உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறுமுகமான பொருள்/இன்னமும் சின்னவன் தானா?

விக்கிமூலம் இலிருந்து


4
இன்னமும் சின்னவன் தானா?


ஒரு தமிழ்க் கவிஞன், தமிழ்க் கடவுள் முருகனிடத்து அளவிறந்த பக்தியுடையவனாக வாழ்கிறான். முருகன் என்றால் அழகன், இளைஞன் என்றெல்லாம் அறிகிறான் என்றும் இளையாய், அழகியாய் என்றெல்லாம் பாடிய கவிஞர் பரம்பரையிலே வந்த கவிஞன்தானே இவன். கவிஞன் என்ற உடனேயே அவனுக்கு முன்னே அவன் வறுமை போட்டி போட்டுக் கொண்டு வந்து நிற்குமே. வறுமையால் நலிகிறான். வீட்டிலோ மனைவி மக்கள் எல்லாம் உண்ண நல்ல உணவின்றி, உடுக்க நல்ல உடையின்றி வாடுகிறார்கள். இத்துடன் வாழ்க்கையில் எத்தனையோ துயரம் அவனுக்கு. இத்தனை துயரையும் துடைக்க வழி ஒன்று உண்டு என்பதையும் அறிவான் பக்தன். தன் வழிபடு கடவுளான முருகனிடம் முறையிட்டால், அந்தக் கலியுக வரதன் தன் துயர் துடைத்து செல்வம் கொழிக்கும் வாழ்க்கை அருளுவான் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். இந்த நிலையில் மனைவி வேறே கவிஞனை, 'என்ன? உங்கள் முருகனிடம் முறையிட்டு வேண்டிக் கொள்ளுங்களேன். பக்தர்கள் துயரை எல்லாம் துடைத்தவனுக்கு உங்கள் துயரத்தை நீக்குவது என்பது சாத்தியமற்ற காரியமா என்ன?' என்றெல்லாம் அடிக்கடி ஞாபகப் படுத்துகிறாள். கவிஞன் மெத்தப் படித்தவன் ஆயிற்றே. அவனுக்கு ஒரு சந்தேகம், இந்த முருகன் சின்னஞ்சிறு பிள்ளைதானே. அன்னை மடிமீது தவழும் இந்த இளவயதில் அவள் அமுதுட்டினால்தானே உணவருந்தத் தெரியும். அவனோ தாய்க்கு அருமையான பிள்ளை. அதனால் அவள் அவன் கண்ணுக்கு மையிட்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு, அழகு பார்த்துக் கொண்டே இருப்பாள் அடிக்கடி எடுத்தணைத்து முத்தம் கொடுப்பாள் கொஞ்சலாகக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவாள். இப்படி எல்லாம் தாயொடு விளையாடும் இந்த வயதில் பக்தர்கள் துயரை எல்லாம் அவன் அறிதல் சாத்தியமா? இல்லை. நாமே சென்று சொன்னாலும் அதைத் துடைக்கும். ஆற்றல்தான் இருக்குமா அவனுக்கு? பிள்ளை கொஞ்சம் வளரட்டும், நல்ல இருபது வயதுக் காளையாய் இடர்துடைக்கும் நாயகனாக மாறட்டும். அப்போது நம் குறைகளைச் சொல்லிக் கொள்ளலாம். அப்போதுதானே அவனுக்கும் நம் துயர் துடைப்பது எளிதாக இருக்கும் என்றெல்லாம் எண்ணி எண்ணி, முருகனிடம் விண்ணப்பம் செய்வதை ஒத்திப் போட்டுக் கொண்டே வருகிறான், பக்தன் பல வருஷங்களாக.

