இதழியல் கலை அன்றும் இன்றும்/நாடாளுமன்ற பத்திரிக்கைகளை
12
நாடாளுமன்ற நடவடிக்கைகளில்:
பத்திரிகைகளைப் பாதுகாக்கும்
ஃபெரோஸ் காந்தி சட்டம்!
மக்களாட்சி எனப்படும் ஜனநாயகத் தத்துவத்திற்கு, அரசியல் சட்டம், நாடாளுமன்றம், நீதிமன்றம் மூன்றும் விலைமதிக்க முடியாத மும்மணிச் செல்வங்களாகும். அத்துடன் நான்காவதாக நடமாடும் நான்மணிச் செல்வம் பத்திரிகைகளாகும். இவை நான்கும் ஒரு நாட்டிற்குத் தேவையான மதிப்பையும், மரியாதையையும், பெரும் புகழையும் தேடித் தருகின்ற ‘நான்மணிக் கடிகை’ ஆகும்.
ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்று நடத்துவது நாடாளுமன்றமும், அந்தந்த மாநில சட்டமன்றங்களுமாகும். அதனால், அந்த ஆட்சிமன்றங்களில் நடைபெறும் செய்திகளை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது பத்திரிகைக்ளின் மக்களாட்சிக்குரியத் தொண்டுகளாகும்.
அந்த மக்களாட்சியின் தூது தத்துவத்தைப் பத்திரிகைகள் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பொறுப்புணர்வுகளுடனும், சேவை மனப்பான்மையுடனும், கவனத்துடனும் நிறைவேற்ற வேண்டும்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் நடைபெறும் அரசியல், பொருளியல், சமுதாயவியல் நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் எந்தவிதச் செய்திக் கலப்படமும் செய்யாமல் ‘உள்ளது உள்ளபடியே’ நாட்டு நன்மை நாடி பத்திரிகைகளில் வெளியிடவேண்டும்.
பொறுப்போடு அவ்வாறு வெளியிடாவிட்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் குற்றமோ, ஆட்சிமன்றங்களை அவமதித்தக் குற்றமோ பத்திரிகைகளுக்கு வந்துவிடும்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அந்தந்த ஆட்சி மன்றங்களில் ஆற்றும் பணிகளைப் பத்திரிகைகள் கவனக்குறைவு இல்லாமல் வெளியிடவேண்டும்.
தவறு நேர்ந்தால் அந்தந்த ஆட்சி மன்றங்களின் பணிகளுக்கு இழுக்கு நேர்ந்ததாகக் கருதி, பத்திரிகைகள் மீது உரிமை மீறல் குற்றமும், ஆட்சி மன்றங்களின் அவமதிப்பும் ஏற்பட்டுவிடும். ஆகவே, எந்தவிதக் குறைகளும் நேராதபடி அவற்றின் நடவடிக்கைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது பத்திரிகைகளின் கடமை.
உரிமை மீறல் குற்றம் என்றால் என்ன? என்பதற்கான சட்ட விளக்கம் திட்டவட்டமாக எதுவும் இல்லையென்றாலும், ஆட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை தவறாக வெளியிடுதலும், சபைகளது நடவடிக்கைகளை வேண்டுமென்றே சிதைத்துப் பதிப்பித்தலும், அவைத் தலைவர்கள் அவை நடவடிக்கைகயை வெளியிடக்கூடாது என்று நீக்கியப் பகுதிகளை வெளியிடுதலும், சபைகளின் உரிமைகளை மீறல் என்ற பெயரில் பத்திரிகைகள் மீது குற்றங்கள் கூறப்படுகின்றன. -
இவ்வாறு உரிமை மீறல்களைச் செய்யும் பத்திரிகைகளை தண்டிக்கும் அதிகாரம் வழக்குமன்றங்களுக்கு இல்லை. அதற்கான முழு முதல் அதிகாரம் நாடாளுமன்றம், சட்ட மன்றங்களுக்கு மட்டுமே உண்டு.
எடுத்துக்காட்டாக, 1987-ம் ஆண்டில் ‘ஆனந்தவிகடன்’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் வெளியான ஒரு கேலிச் சித்திரம் (Cartoon) சட்டமன்ற உறுப்பினர்கள் பணிகளை அவமதித்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் சட்டமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்தச் சம்பவம் உரிமை மீறலுக்குரிய எடுத்துக்காட்டாக உள்ளது.
1. பத்திரிகைக்குப் பாதுகாப்புச் சட்டம்:
இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்றப்பிறகு, 1956-ம் ஆண்டில் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் வெளியிடும்போது தவறு ஏற்பட்டுவிட்டால் தண்டனை தருவதோடு மட்டும் நிற்காமல், பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்ற எண்ணம் ஃபெரோஸ் காந்தி Feroz Gandhi என்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டது. இந்தச் “சட்டத்திற்கு The Parlimentary Proceedings, Protection of Publication Act - 1956” என்று பெயர்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பத்திரிகைகள் பிரசுரிக்கும்போது, அவற்றுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் வாதாடி சட்டம் கொண்டுவந்ததால் அந்தச் சட்டத்திற்கு ஃபெரோஸ் காந்திச் சட்டம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் இது:
‘நாடாளுமன்ற செயற்பாடுகளை, தீய குறிக்கோளோடு பத்திரிகைகள் தவறாக வெளியிட்டுள்ளன என்பதை உறுதி செய்யப்பட்டால்தான் - தண்டனை வழங்கலாம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் அவதூறுகளாக இருந்தாலும் - அவை உண்மைகளாக இருந்தால், அவற்றை வெளியிடுவது உரிமை மீறலாகாது’ என்று ஃபெரோஸ் காந்திச் சட்டம் கூறுகின்றது.
