உள்ளடக்கத்துக்குச் செல்

இதழியல் கலை அன்றும் இன்றும்/அச்சுப்படி திருத்துதலும் - அவற்றுக்கான குறியீடுகளும்

விக்கிமூலம் இலிருந்து
422069இதழியல் கலை அன்றும் இன்றும் — அச்சுப்படி திருத்துதலும் - அவற்றுக்கான குறியீடுகளும்என். வி. கலைமணி


30

அச்சுப்படி திருத்துதலும்
அவற்றுக்கான குறியீடுகளும்

ரு பத்திரிகையிலுள்ள பணிகளில் அச்சுப்படி Proof Reading திருத்துதல், முக்கியமான தலையாயப் பணியாகும். ஒரு பத்திரிகையில் அச்சுப் பிழைகள் வராமலிருந்தால்தான் அதைத் தரமுள்ள பத்திரிகை என்று மக்கள் மதிப்பார்கள்.

அச்சுப் பிழைகள் மலிந்து காணப்படுமானால், அவை வாசகர்களிடையே மிகப் பெரியக் குழப்பத்தையும், அனாவசியமான வம்படி வழக்குகளையும், அதனால் பத்திரிகை விற்பனையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, மக்களிடம் அனர்த்தங்களையும் உருவாக்கிவிடும்.

எடுத்துக்காட்டாக :- இந்தச் சம்பவத்தை பிழைதிருத்துவோரும், பத்திரிகை உரிமையாளரும் அதன் ஆசிரியரும் மனத்தில் நிறுத்துவது நல்லது.

ஓர் ஆளும் கட்சித் தலைவர், ஏறிவந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் தனது தலையில் எண்ணெயில்லாமல், பரட்டை தலையுடன், அழுக்கு அடை அடையாகப் படிந்திருந்த கிழிந்த சட்டையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

இரயிலில் வந்த அந்தத் தலைவர் அவன்மீது இரக்கப் பட்டு, அவனுடைய தோற்றத்தைக் கண்டு அவனை அழைத்து, இரண்டு இட்லியுடன் வடை ஒன்றையும் வைத்துக் கொடுக்குமாறு நடைமேடை பலகாரம் விற்பவரிடம் கூறிப் பணமும் கொடுத்தார். அந்தச் சிறுவன் படிக்க வேண்டிய பருவத்தில் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கின்றானே என்று அவர் மனம் வருந்தினார்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகைச் செய்தியாளர், அந்த நிகழ்ச்சியை அப்படியே எழுதி, அன்றைய நாளேடு ஒன்றுக்குச் செய்தியாக அனுப்பினார். அவர் ஒரு பிரபலமான ஆளும் கட்சித் தலைவர் என்பதால், அவருடைய கருணை உள்ளத்தைப் பாராாட்டி இரக்க உணர்வோடு, “ஆளும் கட்சித் தலைவர் பிச்சை எடுக்கும் சிறுவனின் பரிதாப நிலையைக் கண்டு கதிரவனைக் கண்ட கமலம் போல மனம் கூம்பினார்” என்று செய்தி அனுப்பினார்.

அந்தச் செய்தி மறுநாள் காலைப் பதிப்பு நாளேட்டில் ‘கூ’ம்பினார் என்ற எழுத்திருந்த இடத்தில், ‘கூ’ வன்னாவுக்குப் பதிலாக, ‘ஊ’வன்னா வைப் போட்டு வந்து விட்டது. இந்தச் செய்திப் பிரச்னை பத்திரிகைக்குக் கெட்ட பெயரை உருவாக்கியதோடு நில்லாமல், அந்த அச்சுப்படியைப் பிழை திருத்தம் செய்வோரை வேலையை விட்டும் நீக்கி விட்டது.

