உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/25

விக்கிமூலம் இலிருந்து

25


சுப்பய்யா வந்து போனது விடியற்காலைக் கனவு போல் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

“நீங்க இங்க விட்டுப் போகாதீங்க. கையில் பிடிக்க வேண்டியதை முழுகவிட்டுட்டேன். இப்ப ஒரு துரும்புதா இது. இதைப் புடிச்சிட்டுப் போராடணும். பழசெல்லாம் அழுகல். இருங்க. இங்கேயே இருங்க. நான் வருவேன். அய்யாவின் வழி... வரும் இளம்பயிரைத் தேடிட்டுப்போறேன். நம்புங்க...” என்று சொல்லிவிட்டுப் போய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இவளை ரங்கன் இப்போதெல்லாம் அதிகமாகக் கண்காணிக்கிறான். லாரியில் செங்கல் வந்து பக்கத்தில் அடுக்குகிறார்கள். தை பிறந்து, மா, புதிய மொட்டுகள் குலுங்க நிற்கிறது. அடிபருத்து வாடிய இலைச்சருகுகளும் பூச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை உண்டு என்று பூத்திருக்கிறது. அதைப் பார்த்து விட்டு நம்பிக்கை கொள்கிறாள்.

வங்கிக்குச் சென்று செலவுப் பணம் எடுத்துக் கொண்டு வருகையில், காந்திபிறந்த மாநிலத்தில், பூகம்பம் வந்து குஞ்சு குழந்தை நல்லவன் கெட்டவன் என்று பாராமல் பலி கொண்டது போதாதென்று மதக்கலவரம் பற்றி எரியும் செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைத் தலைப்பு என்று கடை விரிக்கின்றன. வெளியில் வரும் போதுதான், அன்றாட, வண்டி சாவு, தீப்பற்றி எரிதல், குத்து வெட்டு கொலை கொள்ளை எல்லாம் உணர்வில் குத்துகின்றன. இப்போது எல்லாம் கேட்டுப்பழகினாற்போல், மரத்துப் போயிருக்கிறது. முன்பெல்லாம், அங்கே அநீதி இங்கே அக்கிரமம் என்று போராட்டங்கள் பற்றிக் கேள்விப் படுவாள். சர்வோதய அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவளை அழைத்துக் கொண்டு கோட்டை முன் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். “அணுகுண்டு வேண்டாம்; இன்னொரு சண்டை வேண்டாம். மனிதர் ஒற்றுமையுடன் வாழ்வோம்...” என்றெல்லாம் கோசங்கள் வைத்தனர். யார் யாரோ இவளுக்கு முகமறியாத ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வேலை செய்யும் பெண்கள்... ராமலிங்கம்தான் இவளை வந்து கூட்டிச் சென்றார். அந்த ஏழைத்தாயின் மகனுக்கு நியாயம் வேண்டி அழைத்து வந்த இராமலிங்கம்... மணிக்கூண்டின் பக்கம் ஒரு கடை மாடியில் இருக்கிறார். அவர்தாம் சுப்பய்யாவுக்குச் செய்தி தெரிவித்தவர். மனைவியும் இறந்து, மகனும் வேற்று மதத்துக்காரியைத் திருமணம் செய்து கொண்டு போனபின் ஒற்றையாக, ‘சர்வோதயம்’ என்ற இயக்கத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்க்கப் படி ஏறுகையில், கீழே வரிசையாக இருக்கும் கடைகளில் ஒன்றான ‘பேக்கரி’யின் ஆள், “யாரம்மா? மேலே எங்கே போறீங்க?” என்று கேட்கிறான்.

“ராமலிங்கம்னு வழுக்கைத் தலை; உயரமா, முன்ன வங்கில இருந்தாங்க...”

“அவுரு இப்ப இங்க இல்லம்மா. ரூமைக் காலி செய்திட்டுப் போயிட்டாங்க!”

‘போன மாசம் பாத்தேனே?”

“ஆமாம்மா, அவுரு சொந்த ஊருக்குப் போயிட்டாரு. இப்ப அந்த ரூமெல்லாம், ‘பிரைட்’ ஓட்டல்காரரு எடுத்திருக்காரு...”

சுப்பய்யா துரும்பு என்றான், துரும்பும் நழுவிவிட்டதா? மனது சோகமாக இருக்கிறது.

திடீரென்று ஏன் போனார்? செய்யாத குற்றத்தைப் போட்டு ஒரு ஏழைப்பையனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்ததை எதிர்த்துக் கேட்கச் சொன்னாரே, அதற்காக அவரையும் வெருட்டினார்களா? இந்த இடம் வேண்டாம் என்று போய்விட்டாரா?