இந்தியாவில் நெருக்கடி காலச் சட்டம் வந்தபோது Emergency ஃபெரோஸ்காந்தி சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. நெருக்கடி முடிந்ததும் இந்தச் சட்டம் மீண்டும் உயிர்பெற்று அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
2. எரியீட்டி மீது உரிமை மீறலா?
தமிழ்நாட்டுச் சட்டமன்ற நடவடிக்கையை ஒரு கேலிச் சித்திரத்தின் மூலமாக அவமதித்துவிட்டது ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை என்பதற்காகத் தண்டனை தந்த அவமதிப்பு சட்டம் வாழும்போதுதான் ‘மாலைமணி’ என்ற நாளேட்டில் வெளிவந்த ‘எரியீட்டி’ என்ற ஒரு கட்டுரை ஃபெரோஸ் காந்தியின் பாதுகாப்புச் சட்டத்தின் பலனைப் பெற்று மீண்டது.
1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணிச் சார்பாக, தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ‘தினத்தந்தி’ நிறுவனர் சி.பா. ஆதித்தினார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சென்னிமலையிலோ அல்லது பெருந்துறை தொகுதியிலோ போட்டியிட்ட ஒரு சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார்கள்.
கூட்டணி சார்பாக வெற்றி பெற்ற சோசலிஸ்ட் பாலசுப்பிரமணியம், கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.கழக நடவடிக்கையை எதிர்த்துப் பொது மேடைகளில் பேசி வந்தார்.
அவருடைய அரசியல் தாக்குதலுக்கு மாலைமணி நாளேட்டின் ‘எரியீட்டி’க் கட்டுரைப் பகுதியில் பதில் எழுதவேண்டிய நிலை ஏற்பட்டது. ‘எரியீட்டி’க் கட்டுரையின் நோக்கம் என்னவென்றால்:
- நிலவை உடைத்து அதன் ஒளியை மையாக்கி,
- தென்றலின் இதமான குளிர் நடையிலே
- எழுதுகோலை உலாவவிட்டு தி.மு.கழக அரசியல்
- நண்பர்களை வரவேற்று வாழ்த்துப் பாடும்
- அன்புரைப் பண்பு ‘எரியீட்டி’யின் நோக்கமாகும்.
- அந்த நண்பர்கள் அரசியலில் துரோகிகளாக
- மாறும்போது, சூரியன் கக்கும் கனல்களை
- மையாக்கி, சித்திரைத் திங்கள் கோடையிலே
- எழுதுகோலை துவைத்துக் கொதிக்கக் கொதிக்க,
- கோபம் கொந்தளிக்கத் துள்ளுநடை போட்டுக்
- கண்டன நெருப்பைக் கக்கித் தாக்கும்
- குணமுடையது ‘எரியீட்டி’.
மேற்கண்ட குணங்களோடு அந்த சோசலிஸ்ட் உறுப்பினரின் கூட்டணித் துரோகத்தைச் சாடியது. அக்கட்டுரைக்குத் தலைப்பு என்ன தெரியுமா? ‘உதய சூரியன் ஒளியிலே மலம்கூட விளம்பரம் பெறுகிறது’ என்பதுதான். இதைப் படித்த சோசலிஸ்ட் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை நடக்கும்போது, ‘மாலைமணி’ பத்திரிகை மீது உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்தார். ‘எனது தொகுதி மக்களுக்கு என்னைப் பணியாற்ற விடாம்ல் மாலைமணி எரியீட்டி மிரட்டித் தடுக்கின்றது” என்று பேசினார்.
அறிஞர் அண்ணா அவர்கள் அப்போது முதலமைச்சர் சி.பா. ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவர். அவர்கள் ஒப்புதலுடன் சோசலிஸ்ட் உறுப்பினரின் உரிமை மீறல் தீர்மானம் வாத - விவாதத்திற்குப் பிறகு அது உரிமை மீறல் குழுவின் ஆய்வுக்குச் சென்றது. என்ன முடிவு என்று கேட்கிறீர்களா?
சட்டப்பேரவை ஆய்வுக்குழுவுக்குச் சென்ற ஓர் உரிமை மீறல் தீர்மானம், சட்டப்பேரவையில், மூன்று நாட்களல்ல, மும்முறை மன்றம் கூடிக் கலைந்துத் துவங்கும்போது, அந்த தீர்மானத்தைப் பேரவை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு Renewal செய்யாமல், தீமானத்திற்குப் புத்துயிர் அளிக்காவிட்டால், புது உரமூட்டப்படாவிட்டால் அந்தத் தீர்மானம் தானாகவே செத்துவிடும். அதற்கேற்ப, அந்த தீர்மானம் இயற்கையாகவே இறந்த பிணமாகிவிட்டது.
