எனது நண்பர்கள்/கலைத்தந்தை
தமிழகத்தில் எத்தனையோ மக்கள் பிறந்தார்கள். வாழ்ந்தார்கள், மறைந்தார்கள். அவர்களுள் ‘கலைத் தந்தை’ என்று அன்போடு அனைவராலும் புகழ்பெற்று வாழ்ந்த ஒரே தமிழ் மகன் கருமுத்து.
கரு பாட்டனின் பெயர்; முத்து தந்தையின் பெயர். இவ்விருவர் பெயராலும் அழைக்கப் பெற்றவரே நம் தியாகராயர். அவர் பெயர் கருப்பு, நிறம் சிவப்பு, புகழ் வெளுப்பு, உள்ளம் பச்சைக் குழந்தை உள்ளம்.
தமிழகத்தில் சைவத்தையும் தமிழையும் வளர்த்து கோவில் கட்டி குடமுழுக்குச் செய்து அறநிலையங்கள் வைத்து அறப்பணிகள் பல புரிந்த அருங்பெரும் சமூகம் நகரத்தார் சமூகம். இச்சமூகத்தை தாங்கி நின்ற தலைசிறந்த பெருஞ் செல்வர் மூவரில் ஒருவர் நம் தியாகராசர். மற்றைய இருவரும் செட்டிநாட்டரசர் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடைவள்ளல் கோட்டையூர் அழகப்பச் செட்டியார் அவர்களும் ஆவர். இம்முப்பெருத் தலைவர்களையும் நகரத்தார் சமூகம் மட்டுமல்ல, தமிழகமே என்றும் மறவாது.
ஆ. தெக்கூரில் பிறந்தார். பிறந்த ஆண்டு 1893. இன்று இருந்தால், அவருக்கு வயது 89 இருக்கும். எனக்கு ஐந்து வயது மூப்பு. எனக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டு 48 ஆண்டுகள் ஆயின. எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தவர், பசுமலை டாக்டர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள்.
தம் 27–வது வயதில் தொழில்துறையில் இறங்க எண்ணி மதுரைக்கு வந்தார். 29–வது வயதில் மீனாட்சி ஆலையைத் தொடங்கி நடத்தினார். தொடர்ந்து பல் நூற்பு ஆலைகளை பல ஊர்களில் நிறுவி உழைப்பால் உயர்ந்து வெற்றிகண்ட பெருமகன். தமிழகத்தில் 12 ஆலைகளைத் தோற்றுவித்து நடத்திப் பெருமை பெற்றவர் அவர் ஒருவரே.
பல ஆலைகளைத் தொடங்கி நடத்தியதால் மட்டுமல்ல, பிற ஆலை அதிபர்களாலும், தமிழகத்தின் மிகப் பெரும் பஞ்சு வணிகர்களாலும், ஏழைத் தொழிலாளர்களாலும், அரசாங்க அதிகாரிகளாலும், அரசியல் தலைவர்களாலும், பொது மக்களாலும் போற்றும்படி வாழ்ந்ததே அவர் அடைந்த பெருஞ் சிறப்பாகும்.
அவர் பஞ்சாலைகளைத் தோற்றுவித்தார். பருத்தி நூல்களை மட்டும் ஆராயவில்லை. பழந்தமிழ் நூல்களையும் ஆராய்ந்தார். அவர் படித்தறிந்த நூல்கள் அனைத்தையும் அவரது மதுரை நகர் மாளிகையில் கண்டு மலைத்து நின்றவர் பலர். அந்நூல் நிலையம் ஒரு பல்கலைக்கழகத்தின் நூல் நிலையம் போன்று. காட்சியளிக்கும். அந்நூல்கள் ஒழுங்காகவும் அழகாகவும் அடுக்கி வைக்கப் பெற்றிருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு நூலிலும் அவர் எழுதிவைத்துள்ள அடிக்குறிப்பும் காணப்பெறும். இவற்றினைக் கண்டு வியப்படைந்தோரில் யானும் ஒருவன்.
பசுமலை டாக்டர் சோமசுந்தர பாரதியார் அவர்களே இவரது தமிழாசிரியர். சிறந்த இலக்கணங்களை சேலம் அ. வரத நஞ்சையபிள்ளை அவர்களிடத்திலும், சைவசமய உண்மைகளை, சித்தாந்தச் செல்வர் ஔவை. துரைசாமி பிள்ளை அவர்களிடத்தும் கற்றறிந்தவர். மறைமலை அடிகள், திரு. வி. க., எம். எல். பிள்ளை, பண்டிதமணி ஆகியோரிடத்தும் பெரும் பற்றுக் கொண்டவர்.
வெள்ளையர் ஆட்சியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து காந்தியடிகள் வழியில் நாட்டுப்பற்றுடன் நன்கு உழைத்தவர். அப்படியிருந்தும் 1938–ல் நான் திருச்சியில் நடத்திய தமிழக இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் முதல் முதலாக தமிழ்க்கொடியை ஏற்றிவைத்து, தமிழ் முழக்கம் செய்து இந்தியை மிகத் துணிச்சலோடு எதிர்த்து நின்றவர் தியாகராசர்.
