சொன்னார்கள்/பக்கம் 5-20

விக்கிமூலம் இலிருந்து





சொன்னார்கள்

நான் இன்று உங்களுக்கு வழங்கும் இந்தக் கஸ்தூரியின் மணத்தைப்போல், என் மகனுடைய புகழ் இப்புவியெங்கும் பரவட்டும்.

—ஹிமாயூன் (15-10-1542)
(அக்பரின் தந்தை)


நாம் சமீபத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காரியங்களைப் பற்றி உலகத்தார் என்ன நினைப்பார்கள்? சற்று கவனியுங்கள்? சந்திர நாகூரிலுள்ள கவர்னராலும், அவருடைய சபையோராலும் கேட்டுக்கொண்டபடி அவர்களுடைய பிரதிநிதிகள் மூலமாய் யுத்தமின்றி சும்மா யிருப்பதாய் ஒப்புக்கொண்ட மாதிரி உடன்படிக்கைகள் இருதரத்தார்க்கும் சம்மதங்களாய் நிற்கின்றன அல்லவா? நவாப்பு என்ன நினைப்பான்? வாக்குறுதிகள் செய்த பிறகு நாம் தவறினால் உலகத்தார் நம்மை அற்பர் என்றும், நியாயம் இல்லாதவர்கள் என்றும் தூற்றுவார்கள், ஆதலால், வாட்ஸனின் கருத்து எவ்வாறு இருப்பினும் அதைத் தள்ளிவிட்டு நாம் தீர்மானம் செய்தபடி உண்மையைப் பின்பற்றுவோம்.

—ராபர்ட் கிளைவ் (4-3-1757)

என்னுடைய வாரிசுகளைத் தருவித்து என் ஜமீனைக் கொடுக்க வேண்டும். என்னுடைய ஜமீன் சொத்துக்களை யாவும் என் சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாகவும், நான் அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு நான் ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் யாவும் ஒழுங்காக நடத்தி வருவதாகவும், நீங்கள் இப்பொழுது எனக்கு உறுதிமொழி தரவேண்டும். அதற்கு அத்தாட்சியாகக் கவர்ன்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி நீங்கள் சத்தியம் செய்து தரவேண்டும்.இது சத்தியம்.

—மருதுபாண்டியர் (10-10-1801)

(தூக்கிலிடப்படுவதற்கு முன் கொடுத்த மரணவாக்குமூலம்)

கவி வர்ணனை மூளையினின்று மறைந்து நீங்குவது போல, இராஜாராம் மோகன்ராய் நம் மத்தியிலிருந்து மறைந்து விட்டார். என்றாலும் அவரது சகவாசத்தால் உண்டான நற்பலன்கள் இந்த நாட்டிலும், அவரது தாய் நாடாகிய இந்தியாவிலும் என்றென்றும் அழியாமல் நிலை பெற்றிருக்கும். அம்மகான் காலஞ்சென்று விட்டாரென் றாலும், அவரது நல்வாழ்வும், நற்செயல்களும் நம்மை எப்போதும் அவரை நன்றியுடன் பாராட்டி, அவர் வழியில் நடக்கச் செய்யும் என்பதற்கு ஐயமில்லை.

—பாக்ஸ் பாதிரியார் (27-9-1833)

(இராஜாராம் மோகன்ராய் மறைந்த நாளன்று பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில்)

நண்பர்களே! எனக்கு இவ்வுலக வாழ்க்கை முடிந்தது; விண்ணுலக வாழ்க்கை கிட்டிற்று. நம் குருமார்களான நானக் முதலியோருடன் நானும் வாழும் பாக்கியத்தை யடையப் போகிறேன். என் மகன் காரக் சிங்கனே எனக்குப் பின் அரசாள வேண்டியவன். ஆதலின், நீங்கள் எனக்கு எப்படிக் கீழ்ப்படிந்து நாட்டை மேன்மையடையச் செய்தீர்களோ, அவ்வாறே இவனிடமும் நடந்து கொள்ளுங்கள்.

—பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் (27-6-1832)

நான் ஒரு பெண் என்ற முறையில் மணம் செய்து கொள்ளப் போகிறேனேயன்றி, மகாராணி என்ற காரணத்தினால் அல்ல. ஆகவே எல்லோருக்கும் நடப்பது போல எனக்கும் வேதப்படிதான் திருமணம் நடைபெற வேண்டும்.

