சேதுபதி மன்னர் வரலாறு/vii. பாஸ்கர சேதுபதி
துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகன் பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அத்துடன் இராஜ குடும்பத்தைப் பராமரித்து வந்ததுடன் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். அதற்காக அந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888-ல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறுத்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார்.
இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.
இந்த மன்னர் பொருள் வசதி குறைந்த ஜமீன்தார் அமைப்பு முறையிலே இயங்கி வந்தாலும் இவரது இதயம் அவரது முன்னோர்களைப் போன்று விசாலமானதாகவும் ஆன்மீகப் பணியில் பற்றுக் கொண்டதாகவும் அமைந்து இருந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது ஆகும். இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியன திருப்பணி செய்யப்பட்டன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி, முருகன் ஆலயங்களிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் உச்சி காலக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவைகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சென்னை கபாலீஸ்வரர் கோயில் இறைவர் பவனி வருவதற்காகவும், காளையார் கோவில் காளைநாதர் கோவிலுக்கும் புதிய பல்லக்குகளைச் செய்து கொடுத்ததுடன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி உலா வர வெள்ளித் தேர் ஒன்றினையும் செய்து வழங்கினார். இராமநாதபுரம் ராஜேஸ்வரி அம்மன் பயன்பாட்டிற்காகச் சிம்ம வாகனம் ஒன்றினை அமைத்து அதனை முழுதுமாக தங்கத் தகட்டினால் நிறைவு செய்து அகமகிழ்ந்தார். மேலும் ராஜேஸ்வரி அம்மன் கோயில் கோபுரத்தையும் பொன் தகடுகளால் வேய்ந்து உதவினார். இவரது காலத்தில் தான் இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது குட முழுக்கு 1.11.1902-ல் நடைபெற்றது.
இவைகளையெல்லாம் விஞ்சிய சாதனை ஒன்றையும் படைத்தார். அதாவது 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நமது நாட்டின் பழம் பெருமையினை உலகு அறியச் செய்ததாகும்.
இவரது பாடல்கள் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம். இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன. மேலும் 14.9.1901-ல் மதுரை மாநகரில் வள்ளல் பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச்சங்க நிறுவ அவருக்குத் தக்க துணையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் ஒரு சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் அரண்மனையில் இவரது முன்னோர்களால் பிரதிட்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த பூரீ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்று வந்த உயிர்ப் பலியினை இவரது மனம் பொறுத்துக்கொள்ள வில்லை. ஆதலால் அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் சிறப்புற்று விளங்கிய சிருங்கேரி மடாதிபதியான ஸ்ரீ நரசிம்ம பாரதி அவர்களை வரவழைத்து இராஜேஸ்வரி ஆலயத்தின் உயிர்ப்பலி வழிபாட்டினை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.
அந்த ஆலயத்திற்கு வருகை தந்த சிருங்கேரி சுவாமிகள் புதிய சக்கரம் ஒன்றை கருவறையில் ஸ்தாபித்து, ஏனைய திருக்கோயில்களில் நடைபெறுவது போன்ற வாம பூஜையை அங்கும் கைக் கொள்ளுமாறு அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து அந்த ஆலயத்தில் உயிர்ப்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டது.
சிருங்கேரி மடாதிபதிகள் மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஒய்வு மாளிகையான சங்கர விலாசத்தில் தங்கியிருந்த பொழுது நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி, ஒன்றினை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
வழக்கம் போல ஒரு நாள் முற்பகலில் மன்னர் பாஸ்கர சேதுபதி சுவாமிகளைச் சந்திப்பதற்காக அங்கு வந்தார். அப்பொழுது சுவாமிகள் தாம் இராமநாதபுரத்திற்கு வருகை தந்த பணி முடிவுற்றதால் ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதை தெரிவித்தார். அத்துடன் தமது பணிக்காக மன்னர் குரு தட்சணையாக எதனைக் கொடுக்க விரும்புகிறார் என வினவினார். உடனே மன்னர் நாம் அணிந்திருந்த அரச சின்னங்களை அழகிய தலைப்பாகையையும் உடை வாளையும் சுவாமிகளது திருவடிகளில் சமர்ப்பித்து, "இந்த சேது சமஸ்தானத்தை எனது குரு தட்சணையாக அருள் கூர்ந்து சுவாமிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என பணிவுடன் கேட்டுக்கொண்டார். சற்றும் எதிர்பாராத மன்னரது அந்த பதிலைக் கேட்ட சுவாமிகள் மிகவும் வியப்புக்குள்ளானார். ஒருவாறு நிலைமையை சமாளித்துக்கொண்டு, ‘இயல்பாகவும் வேடிக்கையாகவும் தான் குருதட்சணை கோரினேன் தங்களது அன்பும் ஆன்மீக உணர்வும் மிக்க இந்த தானத்தை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அதனை தங்களது குமாரருக்கு நான் தானம் வழங்கிவிட்டேன்.” என்று சொல்லி மன்னரது அருகில் நின்று கொண்டிருந்த மன்னரது மகன் முத்து ராமலிங்கத்தின் தலையில் தலைப்பாகையை அணிவித்து இடையில் உடைவாளையும் அணிவித்தார். அப்பொழுது அங்கிருந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் ஒரு அதிசய சாதனையாகத் தோன்றியது. இது நடத்து கி.பி. 1894ல்.
ஏற்கனவே இந்த மன்னருக்கு தமிழ்ப்பணியில் மிகுந்த ஈடுபாடு இருந்ததால் தமது அவைப்புலவர் மகா வித்துவான் இரா. இராகவ ஐயங்கார் சுவாமிகளை ஒரு பல்லக்கில் அமர வைத்து ஏனைய பல்லக்கு போகிகளுடன் தாமும் நின்று அந்தப் பல்லக்கை சுமந்து தாம் தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் கட்டுப்பட்டவர் என்பதை உலகறியச் செய்தார். மேலும் இந்த நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டு வரைந்து ஒரு பத்திரம் ஒன்றையும் மதுரை பதிவாளர் அலுவலத்தில் 4.11.1901ல் பதிவு செய்து கொடுத்தார். இந்தப் பத்திரத்தின்படி தமிழ் மொழியினை வளர்ப்பதற்கும் தமிழ்ப்புலவர்களைக் காப்பதற்கும் தாம் கடமைப்பட்டவர் என்பதை குறிப்பிட்டு இருப்பதுடன் அந்த அழகிய பல்லக்கை மகாவித்துவான் அவர்கள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான நிவந்தமாக ரூபாய் 360 இராமநாதபுரம் சமஸ்தான கருவூலத்திலிருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் அந்த ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
சிறந்த சொற்பொழி வாளராகவும், தமிழ்ப்புலவராகவும் வரையாது வழங்கும் வள்ளலாகவும் வாழ்ந்த இந்த மன்னர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றிருந்தபோது 27.12.1903-இல் காலமானார். ஜமீன்தாரி ஆட்சி காலத்தில் இவருடைய ஆட்சிகாலமே பொற்காலமாகும்.