உள்ளடக்கத்துக்குச் செல்

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/முகமூடித் திருடர் கதை

விக்கிமூலம் இலிருந்து

23

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன

முகமூடித் திருடர் கதை

"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்து மூன்றாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'பஞ்சாபகேசன், பஞ்சாபகேசன்' ன்னு ஒரு பாங்கர் பட்டணத்திலே உண்டு. அவர் தம் பணத்தை ஒரு கணம் கூடத் தூங்கவிட மாட்டார்; 'தூங்க விட்டால் வட்டியும் தூங்கி விடும்’ என்று சதா அதை எழுப்பி உலாவ விட்டுக் கொண்டே இருப்பார். அதே மாதிரி அவரும் தூங்குவதில்லை; சதா விழித்துக்கொண்டே இருப்பார்.

இப்படியாகத்தானே பணமே தாமாகவும், தாமே பணமாகவும் அவர் இருந்துவருங்காலையில், எங்கிருந்தோ வந்த முகமூடித் திருடர்கள் நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் அஞ்சாமல் புகுந்து அயராமல் கொள்ளையடிக்க, அவர்களிடமிருந்து தம்மையும் தம் பணத்தையும் எப்படிக் காத்துக் கொள்வதென்று அவர் யோசித்தார், யோசித்தார், அப்படி யோசித்தார். நகரத்துக்கு வெளியே உள்ள வீடாகப் பார்த்துத்தான் அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை அறிந்த அவர், அடையாற்றிலிருந்த தம் வீட்டை உடனே திருவல்லிக்கேணிக்கு மாற்றினார். கையிலிருந்த ரொக்கம், விலையுயர்ந்த நகைகள் ஆகியவற்றைப் பாங்குகளிடம் ஒப்படைத்தார். பாங்கின் நேரம் கழித்து வந்த பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி, அதன் கதவை ஒரு தடவைக்கு நாலு தடவையாக இழுத்து இழுத்துப் பார்த்தார். எல்லாம் ஒரு வழியாக முடிந்தபின், 'அப்பாடா!’ என்று அவர் ஒரு 'டெகா மீட்டர்' அளவுக்குப் பெருமூச்சு விட்டார்.

அன்று என்னவோ தெரியவில்லை-துக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வருவதுபோல் இருந்தது அவருக்கு; எழுந்து போய் குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக்கொண்டு வந்தார். இடுப்பு வலிப்பதுபோல் இருந்தது; 'விழித்தபடியே கொஞ்ச நேரம் படுத்துக்கொண்டுதான் இருப்போமே!’ என்று படுத்தார். மணி 'டாண், டாண்’ என்று பத்து அடித்தது. அதுகாலை, ‘பால் சாப்பிடவில்லையா?' என்று கேட்டுக் கொண்டே அன்னார் 'பட்டமகிஷி' அங்கே வர, 'வேண்டாம்; அதை டீயாகப் போட்டுக்கொண்டு வந்து இங்கே வைத்து விடு!' அவர் கட்டளையிட, அந்தக் கட்டளையைச் சிரமேற் கொண்டு அந்த அம்மாள் அப்படியே போட்டுக் கொண்டு வந்து வைக்க, அதை அடிக்கொரு வாய் குடிப்பதும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டிருப்பதுமாக அன்றிரவைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தார் அவர்.

இந்த விதமாகத்தானே அவர் இருந்து வருங்காலையில், மணி பதினொன்று, பன்னிரண்டு என்று அடித்து, ஒன்று என்றும் அடித்தது. தம்மையும் மீறி 'ஆவ்’ என்று வந்த கொட்டாவிக்கு அவர் வழக்கம்போல் சிட்டிகை போட்டு ‘சென்ட் ஆப்' கொடுத்துவிட்டுத் திரும்பிப் படுத்தார். அதுகாலை இரண்டு முகமூடித் திருடர்கள் எங்கிருந்தோ வந்து அவருக்கு முன்னால் நிற்க, அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தார்.