அந்த ‘எரியீட்டிக் கட்டுரை எழுதியவர் இந்தப் புத்தகத்தை எழுதிய புலவர் என்.வி.கலைமணி என்பவர்தான். ஏன் இதை இங்கே கூறுகிறோம் என்றால், எந்தக் கட்டுரை எழுதினாலும், எவரைப் பற்றி எழுதினாலும், உணர்ச்சிக்குப் பலியாகி உரிமை மீறல் பிரச்சனைக்கு எந்த பத்திரிகையாளரும் ஆளாகி விடக்கூடாது என்பதற்காகவே சுட்டிக் காட்டினோம். ஃபெரோஸ் காந்தியின் பத்திரிகைப் பாதுகாப்புச் சட்டம் அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் சிந்தனையிலே ஊடுருவியதால், ‘எரியீட்டி’ ஆசிரியர் தண்டனை பெறாமல் மீண்டார் என்பதைச் சுட்டிக் காட்டவே இங்கு அதனைக் குறிப்பிட்டோம்.
எனவே ஃபெரோஸ் காந்திச் சட்டத்தைப் பத்திரிகையாளர்களால் வாழ்த்தி வரவேற்காமல் வாழ முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
3. நீதிமன்றம் நிந்தனைக் குற்றம்
ஒரு ஜனநாயக ஆட்சிக் கோட்டையைத் தாங்கிக் கொண்டிருக்கும் நான்கு தூண்களில் மூன்றாவது தூண் நீதிமன்றம். நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகைத் துறை.
நீதிமன்றங்களில் நடைபெறும் முக்கியமான, மக்கள் கவனத்தை ஈர்க்கக்கூடிய, சிக்கலான, சுவையான, பொதுமக்கள் நலன்களோடு சம்பந்தமுடைய வழக்குகளின் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
அந்த ஆர்வத்தைப் பத்திரிகைகள் மக்களிடையே வளர்ப்பதின் மூலமாக - நீதிமன்றங்களின் பெருமைகளை, அரிய நிதிகளின் அருமைகளை, அவ்வப்போது எடுத்துரைக்கும் சீரிய பணிகளைப் பத்திரிகைகள் செய்கின்றன.
ஆனால் ஒன்று, நீதிமன்றங்களது வழக்கு நடவடிக்கைகளை மிகக் கவனமாக பத்திரிகைகளில் எழுதவேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றங்களை அவமதித்த குற்றத்திற்குப் பலியாவோம்.
இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் புலவர் என்.வி.கலைமணி, ‘முரசொலி’ நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது, சீன ஆக்ரமிப்புபோர் நடந்த நேரத்தில், தமிழ் நாட்டில் அமைச்சராக இருந்த எம்.பக்தவச்சலத்தை எதிர்த்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சி.வி.எம்.அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுவிட்டார்.
தோற்றுவிட்ட் சி.வி.எம். அண்ணாமலை, முதலமைச்சர் பக்தவச்சலத்தை எதிர்த்து தேர்தல் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு திரு மயிலையிலே உள்ள தேசிகாச்சாரி சாலையிலுள்ள ஒரு தனி பங்களாவில் திரு.சத்திய நாராயணா என்ற நீதிபதி தலைமையில் நடைபெற்றது. ஏறக்குறைய ஓராண்டுக் காலம் நடந்த அந்த வழக்கு விசாரணையையும், சென்னை சைதாப்பேட்டையிலே நடைபெற்ற எம்.ஜி.ஆர்.சுடப்பட்ட வழக்கு விசாரணையையும் இந்த புத்தக ஆசிரியர்தான், ‘முரசொலி’, நம்நாடு என்ற தினப்பத்தரிகைகளிலே தொடர்ந்து வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்க பத்திரிகைத் துறை நீதிமன்றப் பணிகளாகும்.
மேற்கண்டவாறு வழக்கு நடவடிக்கைகளை, விசாரணைகளைப் பத்திரிகையில் கவனமாக வெளியிட்ட பொறுப்புணர்ச்சியால்தான், எந்தவித நீதிமன்ற அவமதிப்புச் சட்டங்களையும், Contempt of Courtயும் நான் சந்திக்கவில்லை.
எனவே, பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிருபர்களுக்கும் அந்தக் கவன ஆற்றல் அமையவேண்டும் என்பது அவசியமாகும் என்பதாலே அந்த அனுபவத்தை இங்கே ஆதாரமாக்கினோம்.
நீதிமன்றக் குற்றங்கள்:
நீதிமன்றத்தையும், சட்டங்களையும், நீதிபதிகளின் அதிகாரங்களையும் வேண்டுமென்றே எந்தத் தனிப்பட்ட மனிதனும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது. அவ்வாறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எடுத்துக்காட்டாக, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கைப் பற்றிய தவறான செய்தியை வெளியிடக்கூடாது.அல்லது நடைபெறும் ஒரு வழக்கு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று புனைந்துரைக்கக் கூடாது.
