உள்ளடக்கத்துக்குச் செல்

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்/எஜமானன் நூ பர்மா

விக்கிமூலம் இலிருந்து

“எஜமானன் நூ’’
பர்மா முதல் பிரதமர் ஆனார்!

பர்மா மொழியில் ‘தக்கின்’ என்றால் ‘எஜமானன்’ என்று பொருள்! இந்தப் பட்டத்தைப் பர்மா இளைஞர்களும் பள்ளி மாணவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு, பர்மா நாட்டின் பட்டி தொட்டிகள், நகரங்கள் உட்பட்ட பல இடங்களில் கோலாகலமாக ஊர்வலம் வந்தார்கள்.

‘தக்கின்’ என்ற பட்டப்பெயரைச் சூட்டிக்கொண்டவர்கள் எல்லாம், பர்மா நாட்டுக்கும், மொழிக்கும் தங்களது உயிரையும் கொடுக்கத் தயாரான தேசபக்தர் படையிலே, சுதந்திர அணிகளிலே பக்தி பெற்றவர்களாவர்.

அதன் அறிகுறியாகத்தான் பர்மிய மக்கள் அந்த நாட்டிலே ஒரு பெரும் புரட்சியை உருவாக்கிய படைகளுடன் நாட்டுப் பற்றோடு இரண்டறக் கலந்து, எதற்கும், அஞ்சாத விடுதலை வீரர்களாகப் பணியாற்றினார்கள்.

அந்நாட்டு மக்களது விடுதலை வேட்கையின் உட்பொருள் என்னவென்றால், “பர்மா நாட்டிற்கு நாங்களே எஜமானர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் அல்ல!” என்ற சுதந்திர வெறிதான் காரணமாகும்!

இவ்வாறு அவர்கள் தங்களைத் தாங்களே ஏன் அவ்வாறு அழைத்துக் கொண்டார்கள்? ஆங்கிலேய வெள்ளையர்களை எங்கு பார்த்தாலும் சரி, அல்லது அவர்களுடன் பேசும் நெருக்கம் பெற்ற நண்பர்களானாலும் சரி, அவர்களைக் கண்டதும் பர்மியர் கூறும் முதல் விடுதலை கீதம், அதாவது ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், சுயராச்சியம் எமது பிறப்புரிமை என்ற சுதந்திர உரிமை உணர்ச்சியூட்டும் கோஷங்களைப்போல, பர்மியர்களும் ‘தக்கின்’ என்பார்கள் நாங்கள் பர்மாவின் எஜமானர்கள் என்று எடுத்த எடுப்பிலேயே பர்மியர்கள் முழக்கமிட்ட பின்புதான், பிறகு எதையாவது மற்றவர்களுடன் பேசுவார்கள். அதனாலேதான் பர்மியர்கள் தங்களைத் தாங்களே எஜமானர்கள் என்ற சங்கநாத வணக்கம் செய்து கொண்டார்கள்.

பர்மியர்களின் இந்த ஆச்சரியமான போராட்டத்தின் மூலகர்த்தா யார்? அவர்தான் ‘நூ’ என்ற புரட்சி மனம் படைத்த இளைஞராவார். ‘பர்மாவின் எஜமானர் நாங்களே’ என்று அறிவித்துக் கொண்ட அந்த வீரரின் பின்னாலே எண்ணற்ற இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப்படுவோர் விடுதலை முழக்கப்பணிகளைச் செய்து கொண்டே ஓர் இராணுவ அமைப்பைப் போல இரும்பு நெஞ்சுடன் போராடினார்கள்.

இந்த ‘நூ’ தான் பிறகு ஒரு நாள் பர்மிய மக்கள் அனைவருக்கும் பிரதமரானார் என்பது விடுதலை உணர்வு கொண்ட ‘தக்கின்’ படையினருக்கு வியப்பாகவே விளங்கியது.