அவள் மடியில் பணத்துடன் உச்சி வேளை கடந்து விடுவிடென்று வீடு திரும்புகையில், உள்ளே ஆளரவம் கேட்கிறது. வாயில் வராந்தா கம்பிக் கதவு உள் பக்கம் பூட்டியிருக்கிறது. சுற்றிக் கொண்டு அவள் பின்புறம் செல்கிறாள். இரண்டு மூன்று ஆட்கள் வந்திருக்கின்றனர். பெரிய மாமரத்தின் கிளைகளை வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். பூவும் இலைகளுமாக ஒட்டக்கழிபட்டு மொட்டையாக நிற்கிறது. ரங்கன் பெரிய கிளையை இழுத்துக் கொண்டிருக்கிறான். அவளுக்குப் பகீரென்கிறது.

பின்பக்கம் செல்லும் போதெல்லாம் சிநேகமாக விசாரிக்கும் மாமரம். அது எத்தனை, காய், கனிகள் கொடுத்திருக்கின்றன? கண்ணமங்கலத்திலிருந்து வந்த சொத்து அது. காய் குடம் குடமாக இருக்கும். பழுத்தால் அப்படி ஒரு இனிப்பு. ஊரிலிருந்து வந்த பழத்தைத் தின்று, கொட்டையை ராதாம்மா குழந்தையாகப் புதைத்துத் துளிர்த்து வளர்ந்து கனி கொடுத்த மரம்.

“ஏம்ப்பா இதை வெட்டுறீங்க? நிறுத்துங்க? ஆயியப்பனை வெட்டுறதுக்குச் சமானம். ஏன் ரங்கா? இப்படி அழிச்சாட்டியம் பண்றே? அது உன்னை என்ன செய்தது?”

“சேர்மன் சார்தான் வெட்ட சொன்னாரு. இது பூச்சி புடிச்சிப் போயி நிக்கிது. வெறும் குப்பை, கிட்ட போக முடியல...”

“அதுக்காவ? உன் ஆயியப்பனுக்கு நோவு வந்தா இப்பிடித்தான் வெட்டுவீங்களா? சேர்மன் சொன்னாராம்? யார்ரா அது சேர்மன், போர்மன்? விட்டுடுங்கையா, உங்கள கையெடுத்துக் கும்புடறேன்!” அவள் அந்தக் கிளைகளின் நடுவே நின்று கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

“கிழவி, இந்த சென்டிமண்ட், நாடகமெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத. நா அவுரு ஆளு. அவுரு சம்பளம் குடுக்கிறாரு. இன்னிக்கு மரத்த வெட்டுன்னாரு. நா செய்யிறேன். நீ தடுக்கணும்னா அவருகிட்டப் போயி இதெல்லாம் சொல்லு...”

துயரம் தாளாமல் மண்டுகிறது.

‘மரத்தை வெட்டுற கன்ட்ராக்டர்கள் வந்தால், பொம்புளங்க சுத்தி மரத்தைக் கட்டிப்பாங்க. எங்கள வெட்டிட்டு மரத்தை வெட்டுங்கம்பாங்க... அப்படி ஒரு இயக்கம் இருக்கு. அதுல தான் ராதாம்மா புருசன் இருக்கறதாச் சொன்னாங்க...’

“தம்பி! இங்க வாங்க! எங்கேயோ நடக்குற அநியாயம் இல்ல. உங்க வூட்டிலியே நடக்குது.” என்று அழுகிறாள்.

சோறு பொங்கி வைத்துவிட்டுப் போனாள். சோறெடுக்கத் தோன்றவில்லை. இன்று மரத்தை வெட்டுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும்?...

வாசலில் நின்று வெறித்துப் பார்க்கிறாள். வெயில். பார வண்டிகள், கட்டடம் கட்டும் சாதனங்கள் சுமந்து செல்லும் அந்த கிளப்பும் புகை, புழுதி எல்லாம் அவள் இயலாமையை மேலும் கூர்மையாக்குகின்றன. அப்போது தெருவில் செல்லும் பெண் ஒருத்தி, புன்னகையுடன் அவளை நோக்கி, ‘நமஸ்தே’ என்று கைகுவிக்கிறாள். கருத்து, மெலிந்த உடல், கன்னங்கள் பூரித்தாற்போல் முகம் இருந்தாலும், தாடை எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. அடர்த்தியில்லாத முடி பின் கழுத்தோடு கத்திரிக்கப் பட்டிருக்கிறது. கண்களில் ஒரு நம்பிக்கையொளி. கைத்தறிச் சேலை; வெட்டு, ஃபிட்டிங் இல்லாத ரவிக்கை. நகை நட்டு எதுவும் இல்லை. காதுகளில் சிறு வளையங்கள்.

