உள்ளடக்கத்துக்குச் செல்

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/16. பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா

விக்கிமூலம் இலிருந்து
16

பதினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கிருபா சொன்ன

ஆசை பிறந்து அமைதி குலைந்த கதை

"கேளாய், போஜனே! 'பாதாளசாமி!' என்று ஒரு முறை குரல் கொடுத்ததும், 'இதோ வந்துவிட்டேன்!' என்று ஓடிவரும் பாதாளசாமி, ஒரு நாள் மூன்று முறை குரல் கொடுத்தும் வராமற்போக, 'என்ன விஷயம், எங்கே போய் விட்டான்?' என்று விக்கிரமாதித்தர் தாமே எழுந்து சென்று வெளியே எட்டிப் பார்க்க, தெரு வாயிற்படியில் முகவாய்க் கட்டையைக் கையால் தாங்கியபடி உட்கார்ந்திருந்த பாதாளசாமி, அப்பொழுதும் அவர் வந்ததைக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க, ‘என்ன பாதாளசாமி, எத்தனை முறை கூப்பிட்டாலும் இன்று உன் காதில் விழவில்லையே! என்ன விசேஷம்?’ என்று விக்கிரமாதித்தர் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டிக் கேட்க, அவன் திடுக்கிட்டெழுந்து, 'அதை ஏன் கேட்கிறீர்கள், போங்கள், என் வீட்டுக்காரிக்குத் திடீரென்று என்னென்ன ஆசைகளெல்லாமோ பிறந்திருக்கின்றன. அவை ஏன் பிறந்தன, எப்படிப் பிறந்தன என்று நானும் யோசிக்கிறேன், யோசிக்கிறேன், அப்படி யோசிக்கிறேன்; ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது!’ என்று பெருமூச்செறிய, ‘ஏன், மாதம் பிறந்ததும் நீ உன் சம்பளத்தை வாங்கிக் கொண்டு போய் மனைவியிடம் தானே கொடுக்கிறாய்?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘நான் அதை எடுத்துக் கொடுக்கும் வரை அவள் எங்கே காத்திருக்கிறாள்? சட்டையைக் கழற்றி மாட்டியதும் அவளேதான் வந்து எடுத்துக்கொண்டு விடுகிறாளே!' என்று பாதாளம் பரிதாபமாகச் சொல்ல, 'அப்புறம் என்ன?’ என்று விக்கிரமாதித்தர் விழிக்க, ‘அதுதானே தெரியவில்லை எனக்கும்!' என்று பாதாளமும் அவருடன் சேர்ந்து விழித்துக் கொண்டே சொன்னதாவது:

‘முன்னெல்லாம் 'அடி, பவானி!' என்று கூப்பிட்டால் போதும்; 'என்ன, அத்தான்!' என்று தித்திக்கக் குழைந்து கொண்டே வந்து எதிரே நிற்பாள். இப்பொழுது என்னடா. என்றால், ‘அடி என்ன அடி? இனிமேல் ‘அடி!’ என்று சொன்னால் இந்தக் கரண்டியாலேயே உங்களை நான் அடிப்பேன்!' என்று தன் கையிலுள்ள கரண்டியைக் காட்டுகிறாள். ‘சரி' என்று 'அடி'யை விட்டுவிட்டு, 'பவானி!' என்று கூப்பிட்டுப் பார்த்தேன்; ‘வெறும் பவானி என்ன வேண்டியிருக்கிறது, பவானி? அடுத்த வீட்டுக்காரரைப் பாருங்கள்; அவர் தம் மனைவியை வெறும் கமலா என்றா கூப்பிடுகிறார்? 'கமலாக்கண்ணு’ என்று செல்லமாகக் கூப்பிடவில்லையா? அதே மாதிரி நீங்களும் கூப்பிட்டால் என்னவாம்?' என்றாள். 'சரி' என்று நானும் 'பவானிக் கண்ணு’ என்று கூப்பிட்டேனோ இல்லையோ, ‘என்னையா மாமா, கூப்பிட்டீர்கள்?’ என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டுக் குழந்தை வந்து எனக்கு எதிரே நின்றது. அதைப் பார்த்து நான் சிரித்ததுதான் தாமதம்; 'இதெல்லாம் உங்கள் சூழ்ச்சி! வேண்டுமென்றே நீங்கள் என்னைக் கூப்பிடுவது போல் எதிர்வீட்டுக் குழந்தையைக் கூப்பிட்டிருக்கிறீர்கள்!' என்றாள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, பவானி! உன் பெயரும் இந்தக் குழந்தையின் பெயரும் ஒண்ணு; அதோடு ‘கண்ணு’ என்று குழந்தையைத்தானே கூப்பிடுவார்கள் என்பது இதற்குத் தெரிந்திருக்கிறது அதனால்தான்...’ என்று நான் மேலே சொல்லி முடிப்பதற்குள், 'இந்தக் குழந்தைக்குத் தெரிவதுகூட எனக்குத் தெரியவில்லை என்கிறீர்கள்; அப்படித்தானே?' என்று அவள் என்மேல் எரிந்து விழுந்தாள். 'இதென்ன விளையாட்டு, உனக்குத் தெரியாதது இந்த உலகத்தில் என்ன இருக்கிறது?’ என்று நான் அவள் தலையில் கொஞ்சம் ஐஸ் வைத்துப் பார்த்தேன். குளிரவில்லை; அப்பொழுதும் அவள் உச்சி குளிரவேயில்லை. 'உங்களைக் கட்டிக்கொண்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? பட்டுப் புடைவை இல்லாவிட்டாலும் ஒரு நைலான், நைலெக்ஸ் புடைவையாவது உண்டா? தங்க நகைகள் இல்லாவிட்டாலும் கவரிங் நகைகளாவது உண்டா, உண்டா? கண்ணுக்கு ஒரு கறுப்புக் கண்ணாடி, கைக்கு ஒரு டம்பப் பையாவது உண்டா, உண்டா, உண்டா? ஒரு மண்ணும் இல்லை, இந்த வீட்டில்! அதெல்லாம் இல்லாவிட்டால் போகட்டும்; ஆசைக்கு ஒரு வார்த்தை ‘பவானிக் கண்ணு’ என்று கூப்பிடுங்கள் என்றால், அதற்கும் மனமில்லை உங்களுக்கு! இனி எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்காது. இந்தக் கூரை வீட்டை விட்டுவிட்டு நீங்கள் உடனே ஒரு மாடி வீட்டுக்காவது குடியேற வேண்டும்; உங்களிடமுள்ள ஓட்டை சைக்கிளைத் தூக்கித் துார எறிந்து விட்டு, நீங்கள் உடனே ஒரு ஸ்கூட்டராவது வாங்கித் தொலைக்க வேண்டும். மாலை நேரத்தில்கூட அடுப்படியில் உட்கார்ந்து அழுது வடிய இனி என்னால் முடியாது. இரவுக்கும் சேர்த்து மத்தியானமே சமைத்து வைத்துவிட்டு, மாலை நேரத்தில் நான் உங்களுடன் வெளியே புறப்படத் தயாராயிருப்பேன். நீங்கள் வேலையிலிருந்து வந்ததும் என்னைத் தூக்கி ஸ்கூட்டருக்குப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு சினிமாவுக்கோ, பீச்சுக்கோ போகவேண்டும். அங்கே நீங்கள் என்னைக் கிள்ள வேண்டும்; நான் துள்ள வேண்டும். நான் உங்களைக் கடிக்க வேண்டும்; நீங்கள் சிரிக்க வேண்டும்!' என்று என்னவெல்லாமோ பிதற்ற ஆரம்பித்துவிட்டாள். "இதென்ன வம்பு! நிஜமாகவே இவள் நம்மைக் கடித்துவிட்டால், நம்மால் சிரிக்கவா முடியும்?' என்று நான் பயந்துபோய், 'அதெல்லாம் நடக்கும்போது நடக்கிறது; இப்போது நீ எனக்குச் சோற்றைப் போடு!' என்றேன். 'இந்தச் சோற்றைப் போடும் வேலையைக்கூட இனி என்னால் தொடர்ந்து செய்து கொண்டிருக்க முடியாது. பேசாமல் நீங்கள் ஒரு 'டைனிங் டேபிள்' வாங்கி விடுங்கள். அதில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து சாப்பிடுவோம்!' என்றாள். 'அப்படியே செய்வோம்; அதற்காக நீ கவுன் போட்டுக்கொண்டு பட்லரைத் தேடாமல் இருந்தால் சரி!’ என்றேன் நான். 'இந்த வக்கணையில் ஒன்றும் குறைச்சல் இல்லை!' என்று அவள் தன் முகவாய்க் கட்டையைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டே எனக்குச் சோற்றைப் போட்டாள். சாப்பிட்டு விட்டு வந்தேன். வந்ததிலிருந்து ‘இத்தனை நாளும் இல்லாத ஆசைகளெல்லாம் இன்று ஏன் அவளுக்கு வந்திருக்கின்றன?’ என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன், பார்க்கிறேன், அப்படிப் பார்க்கிறேன்-ஒன்றும் புரிய மாட்டேன் என்கிறது!'

