உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/15

விக்கிமூலம் இலிருந்து

15

கனையும் மருமகளையும் குடித்தனம் வைக்கையில் சம்பந்தி அம்மாளும் பெண்ணைப் பெற்ற அப்பனும் அவளையும் அழைத்துச் சென்றுதான் எழுமூரில் புதிய வீட்டில் குடித்தனம் வைத்தார்கள்.

“எம்பொண்ணு ரஞ்சிதத்துக்கு டவுன் பழக்கம் எதும் தெரியாது. விவசாயக் குடும்பம்மா. உங்க மகன் பெரிய மனிசாளோடு பழகுறவரு... அதுலய இவள உங்க மகளப் போல பாத்து, ஏத்தாப்புல சொல்லிக் குடுங்கம்மா...!” என்று சொல்லி விட்டு மறுநாளிரவே அவர்கள் ஊருக்கு வண்டியேறிவிட்டார்கள். மறுவீடு அழைத்துச் செல்லக்கூட, மருமகப்பிள்ளைக்கு, புதிய அரசியல், வெற்றிப் படப் புகழ் போதையில் மேலும் அதே துறையில் பல வேலைகள். புதிய மொசைக் போட்ட தளம். குளியலறை, கழுவும் பீங்கான், பாத்திரங்கள் கழுவும்இடம், காஸ் அடுப்பு, குக்கர், எல்லாம் பெண்ணுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தார்கள். அவளுக்கே இந்தக் குக்கரை உபயோகிக்கத் தெரியாது. அதிகம் பேர் சாப்பிடுவதற்கு, பானைதான் வைத்து வடிப்பார்கள், அவள் புழங்கிய சமையற் கூடத்தில். அவள் வீட்டிலும் சிறுசிறு பிளாச்சு விறகாகக் கட்டை தொட்டியில் இருந்து வாங்கி வருவாள். சூளையில் வைத்த மண் அடுப்பு, ஒரே கட்டைத் தீயை அடக்கமாகப் பாத்திரத்தில் ஏற்றி சமையலை மிக எளிதாக்கும். சமையற் கூடத்தில், பெரிய இட்டிலிக் கொப்பரை உண்டு. ஆட்டாங்கல்லில்தான் மாவாட்டுவார்கள். அம்மி, கல்திரிகை எல்லாம் புழக்கத்தில் இருந்தன.

“அத்தே, எனக்கு இதவச்சி சமைக்கத் தெரியாது. என்ன செய்ய?” என்றாள் ரஞ்சிதம். “நா எதக்கண்டேன்? இத எப்பிடிக் கொளுத்துறதுன்னு கத்துக்கிட்டதோடு, அதையும் அந்த சமையக்காரப் பயகிட்டக் கேட்டிருக்கலாம் இல்ல?”

“தெரியல அத்தே...”

“போவுது...” என்று ஒரு புதிய அடுக்கைத் தேர்ந்து அதில் ஒரு பாத்திரத்தில் அரிசியும், மேலே பருப்பும் வைத்து, நீரூற்றி மூடி அடுப்பில் ஏற்றச் சொன்னாள். அந்தக் காலத்தில் புனாவில் இருந்து அப்படி ஓர் அடுக்குப் பாத்திரம் வாங்கி வந்திருந்தார் அம்மா. காலையில் நல்லபடியாக இட்டிலி காபி அவளே தயாரித்துப் புதிய மருமகளைக் கொடுக்கச் செய்தாள். மேசையில்தான் பரிமாறல். அப்போ தெல்லாம் சாப்பாட்டு மேசை, அவள் பழகியிருக்கவில்லை. பித்தளை செம்புப் பாத்திரங்களுக்குப் பதிலாக, ‘ஸில்வர்’ என்று சொல்லும் பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தன. அவள் மகனின் முன் விழிக்கவுமில்லை. பேசவுமில்லை. காலையில் கார் வந்தது, அவன் போய் ஏறிக் கொண்டான்.

வீடு பெருக்கித் துடைத்து, பாத்திரம் கழுவி, நீர் பிடித்து வைத்து எல்லா வேலையையும் அவளே செய்தாள்.

