உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாண்டம்/23

விக்கிமூலம் இலிருந்து

23

யந்தி டீச்சர் தெரிவித்த விவரங்கள் இரத்தக் கோடுகளாய் மின்னுகின்றன. தெய்வத்துக்கே உரியதாகப் புனிதம் காத்த மலரைக் கசக்கிப் புழுதியில் தேய்த்துவிட்டு, அதன் மீது, நாக்கூசும் அபவாத முட்களைப் படரவிட்ட கயவன் அரக்கனாக நின்று கொக்கரிக்கிறான். காவிப்பட்டு மணிமாலைகள்... சிவசக்தி ஆசிரமம் எப்படி?

பெத்த தாய், கூடப்பிறந்தவங்க, உழைப்பை வாங்கிட்டாங்க. யாருமே அவளைக் காப்பாற்றவில்லை. ஆனும் பெண்ணுமாக அஹிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றிச் சிறை சென்றார்கள்...

யு.ஜி.ல இருப்போம். சாப்பாடு கொண்டு வருவாங்க. சிநேகமாகப் பழகுவோம். தப்பு அபிப்பிராயம் வரக்கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக் கொள்வோம்...

பெண் நெருப்புத்தான். ஆனாலும் அவளைத் தவறாக ஆண் பயன் படுத்தினால், அழிவுதான். அந்த நெருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சுப்பய்யா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறான்.

இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னே, குடில்ல, மருதமுத்து ரயில் தண்டவாளத்துல தலைகொடுத்தான். நினப்பிருக்கா?

மைதானத்தில் பிள்ளைகளைக் கூட்டிப் பிரார்த்தனை செய்வதில் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்வது, தேசியகீதம், வந்தே மாதரம் இசைப்பது முதல் அனைத்துச் செயல்பாட்டு ஒழுக்கங்களும் அவன் தலைமையில்தான் நெறிப்படுத்தப்பட்டன. அப்பழுக்குத் தெரியாத உடை; தோற்றம். மாநிறம் தான். அவன் ஒழுக்கக் குறைவானவன் என்று கரும்புள்ளியை வைக்கவே முடியாது...

“ஏன்பா ?”

“சுசீலா தேவியத் தெரியுமில்லையா?”

“தெரியும். ரொம்பத் துவக்க காலத்திலேயே இங்கே வந்து சேந்தாங்க. புருசன் சிறுவயசிலேயே போயிட்டான். ஒரு குழந்தை, மூணு வயசு, அதுவும் நம்ப ஸ்கூலுக்கு வரும். சுசீலாவின் அக்கா, வாரம் ஒருமுறை கூட்டிட்டு வருவாங்க. அம்மாவும் அய்யாயும் கூடக் கொஞ்சுவாங்க. வந்தே மாதரம் நல்லாப் பாடும்...”

“நீங்கல்லாம் குடிலை விட்டுப் போன பிறகு, கபடமில்லாம இருந்த சூழல்ல, ஒரு துரும்பப் பத்த வச்சி எறிஞ்சாங்க. ஒரு தடவை சுசீலா லீவுக்குப் போயிட்டு வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அன்னிக்கு சாயுங்காலம் அவங்கண்ணன் மட்டும் வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. விடுதியிலே இருந்த சரஸ்வதி டீச்சரையும், ஜானம்மா டீச்சரையும் கூப்பிட்டுப் பராங்குசம் விசாரணை செய்தாராம். இதெல்லாம் எனக்குக் கவனமே இல்ல. ஆனா, மாலைப் பிரார்த்தனைக்கு மருதமுத்து வரல. மறுநா காலையிலே சைதாப்பேட்டைத் தண்டவாளத்துல, எக்ஸ்பிரஸ் வண்டிக்குத் தலை கொடுத்திட்டார். ஆசிரமமே கொல்லுனு ஆயிட்டது. ரயில் பாதையைக் குறுக்கே தாண்டிப் போயிருக்காரு, விடியக்காலம் பாதையோரம் நடக்கப் போவாரு, விபத்துன்னு பேப்பர்காரங்க தகவல போட்டாங்க- அய்யாகூட இரங்கல் கூட்டத்துக்கு வந்து கண்ணீர் விட்டார். பராங்குசம் உருகினான். சுசீலா டீச்சர் பிறகு வரவேயில்லை...”