—விக்டோரியா மகாராணி (10-2-1840)

இந்த நல்ல நேரத்தில் என் மனப்பூர்வமான விருப்பத்தோடு உங்களுக்குச் சில செய்திகளைப் பற்றிச் சொல்லக் கருதுகிறேன். இந்தக் கட்டிடத்தின் அருகில் வந்திருக்கும் பெருங் கூட்டத்தினரெல்லோரும் கேட்குமாறு சொற்பொழிவாற்ற வேண்டுமாயின், இடிமுழக்கம் போன்ற குரலுடன் பேசவேண்டும். ஆதலினால் என் அருகிலிருந்து கேட்பவர்கள் எல்லோரும் நான் பேசும் விஷயங்கள் அனைத்தையும் பிறருக்குச் சொல்லும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரென்பவர் தரும எண்ணத்தோடு தம்முடைய திரண்ட பொருள்களைக் கோயில்களுக்கும் பிற தருமங்களுக்குமாகச் செலவழித்தார். அவருக்குச் சந்ததியாவது, வேறு உரிமையாளர்களாவது இல்லாமற் போனபடியால், அவருடைய வம்ச ஆசாரப்படி தம்பொருள்களையெல்லாம் சத்திரம் சாவடிகள் கட்டுவதற்காகவும், வறியோர்கட்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதற்காகவும் வைத்துவிட்டுக் காலமானர். அவருடைய எண்ணத்திற்கும், இந்து ஜன சமூகத்தாருடைய வழக்கதிதிற்கும் பொருந்தினது போல் சுப்ரீம் கோர்ட்டாரவர்களுடைய தீர்மானத்தின்படி இந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்காக நான்கு லட்ச ரூபாய் வரையிலும் தரப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையைச் சிதைந்து போக வொட்டாமலும் களவாட வொட்டாமலும் இந்த விஷயத்துக்காக காப்பாற்றுகிற நிமித்தம் நான் எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன். மேற்படி முதலியார் பெயரால் தருமக்கல்விச் சாலைகள் ஏற்படுத்துவதில் எவ்வளவு என்னுடைய ஒய்வு நேரங்களைச் செலுத்தி வந்தேன். அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இவ்வாறு நான் செய்ததைப் பற்றிச் சிலர் பழிச்சொல் கூறும்படி இருந்த போதிலும், அது வெளிக்கு வருமாயின், எனக்கு அதனல் மேன்மையும், திருப்தியும் உண்டாகும்.

—ஜார்ஜ் நார்ட்டன் (2-10-1846)
(சென்னை சுப்ரீம் கோர்ட் அட்வொகேட் ஜெனரல்)

நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒரு கால் பார்க்க நேர்ந்து பார்த்தால், யாருக்கும் தோன்றாது. வெறும் வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவன் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொண்டார்.

—இராமலிங்க அடிகள் (30-1-1874)

நான் போய்ச் சேர்ந்த மிஷன் பாடசாலை சுமார் மூன்று மாதத்திற்குள் கலாசாலை ஆகிவிட்டது. வித்துவான் H.A. கிருஷ்ணபிள்ளை எங்களுக்குத் தமிழாசிரியராக வந்தார். அவர் சிவந்த மேனியும் மெல்லிய உருவமுடையவராய் இருந்தார். என் தகப்பனாரைப் போன்ற சாயலாக இருந்தார். கம்பராமாயணத்தைப் பாராமல் ஒப்புவிப்பார்.

— தாமஸ் கதிர்வேல் நாயனர் (17.9-1879)
(H. A. கிருஷ்ணபிள்ளையின் மாணவர்)

நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க, நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ்நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து, அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக.

—மாக்ஸ் முல்லர் (27-9-1883)

[பிரிஸ்டல் நகரத்தில் நடைபெற்ற இராஜாராம் மோகன்ராய் 50-வது நினைவு விழாவில்]

கல்வி, நாகரிகம் முதலியவற்றால் செழிப்புற்றோங்கும் நாடுகளில், எவையெவை நன்மை என்று தோன்றுகின்றனவோ, அவைகளை இந்தியாவின் சீர்திருத்தத்தின் பொருட்டுப், பயன்படுத்தி இவ்விதமாய் இந்தியாவையும், இங்கிலாந்தையும் என்றும் மாறாத சங்கிலிகளினல் இணைப்பதன் பொருட்டுச் செய்யப்படும் ஒவ்வொரு சிறு முயற்சியும் , அரசினர் அளிக்கும் எல்லாப் பரிசுகளுக்கும் மேலானதென்றே நான் கருதுகிறேன். இப்படிப்பட்ட சிறந்த செயல்களைச் செய்வதில் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் நமக்குத் தோன்றும். இப்படிப்பட்ட தடைகள் இதில் மாத்திரமல்ல மனிதன் தன் வாழ்நாளைச் செலவிடக்கூடிய பற்பல காரியங்களிலும் இருக்கின்றன. ஆதலால், இவற்றைச் செய்து நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுமாறு, சென்னைக் கிறித்தவ கல்லூரிப் பழைய மாணவர்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