“அத்தே, நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க? வேலைக்கு ஒரு ஆள் போட்டுக்கலாமில்ல?” என்றாள் ரஞ்சிதம்.

“வாணாம்மா, நா இருக்கிற வரையிலும் ஆளெல்லாம் வானாம். இதெல்லாம் எனக்குப் பழக்கம்தானே?” என்று மறுத்துவிட்டாள்.

காலையில சென்றவன்தான். மதியம் சாம்பார், பொரியல், எல்லாம் வைத்துச் சமைத்தாள். புதுமணம் என்ற கருக்கு மாறாத வீடு, வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், இனிப்பு வகைகள், எல்லாமே இருந்தன.

“முதல்ல சாப்பிட வரச்சே, ஒரு லட்டுவும் பழமும் வச்சுப் பரிமாறும்மா? உங்க வாழ்க்கை நல்லா, புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கணும்மா!” என்றாள். முடிசீவிப் பூச்சூடி அலங்கரித்தாள். சுவாமி அறை என்று ஒரு தனி அறை இருந்தது. லட்சுமி, சரஸ்வதி, பிள்ளையார், முருகன் என்று வெள்ளிப் படங்கள் சுவரில் மாட்டியிருந்தார்கள். இரண்டு அழகிய குத்து விளக்குகள் சுவாமி அறையில் எரிய விட்டிருந்தார்கள். பகல் ஒரு மணிக்கு அவன் சாப்பிட வருவான் என்று எதிர்பார்த்திருந்தாள். ‘காம்பவுண்டு’ சுவர் தலைமறைவாக உயரம். பெரிய இரட்டைக் கதவு வாசல். கார் வந்து போக வசதியாக இருந்தது. வீடுகட்டி வெள்ளையடித்து ‘பெயின்ட்’ அடித்த மிச்ச சொச்சங்கள், சுற்றிலும் நிறைந்திருந்தன. வசதியாக நல்ல பூச்செடிகளும் காய்கறிகளும் பயிரிடலாம். இந்த இடம் புதிய பகுதி. சற்று எட்ட நடந்தால் பூந்தமல்லிச் சாலை. அக்கம் பக்கம் என்று வீடுகளின் நெருக்கம் இல்லை.

“மணி ஒன்னே காலாயிடிச்சி. கண்ணு, நீ சாப்பிட்டுக்க, முகம் வாடிப் போச்சு...” என்றாள் மருமகளிடம்.

“வாணாம் அத்தை, அவங்க வரட்டும்...” என்றாள். மாறாக, “நீங்க சாப்பிடுங்க அத்தை, காலம நீங்க டிபனும் சாப்புடல. வெறும் கேழ்வரகு கஞ்சிதா குடிச்சீங்க” என்றாள் அவள். இவளுக்கு அடிவயிற்றில் சில்லிடத் தொடங்கியது.

திருமணம் நடந்து, மஞ்சளின் பசுமை மாறவில்லை. மணி மூன்றாயிற்று. “ஆம்புளங்க, போனா ஆயிரம் வேலை இருக்கும்மா; நீ உக்காரு, நான் சோறு வைக்கிறேன்” என்று லட்டுவும் பழமும் வைத்துச் சோறு வைத்தாள். சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்கையில் அழுகை வந்து விட்டது. “இப்படி ஒரு பாவமா?...” செல்லமாக வளர்த்த பெற்றோரை விட்டு வந்து முன்பின் தெரியாதவனிடம் உறவு கொள்வது, பெரிய புரட்சி. அவளுக்கு அப்பனின் ஆதரவைத் தவிர எதுவுமே புரிந்திராத வயசு, பயமும் தெரியாது. வந்து சேர்ந்த இடமோ அன்பைப் பொழிந்தவர்கள். புருசனும் அவள் மீது மதிப்பையும் உயிரையும் வைத்திருந்தான். ஆனால், இவன்...

இரவுச் சாப்பாட்டுக்கும் வரவில்லை.

மாடிப்படுக்கையறைக்கே போகாமல் கீழே போட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தே சோர்ந்திருந்தது. “எதானும் சாப்பிடம்மா? பட்டினியே படுத்துக்கக் கூடாது...”

