ஆறுமுகமான பொருள்/ஆறெழுத்து மந்திரத்தான்
சமீபத்தில் நான் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஓர் தமிழ் அறிஞர் பேசிக் கொண்டிருந்தார். இடையே அப்பர் பாடலில் பிரபலமான பாடல் ஒன்றை எடுத்துச் சொன்னார். அந்தப் பாடல் இதுதான்;
நாம் யார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம் நரகத்தில்
இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணி அறியோம்
பணிவோம் அல்லோம், இன்பமே
எந்நாளும் துன்பமில்லை
தாம் யார்க்கும் குடி அல்லாத்
தன்மையான சங்கரன் நற்
சங்க வெண்குழை ஓர்காதில்
கோமாற்கே நாம்என்றும்
மீளா ஆளாய்க் கொன்மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே.
இந்தப் பாடலை நான் மிகவும் அனுபவிப்பவன். சமண மதத்திலிருந்து சைவனாக மாறிய நாவுக்கரசரை சமண மன்னனாகிய மகேந்திரவர்மன் பலவிதங்களில் துன்புறுத்தியபோது அவனது ஆணைகளுக்கு அஞ்சாது எதிர்த்து நின்ற அடியாரது உளத்திண்மையை விளக்கும் அற்புதமான பாசுரம் என்று. இந்தப் பாடலை படித்து மகிழ்ந்தவன். ஆனால் பேச்சாளரோ இதைப் பற்றியோ, பாட்டின் பொருளைப் பற்றியோ, பாட்டைப்பாடிய அப்பர் உளத்திண்மையைப் பற்றியோ ஒன்றும் கூறவில்லை. அவர் கூறியதெல்லாம் இந்தப் பாடலில் எத்தனை ‘ஓம்’ வருகிறது என்று பாருங்கள். மொத்தம் ஒன்பது ஓம் வருகிறது. 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம், இந்தப் பாடலில் முழுவதும் ஒலிப்பதன் காரணமாகத்தான் இந்தப் பாடலில் ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அதனால் இப்பாடலைப் பாடப்பாட மந்திர உச்சாடனத்தால் ஏற்படும் பலன் நமக்குக் கிடைக்கிறது என்று பேசினார். இதைக் கேட்டு உள்ளூர நகைத்துக் கொண்டே வீடு திரும்பினேன் அன்று. நானே பாடல்களில் சொல்லும் பொருளும், பண்ணும் இசையும் எப்படி இணைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து உணர்ந்து அநுபவிக்கும் பழக்கம் உடையவன். ஆதலால் பாடலில் எத்தனை 'ஓம்' என்று கணக்குப் போடுவதெல்லாம் சிறுபிள்ளைத் தனம் என்று கருதுகின்றவன்.
ஆனால் பிரணவம், பஞ்சாக்ஷரம் முதலிய மந்திரங்களின் பெருமையைப் பற்றி நமது சமய குரவர்கள் எல்லாம் பாடியிருக்கிறார்களே, அது எல்லாம் உண்மையில்லையா என்றும் எண்ணிற்று என் மனது. இறைவனே பிரணவ சொரூபமாக இருக்கிறான் என்கிறார்களே.
என் உபாசனா மூர்த்தியாகிய விநாயகனே பிரணவ சொரூபிதானே என்றெல்லாம் என்மனம் அலைபாயும்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
என்று பஞ்சாக்ஷரத்தின் பெருமையைச் சம்பந்தர் பாடி இருக்கிறார். அப்பரோ,
சொல்துணை வேதியன் சோதிவானவன்
பொன்துணை திருந்தடிப் பொருந்தக் கைதொழ
கல்த்தூணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்
நல்த்துணை யாவது நமச்சிவாயவே
என்று ஐந்தெழுத்து மந்திரத்தை மறவாமல் சொல்லிச்சொல்லி அதில் இன்பம் கண்டிருக்கிறாரே. மணிவாசகரோ தன்னுடைய சிவபுராணத்தையே
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள்வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
என்றுதானே துவங்கி இருக்கிறார். இப்படி எல்லாம் பஞ்சாக்ஷரப் பெருமையை எல்லோரும் கூறுகிறார்களே இதன் உண்மைதான் என்ன என்று அறிய விரும்பினேன். அதிலும் முருக பக்தர்கள் எல்லாம் 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் அருமையை உணர்வார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தேன் பலருக்குத் தெரியவில்லை. ஒரு அன்பரோ அது சரவணபவ இல்லை. அதை 'சரஹணபவ' என்றே சொல்ல வேண்டும் என்று ஒரு போடு போட்டார். இதைப் பற்றி எல்லாம் ஒரு சில சொற்களால் சொல்லவே இதனை எழுதுகிறேன்.
எப்படி சிவனை வணங்குகிறவர்கள் நமசிவாய என்றும், விஷ்ணுவை வணங்குகிறவர்கள் நாராயண என்றும் மந்திர உச்சாடனம் செய்கிறார்களோ அதைப் போலவே முருக பதக்தர்ள் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். முருகனுக்கே ஒரு பெயர் சரவணன் என்று அவன் பிறப்பைப் பற்றிய கதை தெரியும். இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க, வாயு கங்கையிலே விட, கங்கை சரவணப் பொய்கையில் விட்டுவிடுகிறாள். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்தக் குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் எடுத்துப் பாலூட்டி வளர்க்கிறார்கள். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி சேர்த்து எடுத்தபோது கார்த்திகேயன் ஆறுமுகனாக உருப்பெருகிறான் என்று அவனது அவதார தத்துவம் பேசப்படுகிறது. இதனையே கந்தர் கலிவெண்பாவில் குமர குருபரர் விரிவாகப் பாடுகிறார்.