இப்படியாகத்தானே பாதாளம் சொல்லிக்கொண்டு வந்தவையனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த விக்கிரமாதித்தர் கடைசியாகச் சிரிக்க, ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ என்று பாதாளம் கேட்க, ‘நெருப்பில்லாமல் புகையாது; அதே மாதிரி ஒரு காரணமும் இல்லாமல் உன் மனைவிக்கு இந்த ஆசைகளெல்லாம் பிறந்திருக்காது. நீ சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் அவளுடைய பெட்டியை அவளுக்குத் தெரியாமல் திறந்து பார்; அதற்கு ஆதாரம் ஏதாவது கிடைக்கலாம்!' என்று சொல்வாராயினர்.

அங்ஙனமே அன்று மாலை பாதாளம் வீட்டுக்குச் சென்றதும் அவள் பெட்டியை அவளுக்குத் தெரியாமல் திறந்து பார்க்க, அதில் தமிழக அரசின் லாட்டரிச் சீட்டுக்கள் ஏ. பி. சி. டி. ஈ. எப். ஜி. எச். ஆக எட்டுப் பிரிவுகளிலும் வகைக்குப் பத்தாக எண்பது சீட்டுக்கள் இருக்க, ‘அடிப்பாவி! என் சம்பளத்தில் பாதியை இதற்கா அழுதாய்?’ என்று தனக்குள் பொருமிக்கொண்டே அவற்றைக் கொண்டு வந்து அவன் விக்கிரமாதித்தரிடம் கொடுக்க, அவர் அந்தச் சீட்டுக்களை வாங்கி அவற்றின் எண்களோடு பரிசு விழுந்த சீட்டுக்களின் எண்களை ஒப்பிட்டுப் பார்க்க, அதிலிருந்த எண்பது சீட்டுக்களில் ஒன்றுக்கு இரண்டாவது பரிசாக ரூபா பத்தாயிரம் வந்திருப்பதைக் கண்டு, 'இதோ பார்த்தாயா, இந்தச் சீட்டுக்குப் பரிசாக வந்திருக்கும் ரூபா பத்தாயிரம் தான் உன் மனைவியின் திடீர் ஆசைகளுக்கெல்லாம் காரணம்!' என்று சொல்ல, 'அப்படியா சங்கதி? மூர் மார்க்கெட்டிலே செப்படி வித்தை காட்டிப் பிழைப்பவன்தான் ஜனங்களை ஆசை காட்டி மோசம் செய்கிறான் என்றால், அரசாங்கமுமா அப்படிச் செய்ய வேண்டும்? அதைவிட கள்ளுக்கடைகளையே மறுபடியும் திறந்துவிடலாம்போல் இருக்கிறதே? என் மனைவிக்குப் பத்தாயிரம் ரூபா வந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம்? பத்தாயிரம் பேருக்குப் பத்தாயிரம் ரூபா போயிருக்கிறது என்றுதானே அர்த்தம்? ‘அடுத்த வீட்டுக்காரனைப் பட்டினி போட்டுவிட்டுச் சாப்பிடுபவன் அயோக்கியன், திருடன்!' என்று சொன்ன காந்தி மகான் பிறந்த நாட்டிலா இப்படியெல்லாம் நடப்பது? இது அநியாயமில்லையா?' என்று பாதாளம் பிரலாபிக்க, ‘நியாயம் அநியாயத்தையெல்லாம் இப்போது நீ பார்க்கக் கூடாது. உனக்குப் பத்தாயிரம் கிடைத்ததா, உன் மனைவி சொல்வது போல் மாடி வீட்டுக்குக் குடியேறு; ஸ்கூட்டர் வாங்கு, டைனிங் டேபிள் வாங்கு! நைலான் சாரி வாங்கு; கூலிங் கிளாஸ் வாங்கு! அவள் சொல்வதுபோல் அவளைத் தூக்கி ஸ்கூட்டருக்குப் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு பீச்சுக்கோ, சினிமாவுக்கோ போ! அங்கே நீ அவளைக் கிள்ளு; அவள் துள்ளட்டும். அவள் உன்னைக் கடிக்கட்டும்; நீ சிரி! பாக்கிப் பேரைப் பற்றி அரசாங்கத்துக்கு இல்லாத கவலை உனக்கும் எனக்கும் என்னத்துக்கு? அவர்கள் நாசமாய்ப் போகட்டும்!' என்பதாகத்தானே விக்கிரமாதித்தர் சம்பந்தப்பட்டவர்களை ஆசீர்வதித்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைப்பாராயினர்."

தினாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கிருபா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதினேழாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கருணா சொல்லும் கதையைக் கேளுங்கள்!' என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......