ஆனால், ஒரு நாள் பக்தனுடைய நண்பர் ஒருவர், அவனை கூட்டிச் செல்கிறார் தன்னுடன், ஆறுபடை வீடுகளில் அழகான படைவீடாகிய திருச்சீர் அலைவாய்க்கே கூட்டி வந்து விடுகிறார் நண்பர். அங்கே முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பதெல்லாம் பக்தன் அறிந்தவன் தான். ஆகவே நண்பருடன் கடற்கரையிலே உள்ள அந்த வேலவன் கோயிலுக்கே செல்கிறான். அலை வந்து மோதும் அந்தக் கோயிலின் தெற்கு வாயில் வழியாக சண்முக விலாசத்தைக் கடந்து கோயிலுக்குள் நுழைகின்றான். அத்தனை நேரமும், கூனிக் குறுகி குனிந்து நடந்த பக்தன் நிமிர்ந்து நோக்குகிறான். அப்போது அவனுக்குக் காட்சி கொடுக்கிறான் சண்முகன். அன்று அங்கே அவனைத் தடுத்து ஆட்கொள்ள நிற்பவன் பாலனும் அல்ல, பால சந்நியாசியும் அல்ல. ஓராறு முகங்களும் ஈராறு கரங்களும் கொண்ட சண்முகநாதனே வேலேந்திய கையுடன் வீறுடன் நிற்கிறான் அங்கே.

வேல் கொண்ட கையும்,
விறல் கொண்ட தோளும்,
விலங்கு மயில்
மேல் கொண்ட வீறு
மலர் முகம் ஆறும்,
விரைக்கமலக்
கால் கொண்ட வீரக்
கழலையும் காண்கிறான்

பக்தன். அவ்வளவுதான் அப்படியே அதிசயித்து நின்று விடுகிறான். இப்படி நிற்பவன் ஏதோ ஆடையும் அணிகளும் அணியாமல் பஞ்சைப் பரதேசியாகவா நிற்கிறான்? ஒரே தங்கமயமான பொன்னாடை புனைந்து, ரத்னகசிதமான அணிகளையும் அணிந்து நிற்கிறான். தலையில் அணிந்திருக்கும் கிரீடம் ஒன்றே அரை லக்ஷம் ரூபாய் பெறும். தோளில் அணிந்திருக்கும் வாகுவலயமோ ஒரே ரத்னமயம், ஏந்தியிருக்கும் வைரவேலோ லேசாக இரண்டு லக்ஷம் பெறலாம். ஆளுக்கே கொடுக்கலாம் ஜாமீன் ஐந்து லக்ஷத்துக்கு. அத்தனை சௌந்தர்யத்துடன், சொத்து சுதந்திரத்துடன் கம்பீரமாக நிற்கிறான் ஆறுமுகன். இவ்வளவுதானா? இந்த அழகன் பக்கத்தில் ஒன்றுக்கு இரண்டு மனைவியர், அழகனுக்கு ஏற்ற அழகிகளாக அன்னம் போலவும் மயில் போலவும் காட்சி கொடுக்கிறார்கள். வஞ்சனையில்லாமல் மனைவியர் இருவருக்கும் அழகான ஆடைகளையும், அளவற்ற ஆபரணாதிகளையும் அணிவித்து அழகு செய்திருக்கிறான். இதையெல்லாம் பார்த்த பக்தனுக்கோ ஒரே கோபம், இன்னுமா இவன் சின்னப்பிள்ளை என் குறைகளை எல்லாம் நான் முறையிடாமலே அறிந்து கொள்ளும் வயதில்லையா, இல்லை ஆற்றல்தான் இல்லையா? ஏன் இவன் நமது துயரைத் துடைத்திருக்கக் கூடாது' என்றெல்லாம் குமுறுகிறான். குமுறல் எல்லாம் - கவிஞன் ஆனதினாலே - ஒரு பாட்டாகவே வெளிப்படுகிறது. பக்தன் அப்போது பாடிய பாட்டு இதுதான்.

முன்னம் நின் அன்னை அமுதூட்டி,
மையிட்டு, முத்தமிட்டுக்
கன்னமும் கிள்ளிய நாளல்லவே,
என்னைக் காத்தளிக்க
அன்னமும் மஞ்ஞையும் போல இரு
பெண் கொண்ட ஆண்பிள்ளை நீ,
இன்னமும் சின்னவன் தானோ
செந்தூரில் இருப்பவனே

என்று பாடுகிறான். 'அன்னமும், மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ' என்று ஆங்காரத்துடனேயே கேட்கிறான் ஆறுமுகனை. இன்னமும் சின்னவன்தானோ? என்று முடிக்கும் போது கவிஞனின் ஆத்திரம் அளவு கடந்தே போய்விடுகிறது. இப்படிப் பாடிய கவிஞன், பக்தன் வேறு யாரும இல்லை. படிக்காசுப் புலவன் தான்.

