சேதுபதி மன்னர் வரலாறு/i. உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்
போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள்
சடைக்கன் - I
(1601 – 1622)
தமிழக வரலாற்றில் குறிப்பாகச் சேதுபதி மன்னர்களது வரலாறு பதினேழாவது நூற்றாண்டிலிருந்து முரண்பாடுகள் இல்லாத வகையில் தொடக்கம் பெறுவதுடன் இந்த மன்னர்களது தெய்வீகத் திருப்பணிகள் தொடர்வதனால் அவரது ஆட்சிக்காலம் சிறப்புப் பெறுகிறது.
இதற்கு முன்னிருந்த சேது மன்னர்களைப் பற்றிய சரியான தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை. போகலூரில் வாழ்ந்த சேதுபதி மன்னர்களின் வரிசையில் முதல் மன்னராக அறிமுகமாகும் சடைக்கன் சேதுபதிக்கும், மதுரை நாயக்கப் பேரரசிற்கும் நெருங்கிய தொடர்பு நிலவிவந்ததால் இந்த மன்னரைப் பற்றிய செய்திகள் வரலாற்றில் தெளிவாகப் பதிவு பெற்றுள்ளன.
இந்த மன்னர் கி.பி. 1601 முதல் கி.பி. 1622 வரை ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த மன்னரது ஆட்சித் தொடக்கம் கி.பி. 1603 என வரைந்துள்ளனர். இந்த மன்னரது தந்தையார் பெயர் என்ன என்பதும் அவர் சேதுபதிப் பட்டத்திற்கு எந்த முறையில் தகுதி பெற்றவர் என்பதும் அறியத்தக்கதாக இல்லை. இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய கி.பி. 1607ஆம் ஆண்டு செப்பேட்டின்படி இவரது இயற்பெயர் திருமலை சடைக்கன் என்றும், உடையான் ரகுநாத சேதுபதி காத்தத்தேவர் என்றும் தெரியவருகிறது. சூரியகுலத்தவரான ரெகுநாத சேதுபதி என்பது இராமபிரானைப் பின் பற்றுபவர்கள் என்றும், காத்தத்தேவர் என்பது சேது அணைக்குக் காவலர் என்ற பொருளில் அனைத்து சேதுபதி மன்னர்களுக்கும் ஆட்சிப்பெயராக அமைத்து வழங்கப்பட்டுள்ளது உடையான் என்பது சிவபெருமானது அடியாரைக் குறிக்கும் சொல் இராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவனை, இராமநாதசாமியை வழிபடும் பக்தன் என்ற முறையில் இந்தப் பெயர் அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதனைப் போன்றே இந்த மன்னர் இராமனது அடியார் (அ) இராமபிரானால் நியமனம் பெற்றவர் என்ற வகையில் இராமபிரானது சூரிய வம்சத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரகுநாத என்ற சிறப்புப்பெயர் இவரின் இயற்பெயருடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இன்றைய இராமநாதபுரம் நகருக்கு மேற்கே எட்டுக்கல் தொலைவில் உள்ள போகலூர் தலைமையிடமாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியின் பரப்பைக் குறிப்பிடும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. பொதுவாக கோடிநாடு என்று வழங்கப்பெற்ற இராமேஸ்வரம் தீவுப்பகுதியும் அதனையடுத்து மேற்கே உள்ள கீழ்ச்செம்பிநாடு என்ற பகுதியும் இதற்கும் மேற்கேயுள்ள செவ்விருக்கைநாடு, தாழையூர் நாடு, முத்துர் நாடு, கைக்கிநாடு ஆகிய பகுதிகளைக் கொண்ட அரசின் தலைவராக இந்த மன்னர் இருந்திருக்க வேண்டும்.
இதுபோலவே இந்த மன்னனது தலைநகரான போகலூர் எப்பொழுது கோநகராக மாற்றப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த மன்னரது சமகாலத்தவரான மதுரைப் பேரரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரது இராஜகுரு இராமேஸ்வரம் யாத்திரை சென்றபோது "புகழுரிலிருந்த சடைக்கத் தேவர் இராஜகுருவைப் பின்தொடர்ந்து இராமேஸ்வரம் யாத்திரைக்கு உதவி செய்தார்' என்று ஒரு ஆவணத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதால் போகலூர் தலைநகர் என்பது உறுதியாகின்றது.[1]
ஆனால் இந்த மன்னர் கி.பி. 1607 முதல் வழங்கியுள்ள செப்பேடுகளில் "துகவூர் கூற்றத்து குலோத்துங்க சோழன் நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும்” என்ற தொடர் காணப்படுவதால் இவரது (அ) இவரது மூதாதையரது பூர்வீக இடம் விரையாத கண்டன் என்பது உறுதிப்படுகிறது.