நீதிபதியின் குணாதிசயங்கள், செயற்பாடுகள் பற்றிக் குறை காணக் கூடாது. சாட்சியம் கூறவந்தவர்களை விமர்சித்துப்
பேசக் கூடாது. அல்லது வழக்கின் போக்குப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறக்கூடாது. இவ்வாறு ஒரு பத்திரிகை பகிரங்கமாக எழுதுமானால், அது நீதிமன்ற நிபந்தனைக் குற்றமாகும்.
தினந்தோறும் பத்திரிகையாளர்கள் அல்லது நிருபர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கே என்னென்ன குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும். அவற்றை எச்சரிக்கையோடு இதழ்களில் வெளியிட வேண்டும்.
‘கொலைகாரர் சங்கராச்சாரி’ கைது செய்யப்பட்டார்’ என்று நிருபர்கள் செய்திகளை வெளியிடக்கூடாது. ‘சங்கராச்சாரியைக் காவல்துறை கைது செய்தது காரணம் அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டள்ளது” என்றுதான் செய்தியைப் பிரசுரிக்கவேண்டும்.
1952-ம் ஆண்டில் வெளிவந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 32ம் பிரிவு (The Contempt of Court Act XXXII) நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம், அல்லது இரண்டையுமே விதிக்கலாம் என்று கூறுகின்றது.
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதில் நீதிமன்ற நிபந்தனைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1. நீதிமன்ற ஆணைகளுக்கு அல்லது தீர்ப்புகளுக்கு பத்திரிகைகள் அடங்காமல் அவமதிப்பது சமூகச் சிவில் Civil குற்றம்.
2. பத்திரிகைகள் செய்யும் நிந்தனைகள் குற்றவியல் கிரிமினல் Criminal அடிப்படையில் வரும் குற்றங்களாகும்.
எனவே, பத்திரிகையாளர்கள் எழுதும் கருத்துக்கள், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திற்குள் வராதவாறு எழுதப்பட வேண்டும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய எச்சரிக்கையாகும்.
4. அலுவலக இரகசியங்களை
வெளியிடும் குற்றச் சட்டம்
நாட்டில் நடைபெறும் நடப்புக்களை எல்லாம் மக்களாட்சியில் வாழும் மக்கள் தெரிந்துவைத்துக் கொள்வது நல்லது. அதற்கான எல்லா விவரங்களையும் அரசு திரட்டி வைத்துள்ளது. அவற்றுள் பலவற்றை நிர்வாகம் செயல்படுத்துவதையும் பார்க்கின்றோம். இந்த விவரங்களைச் சேகரிக்கும் வேலையைப் பத்திரிகைகளும் செய்கின்றன.
நாட்டின் பாதுகாப்பு, தனிப்பட்ட சில மனிதர்களைப் பற்றிய இரகசியங்கள், வெளிநாட்டின் தொடர்புகள், ஒரு வழக்குப் பற்றிய புலனாய்வுக் கருத்துக்கள், நாட்டை ஆளும் அமைச்சர் அவையின் முடிவுகள் ஆகியவற்றினுடைய எல்லா இரகசியங்களையும் வெளியிடாமல், எவரும் அறியாமல், நிர்வாகத் திறமைகளின் சார்பாகப் பாதுகாத்து வைப்பதை, அரசுக்குத் தெரியாமல் அந்தப் பத்திரிகைகளில் அம்பலப் படுத்துவது சட்டப்படிக் குற்றமாகும்.
ஒரு விவரத்தை ஒற்றாடல் செய்வதும், அரசு வைத்திருக்கும் இரகசியங்களையும் அதன் விவரங்களையும் வேற்றவர்களுக்குக் கொடுப்பது போன்ற குற்றங்களுக்குப் பெயர்தான் அலுவலக இரகசியச் சட்டம் Official Secrets Act. இந்தச் சட்டம் என்ன வரையறுத்துக் கூறுகிறது என்று பார்ப்போம்.
மேற்கண்ட இரண்டு குற்றங்கள் அல்லாமல், மூன்றாம் குற்றப் பிரிவு ஒன்றும் உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இடையூறாக, எவரும் போகக்கூடாது என்று தடை செய்யப்பட்ட இடத்திற்குள்ளும் யாரும் நுழையக் கூடாது.
மீறி நுழைந்து அங்குள்ள இரகசியங்களை அறிந்து மற்றவர்களுக்குக் கொடுப்பது எதிரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, இரகசியங்களை வரைபடம் மூலம் வரைவது அல்லது அதற்கான திட்டம் வகுப்பது, அல்லது இரகசிய நகல்களை உருவாக்கிக் கொடுப்பது, நமது எதிரிகளுக்குப் பயன்படும் வகையில், புள்ளி விவரங்களைத் திரட்டிக் கொடுப்பது அல்லது ஒலி நாடாக்களில் பதிவு செய்தனுப்புவது அல்லது பத்திரிகைகளில் வெளியீடு செய்வதுபோன்ற செயல்கள் எல்லாமே குற்றங்கள்தான் என்று சட்டம் அறிவிக்கின்றது.
நாட்டிலே அமைய இருக்கின்ற அல்லது இயங்கிக் கொண்டிருக்கின்ற அணு உற்பத்தி நிலையங்கள் பற்றிய அதிகாரம் பெற்றவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு அந்த அணு சம்பந்தப்பட்டச் செய்திகளை வழங்குவதை, 1962-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட Atomic Energy என்ற அணுசக்தி சட்டக் குற்றங்களாகும் என்று சுட்டிக் காட்டுகின்றது.
ஒரு நடைமுறை செயலை இரகசியமானதா - இல்லையா என்று முடிவுகட்டுவது சிக்கலானதுதான். என்றாலும், சில நேரங்களில் அலுவலர்களும், அரசியல் தலைவர்களும் தங்களுடைய தவறுகள் வெளியே தெரியாமல் இருக்க, பலவற்றை இரகசியங்கள் என்று மறைத்து வைக்கலாம். இவற்றை எல்லாம் மக்கள் நலனுக்காகத் துப்பறிந்து பத்திரிகைகள் அம்பலப்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக, இந்திய அரசு அயல்நாட்டில் வாங்கிய இராணுவ தளவாடங்களில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் “Indian Express’ நாளேடு குற்றம் சாட்டியது.
சாட்டியக் குற்றத்தை மெய்ப்பிக்க சில ஆவணங்களைப் பத்திரிகையில் வெளியிட்டது. அந்த ஆவணங்களை அச்சிட்டு வெளியிட்டதே அலுவலக இரகசியச் சட்டத்தின் கீழ்வரும் குற்றம் என்று இந்திய அரசு எண்ணியது.
5. பத்திரிகைகள் - புத்தகங்களைப்
பதிவு செய்து பாதுகாக்கும் சட்டம்
இந்தச் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1867-ம் ஆண்டில் இயற்றி அமல் செய்யப்பட்ட பத்திரிகைச் சட்டம். இதற்குப் பெயர் பத்திரிகைகள், புத்தகங்கள் பதிப்புச் சட்டம் ஆகும். The press and Registration of Books Act.
இந்தச் சட்டத்தில் 1940, 1956ம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இது பத்திரிகைகளை ஒழுங்குப்படுத்தக் கொண்டுவரப்பட்டது. ஆனால், பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டப்படுத்துவது இதன் நோக்கமன்று. இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரிகைகளையும், புத்தகங்களையும் இந்த சட்டம் பாதுகாக்க வழிசெய்கின்றது.
பத்திரிகைகள்:
தில்லியிலிருக்கும் தலைமைப் பதிவாளரிடம் பத்திரிகை சம்பந்தப்பட்ட எல்லா விவரங்களையும் கொடுக்கவேண்டும் என்று இந்தச் சட்டம் அறிவிக்கின்றது.
பத்திரிகை வெளியீட்டாளர், உரிமையாளர், ஆசிரியர் ஆகியோர் மாவட்ட நீதிபதியிடமோ, பெரு நகர நீதிபதியிடமோ வாக்குறுதி வழங்கி, பெயர் பதிவு செய்த பின்புதான் பத்திரிகைகளை வெளியிட வேண்டும். ஒரு பத்திரிகையை எப்படிப் பதிவு செய்து நடத்தப்படவேண்டும் என்ற விவரத்தை இந்தச் சட்டம் கூறுகின்றது.
ஒவ்வொரு இதழிலும் அச்சிட்டவர், வெளியிட்டவர், ஆசிரியர் பெயர்கள், அச்சிட்ட இடம், வெளியிட்ட தேதி ஆகியவை தெளிவாக அச்சிட்டிருக்கவேண்டும்.
பத்திரிகையை வெளியிடுபவர்கள், செய்தித் தாட்கள் பதிவாளர் Registrar of News papers கேட்கின்ற விவரங்களையும் கொண்ட ஆண்டு அறிக்கைகளைக் கொடுக்க வேண்டும்.
இந்தச் சட்டத்திற்கேற்ப,ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் வெளிவரும் ஒவ்வொரு இதழையும் புதுதில்லியிலே உள்ள பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
பிறமொழி இதழ்கள் குறிப்பிட்ட வட்டார வெளியீட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு Press information Bureauவுக்கு ஒரு பிரதியை அனுப்பி வைக்கவேண்டும்.
6. ஆபாச வெளியீடு
தடைச் சட்டம்
பத்திரிகைகள் எல்லாச் செய்தி, கருத்து வடிவங்களையும் எழுதலாம். அதற்கு உரிமை உள்ளது. ஆனால் மக்கள் மனதை, சமுதாயத்தை, ஒழுக்கத்தைக் கெடுக்கக்கூடிய ஆபாசமான, அருவருப்பான, கீழ்த்தரமான செய்தி, கருத்துவடிவமுள்ள கட்டுரைகளை, படங்களை வெளியிடுவதைத் தடை செய்ய ஆபாச வெளியீட்டுத் தடைச்சட்டம் Opscene Prohibition Act கொண்டுவரப்பட்டது.