இடையறாத அன்பினாலும், வழிபாட்டினாலும், இறைவனை அடைய முயலும் பக்தர்கள் எல்லாம், அவனோடு சாந்தம், தாஸ்யம், ஸக்யம், வாத்சல்யம், மதுரம் என்னும் ஐந்து வகை பாவனைகளில், உறவு முறைகளில் ஒன்றை அமைத்துக் கொண்டு உறவாடி மகிழ்கிறார்கள். இறைவனும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற முறையில், இயன்ற பக்குவத்தில், தன் தெய்வீக வடிவங்களை அமைத்துக் கொண்டு அவர்களோடு பழகி வருகிறான். தன்னைத் தந்தையாகப் பாவிப்பவர்களுக்கு தந்தையாகவே இருக்கிறான். தோழனாகப் பாவிப்பவர்களுக்கு அவன் தோழனே. நாயகனாகப் பாவிப்பவர்களுக்கு நாயகனாக இருப்பவனே, குழந்தையாகப் பாவிப்பவர்களுக்கு குழந்தையாக மாறி விடுகிறான்.

சமயகுரவரில் ஒருவரான ஞானசம்பந்தர் தன்னை இறைவனது சேயாகப் பாவித்துப் பழகத் தெரிந்திருந்தார். இறைவனையே தன் சேயாகப் பாவிக்கும் பாவனை பெற்றிருந்த பக்தர்களும் பலர். ஏன், தமிழ்நாட்டில் எழுந்த பிள்ளைத் தமிழ் எல்லாம் இறைவனை பக்தன் குழந்தையாகப் பாவித்து வழிபடும் முறைதானே. இந்த உறவு முறையில் எவ்வளவோ ஈடுபாடுகள் எல்லாம் உண்டு. குழந்தையை எடுத்துக் கொஞ்சலாம், முத்தமிடலாம், கன்னத்தைக் கிள்ளலாம். கோபித்துக் கொள்ளலாம். ஏன், அடியும் உதையும் கூட அதனிடத்தில் பெறலாம். இன்னும் என்னென்னவோ அருமையான பாவனைகளை எல்லாம் அனுபவிக்கலாம்.

இந்த ரகஸ்யங்களை எல்லாம் தெரிந்து தானே, நமது முன்னோர்கள் இறைவனைக் குழந்தை வடிவிலே வழிபட்டு இருக்கிறார்கள். விரிந்த உலகங்கள் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் மாயவனாகிய திருமாலைப் பச்சிளங் குழந்தையாகக் கொண்டாடுவதில் தானே இன்பங் காண்கிறோம் நாம். குழந்தை முருகனைக் கொண்டாடும் முறையும் இப்படித்தான். இதைத்தான் பார்த்தோமே படிக்காசுப் புலவர் பாடலில் மேல்நாட்டு அறிஞர்களும் கிறிஸ்துவை அன்னை மேரியின் அருமைப் பிள்ளையாகத் தானே கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆம், எல்லாம் வல்ல இறைவன் என்றைக்கும் இளையவனாக இருக்கிறான் நமக்கெல்லாம்.

இன்னும் ஒருபடி மேலே. இறைவனை மட்டும் குழந்தையாக ஆக்கிக் கொண்டால் போதாது; பக்தனும் தன்னைக் குழந்தையாக ஆக்கிக் கொள்ள வேணும். ஐந்து வயதுப் பாலகனாக இருக்கிற போதுதானே ஆற்றங்கரைப் பிள்ளையாருடன் அளவளாவி விளையாட முடிகிறது. அவருடைய கொம்பைப் பிடித்து அசைத்து, அவருடைய காதைப் பிடித்துத் திருகி, பிள்ளைத் தோழனாக உறவு கொண்டாட முடிகிறது. வயது ஏற ஏற, அறிவு வளர வளர, கடவுள், தெய்வம், பாவம், புண்ணியம் என்றெல்லாம் அறிய, அறிய, நாம் இறைவனை நெருங்க அஞ்சுகிறோம். எட்டி நின்று கும்பிடு போட்டு விட்டு திரும்பிவிட விரைகிறோம். அப்போது நமக்கும் இறைவனுக்கும். இடையே உள்ள தூரமும் அகன்று கொண்டே போகிறது. இறைவன் குழந்தையாகவும் நாம் மனிதனாகவும் இருந்தால் பயனில்லாது போய்விடுகிறது. ஆதலால் நாமும்,பக்தி செலுத்த விரும்பும் நாமும், குழந்தைகளாகவே மாறிவிட வேண்டும். இத்தகைய எண்ணத்தைத் தான் நம் உள்ளத்தில் உருவாக்கி விடுகிறான் இளைஞனான முருகன், அழகனான குமரன்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