—டாக்டர் வில்லியம் மில்லர் (30.4.1884)
[சென்னை மெமோரியல் மண்டபத்தில்]

காலையில் படுக்கையை விட்டெழுந்து பசியினல் பழைய சாதத்தை உண்டு எக்கா ஒன்று 14-அணா வீதமாக சத்தம் பேசி பிருந்தாவனத்துக்குப் புறப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு பிருந்தாவனத்தில் சேர்ந்து, ஸ்ரீ சேட்ஜீ அவர்களுடைய பெரிய கோயில் காரியஸ்தர் அப்பாசாரியவர்களைப் பார்க்க, அவர் வந்து அந்தக் கோயிலுக்குள்ளாகவே பெரிய மெத்தை வீட்டை நமக்குத் தயார் செய்து கொடுத்தார். உடனே கடை வீதிக்குப் போய் வேண்டிய சாமான்களை வாங்கி வந்து சமைத்துச் சாப்பிட்டு மாடி ஹாலில் படுத்ததில், அன்று காற்றோடு கூட பெய்த பனியினால் பட்ட பாட்டை சொல்லி முடியாது. என்னிடமிருந்த உயர்ந்த விலையுள்ள கம்பளிகள் அனைத்தையும் போட்டு மூடியும்; நெருப்பைக் கனப்பாக்கி அருகில் வைத்தும் குளிர் தீரவில்லை. இந்த குளிரினால் பல் வலியும், தலைவலியும் கண்டு தூக்கமும் வரவில்லை. ஆகவே இரவெல்லாம் அவஸ்தைப் பட்டோம்.

—பகடாலு நரசிம்மலு நாயுடு (20-1-1887)

தற்போது அநேகம் புத்தகங்கள் பிரசுரமாகின்றன. இவற்றால் வாசகர்களைக் காட்டிலும் ஆசிரியர்களுக்கே அதிக லாபம். இது தவிர, ஒரு புத்தகம் மறைந்தவுடன் மற்றொரு புத்தகம் வெளிவருகிறது. இவ்விதம் வெளியீட்டிற்குக் குறைவே இல்லே. ஒருவருடைய அபிப்பிராயம் புத்தக ரூபத்தில் வந்துவிட்டது என்ற காரணத்தைக் கொண்டு, அவரை விட அதிக மதிப்பை அதற்குக் கொடுக்கக் கூடாது. கண் கவரும் "விதத்தில் பிரசுரிக்கப்பட்டு, கண்ட பத்திரிகைகளில் எல்லாம் பெரும்பாலும் அவற்றின் ஆசிரியராலேயே எழுதப்பட்ட மிகவும் திருப்திகரமான விமரிசனத்தைக் கொண்ட புத்தகங்களைப் படிக்க நீங்கள் ஆவல் கொள்ளக் கூடாது. படிக்கும் வழக்கம் பாராட்டத் தக்கது; ஆனால் அது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நோக்கமற்ற படிப்பு தகாது. சுயமாகச் சிந்திக்கவும் உங்களுக்கு ஆசை இருக்கவேண்டும்.

—சர். வி. பாஷ்யம்ஐயங்கார் (28-3-1893)
(பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில்)

இந்த நெல்லிக்கனியில் பாதியைத் தவிர நான் என்னுடையதென்று சொல்லத்தக்க வேறு பொருளே இல்லை. நான் சார்வ பெளமனாக இருந்தும், மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. இந்த இம்மைச் சாம்ராஜ்யத்தையும், நீர்க்குமிழி போன்ற நிலையில்லாப் பிரபுத்துவத்தையும் வெறுத்துத் தள்ளினேன். நான் மக்களை ஆள்கின்றேன். ஆயினும், என்னைத் துக்கம் ஆள்கின்றது. செடியிலிருக்கும் மலர் காம்புடன் கூடியிருக்கும் வரையில் சோபிக்கும். அது நிலத்தில் விழுந்தபிறகு வாடி உலர்ந்து போகும். அப்படியே நானும் காலம் கழித்து வருகின்றேன்.