அதற்குள் அவர்களில் ஒருவன் தன் கையிலிருந்த சவுக்குக் கட்டையை அவருடைய தலைக்கு நேராக ஓங்க, இன்னொருவன், 'எங்கே இருக்கிறது பணம்?’ என்று சைகை மூலம் கேட்க, ‘இவர்கள் எந்த ஊர் திருடர்களாயிருப்பார்கள்? இவர்களுக்கு இந்தியும் தெரியாது, இங்கிலீஷும் தெரியாது போல் இருக்கிறதே?' என்று நினைத்த அவர், 'அதோ இருக்கிறது!’ என்று நடுங்கிக் கொண்டே இரும்புப் பெட்டியைக் காட்ட, ‘எடு சாவியை, திற பெட்டியை!' என்று அவர்கள் மேலும் ஜாடை காட்டியே அவரை விரட்டுவாராயினர்.

பார்த்தார் பஞ்சாபகேசன்; அவர்கள் கையிலுள்ள சவுக்குக் கட்டை தம்முடைய மண்டையைப் பதம் பார்ப்பதற்கு முன்னால் இரும்புப் பெட்டியைத் தாமே திறந்து, அவர்கள் கேட்பதை கொடுத்துவிடுவதுதான் தமக்கு மரியாதை என்று நினைத்தார்; நினைத்ததும் எழுந்தார்; இரும்புப் பெட்டியை நோக்கி நடந்தார். எடுத்தார் சாவியை; திறந்தார் பெட்டியை. நல்ல வேளையாக அன்று வசூலான பணம் ஏதும் அதில் இல்லை; 'வெறும் பெட்டியாக இருக்கக் கூடாதே!' என்பதற்காக அதில் ஒரே ஒரு ரூபாயை மட்டும் போட்டு வைத்திருந்தார். அதை எடுத்து அவர்களிடம் தாராளமாகக் கொடுத்தார். அவர்கள் அதை அலட்சியமாக வாங்கி வீசி எறிந்துவிட்டு, ‘எடு நகையை!' என்று மேலும் சைகை காட்டினார்கள். மூக்கால் அழுதுகொண்டே அதிலிருந்த நகைகளையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டதும் அவர்களில் ஒருவன் ‘ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரிக்க, இன்னொருவன், 'காலையில் நானும் அண்ணாவும் ‘ஊட்டிக்கு உல்லாசப் பயணம் போகப் போகிறோம்; ஓர் இருநூறு ரூபாய் கொடுங்கள்!’ என்று எத்தனை கெஞ்சுக் கெஞ்சிக் கேட்டோம்? ‘கொடுக்கவே மாட்டேன்!' என்று சொன்னீர்களே, அப்பா! இப்பொழுது பார்த்தீர்களா, கேட்க கேட்க ஒவ்வொரு நகையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்!' என்று சொல்லிக் கொண்டே தான் அணிந்திருந்த முகமூடியைக் கழற்ற, அவனைத் தொடர்ந்து அவன் அண்ணனும் கழற்ற, ‘அயோக்கியப் பயல்களா, உங்கள் வேலைதானா இது? நானும் உங்களிடம் ஒன்றும் ஏமாந்துவிடவில்லையடா, ஏமாந்து விடவில்லை. என்ன நகைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறேன் என்று கொஞ்சம் வெளிச்சத்தில் வந்து பாருங்கள்; எல்லாம் போலி நகைகளடா, போலி நகைகள்!’ என்று தகப்பனாராகப் பட்டவர் விழுந்து விழுந்து சிரிக்க, அதைக் கேட்டுப் புத்திர சிகாமணிகளாகப்பட்டவர்கள் ‘விழி, விழி' என்று விழிக்க, 'போங்கடா, போக்கற்றப் பயல்களா! நீங்கள் முகமூடி போட்ட திருடர்கள் என்றால், நான் முகமூடி போடாத திருடன் என்பது உங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே, அவர் மறுபடியும் போய்க் கட்டிலில் படுத்து, 'ஆவ்’ என்று மறுபடியும் வந்த கொட்டாவிக்கு வழக்கம்போல் ‘டக், டக்’ என்று சிட்டிகை போட்டு 'சென்ட் ஆப்’ கொடுப்பாராயினர்.'

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘பணம் பாசத்தை வெல்கிறதா, பாசம் பணத்தை வெல்கிறதா?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, 'பாசம் எங்கே பணத்தை வெல்கிறது? பணம்தான் பாசத்தை வெல்கிறது!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின் மேல் ஏறிக் கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு....