ஆறுமுகமான பொருள்/கோலக் குமரன் திருவுருவம்

விக்கிமூலம் இலிருந்து



9
கோலக்குமரன் திருஉருவம்


ஆறுமுகனுக்கு உகந்த படை வீடுகள் ஆறு என்பதை அறிவோம், இது தவிர எங்கே ஒரு மலை, ஒரு குன்றைக் கண்டாலும், அங்கே ஏறி நின்று விடுவான் அவன். தண்டேந்தித் தனியனாக நிற்பான்; இல்லை வள்ளி, தெய்வயானை சமேதனாக நல்ல கல்யாணகுண சம்பன்னனாக காட்சி தருவான். ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு தேவ சேனாதிபதியாகவும் விளங்குவான். இப்படி எல்லாம் அவன் திருஉருவைச் சமைத்து வணங்கி வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழ் மக்கள் எவ்வளவோ காலமாக.

முருகனுக்கு உரிய முக்கிய ஸ்தலங்கள் அறுபத்தி நாலு என்பர் அறிஞர். ஆனால் அருணகிரியார் நூற்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்குச் சென்று ஆங்காங்கு உள்ள முருகன் பேரில் எல்லாம் திருப்புகழ் பாடி மகிழ்ந்திருக்கிறார். அத்தனை ஊர்களில் உள்ள மூர்த்திகளையும் இங்கே நான் கொண்டு வந்து நிறுத்தப் போவதில்லை. என்றாலும் ஒரு சில மூர்த்திகளையாவது கண் குளிரக்காணும்படி உங்களுக்கு காட்டும் வாய்ப்பு இருக்கிறதே எனக்கு, அதை விட்டுவிட விரும்பவில்லை நான்.

தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலியில் திருமலையில் இலஞ்சியில் இன்னும் எத்தனையோ தலங்களில் அழகான மூர்த்திகள் உண்டு. வடபாண்டி நாடாகிய மதுரையை அடுத்து திருப்பரங்குன்றத்தில், குன்றக்குடியில் எல்லாம் குமரன் அழகாக உருப் பெற்றிருக்கிறான். வட தொண்டை நாட்டிலோ, தருமமிகு சென்னையில் கந்தக் கோட்டத்தில் ‘வளர்ந்தவனே இன்று போரூரிலும், வடபழனியிலும் அன்பர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருக்கிறான். நடு நாட்டிலோ மயில் ஊர் கந்தனாக மயில மலையிலே நிற்கிறான் என்றாலும் இந்தக் கோலக்குமரன் கொலு இருப்பது சோழ நாட்டில்தான் காவிரிக் கரையில் உள்ள அந்த அற்புதம் அற்புதமான கோயில்களில்தான்


ஏழ்தலம் புகழ் காவிரியால் விளை
சோழ மண்டல மீதே மனோகர, ராஜகம்பீர
நாடாளும் நாயகனாக

அவன் அமர்ந்திருக்கும் உருவங்கள் தான் எத்தனை எத்தனை!

மயில் வாகனன் ஆக, வள்ளிமணாளன் ஆக, தனுஷ் சுப்பிரமணியன் ஆக, கார்த்திகேயனாக எல்லாம் அங்கே அவன் காட்சி கொடுக்கிறான். கும்பகோணத்திற்குத் தெற்கே தாராசுரத்திலே மண்டப முகப்பிலே நின்று கொண்டிருக்கிறான் ஒரு கார்த்திகேயன். நீண்டு உயர்ந்த மணி மகுடம் தரித்திருக்கிறான். புன்முறுவல் பூத்தலர்ந்த, பூங்குமுதச் செவ்வாய், அவன்றன் அழகினை மாத்திரம் என்ன, பேரருளையுமே பறைசாற்றுகின்றது.

அங்கிருந்து மாயூரம் சென்று அதற்கும் கிழக்கே பதினைந்து மைல் தொலைவில் உள்ள திருநனிபள்ளி என்னும் தேவாரஸ்தலமான கடாரம் கொண்டான் சென்றால் செப்புச் சிலை உருவில் மயிலேறி விளையாடும் ஆறுமுகனைக் காணலாம்.

சோழ நாட்டிலே உள்ள கோலக் குமரர்களில் முக்கியமானவர் மூவர், சிக்கல் சிங்காரவேலன், எட்டுக்குடி வேலவன், எண்கண்முருகன் இவர்கள் தாம். இவர்கள் மூவரையும் உருவாக்கிய சிற்பி ஒருவனே என்பர். நல்ல இளைஞனாக, உடல் வலிமையுடையவனாக சிற்பி இருந்த போது செய்த சிலை சிங்கார வேலவர் என்றும், உடல் தளர்ந்து கைவலி இழந்த காலத்தில் செய்யப்பட்டது எட்டுக்குடி வேலவன் என்றும், கண்ணையே இழந்திருந்தபோது உருவானான் எண்கண் முருகன் என்றும் கூறுகிறது கர்ணபரம்பரை. கண்ணிழந்தபோது செய்து முடித்த எண்கண் முருகனேநிறைந்த அழகுடையவனாக இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை பண்ணிக் கொள்ளத் தெரியாதவர்களா தமிழர்?

இன்னும் எத்தனையோ திருவுருவங்கள் முருகனுக்கு. அழகனாக, இளைஞனாக, செல்வச் சீமானாக, ஆண்டியாக எல்லாம் உருவானவனே, வைத்தியநாதனாகவும் ஆம், பைத்தியம் தீர்க்கும் வைத்தியநாதனாகவே உருவாகிறான். அப்படி உருவானவன்தானே கொங்கு நாட்டில் உள்ள திருமுருகன் பூண்டியில் உள்ள முருகன். மக்களுக்கு எத்தனையோ பைத்தியம். பொன்மேல் ஆசை, பெண்மேல் ஆசை, மண்மேல் ஆசை. இந்த ஆசையெல்லாம் வளர்ந்து வளர்ந்து மனிதனைப் பைத்தியமே கொள்ளச் செய்கிறது. அப்போது மனிதனது பைத்தியம் தெளிவிக்க ஓர் அருளாளனின் தயவு வேண்டியிருக்கிறது. அந்த அருளாளனே குமரன், முருகன், கந்தன், கடம்பன். அவனைக் காண்பதற்கு பல தலங்களுக்குச் செல்லலாம். இல்லாவிட்டால் உள்ளக் குகையிலே இருக்கும் குஹனாகவே கண்டு மகிழலாம்.