“நா உள்ள வரட்டுமா?...”

கம்பிக் கதவை நன்றாகத் திறக்கிறாள். “வாம்மா, நீ யாருன்னு எனக்குத் தெரியல. இந்தப் பக்கத்தில பார்த்ததா நினப்பில்ல. புதிசா, அங்கே கிழக்கே நிறைய வீடுகள் கட்டி வந்திருக்காங்க... நீ யாரத் தேடி வர? யாரும்மா?”

இவள் ஆவலும் பரபரப்பும் கட்டுக்கடங்காமல் போகிறது.

“நாங்க மேற்கே, புதிசா இருக்கும் எக்ஸ் ஸர்விஸ் காரங்களுக்கான காலனிக்கு வந்திருக்கிறோம். வந்து ஒரு மாசம் தானாகுது...”

“ஓ, அப்ப... உங்க...” என்று கேட்குமுன் இதயம் வலிப்பது போல் இருக்கிறது. கார்கில், அங்கே இங்கே என்று போர் வந்து அன்றாடம் வீரர்களின் உடல்களைச் சுமந்து பெட்டிகள் வந்தன. இந்தக் குழந்தையைப் பார்த்தால் முப்பது வயசு இருக்காது. அதற்குள்...

“இங்க யாரம்மா இருக்காங்க?”

“அம்மா இருக்காங்க. அவங்களுக்கு நடக்க முடியிதில்ல. அதா என்ன அனுப்பிச்சாங்க. வாசல்ல வராந்தா இருக்கும். எதிரே மரமெல்லாம் இருக்கும். சோலையில் நடுவே பெரிய வீடுன்னு சொன்னாங்க. ராம்ஜி மாமா, நா அப்பான்னு கூப்பிடுவேன்னாங்க...”

“கண்ணு? உங்கம்மா பேரு அநுதானே? அநு... அநு... குருகுலத்துல வேலை செய்ய வந்தா. இந்தப் படுபாவி பண்ணின தில்லுமுள்ளுல, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா. அப்ப, உங்கப்பா உங்கப்பா, ரிடயராகி வந்திட்டாங்களா? நீ... நீ... எப்படிடா, அடயாளம் தெரியாம ஆயிட்ட சிவப்பா, தலைநிறைய சுருட்டை முடியும், ரோஜாப்பூ மாதிரி முகமும் இருப்பே... கறுத்து மெலிஞ்சி... கல்யாணம் ஆயிருக்காம்மா?”

“உம். ரெண்டு குழந்தை இருக்கு...”

“அம்மாடி, அந்த ஆண்டவனே, முருகனே உன்னிய இங்க அனுப்பியிருக்காரு. என்ன செய்யுறதுன்னு திண்டாடிட்டிருந்தேன். உங்கம்மாவ நான் இப்பவே பார்க்கணும். இதே வரேன்...”

“இருங்க தாதிமா, நான் போயி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரேன்?”

“ஆட்டோவெல்லாம் எதுக்கு? இந்தப் பக்கம் தானே? நான் நடப்பேன்மா?”

“இல்ல தாதிமா, கொஞ்ச தூரம் போகணும். நீங்க வயசானவங்க.”

“வயசா? ஏம்மா, நீ வரச்சே, நான் நடப்பேன். அந்தப் பக்கம் தானே போகணும்? அவன் அம்பது நூறும்பான். அடாவடி... அடாடா, உன்னை உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி கூடக் குடுக்காம. கிளம்புறேன் பாரு” என்று சொல்லி உள்ளே அழைக்கிறாள்.

கூடத்தில் அந்தப் படங்களை அவள் பார்க்கிறாள்.

“ஒ... எனக்கு மங்கலா நினப்பு வருது. இங்கே பெரிய பிரம்பு சோபா... அதில தாத்தா... மடில உக்காத்தி வச்சிப்பாங்க. நான் அவர் கண்ணாடிய எடுத்துத் திறப்பேன்...”

அவள் கண்களில் நீர்மல்க, அந்தக் கன்னங்களை வழித்து, நெற்றியில் பொட்டில் சொடுக்கிக் கொள்கிறாள்.

“கண்ணு, பொழுது உச்சிக்கு வந்து இறங்குது. நீ சாப்பிட்டியோ?...”