ஆபாசங்கள் விளக்கம்:
IPC, 292, 293, 294 பிரிவுகள் எந்தெந்த கருத்துக்கள் ஆபாசம் என்பதை விளக்குகின்றன. இந்த பிரிவுகளின்படி நாகரிகமற்ற செய்திகள், கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்கள், எழுத்துக்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், திரைப்பட விளம்பரங்கள், நாடகங்கள் போன்றவை ஆபாசங்களாகும்.
ஒன்றை ஆபாசமாக வெளியிடுபவரின் நோக்கமும், வெளியிடும் முறையும் நினைக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, ஆண்-பெண் உறவுபற்றித் திருமணமானவர்களுக்குப் பயன்படும் வகையில், அறிவியல் அடிப்படை வழியில் வெளியிடலாம். ஆனால், வியாபார நோக்கத்தில் பத்திரிகைகள் விற்பனையை அதிகப்படுத்த பாலுணர்வில், தரக்குறைவான முறையில் வெளியிடுவதுதான் ஆபாசமாகும்.
தண்டனை என்ன?
ஆபாச வெளியீட்டுத் தடைச் சட்டத்தின்படி, ஆபாசமான வெளியீடுகளை அரசு பறிமுதல் செய்யலாம். ஆபாசமானவற்றை எழுதியவருக்கும், வெளியிட்டவருக்கும் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கொடுக்கலாம். அபராதம் விதிக்கலாம். ஆபாசமான பொருட்களை இறக்குமதி செய்வதை அரசு தடுக்கலாம். அதற்கும் தனிச் சட்டம் உள்ளது.
7. பதிப்புரிமைச் சட்டம்
(The Copyright Act)
அறிஞர்கள், சான்றோர்கள், ஆன்றோர்கள் சிந்தனைகளால் உருவான அறிவுப் படைப்புக்கள் அனைத்தும் அவரவர்களுக்கே உரிமையானது. அவற்றைப் பாதுகாத்து வைப்பதும் அறிவுடைமையாகும்.
அதாவது, இலக்கியம், நாடகம், இசை வடிவம், கலைசார்ந்த கற்பனைப் படைப்புகள் எவையாக இருந்தாலும் அவை படைப்பாளிகள் சொத்தாகும். இந்த உரிமையைப் பாதுகாக்க அரசுச் சட்டம் துணை நிற்கின்றது.
சட்ட விளக்கம்:
இதற்கான பாதுகாப்பு பதிப்புரிமைச் சட்டம் முதன் முதலாக 1941-ம் ஆண்டில் இயற்றப்பட்டது. தற்போதும் இந்தச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு 1957-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றின் பதிப்புரிமை ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அது படைப்பாளிகளின் சொந்தப் படைப்பாக இருக்கவேண்டும்.
மற்றொன்றைப் பார்த்துப் படைத்த ஒன்றுக்கு ஒருவர் உரிமை கொள்ள முடியாது. கருத்துக்களுக்கோ, பாடப்பொருளுக்கோ, கருப்பொருளுக்கோ, வரலாற்று நிகழ்ச்சிகளுக்கோ யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால் அவை எல்லாம் பொதுச் சொத்துக்களாகும்.
ஒரு குறிப்பிட்ட முறையின் வடிவத்தில் ஒன்றை வெளியிடும்பொழுதுதான் அதற்குப் பதிப்புரிமை உண்டு.
பதிப்புரிமைச் சட்டத்தின் 45ம் பிரிவு பதிப்புரிமையைப் பதிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கின்றது. ஆனால் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இலக்கியப் படைப்புகள், இசை, நாடகம் போன்றவற்றுக்குப் பதிப்புரிமை படைத்தவர்களின் வாழ்நாள் முழுவதும் அவருக்கே சொந்தமாக இருக்கும்.
அவர் காலத்திற்குப்பிறகு ஐம்பதாண்டுகளுக்குப் பதிப்புரிமை அவரது சந்ததிகளுக்கு உண்டு.
புகைப் படங்களுக்குப் பதிப்புரிமை - 50 ஆண்டுகளுக்கு அவற்றை எடுத்தவர்களுக்கு உண்டு. இந்தக் குறிப்பிட்டக் காலத்திற்குப் பிறகு அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். விதி விலக்குகள்:
இந்தச் சட்டத்தின்படி, ஒருவரின் படைப்பிலிருந்து ஆய்வுக்காகவோ, தனிப்பட்ட படிப்புக்காகவோ, மதிப்பீட்டிற்காகவோ சில பகுதிகளை எடுத்துப் பயன்படுத்தினால் அது குற்றமாகாது.
நியாயமான முறையில் மேற்கோள் காட்டவோ, சரியான முறையில் சுருக்கத்தைக் கூறவோ சட்டம் இடம் த்ருகின்றது.
ஒருவரின் படைப்பிலிருந்து சிலவற்றைப் பயன்படுத்தும்பொழுது மூலத்தைக்குறிப்பிடவேண்டும்.