‘அட...பாவி...? இ...இது கொலையில்லியா? ஒரு அகிம்சைக் கோயிலில கொலைகாரப் பாவி அப்பவே உருவாயிட்டானா?...”

“ஆமாம்மா. இவன் சுசீலா டீச்சருக்கு மருதமுத்து சகவாசம் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து ஆசிரமத்தின் பேரைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு சக டீச்சர் எழுதுவதுபோல் மொட்டைக் கடிதாசி அண்ணன் பேருக்கு எழுதி இருக்கிறான். அவங்க உசந்த சாதி. சநாதனக் குடும்பம். இவரு தாழ்ந்த சாதி. அதுவும் விதவா விவாகத்தை ஏத்துக்காதவங்க. குழந்தை வேற இருக்கு. மருதமுத்துவை விசாரணை என்ற பேரில் என்ன சொன்னானோ? அவரு உசிரையே தியாகம் செய்தாரு... அடுத்த இலக்கு நான்.”

ஏலக்காயும் கிராம்பும் கர்ப்பூரமும் மணக்கும் பெட்டி என்று நினைத்திருந்தாளே? அதன் உள்ளிருந்து மோசமான பாச்சைப் புழுக்கையும் கரப்பான் புழுக்கைகளும் வெளியாகின்றன.

“அம்மா போயி, அய்யாவும் ஓய்ந்து போயிருந்தாங்க. இவன் அவங்க வரபோதெல்லாம் பிரமாதமா சத்திய ஜோடனை செய்து வச்சிருப்பான். எனக்கே ஒண்ணும் அப்பல்லாம் தெரியலன்னா பாருங்க? நிர்வாகமே கொஞ்சம் கொஞ்சமா காந்தி சத்தியத்தில் இருந்து நழுவி, கறைபடிய ஆரம்பித்திருக்கு- கணக்கு வழக்கெல்லாம், அவன் பேரில் தனிச் சில்லறை சேரும் வழி கண்டு பிடிக்கச் சொல்லிக் கொடுத்தது. எல்லோரையும் கைக்குள் போட்டுக் கொள்ளும் சாதுரியங்கள் சேர்ந்தன. அதனால அடுத்த களை எடுத்தல் நான்தான்...”

“என்னமோ இந்தி எதிர்ப்புச் சூழலில் ஒட்டாம வடக்கே போயிட்டன்னு தான் நினைச்சிருந்தேன். அய்யாவிடம் வந்து நீ அப்படித்தான சொல்லிட்டுப் போனே?”

“ஆமாம்மா. இதெல்லாம் மோசமான பண்பாட்டு ஒழுக்கச் சிதைவுகளில் கட்டிய அரசியல் ஆட்சிகளில் விளைந்த பயன்கள். மது விலக்கை எடுத்து, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கடைதிறந்து மது சாரத்தை ஓடவிட்டது, சினிமா கடைவிரித்த இழிவுகள், ‘கற்பழிப்பு’ என்ற சொல்லே உச்சரிக்கச் கூசிய ஒழுக்கங்களை பத்திரிகைளெல்லாம் ‘மஞ்சளாக’ மாறியதால் சுத்தமாத் துடைத்தன. (ஏ) சினிமாங்கற முத்திரைதான் பணத்தை அள்ளித்தரும்னு, இந்த சென்னைப் பட்டினத்து சாலை, மூலைமுக்குகளெல்லாம் விளம்பரங்கள்... மருதமுத்து, மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமானானார். எனக்கு உயிரை விடுவது கோழைத்தனம்னு பட்டது. மழலைப்பள்ளி இருந்தது. அய்யா இருந்த நாளில் பக்கத்தில் இருந்த குப்பத்துக் குடிசைப் பிள்ளைகள்கூட வரும். அநு அம்மா வந்த காலத்தில் மழலைப்பள்ளிக்குக் குடிசைக் குழந்தைகள் வருவதில்லை. ஓரளவு வசதியாக இருக்கும் குழந்தைகள் வந்தன. எல்லாக் குழந்தைகளும் வெளியே இருந்து தான் வந்தார்கள். தோட்டக்காரன், காவலாளி யாருக்குமே உள்ளே குடும்பம் இல்லை. அநேகமாகத் தங்கும் பிள்ளைகள், டீச்சர்களுக்கு மட்டுமே விடுதி. அநு அம்மா இங்கே வரும் நாட்களில் குழந்தையை விட்டுவிட்டு வருவார்கள். அது தானாக ஆடிப்பாடிட்டிருக்கும். அநுசுயா டீச்சர், நான், ஆபீசில் இருந்தால் அது அங்கேயே இருக்கும். திடும்னு ஒருநாள் வித்யாலயாவின் வெளிப்புறச்சுவரில், என்னையும் அநுவையும் பற்றி, கேலிப்படம் போட்டிருந்திச்சி. அநு சுப்பய்யான்னு எழுதி, “நாங்க புதிசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”ன்னு பாட்டுப் போட்டிருந்திச்சி. குழந்தை திகைச்சுப்போயி பாக்குறப்பல...