“இனிமேத்தான். குழந்தைகள் ஸ்கூல்லேந்து வர ரெண்டு மணியாகும். சப்ஜி பண்ணி சோறு பண்ணி வச்சிருக்கு. காலம ப்ரக்ஃபாஸ்ட் ஆயிருக்கு...”

‘கண்ணு, ஒரு வாய் தயிர் சோறு தாரேன். சாப்பிடுடா...” அவசரமாகப் பொங்கிய சோற்றில் உறை தயிரையும் உப்புக்கல்லையும் போட்டுப் பிசைகிறாள். ஒரு லில்வர் தட்டு இருக்கிறது. பின்னே சென்று இலையறுக்கும் மனம் இல்லை. இப்படியே, இப்படியே கிடைக்கும் இலக்கு...

தட்டில் சோறும், அப்போது போட்ட நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்துக் கொடுக்கிறாள். பின்புறம் குளியலறையில் அவள் கைகழுவச் செல்கையில் கொல்லையில் மரம் வெட்டுவது தெரிகிறது.

பெஞ்சில் அமர்ந்து கையில் தட்டை வைத்துக் கொண்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். இளநீல வண்ணச் சேலை. தூய வெண்மை ரவிக்கை. ‘சத்திய தேவதையா?’

“நீங்க சாப்பிடுங்க, தாதிமா!”

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நெஞ்சு நெகிழப் பார்க்கிறாள்.

மனது நிறைந்தவளாகத் தானும் மீதிச் சோற்றைப் பிசைந்து சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். அவள் பாத்திரங்களைக் கழுவும் வரை, அந்தப் பெண் கூடத்திலேயே படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இவள் கிளம்பும் போது, ரங்கன் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஊன்றியிருக்கிறான் “சீ! பூச்சிங்க... உடம்பெல்லாம் தடிச்சிப் போச்சி!” என்று கிளைகள் இழுக்கும் ஆள் சொல்கிறான்.

“இதை எப்பவோ வெட்டிப் போட்டிருக்கணும். அப்படித் தள்ளிப்போடு. கிரசின் ஊத்தி எரிச்சிடலாம்.”

காதில் கேட்டும் கேட்காமலும் அவள், “ரங்கா, நா கொஞ்சம் வெளியே போறன். சொல்லாம போயிட்டேன்காத! வாசக்கதவப் பூட்டிக்க!” என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். அப்போதுதான், அவன் அநுவின் மகளைப் பார்க்கிறான்.

“யாரிவங்க? அன்னிக்கு வந்திட்டுப் போனாரு... இது...? என்று அவன் யோசனையுடன் “எங்கேம்மா, இந்த பக்கம்?” என்று கேட்கையில் அவள் விடை கொடுக்காமல் நடக்கிறாள்.

“ஏம்மா, உம் பேர் மறந்திட்டது, உம் பேரென்ன?”

அவள் புன்னகை செய்கிறாள். “நிசா... நிசாந்தினின்னு பேரு. இரவு பூக்கும் பூன்னு எங்கப்பா பேரு வச்சாராம். நான் ராத்திரிதான் பிறந்தேனாம்...”

“ஆமா, பாரிஜாதப்பூ ராத்திரிலதான் பூக்கும். பக்கத்தில் அந்த மரம் இருந்திச்சி. ஒம்பது மணிக்கு கும்முனு வாசனை வரும். இப்பக்கூட இருந்திச்சி. பாம்புவந்திச்சின்னு வெட்டிப் போட்டானுவ... உங்கப்பா இப்ப வீட்டோட இருக்காரா? ரிடயராகி இருப்பாங்க...”

“இல்ல... அப்பா போயிட்டாங்க..”

அவளுக்கு அந்த சாமியார், சித்தப்பா என்று சொன்ன உறவு முறை, அவர் தங்கிய போது, கூறிய செய்தி ஊசிக்குத் தாய்த் தைக்கிறது. இவளிடம் அதையெல்லாம் கேட்கத் தெரியவில்லை. நீள நெடுக சாலையே வந்து இரு புறங்களிலும் குடியிருப்புகள். இடையே வேலைக்காக இடம் பெயர்ந்து குடும்பமும் குட்டியுமாகத் தங்கும் முட்டு முட்டான குடிசைகள்; சாக்கடைகள். ஊர்க்குப்பைகளை எல்லாம் கொண்டு கொட்டும் இடம்... ஒரு காலத்தில் ஏரியல்லவா? ‘பாவிகளா! சுற்றுச்சூழல் மாசு என்று சொல்லிக் கொண்டு!’ ஈக்கள் மொய்க்கின்றன. நிசா முகத்தை வாயை சேலைத்தலைப்பால் மூடிக் கொள்கிறாள்.