செய்தி தாட்களுக்குச் சிறப்பு விதி விலக்குகள் வழங்கப் பெற்றுள்ளன. பத்திரிகைகள் பொதுநலன் கருதி, எந்த இலக்கியப் படைப்பையும், நாடகத்தையும், இசையையும் வெளியிடலாம். இது நடப்புச் செய்திகளை வெளியிடும் வகையில் சேரும். ஆனால், ஒரு பத்திரிகையில் வெளியான கட்டுரையை அப்படியே சொல்மாறாமல் வெளியிட வேண்டுமானால் அந்த இதழின் அனுமதியைப் பெறவேண்டும். இதழ்கள் பதிப்புரிமைச் சட்டத்தின் எல்லைக்குள் செயல்படுவது நல்லது.
8. இளம்பருவ மனங்கள்
கெடாமல் தடுக்கும் சட்டம்:
இளம் வயதுடைய சிறுவர், சிறுமிகள், வாலிபர்கள் உள்ளங்களைப் பாழ்படுத்தக்கூடிய வெளியீடுகளைத் தடை செய்யும் சட்டம் 1956-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதற்கு Young Persons Harmful Publications Act என்றுபெயர்.
குற்றங்களை அந்த உள்ளங்கள் பெறத் தூண்டுகின்ற, துராக்கிரமமான கொடும் செயல்களில் ஈடுபடச் செய்கின்ற, பய உணர்வுகளைத் தூண்டுகின்ற கதைகள், படங்களைக் கொண்ட புத்தகங்களையோ, பத்திரிகைகளையோ, கையேடுகளையோ, கைப் பிரதிகளையோ, செய்தித் தாட்களையோ மற்ற பிறவற்றையோ, சிறுவர், சிறுமி, வாலிப உள்ளங்களைப் பாழ்படுத்துகின்ற தன்மையில் வெளியிடுகளை வெளியீடுவது தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
இந்த வெளியீடுகளை வெளியிடுவது, விளம்பரப் படுத்துவது, விற்பனை செய்வது, வைத்திருப்பது, மற்றவர்களுக்கு வழங்குவது குற்றமாகும்.
இளம் மனதுகளைப் பாழ்படுத்தும் அத்தகைய வெளியீடுகளை அழித்திட நீதிமன்றம் உத்தரவிடலாம். மாநில அரசுகள் பறிமுதல் செய்யலாம். இந்த அதிகாரம் காவல் துறைக்கும் இந்தச் சட்டம் வழங்குகின்றது.
9. தபால், தந்தி சட்டப் பயன்பாடுகள்
(Indian Telegraph Act)
அரசாங்கமோ அல்லது அதிகாரம் பெற்ற தபால் தந்தி பணியாட்களோ, தந்திச் செய்திகளைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ, நிறுத்தவோ செய்திட 1856-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்தியத் தந்திச் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. ஆனால், எப்போது அதைச் செய்யலாம்?
நாட்டில் பொது நெருக்கடி நிலையை ஆட்சி பிரகடனப்படுத்தி இருக்கும் நேரத்திலும், நாட்டின் பாதுகாப்பு, பொதுநலன் போன்றவற்றைக் கருத்தில்கொண்டும் அரசு மேற்கண்ட இந்தியத் தந்திச் சட்டத்தைப் பயன்படுத்தி அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதே செயல்களை அரசு செய்திட 1898ம் ஆண்டின் இந்திய அஞ்சலகச் சட்டமும் அதிகாரம் அளித்துள்ளது.
இந்தச் சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தவும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒன்று, நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் அமைதி நாடி இவை போன்ற கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.
10. பத்திரிகைகளில்
பணிபுரிவோருக்குரிய சட்டம்
பத்திரிகைகளில் வேலை செய்பவர்களுக்காக (The working Journalist Act) என்ற இந்தச் சட்டம் 1956-ம் ஆண்டில் இயற்றப்பட்டுள்ளது.
பத்திரிகைகளில் வேலைசெய்பவர்களுக்குரிய சம்பளம், சேமிப்பு நிதி, வேலை செய்யும் நேரம், அவர்களுக்கான விடுமுறை காலம் போன்றவற்றை மேற்கண்ட சட்டம் எல்லையிடுகிறது. பத்திரிகையாளர் என்றால் யார்? என்ற விவரத்தையும் இந்தச் சட்டம் கூறுகின்றது.
பத்திரிகைகளில் பணிபுரிகின்ற அதன் ஆசிரியர்கள், துணையாசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே வேலை செய்யவேண்டும். ஏழாவது நாள் அவர்களுக்கு விடுப்பு கொடுக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு பத்திரிகையாளர்கள் ஆறு மணி நேரம் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். அதாவது வாரத்திற்கு 36 மணி நேரம் என்றும், மாதத்திற்கு 144 மணி நேரம் என்றும் அவர்களுக்கு வேலைநேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
செய்தி சேகரிப்போர்
(Reporters)
செய்தி சேகரிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரே வேலையைத்தான் (Assignment) செய்யவேண்டும். அவர்கள் ஒரு நாளில் இரண்டு விதமான வேலைகளைச் செய்ய அவசியம் வந்தால், மறுநாள் அவர்கள் வேலைசெய்ய வேண்டியதில்லை.
