ஆறுமுகமான பொருள்/திருச்செந்தூர்

விக்கிமூலம் இலிருந்து



5
திருச்செந்தூர்


ஆறுமுகன் கோயில் கொண்டிருக்கும் இடங்கள் ஆறு என்பதை நக்கீரர் விளக்கமாக உரைக்கிறார். அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருஆவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை என்பதையும் அறிவோம். இந்த இடங்களே முருகனது படைவீடுகள் என்றும் குறிக்கப்படுகின்றன. இந்தப் படை வீடுகளில் ஒன்றான திருச்சீரலைவாய் என்பதே இன்றைய திருச்செந்தூர். பண்டைத் தமிழ் நூல்களில் இந்தத்தலம் திருச்சீரலைவாய், செந்தில் என்று மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது.

வெண்டலைப் புணரி, அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைகிய காமர் வியன்துறை

என்று புறநானூற்றில் கூறப்பட்டிருக்கும் இடத்திலே

திருமணி விளக்கின் அலைவாய்ச்
செருமிகு சேய்

தங்கி இருக்கிறான் என்று அகநானூறு கூறுகின்றது.

அலைவாய்ச் சேரலும், நிலைஇய பண்பே

என்று நக்கீரர் சொல்வதையே


சீர்கெழு செந்திலும், செங்கோடும்
வெண் குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்

என்று சிலப்பதிகாரம் விளக்குகிறது. சிவபிரானைப் பற்றிப் பேச வந்த நாவுக்கரசரும்,


நம் செந்தில் மேய வள்ளி மணாளர்க்குத் தாதை
கண்டாய்

என்று தானே உரிமையோடு பாடுகிறார். இப்படி எல்லாம் சங்க காலத்திலும் தேவார காலத்திலும் - செந்தில் என்று வழங்கிய ஊரே பின்னால் செந்தூர் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இத்திருத்தலம் திருநெல்வேலி ஜில்லாவில், திருநெல்வேலிக்கு கிழக்கே முப்பத்தெட்டு மைல் தொலைவில் இருக்கிறது. அலைவாய் என்ற பழைய பெயருக்கேற்ப, மன்னார்குடாக்கடல் கரையிலே ஒரு சின்னஞ்சிறு பட்டினமாக இருக்கிறது. இந்தக் கடற்கரையிலே அன்றிருந்த கந்த மாதன பர்வதம் ஒரு பெரிய மணற்குன்றாக இருந்திருக்க வேண்டும். முருகன் விரும்பியபடி மயன் கோயிலை முதன் முதல் உருவாக்கி இருக்கிறான். தேவகம்மியனால் அமைக்கப்பட்ட திருக்கோயில் -நாளாக நாளாக விரிந்து பெருகியிருக்கிறது. இன்றைய சண்முகர் சந்நிதி பின்னர்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். சுற்றியிருந்த மணல் குன்றுகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு பிரகாரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. மணற்குன்றே வட பக்கத்தில் ஒரு மதிலாக இருப்பதை இன்றும் காண்கிறோம். இம் மணல் குன்றின் தாழ்வரையில் ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.

இந்தக் கோயிலை இன்னும் விரிவாகக் கட்டியிருக்கிறார்கள் பாண்டிய மன்னர்களும் சேர அரசர்களும். வரகுண மாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியத் தேவர் முதலியோர் கோயில் நிர்வாகத்திற்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள், நிலதானம் செய்திருக்கிறார்கள், நந்தா விளக்குகளை நிறுவியிருக்கிறார்கள். இவை எல்லாம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருக்கின்றன. கி.பி.1729 முதல் 1758 வரை திருவாங்கூரை ஆண்டுவந்த மார்த்தாண்டவர்ம மகாராஜா தான் இந்த கோயிலில் உதயமார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய அடிச்சுவட்டிலே தமிழ்நாட்டு ஜமீன்தார்களும், செட்டியார்களும், பிறரும் மற்றக் கட்டளைகளுக்கு வேண்டும் நிலங்களையும் சொத்துக்களையும் அளித்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் வளர்ந்த கோயில் கால வெள்ளத்தாலும், கடல் அலைகளாலும், நலியத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் தான் மெளனசுவாமி கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவரும் அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்திய வள்ளிநாயக சுவாமிகளும் தான், இன்று நிலை பெற்றிருக்கும் கற்கோயிலையும், ராஜகோபுரத்தையும், மற்றய மண்டபங்களையும் கட்டி முடித்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணி வேலை சென்ற எண்பது ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்னும் செய்ய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது.

இந்த கோயிலில் இன்றும் சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மூன்று. ஆவணி, மாசி மாதங்களில் நடப்பவை பெரிய திருவிழாக்கள். இவைகளைவிட இங்கு நடக்கும்-முக்கியமான திருவிழா கந்தசஷ்டி திருவிழாத்தான். ஆம், சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் என்ற மூவரையும் வென்று வெற்றி சூடிய கந்தனுக்கு, கார்த்திகேயனுக்கு நடத்தும் திருவிழா அல்லவா? இந்த விழா நடப்பது ஐப்பசியில், சுக்லபக்ஷத்தில் ஆறு நாட்கள். சஷ்டி திதி அன்று சூரசம்ஹார லீலை கடற்கரையிலேயே நிகழும். செந்தில் நாயகர் உலாப்போந்து, பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார். ஆறு நாட்களும் விரதம் இருக்கும் அன்பர்கள் ஆணவம், கன்மம், மாயையினின்றும் விடுபட்டு பேரின்பம் எய்துவர் என்பது நம்பிக்கை. காமம், குரோதம், லோபம் முதலிய தீய குணங்களை நம்மிடம் இருந்து அகற்ற இந்த விழாக்களும் விரதங்களும் தானே துணை புரிய வேண்டும். அந்த நம்பிக்கையே இந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு எல்லாம் எல்லா நலனையும் கொடுக்கிறது.