உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதி பிறந்தார்/4

விக்கிமூலம் இலிருந்து




சூரத் எனும் ஊரில் வீரர் பலர் கூடிச்
சூழ்ந்தஓர் காங்கிரசில் - அவன்
வீரத் திலகரை நேரினில் சந்தித்து
வீழ்ந்தவர் தாள்பணிந்தான்

தீப்பொறி கக்கும் கருத்துக்களால் நாட்டுச்
சிங்க இளைஞர்களைத் - தட்டிக்
கூப்பிட் டெழுப்பினான்; வீரர்கள் யாவரும்
கொந்தளிப் போடெழுந்தார்

பாட்டுப் புலவன் நடத்திய இந்தியாப்
பத்திரிகை மேலே - ஆள்வோர்
நாட்டம் விழுந்தது அந்நல்லிதழ் தன்னை
நசுக்க முடிவுசெய்தார்

நாட்டினிலே உயர் நாவல னாகிய
நல்லவன் பாரதியைச் - சிறைக்
கூட்டுக் குள்ளே தள்ளிப் பூட்டிட வெள்ளையர்
கூடிச் சதிபுரிந்தார்



ஆங்கிலர் கையில்சிக்கிச் - சிறையில்
அடைந்து கிடப்பதினும்
மாங்குயில் கூவுகின்ற - புதுவை
மாநகர் சென்றடைந்து

குமுறும் எரிமலையாய்ப் - பொங்கிக்
கொந்தளிக்கும் கடலாய்
நமது பாரதியும் - ஏடொன்று
நடத்தப் புறப்பட்டான்

வங்கப் பெருநாட்டில் - இருந்து
வந்த அரவிந்தர்
அங்கு வாழ்ந்திருந்தார் - வ.வே.சு
அய்யரும் அங்கிருந்தார்

வரிப்புலி பாரதியும் - இவ
வறிஞருடன் சேர்ந்தான்
சிரிப்பில் பேச்சினிலே தன்
சிந்தை மறந்திருந்தான்





வீரத் தமிழ்மறவன் - சுப்புரத்ன
வேந்தன் தன்னோடு
பாரதி பழகிவந்தான் - அவனுக்குப்
பாடல் பயிற்றிவந்தான்

துப்பாக்கியின் வயிற்றில் - பீரங்கி
தோன்றும் கதைபோலச்
சிப்பாய் பாரதிக்கு - நல்ல தோர்
சீடன் கிடைத்துவிட்டான்

இந்தியா பத்திரிகை - மீண்டும்
எழுந்து நடமாடி
வந்தே மாதரமாம் - கீதத்தை
வாரி இறைத்ததடா

வங்க அரவிந்தர் - நடத்தி
வந்த பத்திரிகை
தங்கக்கைப் பாரதியால் - மீண்டும்
தளிர்த்து வந்ததடா


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதி_பிறந்தார்/4&oldid=1016567" இலிருந்து மீள்விக்கப்பட்டது