மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்/பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை
பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன
பைத்தியம் பிடித்த ஒரு பெண்ணின் கதை"விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டுவர, அது அவருக்குச் சொன்ன பதினேழாவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! 'வேலப்பன் சாவடி, வேலப்பன் சாவடி' என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே 'வீரப்பன், வீரப்பன்' என்று ஒரு விவசாயி உண்டு. அவனுக்கு ‘வேலாயி, வேலாயி' என்று ஒரு மனைவி உண்டு. பொழுது விடிந்ததும் கலப்பையைத் தூக்கித் தோளின்மேல் வைத்துக்கொண்டு, கொட்டடியில் உள்ள மாட்டை அவிழ்த்து ஓட்டிக்கொண்டு வீரப்பன் வயல் வெளிக்குச் சென்றுவிட்டால் பொழுது சாய்ந்த பிறகுதான் வீடு திரும்புவான். அவன் மனைவி வேலாயியோ நெல்லை வெய்யிலில் கொட்டிக் காய வைத்து உலர்த்துவது முதல் அதைப் பச்சையாகவோ, வேக வைத்தோ அரிசியாக்குவது வரை உள்ள எல்லா வேலைகளையும் தானே செய்வாள். இடையில் முதல் நாள் இரவே காய்ச்சி வைத்திருந்த கேழ்வரகுக் கூழில் கட்டித் தயிரைக் கலந்து எடுத்துக் கொண்டு போய் வயற்காட்டில் வேலை செய்யும் தன் கணவனுக்குக் கொடுத்துவிட்டு வருவாள்.
இந்த விதமாகத்தானே வயலும் வரப்பும் போலவும், பயிரும் பச்சையும் போலவும் அவர்கள் இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வருங் காலையில், ஒரு நாள் மாலை வீடு திரும்பிய வீரப்பன் ‘மாட்டுக்கு வைக்கோலைப் போட்டு விட்டு எனக்குச் சோற்றைப் போடு!' என்று வழக்கம்போல் சொல்லிக் கொண்டே கை கால் கழுவிக் கொண்டு உட்கார, வழக்கத்துக்கு விரோதமாக எதையோ பறி கொடுத்ததுபோல் இருந்த அவள், மாட்டுக்கு முன்னால் சோற்றைக் கொண்டு போய் வைத்துவிட்டு, அவனுக்கு முன்னால் வைக்கோலைக் கொண்டு வந்து போட, ‘என்னடி, இன்று என்ன வந்து விட்டது உனக்கு?’ என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க, ‘போய்ச் சேர வேண்டிய நாள் வந்துவிட்டது!’ என்று அவள் அலுப்பும் சலிப்புமாகச் சொல்லிக் கொண்டே சென்று, வைக்கோலையும் சோற்றையும் மாற்றி, அததை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பாளாயினள்.
‘சொல்லடி, இன்று என்ன உனக்கு?' என்று அவன் பின்னும் கேட்க, ‘ஆமாம், போங்கள்!’ என்று அவள் பின்னும் சிணுங்க, அந்த அழகிலே சொக்கிப்போன அவன், 'சிணுங்காதேடி! நீ சிணுங்கினால் என் புத்தி சோற்றின்மேல் போகாது போல் இருக்கிறது!’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அப்போதும் 'வேறு எங்கே போகுமாம்?' என்று முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கேட்க, 'வேறு எங்கே போகும், உன் மேலேதான் போகும்!' என்று அவன் அவளைச் சீண்டிவிட்டுப் பின்னும் சிரிப்பானாயினன்.
‘சிரிக்காதீர்கள்! எனக்கு நெருப்பாயிருக்கிறது!’ என்று அவள் சீற, 'சரி, அழுகிறேன்!’ என்று அவன் 'ஊஊ’ என்று விளையாட்டுக்கு அழ, 'நீங்கள் ஏன் அழவேண்டும், நான் அல்லவா அழ வேண்டும்?’ என்று அவள் அவனை முந்திக் கொண்டு நிஜமாகவே அழுவாளாயினள்.
‘ஏன் அழுகிறாய்? சொல்லிவிட்டாவது அழேன்!' என்று அவன் பொறுமையிழந்து கத்த, 'உங்களை நம்பி மோசம் போனதற்கு அழுகிறேன்!' என்று அவள் சொல்ல, 'என்னை நம்பி மோசம் போனாயா! ஏன், எதற்கு?’ என்று அவன் ஒன்றும் புரியாமல் கேட்பானாயினன்.
‘ஒன்றும் தெரியாதவர் மாதிரி நடிக்காதீர்கள்!’ என்று அவள் பின்னும் அவன்மேல் எரிந்து விழ, 'உண்மையிலேயே ஒன்றும் தெரியாதடி!’ என்று அவன் கையைப் பிசைவானாயினன்.
‘சரி, பாஞ்சாலியைத் தெரியுமா, உங்களுக்கு?' என்றாள் அவள்; ‘தெரியும்’ என்றான் அவன்.