இவளுக்கே பேசப்பிடிக்கவில்லை. பகலில் சமைத்தது ஆறியிருந்தது. சூடு செய்து, கொஞ்சம் சாப்பிடச் செய்தாள். இவளும் ரசத்தை ஊற்றிக் கரைத்துக் குடித்துவிட்டு, கீழே ஒரு பலகையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். முதன் முதலாக, சம்பு அம்மா அரவணைப்பில் அந்தக் கூடத்தில் பழைய புடவை மெத்தையில் முடங்கி உறங்கிய நினைவு வந்தது. குழந்தைப் பருவம் எவ்வளவு தூய்மையானது? இவளும் குழந்தைதான். “எங்க புள்ளக்கி ஒண்ணும் தெரியாதுங்க, நல்லது பொல்லாதது...” என்று அவள் தாய் கூறியது செவிகளில் ஒலிக்கிறது. இவள் பிள்ளை எப்பேர்ப்பட்டவன்? அவன் இந்தியை எதிர்க்கட்டும், அதிரடி அரசியல் பேசட்டும், சினிமா வசனம் எழுதட்டும், வசனம் பேசி நடிக்கட்டும்; குடிக்கட்டும். இவனையே நம்பி கைபிடித்திருக்கும் இந்தக் குழந்தைப் பெண்ணைப் பூப்போல் வைத்துக் கொள்ள வேண்டுமே?

பஞ்சமியைப் புருசன் எப்படி அன்போடு வைத்திருந்தான்? அவளுக்குக் கொடுப்பினை இல்லை. ஆனால், சம்பு அம்மா, புருசன், தாமு?

இப்போது நினைத்துப் பார்க்கிறாள். அவர்களிடையே எந்த உறவும் இருந்திருக்கவில்லை என்றே ஊகிக்கிறாள்.

விடியற்காலையில் இவள் கதவு திறந்து குழாய் நீரைப் பிடித்து முன் வாசல் தெளிக்க வருகையில் கார் வந்து நின்றது.

இவள் திகைத்துப்போய் வாளியோடு ஒதுங்கினாள். மேல்வேட்டி விசிற இவன் கார்க் கதவை ஓங்கி அடித்து விட்டு உள்ளே சென்றான். மாடிப்படியில் அவன் ஏறிச் சென்றது தெரிந்ததும் அவள் வாசல் பெருக்கி, கோலமிட்டாள். திரும்பி வந்து சோபாவிலேயே படுத்துத் துங்கிவிட்ட மருமகளை மெள்ள எழுப்பினாள்.

“அம்மா, ரஞ்சிதம், உம்புருசன் வந்திட்டாப்புல. போயி காப்பி கீப்பி வச்சிட்டு வரவான்னு கேளு...” என்றாள்.

அவள் திடுக்கிட்டாற்போல் எழுந்தாள். “ஒண்ணுமில்லம்மா, பயந்திட்டியா? போயி முகம் கழுவிக் கிட்டு, காப்பி வச்சித் தாரேன், எடுத்திட்டுப் போ! மணி ஆறாயிடிச்சி...”

முதல் நாளிரவு காய்ச்சிய பால் இருந்தது. புதிய பால் இன்னமும் வந்திருக்கவில்லை. பொடி போட்டு, பில்டரில் இறக்கி, அந்தப் பாலைச் சுடவைத்துக் காபி போட்டாள். புதிய டவரா தம்ளரில் ஊற்றிக் கொடுத்து அனுப்பினாள். பயந்த புறாவைப் போல் போயிற்று.

காபியைக் கொடுத்து விட்டு அவள் வரவேயில்லை. எட்டு, ஒன்பது, பத்துமணியாகிவிட்டது. இவள் அடுப்பை அனைத்துவிட்டு, பின் பக்கம் தாழ்வரையெல்லாம் சுண்ணாம்படித்த தடயங்களைத் தேய்த்துக் கழுவினாள். பால்வாங்கிக் காய்ச்சி வைத்து விட்டுக் குளித்தாள். சேலை துவைத்து உலர்த்தினாள். பழைய குழம்பும் பொரியலும் முதல் நாளிரவே கலந்து கொதிக்க வைத்திருந்தாள். சோற்றில் நீரூற்றி வைத்திருந்தாள். எந்தப் பொருளையும் வீணாக்கிப் பழக்கமில்லை. இரவுக்குள் தீர்த்து விடுவார்கள்.

