சீர்மிகு சிவகங்கைச் சீமை/ஆற்காட்டு நவாப்பின் ஆட்சி
4. ஆற்காட்டு நவாப்பின்
ஆட்சி
காளையார் கோவில் கோட்டைப் போரில் சின்ன மறவர் சீமையின் வீரம் விலை போகாததால் தோல்வியுற்ற மறவர்கள், வழி நடத்தக் கூடிய தலைவர் இல்லாமல் தத்தளித்தனர். தலைக்குனிவுடன் ஆக்கிரமிப்பாளரது ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழி எதுவும் தென்படவில்லை. ஆனால் அவர்களது உள்ளம் உலைக்களம் போல தன்மானத்தினால் கொதித்து குமுறிக் கொண்டிருந்தது.
சிவகங்கைக் கோட்டையின் பாதுகாப்பினை ஆற்காட்டு நவாப்பின் படைகளும் கும்பெனியாரது அணிகளும் மேற்கொண்டன. நவாப்பின் நிர்வாகம் சிவகங்கை கோட்டையில் இருந்து இயங்கத் தொடங்கியது. பேட்டைகளிலும், சுங்கச் சாவடிகளிலும் மிரட்டு மொழி பேசுகின்ற முரட்டு பட்டாணியர்கள் காவல் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் நாள்தோறும் சிவகங்கை அரண்மனைக்கு எதிரே உள்ள பரந்த மைதானத்தில் சீருடை பூண்டு அணி வகுத்து ஆங்கிலத் தளபதிகளது உத்திரவுப்படி பயிற்சிகளை செய்து வந்ததை மக்கள் சற்று வியப்புடன் கவனித்து வரலாயினர்.
இந்த கவாத்து மைதானத்திற்கு அருகில் அரண்மனை முகப்பிற்கு அண்மையிலேயே புதிதாக அமைக்கப்பட்ட மாளிகையில் ஆற்காடு நவாப்பின் மூத்த மகன் உம்தத் உல்-உம்ரா தங்கி இருந்தார். அவர் சிவகங்கைச் சீமையில் நவாப்பின் நேர் பிரதிநிதியாக செயல்பட்டார். புதிய அரசின் நிர்வாகம் அடுத்தடுத்து பல புதிய ஆணைகளைப் பிறப்பித்தது. சிவகங்கை என்ற பெயருக்குப் பதிலாக ஹுஸைன் நகர்[1] என்ற புதிய பெயர் அரசு ஆவணங்களில் இடம் பெற்றன. (ஏற்கனவே இராமநாதபுரத்தின் பெயரை அலி நகர் என மாற்றம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)
சென்னையில் உள்ள நவாப் வாலாஜா முகம்மது அலியுடனும் கும்பெனியாருடனும் தொடர்பு கொள்வதற்கு ஏற்றவாறு சீமை நிர்வாக கடிதப் போக்குவரத்து, அங்கு அமலில் இருந்த பாரசீக மொழியில் கையாளப்பட்டது. இந்தக் கடிதங்களில் இஸ்லாமியரது 'ஹிஜிரி' ஆண்டு முறையும், சர்க்காரது வரவு செலவு கணக்கில் பசலி முறையும் புகுத்தப்பட்டன. சிவகங்கை மன்னர்கள் ஆட்சியில் குடி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலமான்யங்கள், தர்மாசனம், ஜீவிதஇனாம் போன்ற நிலக்கொடைகள் பறிமுதல் செய்யப்பட்டு புதிய சர்க்காரது ஆதரவாளர்களுக்கு கவுல்காணி என்ற பெயரில் வழங்கப்பட்டன.[2] புழக்கத்தில் இருந்த மின்னல் பணம், சுழிப்பணம், சுழிச்சக்கரம், டச்சுக்காரர்களது போர்டோ நோவா பகோடா போன்ற நாணயங்களை மதிப்பிழக்கச் செய்து ஆற்காட்டு வெள்ளி ரூபாயை அதிகார பூர்வ நாணயமாக அறிவித்தது. பழைய நாணயங்களுக்கும் இந்த புதிய ரூபாய்க்கும் மதிப்பில், 1:3 1/2 என்ற விகித வேறுபாடு இருந்தது. ஊர்த் தகராறுகளை தீர்த்து வைப்பதற்காக பாரம்பரிய முறையில் இயங்கி வந்த ஊர்ச் சபை, நாட்டார்களது ஊர்ப்பொதுசபை ஆகியவைகளை