இதை ஏன்? இங்கே சுட்டிக் காட்டுகிறோம் என்றால், ஒரு பத்திரிகையில் இப்படிப்பட்ட பிழைகள் வருமானால், அதனால் பத்திரிகைக்கு மக்களிடம் கெட்ட பெயர் உண்டானதோடு நில்லாமல், கட்சி அணிகள் தகராறுகளும் உருவாகின்றது. இதனால் செய்தியாளருக்கும் கெட்ட பெயர், கட்சியிலும் குழப்பம், பிழைத் திருத்துவோரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலைகள் ஏற்பட்டு விட்டன.

எனவே, கூடுமானவரைப் பிழைகள் மலியாமல் பத்திரிகை வெளிவர வேண்டும் என்ற அச்சமும், பிழை திருத்தும் பிரிவுக்கு உண்டாகி விட்டது. அதனால்தான் பிழை திருத்துவோர் மொழி அறிவு உள்ளவராக இருக்க வேண்டும் என்ற நிலை அவசியமாகின்றது.

அச்சுப்படி திருத்துவோர் எழுத்துப் பிழையைப் பார்ப்பதோடு நில்லாமல், செய்தியின் தலைப்பு, கொடுக்கப்பட்ட விவரங்களில் முரண்பாடுகள், எங்காவது சொற்கள், எழுத்துக்கள் மாறி இருக்கின்றனவா? மூலத்திலும், ஃப்ரூப்பிலும் வாசகங்கள் சரியாக உள்ளதா? அர்த்தம் அனர்த்தமாக மாறியுள்ளதா? புள்ளி விவரங்களைச் சரியாக அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை எல்லாம் எச்சரிக்கையோடு கவனிக்க வேண்டும். அது அவர்களது உயிரினும் மேலான கடமையுமாகும்.

அச்சுப்படி திருத்தும்போது, ஒருவர் மூலத்தை உரக்கப் படிக்க வேண்டும். மற்றவர் அதைத் திருத்த வேண்டும். திருத்தும்போது படியின் ஓரங்களில் Margin உள்ள இடத்தில் உரிய திருத்தக் குறிகளைச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் போட்டுத் திருத்த வேண்டும்.

என்ன அச்சுப் பிழை வந்துள்ளது என்பதைப் பிழைத் திருத்துவோர்க்குரிய குறிகளிட்டும், கோடுகளிட்டும் பக்க ஓரங்களில் சுட்டிக் காட்ட வேண்டும். இது செய்தித் தாள் திருத்தும் வழக்கமாகும்.

ஒரு வாக்கிய வரியில் செய்கின்ற திருத்தம் பின்னால் வரும் வரிகளின் அமைப்புக்குப் பாதிப்பு ஏற்படாமல் திருத்த வேண்டும். எந்த வாக்கியத்தில் தவறோ அந்த வரிக்கு நேராகப் பிழையைக் குறித்துச் சரியானதை எழுத வேண்டும். பிழையின் மேலேயே திருத்தம் செய்யக் கூடாது. அது பிழைத் திருத்தும் முறையும் அன்று.

பொதுவாக, ஒரு வரியின் இடது பாதியில் பிழை இருந்தால், திருத்தத்தை இடது பக்க ஓரத்திலும், வலது பாதியில் தவறிறிருந்தால் திருத்தத்தை வலது பக்க ஓரத்திலும் குறிக்க வேண்டும். இதுதான் பிழை திருத்தும் வழக்கமான முறை.

பிழைகளைக் கோடிட்டுக் காட்டும் போது, மேலும் கீழுமுள்ள வரிகள் மேல் கோட்டை இழுத்துச் சென்று காட்டக் கூடாது. இரண்டு வரிகளுக்கும் நடுவே கோடிழுத்துச் சென்று ஓரத்தில் எது தவறோ அதைக் குறிப்பிட வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் ஒரு வரியில் ஏற்பட்டிருந்தால், அவற்றை மேலாகவோ, கீழாகவோ, வலமாகவோ, இடமாகாவோ, ஒன்றோடொன்று மோதாமல், சுத்தமாகவும், புரியும்படியும், கோடு போட்டுச் சுட்டிக் காட்டினால்தான், அச்சுக் கோர்ப்பாளர்களுக்குக் குழப்பம் ஏற்படாது. அதனால் அடுத்தடுத்த தவறுகள் அதே வாக்கியத்தில் ஏற்படாது என்பதைப் பிழைத் திருத்துவோர் உணருதல் நலம்.