மதுரை மன்னர் முத்து கிருஷ்ணப்ப நாயக்கரோடு ஏற்பட்ட தொடர்பு காரணமாக இந்த மன்னரை மதுரை நாயக்க மன்னர்களது தளவாய்களில் ஒருவராக நியமனம் பெற்றதுடன் அதற்கான சிறப்புப் பரிசில்களையும் சேதுபதி மன்னருக்குப் பெற்றுத் தந்தது. இத்தகைய சிறப்பினைச் சேது மன்னருக்கு மதுரை மன்னர் வழங்கியதற்கு ஒரு பின்னணியும் இருந்தது. தென்பாண்டிநாடு முழுவதும் மதுரை நாயக்க மன்னருக்குக் கட்டுப்பட்ட பகுதியாக இருந்தாலும் தூத்துக்குடி கடற்கரையிலுள்ள பரவர்களும், போர்த்துக்கீசியர்களும் நாயக்கமன்னருக்குக் கட்டுப்பட்ட குடிகளாக இருக்கவில்லை. ஏறத்தாழ 100 ஆண்டுகாலமாக மன்னார் வளைகுடாப் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கீசியர் கி.பி. 1658இல் தங்களது ஆதிக்கத்தை டச்சுக்காரர்களிடம் இழந்து விட்டனர் என்றாலும் அவர்களது அதிகாரம் பாண்டியநாட்டின் கீழ்க்கடற்கரையில் தொடர்ந்து வந்தது. அதனையடுத்து நிறுத்தவோ எதிர்த்து அழிப்பதற்கோ மதுரை மன்னரிடம் போதுமான படைபலம் இல்லாத பரிதாபநிலை போர்த்துக்கீசிய பாதிரியார்களிடம் ஞானஸ்நானம் பெற்ற பரவர்கள் போர்ச்சுகல் நாட்டு மன்னர்களது குடிமக்களாக மாறினர். அந்த நாட்டுச் சட்ட திட்டங்களையும் பரவர்களது குடியிருப்புகளான மணப்பாடு, பெரியதாழை, வீரபாண்டியன் பட்டினம், வேம்பார் குடியிருப்புகளும் போர்ச்சுகல் நாட்டு வீரர்களது பாதுகாப்பிலும் இருந்து வந்தன.
இந்தப் பரிதாபநிலை கிழக்குக் கடற்கரை முழுவதும் நீடித்ததால் மதுரைப் பேரரசிற்கு மிகப்பெரிய சோதனையாகிவிடும் என்பதை உணர்ந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் நமது போர்த்துக்கீசிய எதிர்ப்பு அணிக்கு மறவர் சீமையின் மன்னர் பயன்படுவார் என்ற சிந்தனை அவருக்கு இருந்தது.
மற்றும் இந்தப் பணிகளுக்கு மிகவும் பொருத்தமான வீரர் சேதுபதி என்பதை இன்னொரு நிகழ்ச்சி மூலமும் மதுரை மன்னர் கண்டறிந் திருந்தார். பொதுவாக அப்பொழுது ஸ்ரீரங்கத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பாதையில் பயணிகளுக்குக் கள்ளர்களினால் மிகுந்த இழப்பு ஏற்பட்டு வந்தது. மறவர் சீமையைப் பொறுத்த வரையில் இராமேஸ்வரம் பயணிகளுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாதவாறு சடைக்கத் தேவரது சிறப்பான நிர்வாகம் கண்காணித்து வந்தது. மதுரை மன்னரது இராஜகுரு இராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை சென்றபோது இதனை நேரில் உணர்ந்து தீர்த்த யாத்திரை முடிந்தவுடன் மன்னருக்குத் தெரிவித்திருந்தார். ஆதலால் சடைக்கத் தேவரது பேராற்றலில் மதுரை மன்னருக்கு அழுத்தமான நம்பிக்கை இருந்தது.
திருப்பத்தூர் சீமை பட்டமங்கலம் பகுதியில் மதுரை மன்னருக்கு எதிராகக் கிளம்பிய அக்கிரமக்காரர்களை அடக்கி ஒடுக்கியதுடன் அந்தப் பகுதியிலிருந்து மதுரை மன்னருக்குச் சேரவேண்டிய அரசு இறை, முறையாகக் கிடைப்பதற்குச் சேது மன்னர் தக்க ஏற்பாடு செய்தார் என்பது மதுரை நாயக்கர் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
அறக்கொடைகள்:
இந்த மன்னர் வழங்கிய செப்பேடுகளில் மூன்று மட்டும் கிடைத்துள்ளன. இவைகளிலிருந்து இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் அதன் காரணமாகக் கோயிலில் பூஜை, நைவேத்தியம், அபிஷேகம் மற்றும் சிறப்புக் கட்டளைகளுக்காக மன்னர் ஆறு கிராமங்களை வழங்கி உள்ளார் என்பதும் தெரிகிறது. மேலும் இந்தக் கோயிலில் பணியாளர்களாகப் பணியாற்றி வந்த பஞ்ச தேச ஆரியப் பெருமக்களுக்கு (பஞ்ச தேசத்து ஆரியர் - மகாராஷ்டிரம், கொங்கணம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம்) வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கரைக்கும் திருக்கோயிலின் நுழைவுவாயிலுக்கும் இடைப்பட்ட பரந்த வெண்ணிலத்தை நிலக்கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் தெரியவருகிறது.