சம்பளக் குழு:
குறிப்பிட்டக் கால இடைவெளியில் பத்திரிகையாளர்களின் சம்பளங்களை வரையறுப்பதற்காக சம்பளக் குழுவை நியமிக்க இந்தச் சட்டம் உரிமை தருகின்றது. இந்த நிலைக்கேற்றவாறு பத்திரிகையாளர்கள் மாறுகின்ற கால, வேலை சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி உயர்ந்த ஊதியம் பெறலாம்.
11. நினைவில் நிறுத்த
வேண்டிய சட்டங்கள்
மேலே கூறப்பட்ட பத்திரிகைச் சட்டங்கள் இல்லாமல், பத்திரிகை நடத்துவோர் அவசியம் நினைவில் நிறுத்தக் கூடிய சில முக்கியமான சட்டங்களைக் கீழே விளக்கியுள்ளோம். கவனம்கொள்வது நல்லது.
பொது நூலகங்கட்கு இதழ்கள்
அனுப்பும் சட்டம்:
பத்திரிகையோ, புத்தகங்களோ அச்சானபிறகு, அவற்றைப் பொது நூலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று 1954-ம் ஆண்டு இதழ்கள் சட்டம் கூறுகின்றது. இந்த சட்டத்திற்கேற்ப ஒருவர் வெளியிடுகின்ற புத்தகங்கள், பத்திரிகைகள் பிரதிகள் ஒவ்வொன்றையும் இலவசமாகக் கீழ்க் கண்ட தேசிய பொது நூலகங்களுக்கு அவசியம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரிகள்:
1. இணை இயக்குநர், நூல்கள் பதிவாளர், தலைமைச் செயலகம், சென்னை-600009.
2. பொது நூலக இயக்குநர், பொது நூலக இயக்ககம், அண்ணாசாலை, சென்னை-600 002.
3. பொது நூலகர், கன்னிமாரா நூலகம், சென்னை-600008.
4. தேசிய நூலகம், பெலவதெரா, கொல்கத்தா-7
5. மத்திய நூலகம், டவுன் ஹால், மும்பை-23.
6. தேசிய மத்திய நூலகம், புதுதில்லி
மேற்கண்ட நூலகங்களுக்குத் தவறாமல் புதிய வெளியீடுகளின் பிரதிகள் ஒன்றை அனுப்பவேண்டும் என்று அரசு சட்டம் அறிவிக்கின்றது.
இ.பி.கோ. குற்றவியல் சட்டங்கள்:
(Indian Penal Code-1867)
கி.பி.1867-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்தக் குற்றவியல் சட்டம், தடுக்கப்படவேண்டியவற்றை அச்சிடுவதும், வெளியிடுவதும், புழக்கத்தில் விடுவதும் குற்றம் என்று இந்த சட்டம் அறிவிக்கின்றது.
இந்த சட்டத்தில், நாட்டின்மீது வெறுப்பை வளர்ப்பதைத் தேசத் துரோகம் என்று 124A, பிரிவு கூறுகின்றது. மதம், இனம், பிறப்பிடம், வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுவினரிடம் வெறுப்பை வளர்ப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று 153A பிரிவு கூறுகின்றது.
குற்றவியல் சட்டத்தின்படி, பத்திரிகைகளோ, ஒரு புத்தகமோ தடை செய்யப்படவேண்டிய உட்கருத்துக்களைக் கொண்டிருப்பதாக மாநில அரசு கருதுமானால், அதைக் குற்றவியல் வழக்கு Criminal Procedure Code முறையின் 95-ம் பிரிவுப்படி அச்சிட்ட அல்லது வெளியிட்ட பத்திரிகைகள், புத்தகங்கள் பிரதிகளைத் தடை செய்து பறிமுதல் செய்யும் அதிகாரம் உடையது - இந்தக் குற்றவியல் சட்ட வகைகள்.
மருந்துகள், தந்திர - திவாரணங்கள் சட்டம்:
(The Drugs and Magic Remedies Act - 1954)
மந்திர, தந்திரங்களால் வாழ்க்கைக்குரிய நலன்கள், வசதிகள் கிடைப்பதாக ஒரு சிலர் பத்திரிகைகளிலேயும், சுவரொட்டிகளிலேயும் விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றிப் பணம் பறித்துவரும் மருந்து, மந்திர, தாயத்து, மோதிர விற்பனையாளர்களது விற்பனைகளைத் தடுப்பதற்காகவும், ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும் இந்த சட்டம் 1954-ம் ஆண்டில் அரசால் கொண்டுவரப்பட்டது.
பரிசுப் போட்டித் தடைச் சட்டம் - 1955
(The Prize Competition Act - 1955)
இந்தச் சட்டம், பத்திரிகைகள் குறுக்கெழுத்துப் போட்டிகள் நடத்தினால், அதற்குப் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று இந்த சட்டம் தடைபடுத்துகிறது. அதே நேரத்தில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நடைபெறும் பரிசுப் போட்டியை வரம்புக்கு மீறி விளம்பரம் செய்வதையும் இந்தச் சட்டம் தடுக்கின்றது.