பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/கயிறு சுற்றி வருதல்

விக்கிமூலம் இலிருந்து



2. கயிறு சுற்றி வருதல்


இந்த விளையாட்டுக்குத் தேவை நைலான் கயிறு அல்லது நூல் கயிறு. அதிக நீளமாயுள்ள கயிற்றினை ஒரு அடி நீளம் உள்ளதாக பல துண்டுகளாக முதலில் துண்டித்து, சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை நூல் துண்டுகள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

விளையாட்டில் கலந்து கொள்கின்ற அனைவரையும் நேர்க்கோடு ஒன்றினைக் கிழித்து, முதலில் அவர்களை நிறுத்திவைக்க வேண்டும், அவர்களுக்கு நேர் எதிரே 20 அல்லது 25 அடி தூரத்தில் கோடு ஒன்றை போட்டு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூல் துண்டு என்பது போல அவரவருக்கு நேராக இருப்பது போல நூல் துண்டு ஒன்றையும் வைத்திருக்க வேண்டும். 

விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் தொடங்கி விடுகிறது. அல்லது ஆட்டத்தைத் தொடங்கி வைக்க ஏதாவது ஒரு ஒலியை பயன்படுத்திக்கொள்ளலாம்,

கோட்டின் மேல் நிற்கும் ஆட்டக்காரர்கள் விசில் சத்தத்திற்குப் பிறகு தங்களுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் நூல் துண்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க வேண்டும். வேகமாக நடந்து சென்று எதிர்ப்புறத்தை அடைந்து, அங்கு வைக்கப்பட்டிருக்கும் தனக்குரிய நூல் துண்டினை எடுத்து, தனது நடுவிரலில் சுற்ற வேண்டும்.

அதாவது, விரல் நுனியிலிருந்து நூலால் சுற்றிக் கொண்டு அடிவிரல் வரை வந்து, அதன் பின்னர், தான் முன்னே நின்று கொண்டிருந்த ஆரம்பக் கோட்டினை அடைந்து விடவேண்டும். [நடந்து தான்].

முதலில் வந்து சேர்ந்தவரே விளையாட்டில் வெற்றி பெற்றவராவார். பரிசு என்று நீங்கள் விரும்பியதை அவருக்குத் தரலாம். -

குறிப்பு :- 1. வேகமாக நடக்கலாமே தவிர, எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது.

2. விரலில் நூல் சுற்றும் பொழுது, ஒன்றின் மேல் ஒன்றாக சுற்று வராமல், ஒழுங்கான வரிசையில், அழகாக வரிவரியாக வருவது போல் கற்றப்பட்டிருக்க வேண்டும்.

3. தாறுமாறாக விரலில் சுற்றிக் கொண்டு. முதலில் வந்தாலும், அவர் வெற்றி பெறும் தகுதியை இழந்து விடுகின்றார்.