இந்த ‘நூ’ என்பவர், 1907-ம் ஆண்டில் பர்மா வியாபாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் சிறுவனாக இருந்தபோதே அவருக்கு இளைஞர் தாதா என்ற ரவுடித்தனப் பட்டமும் கிடைத்துவிட்டது.அவ்வளவு பெரிய போக்கிரியாகப் பேர் பெற்றார். பெற்றோர்கள், நண்பர்கள், உறவுகள் யாருமே இந்த ‘நூ’வை ‘வா’ என்று கூட அழைப்பது இல்லை! இந்த போக்கிரி போனால் போதும் என்று அவருள்ள இடத்திலிருப்போர் பேசுவார்கள்.

பள்ளிப் படிப்பை எப்படியோ முடித்து கல்லூரிப் படிக்கட்டுகளிலேயும் காலடி வைத்துவிட்டார்! என்னவோ அவரது பழைய பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறி, குறைந்து, கல்வியாளர்களும் பொதுமக்களும் பாராட்டும் அளவிற்குக் கவிதைகளை எழுதித்தள்ளும் ஒரு பாரதியாக மாறிவிட்டார் ‘நூ’

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மறம்பாடி வீரத்தை எழுப்புவார் மக்களுக்கு தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வசைபாடி எழுதுவார், விருப்பமானவர்களானால் அவர்கள் மீது புகழ்மாலை புனைந்து சூட்டுவார்! பர்மா விரோதிகள் எட்டப்பர்களாக விளங்குவோர் என்று எண்ணிவிட்டாரானால், உடன் அந்தத் துரோகிகள் மீது அறம் பாடுவார்!

‘நூ’இவ்வாறு எழுதும் கவிதைகள் நாளடைவில் சுதந்திர வீர முழக்கங்களான கவிதை உணர்வுகளை ஊட்டிடும் புரட்சி மனப்பானமையோடு பர்மா பத்திரிகைகளிலே வெளிவரும்.

1930-ம் ஆண்டின் போது, பாரதியாரைப் போல் விடுதலை விடுதலை என்ற பொருளை வழங்கும் பர்மா மொழியிலே கவிதையைப் பாடியபடியே வீதிவலம் வந்து, ஒரு பொதுமேடையிலே ஏறி, சிங்கநாதம் செய்தார். அந்த சிங்கநாதம் என்ன தெரியுமா?

‘வெள்ளையனே பர்மாவை விட்டு ஒடு! இல்லையென்றால் துரத்துவோம்! என்ற பொருளிலே அன்று அவர் பாடிய அந்த சுதந்திரப் போர் கவிதை, கேட்ட மக்களை வேங்கைகளாக்கியது! சினந்து எழுந்தார்கள் ‘தக்கின்நூ’ ‘எங்கள் எஜமானர் நூ’வே வாழ்க என்றார்கள்.

மேடைகள் மட்டுமா? பத்திரிகைகளிலே பல கட்டுரைகளை எழுதினார் பத்திரிகை ஆசிரியர் ஊ-பா-சோ;நூ வின் நண்பரானார்! பத்திரிகை வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டியபடியே தவறாமல் வெளிவந்தது.

பார்த்தனர் பிரிட்டிஷார்! ஏவினர் அடக்குமுறைச் சட்டங்களை! நூ-சிறையிலே தள்ளப்பட்டார்! பத்திரிகை ஆசிரியர் பத்திரிகையைப் பயந்துபோய் நிறுத்திவிட்டார்.

சும்மா இருப்பாரா ‘நூ’ சிறையில்? சிறைச்சாலை தேசபக்தர்களை என்ன செய்யும் என்றபடியே, சிறைக்குள் அவர் கம்யூனிச இலக்கியங்களைப் படித்தார் சோசலிசச் சித்தாந்தங்களைப் புரிந்து சிறைக்குள்ளேயே பல சிங்கங்களை உருவாக்கிச் சிலிர்த்தெழ வைத்தார்! ஏன்?

எப்படியும் பார்மாவைப் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெறச் செய்திட வேண்டும் என்ற ஒரே இலட்சியத்திலே, சிறைக்குள்ளேயே விடுதலை உணர்வுப் படைகளை உருவாக்கினார்.