இந்தக் கோயிலின் ஆறுவேளை வழிபாடுகளையும், ஆண்டு விழாக்களையும், சிறப்புக் கட்டளைகளையும் செவ்வனே நடத்தப் படுவதைக் கண்காணிப்பதற்கு இந்த மன்னர், இந்த பணிக்கெனத் தனியாக ஆதினக்கர்த்தர் என்ற பணிப்பதவியை ஏற்படுத்தியதுடன் அவருக்கு என திருக்கோயிலை ஒட்டிய வளாகத்தில் மடம் ஒன்றினையும் நிறுவினார். (பெரும்பாலும், இந்த மடம் தற்போதைய திருக்கோயிலைச் சேர்ந்த இராமமந்திரம், திருப்பணி மாளிகை, இவைகளை ஒட்டிய பயணியர் விடுதிகளைக் கொண்ட பகுதியில் அமைந்திருத்தல் வேண்டும் என நம்பப்படுகிறது.) இந்த மடம் பிச்சர்மடம் என வழங்கப்பட்டதுடன், இந்த மடத்தில் வாழ்ந்த ஆதினகர்த்தர் சேது இராமநாத பண்டாரம் எனவும் அழைக்கப்பட்டார்.
தஞ்சைத் தரணியில் உள்ள திருமறைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்த வைதிக வேளாண் குடிமக்களைச் சேர்ந்தவரும் சைவச் சாத்திரங்களில் நன்கு பயிற்சி பெற்றவருமான துறவி ஒருவர் சேது இராமநாத பண்டாரம் பதவிக்கு நியமனம் செய்யப்பெற்றார். இந்த அரிய செயல் இந்த மன்னரது இராமேஸ்வரம் திருக்கோவிலைப் பற்றி நன்கு சிந்தித்துச் செயல்பட்ட தொலைநோக்கினை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் சோழ மண்டலத்தில் சோழர்களது ஆட்சியில் சோழப் பேரரசர்கள் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களை அமைத்தார்கள் என்பது வரலாறு. பிற்காலங்களில் இக்கோயில்களில் வழிபாடுகள் முறையாக நடப்பதற்காகத் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆகிய திருமடங்களின் தலைவர்களாகிய மடாதிபதி களைப் போன்று இராமேஸ்வரம் சேதுராமநாத பண்டார நியமனம் நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது.
இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரம் திருக்கோயில் சிறப்பான ஆதரவினைப் பெற்றது போன்று தேவாரப்பதிகம் பெற்ற திருவாடானைத் திருக்கோயிலும் இந்த மன்னரது அறக்கொடைகளுக்கு உரியதாக இருந்தது என்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1605இல் கருப்பூர் கிராமமும், கி.பி. 1606ல் அச்சங்குடியையும், 1615ல் நாகனேந்தல், இரட்டை ஊரணி, வில்லடிவாகையையும் அறக்கொடையாக இந்த மன்னர் வழங்கியுள்ளார். இந்த ஊர்களில் இருந்து சேதுபதி மன்னருக்கு வரப்பெறுகின்ற அனைத்து வருவாய்களும் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
இவ்வாறு சிறப்பாக ஆட்சிபுரிந்த முதலாவது சடைக்கத் தேவர் நான்கு மக்களாகிய கூத்தன், தளவாய் (எ) சடைக்கன். கலியானப் புலித்தேவர், காதலி நாச்சியார் என்ற மக்களையும் தனது வாரிசுகளாக விட்டுவிட்டு 1622ல் காலமானார்.
எட்டையபுரம் வரலாற்றினை எழுதிய கணபதியாப்பிள்ளை என்பவர். இந்த சேதுபதி மன்னர் தெற்கே நம்பிபுரம் என்ற ஊரின் அருகில் நடந்த போரில் தனது முடியையும், அணிமணிகளையும் இழந்துவிட்டு உயிர்தப்பி ஓடினார் என வரைந்துள்ளார். ஆனால் இதனை உறுதி செய்யும் தகவல் இராமநாதபுரம் மெனுவலிலும் வேறு ஆவணங்களிலும் காணப்படவில்லை.