மெளரிய சக்கரவர்த்தி அசோகன் (கி. மு)

தற்காலத்தில் தமிழ் அபிவிருத்திக்காக அதிகமாய் உழைத்து வருபவர்கள் யாழ்ப்பாணிகளான கனம்' தாமோதரம் பிள்ளை, கனம். ஜே. வேலுபிள்ளை, பெரிய பட்டம் பெற்ற கனம். அரங்கநாத முதலியாரவர்களே. இவருள் கனம். தாமோதரம் பிள்ளை ஏட்டுப் பிரதிகளாய் 'மங்கி மறைந்து கிடந்த தமிழ் இலக்கண இலக்கியங்களில் அநேகத்தைக் கண்ணும் திருஷ்டி குறையத் தக்கதாக வெகு கஷ்டத்துடன் வாசித்துத் திருத்திப் பேர்த்தெழுதி, மிகுந்த பொருட்செலவும் செய்து, அச்சியற்றித் தமிழ்ப் பாஷையின் சிறப்புப் பிறருக்கு விளங்க மிகக் கருத்தோடு உழைத்து வருகிறார்.

—பேராசிரியர் டேவிட் ஜோசப். பி. ஏ., (1897)

நாம் நம்முடைய செளகரியத்திற்காகவே இந்தியாவை ஆளுகின்றோமே யல்லாது இந்தியர்களின் செளகரியத்திற்காக வல்ல. இராஜ்ய பரிபாலனத்தில் ஒன்றும் செலவழிக்காமல் சகலவற்றையும் சுரண்டுவதனால், நாம் கடவுள் முன்னிலையில் அபராதஞ் செய்தவர்களாகின்றோம். இந்தியாவின் பொருளாதார விஷயமாக ஆராய்ச்சிசெய்தால் இந்தியா இங்கிலாந்துக்குக் கப்பம் கட்டிவருவதே நம் ஆளுகையின் பெரிய குற்றமாகும்.

பம்பாய் கவர்னர்–சர் ஜான் மால்கம்
(1827-ல் பாராளுமன்றத்தில் பேசியது)

பெண் வைத்தியர்களைக் குறித்து ஒரு வார்த்தை கூறுகிறேன். இந்தியாவெங்கும் ஆண் வைத்தியர் இருந்த போதிலும் பெண் வைத்தியர் மிகக் குறைவு. இத்தேசத்துப் பெண்கள் மற்றெந்தத் தேசத்துப் பெண்களைப் பார்க்கிலும் மிக்க நாணமுள்ளவராகையால், தங்கள் வியாதிகளையும் கஷ்டங்களையும் அயலானொருவனிடம் சொல்லுவதைப் பார்க்கிலும் தங்கள் உயிர் போவதே நலமெனக் கருதுவர். மகளிர் பலர் அகால மரணத்திற்கு முக்கிய காரணம் பெண் வைத்தியர் இல்லாத குறைதான். ஆகையால், பெண்களுக்கென்று ஒரு வைத்திய கலாசாலை நிறுவும்படி நான் அரசாங்கத்தாரை மிக்க பரிவுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். இந்து தேசத்துப் பெண்களுக்குப் பெண் வைத்தியர் மிக மிக அவசியம்.

பண்டிதை ராமாபாய் சரஸ்வதி
(1882-ல் பூனா நகரத்தில்)

சாதாரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் பொறுப்பை விடப் பெரிய பொறுப்பை நான் வகிக்கும்படி அல்லா கட்டளையிட்டார். என்னுடைய கணவர் திடீரென்று இறந்து போனதால் 27-வது வயதில் நான் விதவையாகி விட்டேன். அப்பொழுது 5 குழந்தைகள் எனக்கிருந்தன. அவர்களை வளர்த்துக் கல்வி கற்பிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. கடைசிக் குழந்தையாகிய முகம்மது அலிக்கு அப்பொழுது இரண்டு வயதுகூட ஆகவில்லை. அவர்களுடைய சொத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய வேலையும் எனக்கே ஏற்பட்டது. நல்ல காரியத்தைச் செய்வோருக்கு அல்லா உதவி செய்வாரென்று நம்பிக் கஷ்டப்பட்டேன். நான் பட்டபாடு வீணாகவில்லை. என்னுடைய பிள்ளைகள் எல்லோரும் தங்களுடைய காரியத்தைத் தாங்கள் பார்த்துக் கொள்ளும்படி யானவர்களாய் விட்டார்கள். இனி என்னுடைய உதவி அவர்களுக்கு அவசியமில்லையாகையால், எங்கள் மார்க்கத்துக்குரிய காரியங்களில் என் கவனத்தைச் செய்வதில்தான் எனக்கு எப்பொழுதும் ஆசை இருந்தது.

—அபாதிபேனோ அப்துல் அலி பீகம் (4 - 8 - 1917)
(முகம்மதலி, ஷெளகத் அலியின் தாய்)


எட்டய புரத்திலிருந்து சில மைல் தொலைவிலுள்ள கோவிற்பட்டிப் புகைவண்டி நிலையத்திற்கு நானும், விஸ்வநாத பாரதி என்ற இளைஞரும் பாரதியாருடன் நடந்து சென்றோம். கோவிற்பட்டி நிலையத்திற்கு அருகே மாலைப் பொழுதில் கடைத்தெருவில் பூமாலைகள் விற்றார்கள். பாரதியார் மூன்று பூமாலைகளை வாங்கி தமது கழுத்திலே தாமே ஒன்றைப் போட்டுக்கொண்டு, எனது கழுத்திலும், இப்பொழுது காலஞ்சென்று விட்ட விஸ்வநாத பாரதி கழுத்திலும் ஒரு மாலையைப் போட்டார். அப்பொழுது எங்கள் உள்ளத்தில் தோன்றிய உவகையையும் பெருமையையும் சொல்லவேண்டுமா?

—பரலி சு. நெல்லையப்பர் (1919)

அக்காலத்து இஸ்லாமியப் பெண்கள், கல்வியிலும் மற்றும் பல விஷயங்களிலும், உலகத்திலுள்ள மற்றெல்லாப் பெண்களைவிடப் பன்மடங்கு மேலானவர்களாகத்தானிருந்தார்கள். அவர்களுக்கு அக்காலத்திலிருந்த உரிமைகள் மற்றெவருக்கும் இருந்ததில்லை. பெண்களுக்குக் கருத்துச் சுதந்தரமும், செயல்களில் சுதந்தரமும் வழங்கியது இஸ்லாமொன்றுதான்.பொதுமக்களின் பிரதிநிதியைத்தேர்ந்தெடுப்பதான "பயத்' முறையிலும் இன்றைக்கு 1346-வருடங்களுக்கு முன்பே முஸ்லீம் பெண்களுக்கும் ஒட்டுரிமை இருந்தது. அத்தகைய உரிமைக்குத்தான் ஐரோப்பிய பெண்கள் இன்றைக்கும் கடும்போர் புரிந்து வருகின்றனர். நான் :எழுதியிருக்கும் இஸ்லாமும் பெண்களும் என்னும் புத்தகம் மதசம்பந்தமாகப் பெண்களின் உண்மையான நிலைமையை நன்கு விளக்கித் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயத்தையும் ஒழிக்க உதவியாகக் கூடுமென்று நம்புகிறேன். நான் அப்புத்தகத்தைப் பாரசீகத்தில் எழுதியிருப்பதால் அதனைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

—ஆப்கன் அரசி செளரியா (2-6–1928)


என்னுடைய வாழ்நாளில் சுமார் இரண்டு வருட காலந்தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருடமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான் பாடம் படித்த காலத்தைவிட உபாத்தியாயரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமா யிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள் இவன் படிப்புக்கு லாயக்கில்லை என்பதாகக் கருதி, தாங்கள் செய்துவந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 வது வயதிலேயே ஈடுபடுத்திவிட்டார்கள். இந்த 2 வருடக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத்தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம்.

—பெரியார் (24 - 4 - 1927)
(போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்.)

நான் ஆதியில் ஏழ்மையான குடியிற் பிறந்து, மிக்க கஷ்டப்பட்டுச் சொற்ப கல்விகற்றுக் கொண்டேன். பிறகு மிஷன் ஸ்கூல் உபாத்தியாராகவிருந்தேன். பின்னர் இரும்பு வியாபாரத்தில் பிரவேசித்தேன். இதில் பல கைத்தொழில்களையும் கற்றேன். எனது சொற்ப சுயார்ச்சிதத்தைக் கொண்டே ஒரு தண்டவாளப் பட்டரையை ஏற்படுத்தினேன். இதனால் நானும் எனது குடும்பமும் பந்து மித்திரர்கள் சுமார் 150 குடும்பங்களும் ஜீவிக்கவில்லையா? ஆகையால் நண்பர்களே! நமது மக்கள் முதலில் கல்வி கற்கவேண்டும். பிறகு வெவ்வேறு தொழில்களில் பிரவேசிக்க வேண்டு மென்பது எனது கருத்து,

தொழிலதிபர் கா. கோ பலபத்திர நாயகர்
(1895-ல் நடைபெற்ற எட்டியப்ப நாயகர் வன்னிய சங்கக் கல்விச்சாலை ஆண்டு விழாவில் பேசியது)
ஆறாண்டுகளுக்குப் பிறகு நான் என் தாய்நாட்டிற்கு வந்து வெளி உலகத்தில் அறிமுகம் கொள்ளலானேன். உலகத்தையே நான் மறந்துவிடவும், உலகமே என்ன மறந்து விடும்படியுமான எண்ணத்தைக் கொண்டு அதிகாரிகள் என்னை வெளி உலகத்தொடர்பின்றி தனியே வைத்திருந்தார்கள். ஆனால் நான் மக்களை மறக்கவில்லை. மக்களும் என்னை மறக்கவில்லை. ஆறு வருடகாலம் நான் மக்களைப் பிரிந்திருந்தாலும் அவர்களிடத்தே உண்டான அன்பு எனக்கு எள்ளளவும் மாறாது. ஆறு வருடகாலத்திற்கு முன் அன்னோன்னியத்துடனும் உணர்ச்சியுடனும் எங்ஙனம் எந்த அந்தஸ்துடன் நான் உழைத்து வந்தேனோ அவ்வண்ணமே மீண்டும் உழைக்க நான் சித்தமாயிருக்கிறேன். ஆனால், காலத்தையறிந்து, என் வழியைச்சற்று மாற்றிக் கொள்ள வேண்டியதாக மட்டும் ஏற்படும்.
பாலகங்காதர திலகர் (21 - 6 – 1914)


இம்மாதிரி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைப்பது உங்களுக்கும், எனக்கும் அருமைதான். நாம் இதுபோன்ற கூட்டங்களைக் கூட்டுவதன் நோக்கமென்னவெனின், ஒவ்வொரு நிமிடமும் முன்னேறுவதற்காகவே துருக்கியில் கமால் பாட்சாவினால் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம் அளவிடற்கரியதாகும். அங்கு மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அங்கோரா போன்ற இடங்களிலுள்ள கோர்ட்டுகளில் ஏராளமான உத்தியோகங்களை வகித்து வருகிறார்கள். துருக்கிஸ்தானம் பெரியஸ்தானம் என்றால் காரணமென்ன? அங்கு 800 பெண்கள் நீதிபதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். முக்காடுபோடும் சமூகம் இவ்வளவு சீர்திருத்தம் அடைந்த பிறகுங்கூட நம்நாடு வாளாவிருப்பது மிகுந்த வெட்ககரமானதாகும்.

பட்டுக்கோட்டை K. V. அழகிரிசாமி
(6-7-1931–ல் விருது நகரில் க்ஷத்திரிய பெண் பாடசாலை ஆண்டுவிழாக் கூட்டத்தில்)

பெண் பிறவி 'பாவமான பிறவி என்று கூறும் இந்நாட்டில் மேடை மீதிருந்து பேசும் பாக்கியம் கிடைத்ததற்கு முதலில் நன்றி செலுத்த வேண்டுவது அவசியமாகும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷனுக்குக் கடிதம் எழுதி விடுவாள் என்று சொல்லப்படுகிறது. கள்ளப் புருஷனின் கபடத்தனத்தைக் கண்டிக்க வேண்டியது ஆண்களாகிய உங்களது வேலையேயாகும். பெண்கள் ஒரு சொத்து என்றும், அவர்கள் இரண்டொரு உதவிக்குத்தான் ஆகக்கூடியவர்கள் என்று ஆண்கள் நினைத்தால், அவர்களின் கெட்ட எண்ணத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

— திருமதி லீலாவதி ராமசுப்பிரமணியம்
(6-7-1931-ல் விருதுநகர் க்ஷத்திரிய பெண்பாடசாலை ஆண்டு விழாவில்)

பாம்பன் சுவாமிகளை நான் என் 18-வயது முதல் அறிவேன். என்னைச் சுவாமிகளிடம் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், ஆசிரியர் நா. கதிரைவேற்பிள்ளையும், புதுப்பாக்கம் சம்பந்த முதலியாருமாவார்கள். சுவாமிகளிடம் நான் எனக்கிருந்த பல சாத்திர ஐயங்களைக் களைந்து கொண்டேன். நான் அரசியலில் தலைப்படுமுன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஓய்வுப் பொழுதைச் சுவாமிகளிடம் அறிவுரையாடுவதிலேயும், எனக்குள்ள சாத்திர ஐயங்களைக் களைந்து கொள்வதிலேயுமே பெரிதும் கழித்து வந்தேன்.

—திரு. வி. க. (30 - 5 - 1929)

நான் எழுதிய எழுத்தில் பாதியைக்கூட உங்களால் அழிக்க முடியாது. ஏன், உங்கள் கண்ணீரெல்லாம் கொட்டிக் கழுவினாலும் ஒரு வார்த்தையைக்கூட அழிக்க முடியாது.

—உமர்கய்யாம் (பாரசீகக் கவிஞர்)


எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களே யாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது.

— சாக்ரட்டீஸ்

இறைச்சி உண்பவர்கள் ஒருவரையொருவர் கூடக் கொன்று தின்று விடுவார்கள். அதனால் ஏற்படும் துன்பம் இல்லாதிருக்குமானால், என் உடலில் கூட சிறு பகுதிகளே இறைச்சி உண்பவர்களுக்காக வெட்டித் தருவேன், அப்பகுதிகள் உடனே வளர்ந்து விடக்கூடுமானல், எல்லா மக்களுக்கும் போதுமான உணவு கிடைக்கக் கூடுமானால், மக்கள் இறைச்சி உண்பதையே தடைசெய்து விடுவேன்.

—அக்பர்

தாலி கட்டுவது ஒழிந்தாலல்லாது நமது பெண்கள் சமூகம் சுதந்திரம் பெற முடியவே முடியாது. பெண்கள் மனிதத் தன்மை அற்றதற்கும், அவர்கள் சுயமரியாதை அற்ற தன்மைக்கும் இந்தத் தாலியே அறிகுறியாகும். புருஷர்களின் மிருக சுபாவத்திற்கும் இந்தத் தாலி கட்டுவதே அறிகுறியாகும். ஆனால், தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பெண்களுக்கு இவ்வார்த்தைப் பிடிக்காதுதான்.

—பெரியார் (1930)


மனச்சாட்சியும் நம்பிக்கையும் தூண்டும் வழியிலேயே செல்வதற்காக அந்தணனாய்ப் பிறந்த நான், பொதுமக்கள் மாத்திரமேயல்லாது, தற்கால ஒழுங்கால் லாபம் பெறும் என் உறவினர்கள் சிலருங்கூட என்னிடம் வெறுப்புக் கொண்டு என்னைப்பற்றி முறையிடவும், என்னை வசைமொழி கூறவும், பாத்திரமானேன். ஆனால் இத்துன்பங்கள் எவ்வளவு பெருகினாலும், நான் பொறுமையுடன் சகிக்கக் கூடும். ஏனெனில், எனது தாழ்மையான முயற்சிகள் இப்போதில்லா விட்டாலும், எக்காலத்திலாவது நியாயமானவை எனக் கருதப்பட்டுப் பலராலும் நன்றியறிதலுடன் ஒப்புக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாக உண்டு.

—ராஜாராம் மோகன்ராய்

தெரு ஒரத்தில் மசால்வடை போட்டு விற்பார்களே அந்த வாசனை அடிக்கிற போதெல்லாம் அதை வாங்கித் தின்ன வேண்டுமென்ற ஆசை வரும். யாராவது போய் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தால் சாப்பிடுவோம். ஆனால் வெட்கம். நாலு பேர்கள் பார்ப்பார்களே என்பதால், அங்கே நாமே போக மாட்டோம். இப்படித் தான் இன்னமும் சில பொய்யான பாவனையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

—திருமதி செளந்திரா கைலாசம் (27-1-1972)

சுற்றிலும் சட்டம் கட்டிய மேஜையின் வழவழப்பான பலகை மீது, பந்துகளை ஒரு கம்பினல் இடித்து, ஒன்றோடொன்று மோதவிட்டுக் குழிகளில் விழச்செய்யும் பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கும், கோலியாட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை. பில்லியார்ட்ஸ் ஆட்டத்திற்கான மேஜை, முதலிய உபகாரணங்களுக்கு ரூ 50 ஆயிரம் போல செலவு செய்வதைவிட, நாம் ஏன் கோலி ஆடக்கூடாது? விலை மலிவாகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகவும் உள்ள எதையும் மட்டமாக நினைக்கும் மனப்பான்மை நமக்கு இருக்கிறது.

—ராஜாஜி (23-12-1959)


பள்ளியில் படித்துக்கொண்டிருத்த காலத்தில் ஒரு நாள் என் தாயாருடன் வந்து கொண்டிருந்த போது நாலைந்து பையன்களுடன் யானைக்குட்டி மாதிரி ஒரு பையன் வருவதைப் பார்த்து நான் ”'களுக்”கென்று சிரித்தேன். அதைப்பார்த்து என் தாயார் அந்தப் பையனப் பார்த்த நீ அப்படி சிரிக்கிறே, அவன் யார் தெரியுமா? பிருத்விராஜின் மகன்' என்றார். அதைக் கேட்ட நான் அவருக்குப் போய் இப்படிப்பட்ட பிள்ளை பிறந்ததே என்றேன். அந்த நாளில் அப்படி இருந்த ராஜ்கபூர்தான் இன்று என்னுடன் நடிக்கும் கதாநாயகன்.

— நர்க்கீஸ் (இந்தி நடிகை)

இப்பொழுது மக்கள், எங்கும் சிலைகளையும் படங்களையும் வைக்கிறார்கள், அந்த மாதிரி ஆசை தோன்றுமானல் இந்திய விவசாயிகளின் சிலையை வையுங்கள்.

— நேரு (17-11-1960)

நான் ஆகாரத்தில் ரொம்ப உஷாராக இருந்து விடுவேன். காலையில் சூடாக ஒரு கப் காபி சாப்பிடுவேன். அப்புறம் கோட்டைக்குப் போவதாயிருந்தால் பதினொரு மணிக்குள் சாப்பாடு. இரண்டு மணிக்கு ஒரு கப் காபி. இரவு இட்டிலியும் சட்னியும். இவ்வளவுதான் என் ஆகாரம்.

— காமராஜ் (15-7-1965)

எனக்குப் பிராமணர்களும் ஒன்றுதான், வேளாளரும் ஒன்றுதான்; இருவரும் தள்ளும் மற்ற ஜாதியாரும் ஒன்று தான். ‘இவன் பேச்சோடு நில்லாதவன், செயலிலும் ஜாதி வித்தியாசத்தை மதியாதவன், அதிலும் பகிரங்க மூர்க்கன். நல்ல ஆசாரிய வம்சத்தில் பிறந்து குலத்தைக் கெடுத்தவன்” என்று என்னைக் குலத்தார் நீக்கி வெகு நாளாயிற்று.

— ராஜாஜி (1926)


என்னிடம் இப்போது ஏறத்தாழ 60,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது போன்ற ஒரு லைப்ரரி, வேறு யாரிடமும் (நட்சத்திரங்களுக்குள்) நிச்சயமாக இல்லை. எனக்கு அடுத்தபடியாக நடிகர் நாகேஸ்வரராவிடம் பெரிய புத்தகசாலை ஒன்று இருக்கிறது. எனது லைப்ரரியிலிருந்து அநேகர் படிப்பதற்குப் புத்தகங்கள் வாங்கிப் போவதுண்டு. ஆனால் யாருக்குப் புத்தகம் இரவல் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாதென்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

—நடிகர் நாகேஷ் (9-5-1973)

'முதலில் அவர் செய்யட்டும், பிற்பாடு நாம் செய்ய லாம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொருவரும் உங்களால் ஆனதை உடனே செய்ய வேண்டும். இன்றைய தினத்திலிருந்து நீங்கள் அனாவசியமாகத் தூங்காமல் ஒவ்வொரு நாளும் 'நான் இந்த தேச விடுதலைக்காக என்ன செய்தேன்' என்று உங்கள் மனதைத் தொட்டுப் பாருங்கள்.

—ராஜாஜி (1930

உங்கள் மீது சில ராக்கெட்டுகளைப் பாய்ச்சப்போகிறேன். மக்களுக்கு சுகாதாரத்தைப் போதிப்பது மாணவர்களாகிய உங்களது கடமை. நீங்கள் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். இப்பொழுது மேகநோய் (வி. டி.) விகிதம் அதிகரித்திருக்கிறது. உங்களுக்கு அந்த நோய் இருக்குமானால் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். உங்களை முதலில் சரிப்படுத்தக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நமது மொத்த ஜனத்தொகைக்கும் அந்த நோய் பரவிவிடும். மாணவ, மாணவிகளான உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன். உங்களுக்கு அந்த நோய் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

— இடிஅமீன் (உகாண்டா அதிபர்)
"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_5-20&oldid=1485625" இலிருந்து மீள்விக்கப்பட்டது