய் அரசரிடம் பரிந்துரை செய்தேன். அதற்கு அவர்கள் எங்களைக் குளிக்கச் செய்து விருந்தளித்து, எங்கள் இருவர் தோளிலும் கையைப்போட்டு, “நம்முடைய நட்பு நிலைத்திருக்க வேண்டுமானால் நமக்குள் பொருள் ஊடாடக்ககூடாது. மன்னிக்கவும்” என்று கூறித் தன் வண்டியிலேயே ஏற்றி வழியனுப்பி வைத்த காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. என் நண்பரும் வருந்தவில்லை; பிறர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளும் செயல் அரசரது பெருங் குணங்களுள் ஒன்று.

அவர் இன்றில்லை. அவரது திருமகன், அன்றைய குமாரராஜா இன்றைய செட்டி நாட்டு அரசர் தன் தந்தையின் இருப்பிடத்தில் எல்லாத் துறைகளிலும் பணி புரிந்து அவர் இல்லாத குறையைப் போக்கி வருகிறார். தமிழிசை இயக்கத்திற்காக சென்னையில் தன் தந்தையார் கட்டிய தமிழிசை மன்றம் போன்ற ஒன்றை மதுரை நகரிலும் கட்டி மகிழ்ந்தவர் இன்றைய செட்டிநாட்டு அரசர். இது ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப் பெற்ற பெருங்கோயில் போன்று, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய ஒரு பெருங்கோயிலையே நமக்கு நினைவூட்டி மகிழ்விக்கிறது.

தமிழ் உள்ளவரை, தமிழ்மக்கள் உள்ளவரை, தமிழகம் உள்ளவரை செட்டிநாட்டு அரசர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய தொண்டும் புகழும் மறையாது. அவ்வழியிலேயே தொடர்ந்து நின்று இன்றும் பணிபுரிந்து வருகின்றனர் செட்டிநாட்டு அரசர் ராஜாசர். முத்தையா செட்டியார் அவர்கள். தந்தை வழி மகன் பெற்ற பெயரும் புகழைப் பெற்று, பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் இருந்து, நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் தமிழிசைக்கும் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டுகள் பல செய்து சிறப்பெய்தி வாழவேண்டும் என இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழிசை வாழ்க. செட்டி நாட்டு அரசர் குடும்பம்!