“நல்ல வேளையா, நான் காலம சூரியன் உதிக்கும் போதே நடக்க வெளியே வந்தவன் பாத்திட்டேன். ஒடனே உள்ளே கொட்டடிக்குப் போயி தேங்கா மட்டையக் கொண்டு வந்து அழிச்சேன். நேரா பராங்குசத்து வீட்டுக்குப் போனேன். உள்ளாறதான அப்ப வீடு? அவங்க சம்சாரம், வாசல்ல கோலம் போட்டிட்டிருந்தாங்க. ‘இந்தாங்கம்மா, மருதமுத்துகிட்ட யாரோ வெளயாடினாங்க, அந்த நெருப்புல அவரு உசிரைக் குடுத்தாரு. இப்ப ஏங்கிட்டயும் அதே வெளயாட்ட ஆரோ ஆடுறாங்க? நானொண்ணும் உசுரவுடமாட்டேன். சத்தியத்த நிரூபிக்க, குத்தம் பண்ணுறவங்களக் கொண்டு வர எனக்கு முடியும். ஆனா, சம்பந்தபட்ட, ஒரு அப்பாவித் தாய்க்கு அது கேடாக முடியும்?’ என்று சொல்லிவிட்டு, சுண்ணாம்பை எடுத்து நானே அழித்தேன். அடுத்த நாளே கால் கடுதாசிய நீட்டிட்டு இங்கே அய்யாட்ட வந்து சம்பிரதாயமாச் சொல்லிட்டுப் போனேன்...

“அப்ப போனவன், இந்தப் பட்டணத்து மண்ணை இப்படி வந்து மிதிப்பேன்னு கொஞ்சமும் நினைக்கல...”

அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

“அட... சுப்பய்யா? சுப்பையா? என்ன இது? ஏம்ப்பா, ஏதோ நடந்திச்சி. அதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற? அது பிறகும் இங்கு வந்திட்டுத்தானிருந்தா. ரெண்டு வருசத்துல அவளும் புருசன் கூடப் போறதாச் சொல்லிட்டுப் போனா. அய்யா இறந்தபோது அவ பேப்பரில ‘தியாகின்’னு கட்டுரை எழுதியிருந்ததா நிக்கெலஸ் டாக்டரு படிச்சிச் சொன்னாரு, கூட்டத்துல...”

அவன் தேறி முகத்தைத் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.

“தாயம்மா, நா இப்ப போறேன். மணிக்கூண்டு பக்கத்துலதான் பழைய ஆளு, ராமலிங்கம்னு, அங்க தங்கியிருக்கிறேன். நா வரேன், நாளைக்கு. நீங்க மறுக்க ஊசி போட்டுக்கணும்” என்று சொல்லிவிட்டு எழுந்திருக்கிறான்.

“இரப்பா ஏ, இங்க ரா தங்கக்கூடாதா? இப்ப கூட அவதூறு கட்டுவாங்கன்னு பயமா?...”

“பயந்துகிட்டு ஓடல. இன்னும் கொஞ்சம் விவரம் விசாரிக்க வேண்டியிருக்கு வரேன்...”

அவன் சென்ற பிறகு, அவளுக்கு கையகல இருளை விரட்டியடித்த ஒளித்திரியும் அணைந்துவிட்டாற்போல இருக்கிறது.

பராங்குசத்தின் அசாத்திய வாதனைகளால் மட்டும் அவன் காயப்பட்டிருக்கவில்லை.

சங்கரி விசயத்திலும் காயப்பட்டிருக்கிறான்.

‘அடியாள் சங்கரி’ என்னை உடனே வந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்; பாதுகாவலில்லை...