தமிழ்நாடு என்ற ஒரு நாளிதழைத் தொடங்க எண்ணி என்னை அதற்கு ஆசிரியராக இருக்க வேண்டினார். நான் என் இயலாமையைத் தெரிவித்ததும், பேராசிரியர் இரத்தினசாமி அவர்களையும், திருவாசக மணி கே. எம். பாலசுப்ரமணியம் அவர்களையும் ஆசிரிபர்களாக வைத்து தமிழ்நாடு நாளிதழை மதுரையில் தொடங்கினார். முதல் தலையங்கம் என் பார்வைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் முப்பத்தேழு வடமொழிச் சொற்கள் இருந்தன. அவற்றைக் குறிப்பிட்டு அவற்றுக்குச் சரியான தமிழ்ச் சொற்களையும் குறித்து இருந்தேன். அதைப் பார்த்ததும், அங்கிருந்த ஆசிரியர்களுக்கும், துணை ஆசிரியர்களுக்கும் “தமிழ்நாடு நாளிதழில் தமிழ்சொற்களே இடம் பெறவேண்டும்” எனக் கட்டளையிட்டார். அதன் படியே அது நல்ல தமிழில் வெளிவந்தது. பின் சென்னையிலிருந்தும் மற்றொரு பதிப்பு வெளிவந்தது. மிகப்பெருஞ்செலவு. இத் துறையில் 47 இலட்ச ரூபாய்கள் இழப்பு. அவ்விதமிருந்தும் மன மகிழ்வாகத் தொடர்ந்து நாளிதழை நடத்தி வந்தார். நல்லறிஞர்கள், நாட்டு மக்கள் ஏற்க வில்லை.
‘கடைதிறந்தேன் கொள்வோர் இல்லை’ என்ற வள்ளலாரின் கருத்துப்படி நாளிதழ் வெளிவருவது நின்று விட்டது. ஒரு நாள் அவர் கண்கலங்கிச் சொல்லிய சொற்கள் இவை: “கலப்படத்தமிழிலும், கொச்சைத் தமிழிலும் வெளிவருகிற இதழ்களிலும், கவர்ச்சிப் படங்களோடும் நிழற்படச் செய்திகளோடும் வெளிவருகிற தமிழ் இதழ்களிலும் நாட்டம் கொள்ளுகின்ற நம் மக்களின் மனம், நல்ல தமிழில் வெளிவருகின்ற நாளிதழ்களில் சொல்லவில்லையே! இதற்கு என்ன செய்வது? தமிழும் தமிழகமும் எதிர்காலத்தில் என்னவாகும்” என்பதே.
இருபத்திநான்கு ஆண்டுகட்கு முன்பு திருச்சியில் தொடங்கப்பெற்ற கடைச்சங்க காலத்திய புலவர்களைப் போன்ற நாற்பத்தொன்பது புலவர் பெருமக்களடங்கிய தமிழகப் புலவர்கள் குழுவை மதுரைக்கு அழைத்து, தன் இல்லத்தில் விருந்தளித்து, அனைவருக்கும் புத்தாடை கொடுத்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வைத்துத் தமிழ் ஆராயச் செய்து பெருமகிழ்ச்சி அடைந்தவர் அவர்.
எவரிடத்தும் நன்கொடை பெறாமல் தன் வருவாயைக் கொண்டே கலைக்கல்லூரி, பொறியியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சில உயர்நிலைப்பள்ளிகள், பல தொடக்கப் பள்ளிகள் முதலியவற்றைத் தொடங்கிப் பொதுமக்களுக்கு உதவிய பெருந்தகையாளர் கருமுத்து. சுருங்கக் கூறின் ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளைத் தியாகராசர் தனி ஒருவராக செய்து முடித்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.
கலைத்தந்தை அவர்கள் ஒரு கட்டடக் கலைஞர். கட்டடத்திலும் ஒரு கலையழகை, கலையழகிலும் ஒரு தனித் தன்மையைக் கண்டவர். சென்னை மதுரை, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள அவரது மாளிகைகளில் அவரின் கைவண்ணத்தை, கலையழகின் தனித்தன்மையைக் கண்டு மகிழலாம்.
ஒரு சாயம் அவர், அவரது மகன்கள் சுந்தரம், மாணிக்கவாசகம் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் பல ஊர்களில் பல தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலுக்கு நின்றார்கள். கருமுத்து அவர்களின் தொகுதியில் அவரோடு நான் மட்டுமே பேசவேண்டும் என்பது அவருடைய திட்டமும் கொள்கையும் ஆகும். அதன்படி நான் அவருடன் சென்று, தேர்தல் கூட்டங்களில் மதுரை, திருமங்கலம், சோழவந்தான், சிவகங்கை, காரைக்குடி, மேலுார் முதலிய பல ஊர்களில் பேசினேன். அவரது அருந்தொண்டுகளையும், பெருஞ்செயல்களையும் எடுத்து விளக்கினேன். பேசிப் பலன் என்ன? பயன் ஒன்றுமில்லை. மூவரில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. இது தேர்தலில் நல்லவர்கள் நிற்கும் சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை என்பதையே காட்டிற்று.
