உள்ளடக்கத்துக்குச் செல்

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/கலியாணராமன்கள் கதை

விக்கிமூலம் இலிருந்து

8

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

கலியாணராமன்கள் கதை

விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன எட்டாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! கையில் போதுமான காசில்லாதபோது ஒரு கப் காபியை வாங்கி, இருவர் அதைப் பங்கு போட்டுக்கொண்டு குடிப்பதில்லையா? அந்த மாதிரிக் குடித்துக் குடித்தே இணைபிரியாத நண்பர்களாகிவிட்ட இருவர் இந்தச் சென்னைமா நகரிலே உண்டு. அவர்களில் ஒருவன் பெயர் மட்டுமல்ல; இருவரின் பெயருமே ‘கலியாணராமன்’ என்பதாக இருந்தது. இதனால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அவர்களை கூப்பிட நேர்ந்தால், ‘கலியாணராமன் நம்பர் 1, கலியாணராமன் நம்பர் 2' என்று கூப்பிட்டு வந்தார்கள். என்னதான் நம்பர் போட்டுக் கூப்பிட்டாலும் சில சமயம் அது குழப்பத்தில் வந்து முடியவே, 'இந்தக் குழப்பத்திலிருந்து மீள வழியே கிடையாதா?' என்று கலியாணராமன் நம்பர் 1 யோசிப்பானாயினன். அதுகாலை கலியாணராமன் நம்பர் 2 திடீரென்று தீவிரத் தமிழ்ப்பற்றுக்கு உள்ளாகித் தன் பெயரை 'மணவழகன்’ என மாற்றி வைத்துக்கொண்டு வர, அது கண்டு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம் வியப்பும் கொண்ட கலியாணராமன் நம்பர் 1, 'என்ன, இப்படித் திடீரென்று?' எனக் கேட்க, ‘எல்லாம் தமிழ் வாழத்தான்!' என மாஜி கலியாணராமனான - தப்பு, முன்னாள் கலியாண ராமனான மணவழகன் பதிலுரைப்பானாயினன்.

‘அது தெரியாதா எனக்கு, உண்மையைச் சொல்லப்பா?' என்று கலியாணராமன் கண்ணால் சிரித்துக் கொண்டே கடாவ, 'தமிழ் வாழ்ந்தால் நானும் வாழ்வேன்; நான் வாழ்ந்தால் தமிழும் வாழும்!' என்று மணவழகன் அப்போதும் இடக்கரடக்கலாக மறுமொழி சொல்ல, 'கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்?' எனக் கலியாணராமன் மீண்டும் கேட்பானாயினன்.

அதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாமல், ‘இப்போது அதில்தானப்பா, நல்ல காசு! என்று மணவழகன் அவன் காதோடு காதாகச் சொல்ல, 'காரியவாதிக்குக் கண்டதெல்லாம் காசுதானே?' என்று கலியாணராமன் ஒரு 'புதுமொழி'யை உதிர்க்க, அதைக் கேட்டு அவன் அப்படியே அசந்து போய் நிற்பானாயினன்.

இப்படியாகத்தானே இவர்களுடைய 'பெயர் மாற்றும் படலம்' நடந்து முடிய, ஒரு நாள் கலியாணராமனாகப் பட்டவன் மணவழகனை நோக்கி, ‘எனக்கு ஓர் உபகாரம் செய்வாயா?' என வினவ, 'என்ன உபகாரம்?' என மணவழகன் கேட்பானாயினன்.

‘கோயமுத்துாரில் ஒரு குட்டி மில் முதலாளி இருக்கிறாராம். அவருக்கு ஒரே ஒரு பெண்ணாம். பெயர் பொற்கொடியாம். அவளுக்காக அவளுடைய மாமா ஆனந்த மூர்த்தி இங்கே வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போனார். அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது. ஜாதகம் பார்த்தார்; அதுவும் பொருந்தி விட்டது. பெண்ணை உங்களுக்குப் பிடித்துவிட்டால் கலியாணம் உடனே வைத்துக்கொண்டு விடலாம் என்றார். தாய் தந்தையற்ற எனக்கோ ஓர் அனாதை போல் சென்று அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது; கொஞ்சம் யோசித்தேன். அதை வேறு விதமாக நினைத்துக் கொண்டு விட்ட அவர், 'நீங்கள் எதற்கும் யோசிக்க வேண்டாம். கையில் ரொக்கமாக இருபத்தையாயிரம் கொடுத்துவிடுகிறோம். இன்னும் ஓர் இருபத்தையாயிரத்துக்கு நகை நட்டுக்கள் போடுகிறோம். இவை தவிர, சீர் வரிசைகள் வேண்டிய மட்டும் செய்கிறோம். கலியாணத்தைக் கோயமுத்தூரிலேயே வைத்துக் கொண்டு விடலாம். நீங்கள் விரும்பினால் இங்கே பார்க்கும் வேலையைக்கூட ராஜீனாமா செய்துவிட்டு, அங்கே உள்ள எங்கள் மில்லுக்கு மானேஜராக வந்துவிடலாம்' என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டே போனார். அதற்கு மேல் அந்த இடத்தை விடக்கூடாது என்று நினைத்த நான், அவரிடம் ஒரு பொய் செரன்னேன். ‘எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார். பிரம்மசாரிய விரதத்தை மேற்கொண்டிருக்கும் அவர், ரொம்ப நாட்களாக என்னையாவது கலியாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். அவரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன். அவர் வந்து பெண்ணைப் பார்த்து, ‘சரி' என்று சொல்லிவிட்டால் எனக்கும் சரியே!' என்றேன். ‘சரி' என்று அவர் போய் விட்டார். அவருடைய விலாசத்தை நான் உனக்குத் தருகிறேன். அந்த விலாசத்துக்குப் போய், நீ எனக்காக ஒரே ஒரு நாள் என்னுடைய அண்ணனாக நடித்தால் போதும்!' என்று கலியாணராமன் சொல்ல, 'இதற்காக நீ இவ்வளவு தூரம் என்னிடம் சொல்ல வேண்டுமா? இதைக்கூடச் செய்யவில்லையென்றால் நான்தான் உனக்கு எப்படி நண்பனாவேன், நீ தான் எனக்கு எப்படி நண்பனாவாய்? கொடு முகவரியை, இப்பொழுதே புறப்படுகிறேன்!' என்று மணவழகன் துடிப்பானாயினன்.