அப்படி என்றால், இவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா? வரதட்சணைக்கோ எதற்கோ அவளை இம்சைப்படுத்துபவன் இல்லை. இவனைச் சேர்ந்த தாயும் அப்படிப்பட்டவள் இல்லை... நினைத்துப் பார்க்கிறாள். சங்கரியின் கழுத்தில் தாலிச்சரடு இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு சிறு மண்பவழ மாலை மட்டுமே தெரியும். கழுத்து இறங்காத ரவிக்கை; விலகாத மாறாப்புச்சேலை. தலைப்பு, தொங்காது. இழுத்து மடி உடுத்தி இருப்பாள்...

அவன் மறுநாள்தான் அவளை ஊசிபோட, வந்தழைத்துச் செல்வதாகக் கூறி இருக்கிறான்.

ஆனால், ஒருகால் வருவானோ என்று வாசலிலேயே நின்று பார்க்கிறாள்.

ஓடுகள் எடுத்த பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது.

குழந்தைவேலு வருகிறான்.

நடையில் சோர்வு. எப்போதும் போல் சிரிப்பு இல்லை; பொங்கி வரும் பெருமிதம் இல்லை. வந்து வராந்தா திண்ணையோரம் குந்துகிறான்.

“ஏம்பா, சோர்வா இருக்கிற? நீ இப்படி இருந்து நா பார்க்கலியே?”

“தல நோவுதும்மா. டீ வாங்கிக் குடிச்ச. மருந்து கடக்காரரு ஒரு மாத்திரை குடுத்தாரு. கேக்கல...”

“ஏம்பா..? உங்களப் பாத்தாலே இருக்கிற துக்கம் பறந்து போகும்? பனி வெயிலோ?...”

“இன்னாவா? வூட்லே ஆரும் இல்ல. மன்சே செரியில்லீங்க.”

“ஏ, உங்க சம்சாரம் இல்லியா?”

“அவ மவன் வூட்டோடு போயி குந்திகினா...”

“ஓ, மகனுக்குக் கலியாணம் ஆயிட்டுதா?”

“ஒரு புள்ளயும் கீது!”

“மகன் வேலையாயிருக்கிறாரா?”

“கீறாரு. இன்சினிரு வேல...”

“அப்ப சந்தோச சமாசாரம்தான். நீங்க எம்புட்டுக் கஷ்டப்பட்டு, பொண்ணு புள்ளயப் படிக்க வச்சி ஆளாக்கி நல்ல நெலமைக்குக் கொண்டாந்திருக்கிய? பொண்ணு பெரி...ய ஆஸ்பத்திரில வேல பாக்குது, அப்பாவுக்கு ஒடம்பு ‘சுகமில்லன்னா, பாக்காதா?”

அவன் பேசவில்லை. சிறிது நேரம் மௌனம்.

“அம்மா, உங்களக் கும்புடுட்டுக்கிற. நாங்கூட எத்தினியோ தபா நெனச்சிட்டுகிற. இந்தம்மா, அமைச்சர் புள்ளிய வுட்டு, இப்டீ வந்து குந்தினுகிதேன்னு. பொண்ணாவுது, புள்ளியாவுது!”

இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

“உங்கிட்ட சொல்றதுக்கிண்ணாம்மா; சருக்கார் ஆசுபத்திரி வேல வந்திச்சி. எனக்கு ஒரு நோவுன்னா, போயி வயித்தியம் பாத்துக்கலாம்... இப்ப... அந்த ஆசுபத்திரி வாசலுக்கே போவுறதுக்கில்ல...”

“வாரம் ஒரு தபா உங்கள வந்து பாக்குறதில்ல?”

“அதும் பேச்ச வுடும்மா. நா நெனச்சாப்புல அது இல்ல. போன வாரம் வந்திச்சி. நா, கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லிச்சி. நா ஒண்ணும் பேசல. அந்தப்பய இன்னா செஞ்சான்? படிக்கிறப்பவே, லவ்வுன்னு ஆயி அப்பனுக்குத் தெரியாமயே கட்டிக்கிட்டான். பொண்ணுகூட பெரி...வூடு புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போவணும். அப்ப வந்து ஆயியக்கூப்புடுறான். இவ, மண்ணத்தட்டிட்டுப் போறா... தனி வூடுதான வச்சிகிறாங்க? அப்பா, நீங்க வாங்கன்னு கூப்புடல. போம்மா...”