நீக்கிவிட்டு, நவாப்பின் அலுவலர்களான அமில்தார்கள், குற்றங்களுக்கு அபராதமும் தண்டனையும் அளிக்கும் நியாயாதிபதிகளாக மாறினர். நடைமுறையில் இருந்து வந்த தலங்காவல், தேசகாவல் முறைகள் அகற்றப்பட்டு ஊர்களுக்கு புதிய காவல்காரர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் சிவகங்கை சீமை மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் பல இடைஞ்சல்களை எதிர் நோக்க வழிவகுத்ததுடன், அவர்கள் ஒரு அன்னிய அரசுக்கு அடிமைக் குடிகளாக இருக்கிறோமே என்ற வேதனையையும் வெறுப்பையும் வளர்த்தன. இயல்பாகவே ராஜவிசுவாசமும் போர்க்குணமும் மிக்க இந்த சீமை மக்கள் நவாப்பின் அலுவலர்களுடன் ஆங்காங்கு மோதினர். நாளடைவில் இந்த கிளர்ச்சிகள் சங்கிலிப் பின்னலாக சீமையின் பல பாகங்களுக்கு பரவி கூட்டுக் கிளர்ச்சிகளாகப் பரிணமித்தன. பக்கத்து பெரிய மறவர் சீமையின் சேதுபதி மன்னரை ஆற்காட்டு நவாப்பும் கும்பெனியாரும், திருச்சிக் கோட்டையில் சிறை வைத்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, சேதுபதி சீமையின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் மாப்பிள்ளைத் தேவர் என்ற மாவீரன் தலைமையில் மக்கள் திரண்டு, நவாப்பின் நிர்வாகத்தைச் செயலிழக்கச் செய்த சாதனையை அறிந்தனர். இதனால் எழுச்சியும் ஆர்வமும் கொண்ட மக்கள் காடுகளில் கூடினர். திண்டுக்கல் சீமையில் இருந்து ராணி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராயப் பிள்ளையும் சிவகங்கைச் சீமைக்குத் திரும்ப இருக்கும் செய்திகளை, அது தொடர்பாக அவர்கள் குடிமக்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய ஒலைகளைப் படிக்கக் கேட்டு பரவசமுற்றனர். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைகளையும், பேட்டைகளையும் தாக்கினர். அவர்களிடம் இருந்த வில், வேல், வாள், நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவைகளை இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். பரவலாகத் தொடர்ந்த இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நவாப்பின் பணியாளர்கள், பத்திரமான இடங்களைத் தேடிச் சென்று தங்களது பணிகளை மேற்கொண்டனர். ஆனால் எத்தனை நாட்களுக்கு இவ்விதம் பயத்திலும் பீதியிலும் கழிக்க முடியும்? நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சிவகங்கை சீமை மக்களது அந்நிய எதிர்ப்பு உணர்வும் அதிகரித்துக் கொண்டே வந்தது.[3]
இந்த மக்களில் சிலர் ராணியாரது நிலையை வலுப்படுத்தி நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்து சிவகங்கையை மீட்பதற்கு விருபாட்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். இவையெல்லாம், சிவகங்கைச் சீமையில் நவாப் முகம்மது அலியின் மூத்த மகனது நேரடி நிர்வாகம் என்ற தேர் வெகு விரைவில் நிலைக்கு வரவிருப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டின.