‘அவளுக்கு இரண்டு குழந்தைகள்கூட இருப்பது தெரியுமா, உங்களுக்கு?' என்றாள் அவள்; ‘தெரியும்’ என்றான் அவன்.
‘எல்லாம் தெரிந்துமா அவளையும் அவள் குழந்தைகளையும் அனாதைகளாக விட்டுவிட்டு என்னை நீங்கள் கலியாணம் செய்துகொண்டீர்கள்?’ என்று அவள் ஆத்திரத்துடன் கேட்க, 'யாரடி சொன்னது அப்படி?’ என்று அவனும் ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டே கையிலிருந்த சோற்றைத் தட்டில் உதறிவிட்டு எழுந்து நிற்க, ‘எல்லாம் அவள்தான் சொன்னாள்!' என்று அதற்குள் தன் கண்களிலிருந்து வழிய ஆரம்பித்துவிட்ட நீரைத் துடைத்துக் கொண்டே அவள் சொல்ல, இவன் 'கலகல' வென்று நகைத்துக்கொண்டே மறுபடியும் சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்து, ‘உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பைத்தியமடி, பைத்தியம்!' என்று பின்னும் சிரிப்பானாயினன்.
‘யாருக்குப் பைத்தியம்? எனக்கா, அவளுக்கா?' என்று அவள் அப்போதும் அவனை நம்பாமல் கேட்க, 'அவளுக்குத் தான்!' என்று அவன் அப்போதும் பொறுமையிழக்காமல் சொல்ல, 'இல்லை, எனக்குத்தான்; உங்களைக் கலியாணம் செய்துகொண்ட எனக்குத்தான் பைத்தியம்!’ என்று அவள் ஆத்திரம் தாங்காமல் தன் தலையில் அடித்துக் கொள்வாளாயினள்.
‘சொல்வதைக் கேளடி!’ என்று அவன் கொஞ்ச, 'என்னத்தைக் கேட்பது?' என்று அவள் மிஞ்ச, 'பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தப் பாஞ்சாலி. அவள் கணவன் பசுபதி சென்ற வருஷம் ஊரில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாகக் கள்ளத் தோணியில் இலங்கைக்குப் போனான். போன இடத்தில் அவன் இவளையும் இவள் குழந்தைகளையும் மறந்து, அங்கே 'அமராவதி, அமராவதி’ என்ற வேறு ஓர் அழகான பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்துகொண்டான். அதை அறிந்த இவளுக்கு இங்கே பைத்தியம் பிடித்துவிட்டது. எந்தப் பெண்ணைக் கண்டாலும், ‘உன் புருஷன்தான் என்னை இந்தக் கோலத்தில் விட்டுவிட்டு உன்னைக் கலியாணம் செய்து கொண்டு விட்டான்'. உன் புருஷன்தான் என்னை இந்தக் கோலத்தில் விட்டுவிட்டு உன்னைக் கலியாணம் செய்து கொண்டு விட்டான்’ என்று சொல்லிக்கொண்டு திரிந்தாள். இவள் இங்கே இப்படியிருக்க, அங்கே அமராவதியினால் திடீரென்று கைவிடப்பட்ட அவனும் பித்துப் பிடித்தவனாகி, யாரைப் பார்த்தாலும், 'நீதான் அமராவதியையும் என்னையும் பிரித்துவிட்டாய், நீதான் அமராவதியையும் என்னையும் பிரித்துவிட்டாய்!' என்று உளறிக்கொண்டே திரிகிறானாம். இதுதான் அவர்கள் கதை!' என்று சொல்ல, ‘நல்ல கதைதான்!' என்று அதையும் நம்பாமல் அவள் பின்னும் முகத்தைத் திருப்ப, அதுகாலை அடுத்த வீட்டுத் தம்பதியருக்குள் ஏதோ கூச்சல் கிளம்ப, அது என்னவென்று ஓடிப்போய்ப் பார்த்த அவள், அங்கேயும் அந்தப் பாஞ்சாலி வந்து அப்படியே சொல்லிவிட்டுப் போயிருப்பதை அறிந்து வெட்கத்தால் முகம் சிவக்கத் திரும்பி, 'நீங்கள் சொன்னது அத்தனையும் நிஜமாய்த்தான் இருக்கிறது!’ என்று சொல்ல, ‘எல்லாம் அளவுக்கு மீறி ஆசை வைத்ததன் பலனடி, பலன்! இப்போதாவது உண்மை தெரிந்ததா, உனக்கு? நீயும் என்மேல் அளவுக்கு மீறி ஆசை வைக்காதே, உனக்கும் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்!' என்று அவன் சொல்லிச் சிரிக்க, 'நீங்களும் என்மேல் அளவுக்கு மீறி ஆசை வைக்காதீர்கள்; உங்களுக்கும் பைத்தியம் பிடித்தாலும் பிடிக்கும்!' என்று அவளும் சொல்லிச் சிரிப்பாளாயினள்.'
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, 'துன்புத்தில் பெருந் துன்பம் எது?' என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘அன்பினால் வரும் துன்பந்தான்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தின்மேல் ஏறிக்கொண்டு விட்டது என்றவாறு... என்றவாறு... என்றவாறு...