சைவசமயத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். திருக்கோவில் வழிபாட்டில் சிறந்தவர். சைவ உணவையே உண்பவர். அவரது முகத்தைத் திருநீறு எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும்.
கருமுத்து மாளிகையில் விருந்துகள் பலருக்கு நடை பெற்ற வண்ணமிருக்கும். அவ்விருந்தில் சுவையுள்ள பொருள்கள் பலவிருக்கும். அவற்றின் சுவையைவிட அவரது மனைவியார் இராதா அம்மையாரது இன்சொற்கனின் சுவை மிகையாக இருக்கும். அவர்கள் இருவரும் கடைசியாக அளித்த விருந்து எனக்கும் என் மனைவிக்குமே. அது அவரது சாவின் முதல் நாள் குற்றாலத்தில் இருத்த பொழுது.
மறுநாட் காலை 6 மணிக்குத் தன் மகன் கண்ணனை மதுரைக்கு அனுப்பிவிட்டு, மனைவியையும் அருவிக்கு அனுப்பிவிட்டு, தான் குளிப்பதற்காக எண்ணெயையும் துண்டையும் எடுத்துவர வேலையாளையும் அனுப்பிவிட்டு, அருவியை நோக்கித் திருவாசகத்தைப் பாடியபடி நடந்து கொண்டிருந்தார். ஐம்பதடி தூரம் நடந்ததும் கையை ஊன்றி உட்கார்ந்தார். தலை சாய்ந்தது. உடனே எல்லோரும் சேர்ந்து அவர்களை ஒரு துப்பட்டியில் கிடத்தித் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி மருத்துவருக்கும் செய்தி அனுப்பி, மருத்துவரும் உடனே வந்துசேர்ந்தார். இவை அனைத்தும் செய்து முடிய ஏழு நிமிடங்களே பிடித்தன. மருத்துவர் அவரைப் பரிசோதித்து உயிர் பிரிந்து ஏழு நிமிடங்கள் ஆயின. எனக் கூறிவிட்டார். எல்லோரும் கதறி அழுதோம். அவரது பொன்னுடலுக்கு முதல் மாலையிடும் நிலை எனக்கு நேரிட்டது. பல இடங்களுக்கு தொலைபேசிச் செய்திகள் பறந்தன. மகன் கண்ணனையும் இராஜபாளையத்திற்குச் செய்தி அனுப்பி வழிமறித்துத் திருப்பி அழைத்துக் கொண்டோம். கார்கள் பலவந்தன. அவரது பொன்னுடலுடன் நானும், ராதா அம்மையாருடன் என் மனைவியுமாக அழுது கொண்டே மதுரை வந்து சேர்ந்தோம். மீனாட்சி ஆலையின் உள்ளும் புறமும், அவரது இல்லத்தின் உள்ளேயும் வெளியிலும், வீதியின் வழிநெடுகிலும் மக்கள் கூட்டம் கடல் அலைகள் போன்று பெருகி நின்று கதறி அழுது கொண்டிருந்த காட்சி எங்கள் துன்பத்தை மேலும் வளரச்செய்தது. பொன்னுடலைக் காணவந்த மக்கள் கூட்டம் வைகையில் கூடும் அழகர் திருவிழாக் கூட்டத்தையும் மிஞ்சியிருந்தது.
அவரது உடல் எரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அவரது மாளிகையின் பின் புறத்திலேயே அடக்கம் செய்து, நினைவு சின்னம் ஒன்று அங்கு எழுப்ப வேண்டுமென்று எண்ணினேன். அதற்காகப் பெரிதும் முயன்றேன். தோல்வியையே அடைந்தேன். இறுதியில் அவரது பொன்மேனி எரிக்கப்பட்டுப் போயிற்று.
கருமுத்துவை, கலைத்தந்தையை, தொழிலதிபரை, பெருஞ்செல்வரை, கொடைவள்ளலை, தமிழறிஞரை, ஏழை பங்காளரை, எளிய வாழ்வினரை, எளிய உடையினரை, இனிய சொல்லினரை, அவரது இன்முகத்தை, புன்சிரிப்பை, நாம் இனி என்றும் எங்கும் காணப்போவதில்லை. அவரது இழப்பு தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழகத்திற்கு பேரிழப்பாக முடிந்தது. யார்? யாருக்கு ஆறுதல் கூறுவது?
மெல்ல நகர்ந்து செல்லும் காலம்தான் நம் அனைவர்க்கும் நல்லாறுதல் கூறவேண்டும்.
வாழ்க கருமுத்துவின் புகழ்!
வளர்க அவர் செய்த பணிகள்!