அவதாரம்

தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றி, அவன்றன் அவதார தத்துவத்தைப் பற்றி எத்தனை எத்தனையோ கதைகள். புராதனமான வால்மீகி இராமாயணம், இடையிட்ட சங்கச் செய்யுள் பரிபாடல், பிற்காலத்திய கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, எல்லாம் கிட்டத்தட்ட ஒரே கதையையே கூறுகின்றன. இறைவனது நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த பொறிகளை, அக்கினி ஏந்தி வாயுவிடம் கொடுக்க வாயு கங்கையில் விட கங்கை சரவணப் பொய்கையில் விட்டு விடுகிறான். அங்கே ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருப்பெற அந்தக் குழந்தைகளைக் கார்த்திகை மாதர் அறுவர் எடுத்துப் பாலூட்டி வளர்க்கிறார்கள். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி சேர்த்து அணைத்து எடுத்த போது கார்த்திகேயன் ஆறுமுகனாக உருப்பெறுகிறான். பேரொளி படைத்தவன், அடியார்க்கு எளியவன். வேள்வி காவலன், ஞான பண்டிதன், வீரப் பெருமகன், இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று புலப்படுத்தவே, அவனது ஆறு திருமுகத்தைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள் நமது முன்னோர். அப்படி எல்லாம் விளக்கம். கூறுவதைவிட இந்த அறுமுகவன், அழகனாக, குமரனாக மக்கள் உள்ளத்தில் எப்படி உருப்பெறுகிறான் என்பதை தமிழ் மக்களது இறை உணர்வு வளர்ந்த வரலாற்றிலேயே தெரிந்து கொள்ளலாம் தானே!

'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த’வர்கள் தமிழ் மக்கள். அந்தப் பழங்குடி மக்கள் உண்ணத் தெரிந்திருக்கிறார்கள் உறங்கத் தெரிந்திருக்கிறார்கள்; உடுக்கத் தெரிந்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் ஓர் அமைதி நிலவி இருக்கிறது. ஆனால் இந்த அமைதியைக் குலைத்திருக்கிறது இயற்கையில் எழுந்த இடியும் மின்னலும், ஆற்றில் புரண்ட வெள்ளமும், காற்றில் தோன்றிய கடுமையும். அவர்கள் வாழ்க்கைப் படகே ஆட்டம் கொடுத்திருக்கிறது. சுழற் காற்றையும் சூறாவளியையும் குமுறும் நிலத்தையும் கண்டு பயந்திருக்கிறார்கள் இந்தப் பயத்திலே பிறந்திருக்கிறது இறை உணர்வு.

இந்த உலகிலே காணும் நிலம், நீர், அனல், காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் பயங்கர நிலையைக் கண்டு அஞ்சி, அஞ்சியே இறைவனை நினைந்திருக்கிறார்கள். முதலில் அஞ்சி வழிபட்ட ஐம்பூதத்தின் சாந்த நிலையைக் கண்ட பின் தான். அன்பு பிறந்திருக்கிறது அவர்கள் உள்ளத்திலே. உலகின் நன்மைக்கெல்லாம் காரணமாய் இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று அவன் வெம்மையைக் குறைத்து, தண்மையையே அளிக்கும் சந்திரன், இரண்டிற்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அளிக்கவும் உதவும் அனல், இவற்றையே கொடிநிலை, வள்ளி, கந்தழி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள். இப்படி உருவான இறை உணர்ச்சியிலேயும் ஒரு குறை என்றுமே இருந்துவந்திருக்கிறது. உண்ணத் தெரிந்ததோடு, உடுக்கத் தெரிந்ததோடு வாழ்வு பூரணமாகவில்லை என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நீண்டு உயர்ந்த மலையைக் கண்டு அதில் வளரும் மரம் கொடிகளைக் கண்டு, அந்தச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு. அந்த மலர்களில் எழும் மணத்தினை நுகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்ற பரந்த கடலிலே, அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே, அந்த ஒலி எழுப்பிய இன்னிசையிலே உள்ளம் பறிகொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது. அப்படித்தான் மலை மூலமாக, அலை மூலமாக, கலை மூலமாக, இறைவழிபாடு ஆரம்பித்து வளர்ந்திருக்கிறது. அந்த மலையையும், அலையையும், கலையையும் உருவகப்படுத்தியே மலை மகள், அலை மகள், கலை மகள்' என்று கற்பனை பண்ணியிருக்கிறார்கள். நின்று தொழுதிருக்கிறார்கள் விழுந்து வணங்கியிருக்கிறார்கள். இடையிடையே பழைய பயமும் விட்டபாடாக இல்லை. அந்தப் பயத்தை எல்லாம் எண்ணிய போது கலை மகள், அலை மகள், மலை மகள் மூன்று பேரையும் சேர்த்தே நினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவமும் சேர்ந்த அன்னையைத் தான் பழையோள் - பராசக்தி என்று போற்றியிருக்கிறார்கள்.