இதைக்கண்ட பிரிட்டிஷ் ஆட்சி, ‘நூ’ வால் சிறை ஒழுங்கு கெடுகிறது எனக் காரணத்தைக் காட்டி அவரை விடுதலை செய்தது. சிறையிலே இருந்து வெளிவந்த ‘நூ’ ரங்கூன் கல்லூரியிலே சேர்ந்து 1936-ம் ஆண்டு வழக்குரைஞரானார். தேசபக்தியால், அவர் பிரிட்டிஷாரின் சட்டத்தை மீறி பல போராட்டங்களைச் செய்து கைதானார். பிறகு விடுதலையானார் மறுபடியும் மாறி மாறி கைதாகும் நிலையை நாட்டிலே உருவாக்கி, பர்மிய மக்கள் மனதிலே விடுதலை நெருப்பை மூட்டி விட்டுவிட்டார்!

பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்ற பல்துறையினரின் ஆதரவை ‘நூ’ பெற்றார். அந்தப் பொதுப்பலம், வெள்ளையர்கள் ஆட்சியை வேரறுக்கும் வேலைகளை ஆங்காங்கே செய்து வந்ததால், பிரிட்டிஷ் அரசு திணறித்திணறி பெருமூச்சுவிட்டபடியே இருந்தது.

இரண்டாவது உலகப்போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம், ஐப்பானியர்கள் பர்மாவைத் தாக்கி எப்படியும் நாட்டைப் பிடித்துவிட தீவிர திட்டம் இயற்றி படைபலத்தோடு முன்னேறிவந்தார்கள்.

பிரிட்டிஷ் படை திணறிக் கொண்டிருந்ததைக் கண்ட ‘நூ’ பர்மாவுக்கு விடுதலை தருவதாக இருந்தால், ஜப்பான் படைகளை எதிர்த்துப் போரிடுவோம். இல்லாவிட்டால் போருக்கு ஆதரவு தரமாட்டோம் என்று அறிக்கைவிட்டார்! அரசுக்கும் அறிவித்தார்!

ஆங்கிலேயர் அரசு ‘நூ’ திட்டத்தை ஏற்க மறுத்தது. அதனால் ‘நூ’ அரசுக்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என்று பொதுமக்கள் இடையே பகிரங்கமாக அறை கூவலிட்டார்.

வெள்ளை ஏகாதிபத்தியம் வேடிக்கையா பார்க்கும்? பிடி ‘நூ’ வை; அவரது புரட்சிக்காரர்களை என்று 1940-ம் ஆண்டில் அனைவரையும் கைதுசெய்து கொடுஞ்சிறையில் அடைத்தது!

ஐப்பான் தாக்கியது பர்மாவை. தாக்குப்பிடிக்க முடியாத பிரிட்டன் பிடரியில் அடிப்பட்ட சிங்கம் போல ஓடியது! இதனால், பர்மாவை ஐப்பான் போரில் பிடித்துக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டியது!

உடனே ஐப்பான் ‘நூ’வையும், அவரது புரட்சிப் படையினரையும் விடுதலை செய்தது. ‘நூ’ கேட்டுக்கொண்டபடி ஐப்பான் அப்போது ஓர் இடைக்கால அரசை அமைத்தது. இந்த அமைச்சரவையில் ‘நூ’ அயல்நாட்டு மந்திரி என்ற பொறுப்பை ஏற்றார்

பிறகு ஐரோப்பாவிலே உள்ள இட்லர், முசோலினி ஆகியோர் நேசநாடுகளிடம் தோல்வி கண்டதால், ஐப்பானியரும் பர்மாவில் நடந்த பிரிட்டிஷ் ஐப்பான் யுத்தத்தில் தோற்றுவிட்டனர், மீண்டும் பிரிட்டன் பர்மாவைப் பிடித்து வெற்றிபெற்றது.