பத்தரை மணி சுமாருக்கு, கலைந்த தலையும், கலைந்த பொட்டுமாகக் கீழே வந்த பெண்ணின் முகம் அழுது அழுது சிவந்திருந்தது இவளுக்குச் சொறேலென்றது.

“ஏம்மா, அழுதியா?...”

“இல்லேத்தே...” என்றாலும் பிழியப்பிழிய அழுகை வந்தது.

“அசடு, அழாத. ஒரு பொம்புளைக்கு வாழ்க்கைங்கறது இதுதா. போவட்டும்... அழுவாதம்மா!...” இதற்குமேல் எதையும் கேட்பது நாகரிகம் இல்லை.

“சரி, நீ காபி குடி, ராத்திரியே சரியா சாப்புடல. வா, முகத்தைத் துடச்சிக்க. பல்லு விளக்கிட்டு வா!”

அப்போது, மாடியில் குளியலறை இல்லை.

“சரி அத்தே...” என்று போனாள். அதிர்ந்து பேசத் தெரியாததென்பது முழுசும் உண்மை.

“இன்னைக்கு எப்ப போகப் போறான்? துரங்கி எந்திரிச்சிக் குளிச்சுக் கெளம்பறச்சே, மணி பன்னண்டடிச்சிடும். எல்லாம் தலகீழா இருக்கு...” என்று சொல்லிக் கொண்டே, அவள் பழைய சோற்றில் உப்பையும் தயிரையும் சேர்த்துப் பிசைந்து தாளித்தாள்.

“எங்க வீட்டிலும் இப்படித்தான் அத்தை செய்வோம்! எங்கம்மா, இப்படித்தா எதுன்னாலும் கொதிக்க வச்சி, சுண்டவச்சிடுவாங்க. எங்கண்ணெ, அப்பா, சித்தப்பா, அத்தை எல்லாரும் சாப்பிடுவம். ஆனா, உங்க மக...”

“ஆமா, எங்க ஆகாசத்திலேந்து வந்திட்டானோ? எப்ப எந்திரிச்சி வரானோ? என்னமோ?...”

“அத்தே...’என்றவள் நிலத்தைப் பார்த்தாள்.

“ஏம்மா...’

“... ஒண்ணில்ல... நீங்க கறி மீனு ஒண்ணும் சமைக்க மாட்டீங்களா?”

‘கரண்ட்’ ஓடும் கம்பியைத் தொட்டுவிட்டாள்.

“ஏம்மா? உனக்குத் தெரியுமில்ல? சமைச்சிப்போடு!”

அவள் ஒன்னும் சொல்லவில்லை.

மாடு கொண்டு வந்து பால் கறக்க ஒருவன் வந்தான். ஃபிரிட்ஜ் வந்தது. கறி மீன் மசாலாப் பொருட்கள் எல்லாம் வாங்கித் தந்து வேலை செய்ய ஒரு பெண் வந்தாள். சுருட்டை சுருட்டையான முடியும் மூக்கும் முழியாகக்களையாக இருந்தாள்.

இவள் தனக்கு வேண்டிய கஞ்சியோ, குழம்போ வைத்துக் கொண்டு பின்பக்கம் தனியே தோட்டத்தைக் கொத்திக் கொண்டோ தண்ணீர் பாய்ச்சிக் கொண்டோ இருப்பாள்.

மரகதமும் ரஞ்சிதமும் சமையலறையில் பேசிக்கொண்டே, மீன் கழுவுவதோ, மசாலை அரைப்பதோ, வித்தாரமாகச் செய்வார்கள். அவன் எப்போது வந்தாலும் எதுவும் தயாராக இருந்தது. ஃபிரிட்ஜில் குடி வகைகள், குழம்பு, கறி எது வேண்டுமானாலும் இருந்தது. தோட்டத்தில் கீரை போட்டு, நன்றாக வளர்ந்திருந்தது. அப்போதுதான் கடலூர் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சந்திரி, ஒருநாள் வந்தாள். கல்யாணத்துக்கு ஒருநாள் வந்து விட்டுப் போனாள். தோட்டத்தில் இருந்த அவள் கையைக் கழுவிக் கொண்டு பின்புறமாக வந்தாள்.