குறையே சொல்லாத மனிதன். தன் மக்கள் கடைத்தேற கூழையாகி எங்கெங்கோ கவடு தெரியாமல் புகுந்து புறப்பட்டவன். அவனுக்கும் தன் மான உணர்வு, காயப்பட்டிருக்கிறது.

“ஆரோ ஒரு பெரி... டாக்டராம். வயசு அம்பதாவுதாம். இது... தேவையாம்மா? எங்கூரு பையனே ஒருத்தன் மருந்து கடை வச்சிகிறான், கன்டோன்மென்ட் பக்கம். ‘மாமா, எப்டிகிறே’ன்னு விசாரிப்பன். இது எப்பவானும் வந்து கண்டா, கேலி பேசுவா. ஒரு அஞ்சு சவர அப்டி இப்டியா சேத்து வச்சிகிறே. நெல்ல படியா ஒரு கலியாணம் கட்டி வச்சி, கெடக்கலான்னு நெனச்சது கெனாவாப்பூட்டுது.”

“நீங்க கலியாணத்துக்கே போவலியா?”

“நா புள்ளவூட்ல போயி, என் சம்சாரம் கையில அத்தக்குடுத்தே... ஒரு சவரன் மோதிரம், மூணுசவரன் செயின். ஒரு சவரன் காதுக்குத் தொங்கட்டானும், பூமாதிரி தோடும்... எனக்குத் தெரிஞ்ச சேட்டு கடயிலதா சீட்டுப் போட்டு வாங்கின. புள்ள கலியாணம் போவல. பேரப்புள்ளிக்குக் காது குத்து வைப்பாங்கன்னு நெனச்சே. ஒருநா பய்ய காருல வந்தா. புள்ள பாத்துக்கணும். தனி வூடு வச்சிகிறேன்னு இட்டுகினு போனா.”

“நீங்க போகலியா?”

“ஒரு வாட்டி போன. நம்ம புரவலர் அய்யா வூட்டுக்குக் கூடதா போவ. அங்க இன்னான்னாலும் கச்சின்னு ஒரு மருவாதி உண்டு. ஒடனே ஃபோன் போட்டு சீட்டு வாங்கிக் குடுத்தாங்க... அங்க மதிக்கலன்னாக்கூட, அட போன்னு வுட்டுடல... என் சம்சாரம்கிறாளே, அவக்கு ஆருமில்ல. எங்க சொந்த ஊரு, திருச்சி பக்கம், சிமிட்டி ஃபாக்டரிக்குப் பக்கம். மானம் பாத்த சீம. சிமிட்டி பாட்டரி கட்டுறப்ப அங்க வேல செய்யிற. பங்காளியோட சண்ட போட்டுட்டு அடிச்சிட்டே. போல்சில சொல்லிடுவான்னு ஓடியாந்தே. இங்க அப்ப லீக்கோ கரி ஏசண்டு ஒருத்தர் இருந்தாரு. அவுரிட்ட மூட்ட செமப்பே. அப்படி உருண்டு வந்த மண்ணாங்கட்டி நானு. மூட்ட செமக்கிற பயலுவல்லாம் குடிப்பானுவ. கண்ட பொம்புள சாவாசமும் வச்சிப்பானுவ. நா... இத இது போல, இப்ப ஏ.ஜி. ஆசுபத்திரி கிதே, அதுக்குப் பின்னால, ஏசன்டு அய்யா வூடு. நாயுடு... ராமம்போட்டுட்டு செழுப்பாருப்பாரு... பீடி சிகரெட்டு ஒண்னும் தொடமாட்டே... காலம பெரி...கெணறு. அதுல தண்ணி எறச்சிக் குளிச்சிப்பேன். வாரத்தில ரெண்டு வாட்டி, சினிமாக்குப் போவ. எம்.ஜி.ஆர். படம்னா, மொத்தல் போவ... கலியாணம் காச்சின்னு நெனக்கல. அப்ப, இவ கலியாணங்கட்டி புருசன் செத்திட்டான். ஆருமில்லாம தா இருந்தா. அப்ப, ரயில் பாலம் புதிசா கட்டுறாங்க. எல்லாப் பொம்புளக கூடவும் போவா வருவா. நா அம்பது கிலோ மூட்டையச் செமந்து வண்டில வைப்பேன். குடோனிலேந்து வாரப்ப, பாப்பா ஒரு நா ராத்திரி பொம்புளகளோடு சினிமா போயிகிது. நானும் அடுத்தாவுல குந்திகிறே. எவனோ இவகிட்ட வம்பு பண்ணிகிறான். அயுதுகினே வெளியே போயிட்டா. அப்பால, மக்யா நா போயி, நாஞ்சொன்ன. உன்னிய கல்யாணம் பண்ணிகிறே சம்மதமான்னே.