இப்படித் தோன்றிய இறை உணர்ச்சிக்கே அடிப்படை அழகுணர்ச்சிதான். பார்க்கும் மரங்களில் எல்லாம் இறைவனின் பசிய நிறத்தைக் கண்டவன் தமிழன், கேட்கும் ஒலியில் எல்லாம் அவன் கீதத்தைக் கேட்டவன் தமிழன். தீக்குள் விரலை வைத்த போதும் அவனைத் தீண்டும் இன்பமே பெற்றவன் தமிழன். இத்தகைய தமிழன் அழகையே தன் வழிபடு தெய்வமாக அமைத்துக் கொண்டதில் வியப்பில்லை தானே? அழகை ஆராதிக்கத் தெரிந்தவனே, அழகனை, இளைஞனை, குமரனை இயற்கையில் கண்டு மகிழ்ந்திருக்கிறான், இப்படித்தான் தமிழர் கடவுளான முருகன், குமரன் உருவாகி இருக்கிறான் தமிழர்கள் உள்ளத்திலே இறுதி இல்லாத நீல வானத்தை, நீலத் தோகை விரித்தாடும் மயிலாகக் கண்டிருக்கிறான். அந்த வானம் எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தத்துவத்தையே முருகனாகக் கொண்டிருக்கிறான். எட்டும் குலகிரி எட்டும் விட்டோட, எட்டாத வெளிமட்டும் பதைய விரிக்கும் கலாப மயூரத்தன் உருவாகி இருக்கிறான். இச்சைக்கு உகந்த சக்தியை வள்ளியாகவும் கிரியைக்கு உகந்த சக்தியை தெய்வானையாகவும் கற்பனை பண்ணியவனே, ஞானத்தின் சக்தியாக வேலையும் நினைத்திருக்கிறான். குமரன் வேலன் ஆன கதையும் இப்படித்தான்.

முருகனாகிய குமரன் மூலமாக இறையைக் கண்ட தமிழன், மலைமகள் மகனாகக் கண்ட மாயோன் மருகனை, முதலிலே மலை மேலேயே ஏற்றிவிட்டிருக்கிறான். தமிழகத்தில் மலையும், மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தையும் அவன் இருப்பிடமாகக் கருதியிருக்கிறான். குன்றுதோறாடும் குமரனே என்றாலும், நெய்தல் நிலமான அலைவாய்க்கரை, முல்லை நிலமான ஆவினன் குடியிலும், மருத நிலமான பழமுதிர் சோலையிலும், அவனுக்கு இருப்பிடம் அமைத்து அவற்றை அவன்றன் படை வீடுகள் எனப் பாராட்டி இருக்கிறான். இப்படி மலையிலே பிறந்து, கடற்கரையிலும், வயல்வெளியிலும், பழத்தோப்பிலும் தவழ்ந்தவனே, நதிக்கரையிலே நன்றாக வளர்ந்து ஏரகம் என்னும் செய்குன்றின் மீதும் ஏறி நின்று மக்களை வாழ்வித்திருக்கிறான். இந்த ஆறு நிலையையும் தான் அந்தப் பழைய புலவன் நக்கீரன் பாட்டாக பாடி இருக்கிறான். அந்த இறைவனிடம் செல்ல விரும்புபவர்களை எல்லாம் ஆற்றுப் படுத்தியிருக்கிறான். ஆம். நல்ல வழிகாட்டியாகவே அமைந்திருக்கிறான்.