“சீ, எந்த ஊரிலேந்து இவ்வளவு கழிவையும் கொண்டு கொட்டுறாங்க?...”

“முகத்தை அதான் மூடிட்டேன். அதனாலதான் ஆட்டோ வச்சிட்டு வரலான்னே...”

அந்த இடம் தாண்டிய பிறகு, சாலையோரங்களில் மரங்களின் பசுமை விரிகிறது. ஒரு பக்கம் கல்லூரி...”

“இது இன்ஜீனியரிங் காலேஜ், இதுக்குள்ளதான் அம்ரித்ஸிங் அங்கில் இருக்கிறாங்க. அவருதான் இங்க... எங்களுக்கு இடம் ஏற்பாடு பண்ணினார். இதோ... இதான், வாங்க...”

“பரம்வீர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு” என்று எழுதிய வளைவு வாயிலுக்குள் நுழைகிறார்கள். பத்துப் பதினைந்து வீடுகள் தாம் முழுமை பெற்றிருக்கின்றன. வீடுகளைச் சுற்றிய தோட்டங்கள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. வரிசையாகத் தெரியும் வீடுகளில் ஒன்றில் நிசா வாயில் மணியை அடிக்கிறாள். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்காக வாயிலில் ஒரு குழாய் இருப்பதை அவள் பார்க்கிறாள். திருகுகிறாள். தண்ணீர் வருகிறது. கால்களைக் கழுவிக் கொள்கிறாள். கதவை உச்சியில் கைக்குட்டை போன்ற ஒன்றால் முடியைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிங் பையன் திறக்கிறான். ஐந்து வயசு ஆறு வயசு மதிக்கத் தகுந்த ஒரு பெண், பையன் இருவரும் தாயின் மீது கோபம் காட்டும் படி இந்தியில் பேசிய படி அவளுடைய சேலையைப் பற்றிக் கொள்கிறார்கள். “உள்ள வாங்க தாதிமா! நிகில், நித்யா, தாதிமாக்கு பிரணாம் பண்ணுங்க!...”

“அட கண்ணுகளா?” என்று குழந்தைகளைத் தழுவி முத்தமிட்டுக் கொள்கிறாள். மட்டியாக, வெறுங்கையுடன் வந்திருக்கிறாளே?... அடாடா, ஏம்மா, இங்கே பக்கத்தில கடை ஏதானும் இருக்கா? நீ கூப்பிட்ட, உடனே ஓடி வந்திட்டேன்...”

“இங்க பக்கத்தில காலேஜ் காம்பஸில இருக்கு...”

“அப்ப, நீ வழிகாட்டுறியா போயி மிட்டாய் வாங்கிட்டு வாரேன்...”

“நோ, தாதிமா, நானே சைகிள்ள போயி வாங்கிட்டு வாரேன். என்ன வாங்கட்டும், கேக், மிட்டாய்...”

“எதுனாலும் வாங்கிட்டு வா தம்பி” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். அதற்குள் அநு, அவளைப் பற்றிக் கொண்டு, முன்னறைக்கு வந்து விடுகிறாள்.

“அம்மா என்ன இது....?”

“தாயம்மா...”

அவள் தாவிப் பற்றிக் கொள்கிறாள்.

அநும்மா...!

அடர்ந்து கறுத்த முடி, நரைத்து முன்புறம் மண்டை தெரிய, முகம் முழுதும் வாழ்க்கையின் அதிர்வுகளையும் சோகங்களையும் தாங்கிய கீறல்களுடன்... பல்வரிசை பழுது பட்டு... அந்த அநுவா?...

“அம்மா...? என்னம்மா இப்படி? அடையாளமே தெரியலியே? முன்னறைச் சோபாவில் உட்கார்த்தி வைக்கிறாள்.

நிசா குழந்தைகளை அழைத்துச் சென்று, ரொட்டி தயாரிக்க முனைகையில், “நாங்க ரொட்டி சப்ஜி சாப்டாச்சி?” என்று குழந்தைகள் குரல் கேட்கிறது.

“நிசா, அமர் என்னமா ரொட்டி பண்ணுறான்? நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சி. உனக்குப் பரோட்டா பண்ணி வச்சிருக்கிறான் பாரு!”

“அட...?”

நிசா ரொட்டி சப்ஜி தட்டுடன் வருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/25&oldid=1022837" இலிருந்து மீள்விக்கப்பட்டது