ஒரு சொல்லில் இரண்டு மூன்று தவறுகள் நேர்ந்திருந்தால், அந்தச் சொல்லை நீக்கிவிட்டு, அதே சொல்லைச் சுத்தமாக மறு ஓரத்தில் எழுதிக் காட்ட வேண்டும்.

எண்கள் தவறு இருந்தால், அந்த எண்களை நீக்கிவிட்டு அதே எண்ணை மீண்டும் சரியாக ஓரத்தில் எழுதுவது நல்லது; மீண்டும் பழைய பிழை வாராது.

எழுத்துப் பிழைகளைத் திருத்துவதுதோடு இராமல், எந்த உருவ அளவு அச்சு எழுத்து அது, என்ற பாயிண்ட் Point வடிவத்தையும் சுட்டிக் காட்டும் அனுபவம் பெற்றிருப்பதுதான் பிழை திருத்துவோரின் திறமை. பிழைகளைத் திருத்துவதற்கென்று இருக்கும் குறியீடுகளைப் பிழை திருத்துவோர் சரியாக, மனப்பாடம் செய்திருக்க வேண்டும். அந்தக் குறியீடுகளை அச்சுக்கோர்ப்பவரும் நன்றாக உணர்ந்திருப்பார். அதனால் பிழை திருத்தும் பணி சிறப்பாக அமையும்.

அச்சுக் கோர்ப்பவர் எடுக்கும் பக்கம் காட்டப்படாத அச்சுப் படி, Galley Proof சரியாகத் தெளிவாக இருக்கின்றதா, மை சரியாகப் படிந்திருக்கின்றதா? எழுத்துக்கள் சுத்தமாகத் தெரிகின்றதா என்பதையெல்லாம் பிழைத்திருத்துவோர் அவசியம் பார்வையிடல் வேண்டும். காலி புரூஃப் சரியில்லை என்றால் மறுபடியும் ஒரு படி கேட்டுப் பெறுவது திருத்தும் பணிக்கு நல்லது.

அச்சுப் பிழை திருத்தக் குறியீடு அடையாளங்கள் பொதுவானவை. பத்திப் பிரித்தல், சொற்களைப் பிரித்தல், இரு சொற்களை ஒன்று சேர்த்தல், இடைவெளி தரவேண்டியவை (Space) தொடர்பானவை (Punctuation) இணைக்க வேண்டியவை (Alignment) எழுத்தளவு (Type) போன்றவற்றில் எல்லாம் மாற்றம் செய்வதானால், அதற்கான குறியீடுகளைக் கவனமாக Prof-ல் குறிப்பிடல் வேண்டும்.

அச்சுப் பிழை திருத்தும் குறியீடுகளின் அடையாளங்கள் (Symbols) கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அடையாளக் குறிகளைத்தான் அச்சுக் கோர்ப்பு பணிகளில் ஆங்கிலம் உட்பட எல்லா இந்திய மொழிகளிலும் அச்சகத்தார், நூல் பதிப்பாளர் பத்திரிகையாளர் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.

எனவே இந்த அடையாளக் குறிகளை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்வது பிழைத் திருத்துவோர்க்கு மட்டுமன்று, அச்சுத்தொழில் சம்பந்தப்பட்டவற்றுக்கெல்லாம் தேவையானதுமாகும்.
அச்சுப் பிழைதிருத்தக் குறியீடுகள்

(Upload an image to replace this placeholder.)