“நாயுடு சாருக்கு ரொம்ப சந்தோசம். “மண்ணாங்கட்டி, நீதா நல்ல மனிசன். நீ வெறும் மண்ணில்ல. தங்கக் கட்டி!”ன்னு சொல்லி, அவுருதா இருநூறு ரூவா செலவு செஞ்சி, திருநீர்மலைக்கு இட்டுப் போயி கட்டி வச்சாரு. அவ, அவங்க வீட்ல வேல செஞ்சா. நல்ல மனிசன். லீக்கோ கரியுமில்ல. அவுரு, அந்தம்மால்லாம் பூட்டாங்க. வூட்டையும் இடிச்சிட்டாங்க...”

“சுவரோடோனும் சொல்லி அழு” என்று மனச் சுமையைக் கொட்டுகிறானோ?

“அவ இப்ப, புருசன் பெரிசில்ல, வசதியாகிற மகம்வூடுதா பெர்சுன்கிறா. மருமகப் பொண்ணு டக்குபுக்குனு வூட்டுக்குள்ளாறவே ஷூ போட்டுகினு தஸ்ஸுபுஸ்ஸு இங்கிலீசில பேசுறா. ‘செவுந்தி, உனுகு இது தேவயா? யார் யாரோ, எசமானுங்க, வூட்ல, சம்பளத்துக்கு வேல செஞ்சம். அல்லாருமே நன்னி விசுவாசமா கீறாங்க. ஆனா, பெத்தவங்கள வேலக்காரங்கன்னு நெனக்கிற எசமானுவ தேவயா? வா, போவலாம்’ன. அட, போய்யா, நம்ம புள்ளிங்கதான். எனக்கு ஒண்ணும் கொறயில்லன்னிட்டா. பெத்த புள்ளிங்களே நம்ம மதிக்கல. பேரப்புள்ளிங்களா மதிக்கப்போவுது?... சரி, வாரம்மா. உங்கிட்டப் பேசுன. தலவலி கொறஞ்சா போல கீது... வாரம்மா...”

“ஏய்யா, கெளம்பிட்டீங்க? அப்ப தனியே சமையல் பண்ணி சாப்பிடுறீங்களா?”

அவன் திரும்பிப் பார்க்கிறான். “இல்ல, நானும் தனியாதா இருக்கிற. அட, வயிசான காலத்துல, ஒரு பிடி சோறு, தண்ணி நான் குடுக்கமாட்டனா? ஒரு கஞ்சி, கசாயம் எதுன்னாலும்...” அந்தச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

கையெடுத்துக் கும்பிடுகிறான். “ஒங்க நெல்ல மன்சு புரியிது. என்னிக்காலும் வுயுந்து போனா, வாரன், வார பெரி...ம்மா?” என்று செல்கிறான்.

பொய்யும் களவும் வஞ்சகமும், கஞ்சிக்கில்லாத வறுமையிலும் உடலுழைப்பிலும் பிறக்கவில்லை.

உலகில், இன்னமும் பரிசுத்தங்களும் தன்மான உணர்வுகளும், நேர்மைகளும் இருக்கின்றன. காந்திஜியின் சத்திய வாழ்வைப்போலவே இந்த மண்ணாங்கட்டியின் வாழ்வும் சத்தியமானதுதான். இந்த சத்திய அப்பனின் பரம்பரை, பொய்ம்மைகளால் கவரப்பட்டு அந்த மாயையிலேயே முழுகுகிறது. ராதாம்மாவின் பையன் எப்படி இருப்பான்?

.....

அன்றும் மறுநாள் காலையிலும் சுப்பய்யா வரவில்லை.

ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக நிச்சயம் வருவான் என்று நம்பியதும் நடக்கவில்லை.

மாலை ஐந்து மணிக்குத் தன் ஜோல்னாப்பையுடன் வருகிறான்.

“வாப்பா, நேத்திலிருந்தே எதிர்பார்த்திட்டிருந்தேன். ஆசுபத்திரிக்கு ஊசி போட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன நெனப்பு...”

