அட்லாண்டிக் பெருங்கடல்/அட்லாண்டிக் சாசனம்

விக்கிமூலம் இலிருந்து

5. அட்லாண்டிக் சாசனம்


அட்லாண்டிக் சாசனம் உருவானது இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், இது அமைதி நாடி விடப்பட்ட கூட்டு அறிக்கையாகும்; எட்டுக் குறிப்புக்கள் அடங்கியது. 1941-இல் பிரிட்டன் தலைமை அமைச்சர் சர்ச்சிலும், அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்டும் சேர்ந்து இந்த அறிக்கையை விட்டனர். நான்கு நாள் மாநாட்டிற்குப் பின் இந்த அறிக்கை வெளியாயிற்று.

உலகின் எதிர்காலம் கருதித் தயாரிக்கப்பட்ட அறிக்கை இது. அவ்வகையில், இரு நாடுகளின் கொள்கைகளில் உள்ள பொது நெறி முறைகள் யாவை என்பதை அது விளக்குகிறது. அதன் எட்டுக் குறிப்புக்கள் அல்லது நெறி முறைகள் பின்வருமாறு :

நாட்டுச் சார்பாகவோ பிற நிலையிலோ இரு நாடுகளும் தங்கள் நலம் பேணுவதில்லை.

நாட்டு ஆட்சிக்குரிய மாற்றங்களை மக்கள் விருப்பத்துடன் செய்தல்.

மக்களின் உரிமைகளை மதிப்பது; அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பது; உரிமைகள் பறிக்கப்பட்ட நாடுகளுக்குத் தன்னாட்சியும் முழு ஆட்சி உரிமையும் அளித்தல் அல்லது பெறுமாறு செய்தல். எல்லா நாடுகளும், ஒத்த நிலையில், தங்கள் பொருள் வளத்திற்குரிய கச்சாப் பொருள்களைப் பெறுவதற்கும்; வாணிபத்தை நடத்துவதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள முயற்சி செய்தல்.

பொருளாதாரத் துறையில் எல்லா நாடுகளுக்கிடையில் நிறைந்த தொடர்பு இருத்தல். இதனால் உழைப்பு நிலை உயரவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், சமூகப் பாதுகாப்பு உண்டாகவும் வழியுண்டு.

நாஜி கொடுமை அழிந்தபின் எல்லா நாடுகளில் லும் மக்கள் பாதுகாப்புடன் வாழ்தல்.

தங்கு தடையின்றி எல்லோரும் திரைகடல் ஓடுவது.

விரிந்த, நிலையான சமூகப் பாதுகாப்பை நிறுவும் முயற்சியைத் தள்ளி வைத்தல்; அமைதி கருதிப் போர்க் கருவிகளைக் குறைத்தல் அல்லது படைக் குறைப்பு செய்தல்.

போரில் ஈடுபட்ட பிரிட்டனும், ஈடுபடாத அமெரிக்காவும் இந்த அறிக்கையை விட்டது சிறப்பாகும். அலை ஒத்த உள்ளத்துடன் உலக அமைதியை நாடியது மேலும் சிறப்பாகும்.

அட்லாண்டிக் நகரம்

இது அமெரிக்காவில் நியூஜெர்சே என்னுமிடத்தில் உள்ள நகரம்; கடலுக்கு அருகிலுள்ள சிறந்த தங்குமிடம். இது நீண்ட குறுகிய மணல் தீவில் உள் ளது. இதன் கடற்கரை அழகானது. இதில் ஆறு நீண்ட கடல் அலைதாங்கி வளைவுகள் உள்ளன. இதில் உலவும் இடம் எட்டு மைல் நீளமுள்ளது. இதன் மக்கள் தொகை 64,000.

அட்லாண்டிக் படகுப் பணி

இப்பணி அரசர் விமானப்படை போக்குவரவு நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அமெரிக்காவிலும், கனடாவிலும் கட்டப்பட்ட விமானங்களைப் பிரிட்டனுக்குக் கொண்டுவரத் தொடங்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் இப்பணி மிகவும் உதவியது. அமைதிக் காலத்தில் பொருள்களையும், மருந்துகளையும் ஐரோப்பாவின் விடுதலை பெற்ற நாடுகளுக்குப் படகுகள் சுமந்து சென்றன. படகுகளில் போர் வீரர்களும் சென்றனர்.

இப்படகுப் பணி எல்லாப் பருவ நிலைகளிலும் நடைபெற்றது. இதனால், விரைவாகவும் நலமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக் கப்பல்கள் அட்லாண்டிக்கைக் கடந்து செல்வதற்குரிய வாய்ப்புக்கள் உருவாயின. இரண்டாம் உலகப் போருக்குப்பின் இப்பணி மையக் கிழக்கு, இந்தியா, பசிபிக் முதலிய பகுதிகளுக்கும் பரவியது.

நேடோ

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ஆங்கிலச் சுருக்கமே நேடோ என்பது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பாவில் சோவியத்து உருசியா மட்டுமே வலுவுள்ள அரசாக இருந்தது. போரினால் பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் நலிவுற்றன. ஜெர்மனியும் இத்தாலியும் படை இழந்தன.

கிழக்கு ஐரோப்பாவின் சிறிய நாடுகள் உருசியாவின் கட்டுப்பாட்டில் அடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐரோப்பா முழுவதையும் பொதுவுடைமைக்காரர்கள் பிடித்துக் கொள்ளலாம் என்னும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், உருசியத் தாக்குதலைத் தவிர்க்க, குடியரசு நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு தோன்றியது. இதற்குச் சோவியத்து வல்லரசுக்கு இணையான அமெரிக்கா, தலைமை ஏற்க வேண்டிய நிலை உண்டாயிற்று.

1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-இல் வாஷிங்டனில் வட அட்லாண்டிக் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அவ்வாறு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளாவன: அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, கனடா, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, போர்ச்சுகல். ஒப்பந்தம் வட அட்லாண்டிக் அமைப்பைத் தோற்றுவித்தது.

இந்த ஒப்பந்தப்படி தாக்குதல் ஏற்பட்டால் ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு உதவும். ஒவ்வொரு காடும் தன்னுடைய படைகளைத் தானே நிறுவிக் கொள்ளும். அமெரிக்கா போர்ப்படைச் செலவிற்  கென நிறைய டாலர்களை வழங்கிற்று. பொருளாதார உதவி என்றும்; பாதுகாப்பு உதவி என்றும் நிறையத் தொகை அளித்தது அமெரிக்கா.

நேடோவை உறுப்பு நாடுகளின் பேராளர்கள் அடங்கிய மன்றம் இயக்கியது. வட அட்லாண்டிக் போர்ப் படையும் ஜெனரல் ஐசன்கோவர் தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பு நாடுகள் பங்கு பெற்றன. பின்பு மற்ற நாடுகளும் இந்த அமைப்பில் சேரலாயின.

1952-இல் கிரீசும் துருக்கியும் கேடோவில் சேர்ந்தன. 1955 இல் மேற்கு ஜெர்மனி சேர்ந்தது. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பைப் பொதுவாக அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனலாம்.

.