“யேய், ஜூஸ்? நீ எங்கே இங்கே? என்னமோ, பின்னணி பாடகியாகி ஒரு கலக்குக் கலக்குவேன்னே, குழம்பு கலக்கிட்டிருக்கிற?”

சந்திரி உயரமாக வளர்ந்திருந்தாள். முடியை தொள தொளவென்று பிடரியில் புரள நுனியில் மட்டும் பின்னிவிட்டிருந்தாள். செவிகளில் வளையங்கள்.

“குழம்புகலக்கினா கொறஞ்சா போயிடும்? எனக்கு சான்ஸ் கிடைச்சிடுத்துன்னு வச்சிக்க!”

“இவங்கள உங்களுக்குத் தெரியுமா சந்திரி அக்கா?”

“தெரியுமாவாவது? இவ மூணு வயசில மூக்கொழுக நின்னிட்டு அழுத போதே, இவ பின்னணி பாடகியாவணும்னு தா அழுதா...”

“ஏம்மா, சந்திரி!... யாரு?...”

“உனக்குத் தெரியாதாம்மா ? காத்தமுத்து மாம மக. இவளுக்கு எப்பம் மூக் கொழுகும். அண்ணெதா இதுக்கு ஜூஸ்னு பேர்வச்சது. சொந்த உறவுமுறைகளே தொடர்பு விட்டுப் போய்விட்டன. இவ நம்ம குருகுல வித்யாலயாவில படிச்சால்ல?...”

“படிச்சா... பிறகு படிப்ப நிறுத்திட்டு, அவம்மா, வூட்டு வேலைக்கு அனுப்பிச்சிட்டா...”

“இல்லக்கா, கார்ப்பரேசன் ஸ்கூல்ல பிறகு படிச்சேன்... கமலவேணி அம்மா வீட்லதா இருந்தே. அவுங்க பாடுற பாட்டெல்லாம் அப்பிடியே பாடுவேன். அண்ணெ எனக்கு நிச்சியமா சான்ஸ் தரதா சொல்லிருக்காங்க, புதுப்படத்துல...”

சந்திரி, அமெரிக்காவுக்குச் செல்ல வாய்ப்பு வந்திருந்த சந்தோசத்தில் மிதந்தாள். சாமான்கள் வாங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு பங்களா வீட்டுக்கு வந்து அம்மா, அய்யாவிடம் ஆசி பெற்றாள்.

“சந்திரி, உனக்குப் பிடித்தவர் யாரானாலும், நல்லவராக ஒருத்தரை வாழ்க்கைத் துணையாகக் கொள்” என்று அய்யா வாழ்த்தினார். டெல்லி சென்று அங்கிருந்து விமானத்தில் செல்வதாக இருந்தாள். அய்யாதான் நண்பர்களுக்கு எழுதி எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாக அறிந்தாள்.

“ஏம்மா, மகன் வீடு எப்படி இருக்கு ?”

அம்மா கேட்டார். “எதைச் சொல்ல அம்மா? ஒண்ணும் சரியில்ல. ஆனா, மருமகப் பொண்ணு நல்ல பொண்ணு. கவடில்லாத பொண்ணு. இப்ப மெய்யோ பொய்யோன்னு இருக்கு. அவங்க அம்மா வீட்டுக்கு எழுதிப் போட்டு, அழச்சிட்டுப் போகச் சொல்லுறதான்னு தெரியல...”

“சந்தோசமான சமாசாரம் சொல்ற! இந்தாங்க, சர்க்கரை வாயில் போட்டுக்குங்க!” என்று அம்மா சர்க்கரை வழங்கினார்... ஆனால் இவளுக்கு சர்க்கரை இனிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/15&oldid=1022826" இலிருந்து மீள்விக்கப்பட்டது