“...அடடா... மறந்துபோயிட்ட. இப்ப கெளம்புங்க போயி ஊசி போட்டுட்டு வந்திடலாம்?”

“அட... அதெல்லாம் வாணாம். நீ இப்ப உக்காரு. ஒரு டீ போட்டாந்து குடுக்கட்டுமா?”

“அதெல்லாமும் வச்சிருக்கீங்களா?...”

“நான் சாப்பிடுறதில்லன்னாலும் வச்சிருப்பேன். யாருன்னாலும் வந்தா கெடக்கட்டும்னு. ஒரு துாள் பாக்கெட்...”

“அதெல்லாம் வாணாம். அப்ப உங்களுக்கு இப்ப ஆசுபத்திரிக்குப் போக வாணாமா?”

“எனக்கு ஒண்ணும் ஆகாது. ஒரு ஊசி போட்டாச்சி, போதும். அம்பாள் குங்குமமே போதுன்னே, கேக்கல. சரி, நீங்க எங்க போயி என்ன விசாரிச்சீங்க?...”

“எல்லாம் விசாரிச்சேன்... நான் பாவி, பாவி, மன்னிக்க முடியாத பாவி!” என்று தலையில் அடித்துக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறான்.

பிரும்மசரியம். அது ஒழுக்கம். என்ன ஒழுக்கம்?

“நான் எங்கே போய் இந்த மகாபாவத்துக்குக் கழுவாய் தேடுவேன்? உயர்குன்றில் தீபமாக என்னை நினைத்து இறுமாந்திருந்தேன். குழியில் விழுந்திருக்கிறேன். அந்தத் தீபம் பெருந்தீயாய் என்னைச் சூழ்ந்து கருக்குகிறது. எங்கே போய் இறக்கிவைப்பேன்? காவிப்பட்டு, மஞ்சள்பட்டு, ஸ்படிகம், உருத்திராட்சம், திருநீறு குங்குமம், சந்தனம் எல்லாமே கறை பிடித்துப்போன, சீழ்பிடித்துப்போன சமூக அடையாளங்களாய்விட்டது தாயே, இதைக் கீறி யாரே வைத்தியம் செய்யப் போகிறார்கள்? தீவிரவாதிகளா? வெடி குண்டுக் காரர்களா?...

“கடைசி காலத்தில் பாபுஜியிடம், அமெரிக்கப் பத்திரிகைக்கு ஃபோட்டோ எடுக்கும் பெண் ஒருத்தி வந்து கேட்டாளாம். அணுகுண்டு வந்துவிட்டது; உங்கள் அஹிம்சை நெறி தாக்குப் பிடிக்குமா என்றாளாம். உண்டு - அணுகுண்டைப் போட வருபவன், கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிட முடியும. அணுகுண்டைவிட அஹிம்சை சக்தி வாய்ந்தது என்றாராம். அன்று மாலையே, அவரைச் சுட்டுப் பொசுக்கிவிட்டோம்...”

முதல் நாள் மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு, காட்டிய சோகமுகத்துக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது.

“அம்மா, சங்கரியைத் துடிதுடிக்க வதைத்து அழித்தவன் நான், நான்தான். பாவி, ஆண் என்ற கருவம், இறுமாப்பு. அகங்காரம். சாந்தி, சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சாரியம் எல்லாமே ஆண் அகங்காரங்கள்... இவனுக்குத்தான் பிரம்ம சாரியமா? அவளுக்கும் உண்டு. ஆனால், இந்த ஆண் வருக்கம் அவளை விடுவதில்லை. அபலையாக என்னிடம் புகலிடம் கேட்டாள். ஒரு பெண்ணாகப் பிறந்த குற்றத்துக்காகவே, ... ஐயோ, ஐயோ” என்று அறைந்து கொள்கிறான்.

அவள் அவன் கையைப் பற்றி இதம் செய்கிறாள். நெற்றிப் பொட்டைத் தடவுகிறாள்.

“தம்பி, நீ தெரிந்து செய்யல. வருத்தப்படாதே. எதுவும் நம் இச்சையில் நடக்கவில்லை. விதியின் கை என்று நீதானே சொன்னாய்? ஆறுதல் கொள்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/23&oldid=1022835" இலிருந்து மீள்விக்கப்பட்டது