‘பெண்ணைப் பிடித்துவிட்டால் முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க என்னைக் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வராதே! நீயே அவர்களுடன் கலந்து பேசி, ஏதாவது ஒரு நாளைக் குறித்துக்கொண்டு வந்துவிடு. அந்த நாளில் அவளுக்குத் தாலி கட்ட நான் தயாராகிவிடுகிறேன்' என்று கலியாணராமன் சொல்லி, ஆனந்தமூர்த்தியின் விலாசத்தை எடுத்து ஆனந்தமாகக் கொடுக்க, 'தாலியைக் கட்டிவிட்டுப் பணத்தைக் கேட்காதேடா, புத்திசாலி! பணத்தை வாங்கிக் கொண்டு தாலியைக் கட்டு!' என மணவழகன் அவனை எச்சரித்துவிட்டு, உடனே கோவைக்குப் புறப்பட்டு போவானாயினன்.

அங்கே ஆனந்தமூர்த்தியின் முகவரியைத் தேடி மணவழகன் அலைய, 'அவர் கண்ணை மூடிக் காரியம்கூட நடந்து விட்டதே!' என்ற அங்கிருந்தவர்கள் சொல்ல, ‘அப்படியா சமாசாரம்?’ என்று ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற அவன், மறுகணம் ஒரு துள்ளுத் துள்ளி, ஒரு குதி குதித்து நின்று, ‘ஆஹா!-தப்பு, தப்பு! 'ஆகா' என்று சொல்ல வேண்டுமன்றோ? ஆகா! அதிருட்டம் அடித்தால் இப்படியன்றோ அடிக்க வேண்டும்? கலியாணராமனைப் பார்த்து விட்டு வந்த அந்த ஒரே ஒரு ஆனந்தமூர்த்தியும் கண்ணை மூடி விட்டாராம். இனி நானாவது, கலியாணராமனின் அண்ணனாக நடிப்பதாவது? நானே கலியாணராமனாக நடிப்பேன்; மணவழகனையும் தமிழ்ப் பற்றையும் சற்றே மறப்பேன். பிரம்மசாரியான என் அண்ணனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்றும், அதனால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நானே அரிச்சந்திரனைப் பின்பற்றி வந்ததாகவும் சொல்வேன். அப்புறம் என்ன? அழகான பெண், ஐம்பதாயிரம் ரூபாய், மானேஜர் பதவி எல்லாம் எனக்கே எனக்குத்தான்!' என்று அப்படியே போய் அந்தப் பெண் வீட்டாரிடம் அளக்க, அவர்களும் அதை நம்பி, மாஜி கலியாணராமனான மணவழகனுக்கே அந்தப் பொற்கொடியை மணம் செய்து வைப்பாராயினர்.

முதல் நாள் இரவு; சினிமாவில் வருவதுபோல் பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் கொஞ்சி வந்த பொற்கொடி 'தடா' ரென்று எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு விழுந்து, கையையும் காலையும் உதைத்துக்கொள்ள, ‘என்ன பொற்கொடி, என்ன?’ என மணவழகன் பதற, 'சாவி, சாவி! சீக்கிரம்! சீக்கிரம்!' என்று உளறிக்கொண்டே அவள் மூர்ச்சையடைவாளாயினள்.

‘அட இழவே, நீ காக்கா வலிக்காரியா? அது தெரியாமல் போச்சே, எனக்கு!' என்று தலையில் அடித்துக்கொண்டே மணவழகன் அங்கிருந்த சாவிக் கொத்தை எடுத்து அவள் கையில் திணிக்க, ‘என்ன அண்ணா, செளக்கியமா? உங்களைத் தேடிக்கொண்டுதான் ‘வந்தேன்!' என்று யாரோ ஒரு தம்பி அந்த நேரம் பார்த்துத் தன்னைக் குசலம் விசாரிப்பதைக் கேட்டு அவன் திரும்ப, சாலையோரமாக இருந்த ஜன்னலுக்கருகே நின்றுகொண்டிருந்த கலியாணராமன் அவனைப் பார்த்து ‘ஹஹ்ஹஹ்ஹா' என்று சிரிக்க; 'மோசம் போனேன் கலியாணராமா, உன்னை நம்பி நான் மோசம் போனேன், கலியாணராமா!’ என்று மணவழகன் ‘ஒப்பாரி' வைப்பானாயினன்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, 'மோசம் போனது யார்? கலியாணராமனா, மணவழகனா?' என விக்கிரமாதித்தரைக் கேட்க, 'பொற்கொடி காக்கா வலிக்காரியாக இல்லாமலிருந்தால் மோசம் போனவன் கலியாணராமன்; இல்லாவிட்டால் மணவழகன்!’ என ‘விளக்கெண்ணெய் முறை'யில் விக்கிரமாதித்தர் விளக்கம் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க... காண்க... காண்க.....