பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/இடத்தை மாற்றுங்கள்

விக்கிமூலம் இலிருந்து



1. இடத்தை மாற்றுங்கள்



வந்திருக்கின்ற அனைவரையும் இந்த விளையாட்டில் சேர்த்துக் கொண்டு ஆடலாம்.

இருக்கின்ற ஆட்டக்காரர்கள் எண்ணிகைக்கு ஏற்ப நாற்காலிகள் இருந்தால், பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு, அதைச் சுற்றிக் கொஞ்சம் இடம் விட்டு விட்டு, நாற்காலிகளைச் போடச் செய்து, அவற்றில் ஒவ்வொரு ஆட்டக்காரரையும் முதலில் உட்காரச் செய்யவேண்டும்.

வட்டத்தின் அளவு 30 அடி விட்டம் இருந்தால் நல்லது. நாற்காலி இல்லை என்றால், சுற்றிவட்டம் போட்டு, வட்டக் கோட்டிலே சிறு சிறு வட்டங்களை இட்டு அதனுள் நிற்கச் செய்யலாம். ஆட்டத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு எண் என்று 'நம்பர்' கொடுத்திட வேண்டும்.

ஆடும் முறை : அங்கு நடுவில் ஒருவரை நிற்கச் செய்ய வேண்டும். அவர் முதலில் அமர்ந்திருக்கும் எல்லோரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டே வந்து, இரண்டு எண்களை திடீரென்று, சத்தமாக அழைக்க வேண்டும். (உ-ம் 6, 8).

தங்கள் எண்களை அழைத்தவுடனே, எண்களுக்குரிய இருவரும், தங்கள் இடத்தை விட்டு புறப்பட்டு ஓடிப் போய், அடுத்தவர் இடத்தில் நின்று கொள்ள வேண்டும். நடுவில் நின்று எண்களைக் கூப்பிட்டவர், இடம் விட்டு இடம் மாற்றிக் கொள்பவர்களின் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இடம் கொடுத்து ஏமாந்தவர் வட்டத்தின் மைய இடத்திற்கு வர வேண்டும். இடம் இல்லாமல் அவரே ஏமாந்தால், மீண்டும் அவரே இரு எண்களை சத்தமிட்டுஅழைக்க, இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பு : ஒரே சமயத்தில் மூன்று நான்கு எண்களையும் கூப்பிடலாம். பலர் இடம் விட்டு இடம் தேடி ஒடுவது பார்க்க நன்றாக இருக்கும்.

2. எண்களுக்குப் பதிலாக வண்ணங்களின் பெயர்களைத் தரலாம். அல்லது எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தால், பெயரிட்டும் கூட அழைக்கலாம். 

3. அல்லது போட்டிருக்கும் சட்டை கால் சட்டை, அல்லது ஆடையைக் குறிப்பிட்டும் அழைக்கலாம்.

4. ஓடி இடம் பிடிக்க வேண்டிய நிலையில் ஆட்டம் அமைந்திருப்பதால், வட்டம் பெரியதாக வைபபது நல்லது.

5. வட்டத்தின் மையத்திலே இருப்பவர் ஏற்கெனவே தயாராக நின்று கொண்டிருந்தாலும், தான் நிற்கும் மைய இடத்தை விட்டு, எக்காரணம் கொண்டும் வெளிவராமல் நின்று ஆடவேண்டியது மிகமிக முக்கியமாகும்.

6. இது பொழுது போக்கு விளையாட்டு என்பதால், ஆட்டத்தில் பங்கு கொள்பவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வது அவசியம்.