வெள்ளையர் வெற்றி பெற்றார்களே தவிர, மறுபடியும் பர்மிய மக்களை அடக்கி ஆள்வது முடியாத செயல் என்பதைத் திட்ட வட்டமாக உணர்ந்ததால் பர்மாவுக்குச் சுதந்திரம் வழங்க முடிவு செய்தனர்!

அப்போது ‘ஊ அவுங்சான்’ தலைமையில், பாசிச எதிர்ப்பு முன்னணிக்கட்சி என்ற ஒரு கட்சி பர்மா சுதந்திர ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தது. நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதும் ஓர் அரசியல் நிர்ணய சபைக்கு ‘நூ’தலைவரானார்!

பர்மா தேசிய விடுதலை பெற்ற ஓரிரு மாதங்களில் பர்மாவிலே ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது, 1947-ம் ஆண்டில் அப்போது பாசிசஎதிர்ப்புமுன்னணி ஆட்சிக்குப் பிரதமராக இருந்த 'ஊ அவுங்சானும், அவருடைய அமைச்சரவைக் குழுவைச் சேர்ந்த ஏழு அமைச்சர்களும் எதிரிகளால் பாராளுமன்றத்திலேயே படுகொலையானார்கள். இது மக்கள் இடையே பெரிய நட்டத்தையும் பரபரப்பையும் உருவாக்கிவிட்டது.

அப்போது இருந்த பர்மிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, 1948- ஜனவரி 4-ம் தேதியன்று ‘நூ’ பிரதமரானார் பர்மாநாடு குடியரசு நாடானது.

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டல் ஆசையால் வளமிழந்திருந்த பர்மாநாடு, குடியரசு நாடாக மாறியதும், ‘நூ’ அந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிவிட்டார். நிலச் சீர்திருத்தங்களாலும், பிற விவசாயப் பணிகளாலும், பர்மா விவசாயிகள் வளமாகவும், நலமாகவும், சுதந்திர உரிமையோடும் வாழலானார்கள்.

தொழில்களை ‘நூ’ தேசியமயமாக்கினார்! லஞ்ச லாவண்ய கொள்ளையர்களைத் திருத்தும் சட்டங்களைக் கொண்டு வந்தார். புதிய தொழிற்சாலைகள் பல அமைத்து தொழில் வளத்தைப் பெருக்கிக் காட்டினார்!

பர்மாவின் உள்நாட்டிலும், அயல்நாடுகளில் இருந்தும் ‘நூ’ வுக்கு அரசியல் எதிர்ப்புகள் பெருகின. பர்மாவில் வாழும் கரீன்கள் என்ற பிரிவினை வாதிகள் கரீன் இனத்திற்கு தனி நாடு தேவை என்று ‘நூ’ வுக்கு எதிராக கலகம் செய்தார்கள். சீன எல்லை பர்மாவை ஒட்டியிருந்ததால் கம்யூனிஸ்டுகள் தொல்லைகளும் சூழ்ந்தன. இவற்றை ‘நூ’ சாமர்த்தியமாக இரும்புக் கரம் கொண்டு சமாளித்தார்!

அதே நேரத்தில் பர்மிய மக்களின் தேசிய உணர்வுகளை மதித்து அவர்களை ஒற்றுமைப்படுத்தினார்!

கம்யூனிஸ்டுகளின் தொல்லைகளை சூழ்நலைக்கு ஏற்றவாறு சமாளிக்க, புத்தமதத்தைப் பர்மாவிலே பரப்பினார். அதற்காக, புத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார். கம்யூனிஸ்டுகள் மத விரோதிகள் என்ற காரணத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டி, கம்யூனிஸ்டுகளின் இரும்புத் திரை ஆட்சியை எதிர்த்து, மக்களின் ஆன்மிகஉணர்வுகளுக்கு மரியாதை தந்தார்.

எட்டாண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பிறகு, ‘நூ’ பௌத்த பிட்சுவாகி துறவு பூண்டார்! மக்களது சேவைக்காக முழுநேரத்துறவியானார்.