பொங்கும் தழற் பிழம்பை
பொற்கரத்தால் அங்கண்
எடுத்தமைத்து,வாயுவைக்கொண்டு
ஏகுதி என்று எம்மான்
கொடுத்தனுப்ப மெல்லக்
கொடுபோய் - அடுத்ததொரு
பூதத்தலைவரொடு
போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே
சென்றுய்ப்ப போதொருசற்று
அன்னவளும் கொண்டு அமைவதற்கு
ஆற்றாள் சரவணத்தின்
சென்னியிற் கொண்டு உய்ப்பத்
திரு வுருவாய்
என்று வளர்த்துக் கொண்டே செல்கிறார். ஆம், சரவணப் பொய்கையில் உருவானவனையே சரவணன் என்று அழைத்திருக்கிறார்கள். அவன் பிறந்த இடத்தின் பெருமை விளங்கவே அந்தப் பெயரைச் சொல்லி வணங்குபவர்களுக்கு அவன் அருள் புரிகிறான். இப்படித்தான் 'சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரம் உருப்பெற்றிருக்க வேண்டும்.
இனி அந்த ஆறெழுத்து மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோமா? அதற்காக நாம் அந்தத் திருச்செந்தூர் தலபுராணத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டும். அதில் ஒரு பாட்டு:
சரவணபவன் என்று ஓதும்
தாளறு பதங்கள் மூன்றில்
பரவுறு சரம் என்றாய
பதமது சலமே யாகும்
வருவநம வாசமித்த
வான்மதம் இரண்டும் பார்க்கில்
அரிது மா தவத்தும்
நாராயணனும் அருத்தும் ஆமால்
சர என்றால் புரைநீர் என்றும் வ என்றால் இருப்பிடம் என்றும் பொருளாம். இவைகளை இணைத்து நோக்கினால் புதிய பெரிய தவத்தை உடைய நாராயணன் என்றும் பொருளைக் கொடுக்கும் என்பர். இன்னும் ச என்றால் மங்களத்தையும் ர என்றால் ஒளியையும் வ என்றால் அமைதியையும் ந என்றால் பேரன்பையும் குறிக்கும். ஆதலால் இந்த நான்கின் அடிப்படையிலே தோன்றியவனே சரவணபவன். சரவணப் பொய்கை என்றாலே நாணல் புற்கள் செறிந்த பொய்கை என்று பொருள் கூறுவாரும் உண்டு. சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிப்பதால் சர்வ மங்களமும் உண்டாகும் என்பதும் விளக்கமுறும்.
இன்னும் சரவணன் என்றாலே நாராயணன் என்றே பொருள் என்பதால் எல்லா மந்திரங்களுமே ஒரு பொருளையே குறிக்கும் என்பதும் விளக்கமுறுகின்றது. அஞ்செழுத்து மந்திரமாயினும், ஆறெழுத்து மந்திரமாயினும் இல்லை எட்டெழுத்து மந்திரமாயினும் எல்லாம் குறிக்கும் பரம்பொருள் ஒன்றே தான் என்பது உறுதியாகிறதல்லவா? ஏரகத்து உறையும் முருகனிடத்து நம்மை ஆற்றப்படுத்தும் நக்கீரர்,
ஆறுஎழுத்து அடங்கிய
அருமறைக் கேள்வி
நா இயல் மருங்கில்
நவிலப் பாட
வேண்டும் என்கிறார்; அருணகிரியாரோ
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்
கார் பரமானந் தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும்
அற தினைப் போதளவும்
ஓங்காரத்து உள்ளொளிக் குள்ளே
முருகன் உருவம் கண்டு
தூங்கார், தொழும்பு செய்யார்
என்செய்வார் யமதூதருக்கே?
என்று மக்களைப் பார்த்து இரங்குகின்றார். ஆகவே ஓங்காரத்துள் காண்பவனும் முருகனே. நாராயணா என்னும் போதும் தோன்றுபவன் முருகனே என்றும், சரவணபவ என்னும்போதும் தோன்றுபவன் அவனாக இருத்தல் வியப்பல்லவே.
அந்த ஆறெழுத்து மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க உடம்பில் ஒரு சக்தி, உள்ளத்தில் ஒரு தெம்பு உண்டாகும் அழைத்த போதெல்லாம் வருவதற்கு காத்து நிற்பவன் ஆயிற்றே.
சூலாயுதம் கொண்டு
யம தூதர் வந்து என்னைச்
சூழ்ந்து கொண்டால்
வேலாயுதா என்று
கூப்பிடுவேன் அந்த
வேளைதனில் மாலான
வள்ளி தெய்வானை
யொடு மயில் விட்டு இறங்கி
காலால் நடந்து
வரவேணும் என்
கந்தப்பனே
என்று பிரார்த்தித்துக் கொள்கிறார் ஒருவர். மயிலில் ஏறிவந்தால் கூட காலதாமதம் ஆகிவிடுமாம். கால தாமதம் இல்லாமல் காலால் உடனே நடந்து வந்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறார். என்ன ஆசை பார்த்தீர்களா? ஆறெழுத்து மந்திரத்தினை நினைத்து நினைத்து உரு ஏறிய உள்ளமல்லவா இப்படி எல்லாம் பேசுகிறது.