அண்ணா சில நினைவுகள்/நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா?

விக்கிமூலம் இலிருந்து
நோயிலுங்கூட நகைச்சுவை மலருமா?

“நாகர்கோயிலுக்குப் புறப்படுகிறேன், அண்ணா!” தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புமிகு தலைவர் சி. பா. ஆதித்தனார்.

“சரி, போய் வாருங்கள். ஆனால் வெளிப்படையாக எதிலும் ஈடுபட வேண்டாம்.” தமிழ்நாட்டு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா.

“பார்த்துக் கொள்றேங்க. திரும்ப வந்ததும்...சபா நாயகரா நீடிக்க விடமாட்டீங்கன்னு நெனக்கிறேன்” ஆதித்தனார்.

இதற்கு பதிலில்லை. மந்திரி பதவிக்கான விண்ணப்பத்தை நினைவூட்டுகிறார் என்பது அண்ணாவுக்கு புரியுமே.

இந்த உரையாடல் நடந்தபோது சென்னையிலிருந்தப் நான், மறுநாள் மாயூரம் திரும் பிவிட்டேன்.

1967 புரட்சித் தேர்தலில் பெ. சீனிவாசனிடம் விருது நகரில் தோல்வியுற்ற காமராசரை, மார்ஷல் நேசமணி மறைவால் ஏற்பட்ட நாகர் கோயில் இடைத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடச் செய்தனர். காங்கிரசார் காமராசர் தோல் விக்குப் பழி தீர்க்க மும் முரமாக முனைந்தனர். காமராசருக்குப் போட்டியான டாக்டர் மத்தியாஸ், சுதந்திரக் கட்சி வேட்பாளர், தி. மு. க. ஆதரவுடன். அண்ணாவுக்குக் காமராசரை நாம் எதிர்ப்பதே பிடிக்கவில்லை.

கலைஞரிடமிருந்து ‘டிரங்கால்’ வந்திருப்பதாக மாயூரம் R. S. அஞ்சல் மனையின் தூதுவர் வந்தார். காலைநேரம். ஒடினேன், சைக்கிளில்தான்! “என்ன சார்? அண்ணா உங்களெ உடனே மெட்ராஸ் வரச்சொன்னாங்க கலைஞரின் குரல். “என்னங்க இது? நேத்துதானே அங்கேருந்து வந்தேன். நாளை மறுநாள் டுட்டியிலே வருவேனே!” - “இல்லெ சார், லீவு போட்டுட்டு உடனே வாங்க!” -அவ்வளவுதான்! தொலைபேசித் தொடர்பு முடிந்தது : புறப்பட்டேன்! வேறு வழி?

24.12.68 அன்று கீழவெண்மணியில் 42ஆதித்திராவிடத் தோழர்களை விட்டோடு கொளுத்திய சோக நிகழ்ச்சி, சீர்கெட்டிருந்த அண்ணாவின் உடலை மேலும் பாதித்து விட்டது! நேரில் சென்று சமாதானப்படுத்தி வருமாறு அமைச்சர்களான கலைஞர், மாதவன் இருவரையும் அண்ணா அனுப்பினார்! அவர்கள் திரும்பச் சென்னை செல்லும்போது மாயூரம் வந்து, என்னையும் அழைத்துப் போனார்கள். அண்ணாவைப் பார்த்த பின்னரே மாயூரம் திரும்பியிருந்தேன்.

“நாகர்கோயிலுக்குப் போய்ட்டு வாய்யா, கருணாநிதி கூட” - இது அண்ணாவின் ஆணை. “இடைத் தேர்தல்லெ போயி நான் என்னண்ணா செய்யப் போறேன்?” நான் நடுக்கத்துடன்! “அட, அதுக்கில் லேய்யா. நீ கருணாநிதி கூடவே பாதுகாப்புக்காக இரு” அவ்வளவுதான்!

கலைஞருடன் நாகர்கோயில் போய் இறங்கியவுடன் நன்கு புலனாகிவிட்டது, அண்ணா ஏன் ஒருவகை அச்சத்துடன் அப்படி என்னிடம் கூறினார்கள் என்பது! பயங்கர வன்முறைகளுக்குச் சித்தமாய் ஆயிரக்கணக்கான காங்கிரசார் அங்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர். தி. மு.க. தான் ஆளுங் கட்சியா என்று நாமே கேட்கக் கூடிய அளவுக்கு நமக்கு பலவீனம், பாதுகாப்பற்ற சூழல், எங்கும்!

நாங்கள் இரவில் கன்னியாகுமரியில் தங்கல், பகலில் தேர்தல் அலுவல், பொதுக்கூட்டம், கலைஞருக்கு. நான், அவர் வரப்போகும் ஊர்களுக்கு முன்கூட்டியே தனியே ஒரு காரில் செல்வேன். ‘அண்ணா வேண்டுகோள்’ என்று பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட 16 mm படமும், உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலப் படமும் 16 mm புரொஜக்டரில் திரையிடச் செய்வேன். அவை லாரியில் வரும்.

ஒரு நாள் எனக்குப் பாதுகாப்புக்காக என்று, ஒரு கட்டிளங்காளையை என்னோடு புதிதாக அனுப்பினார்கள். தி. மு. க. தலைமை நிலைய நிர்வாகிகளான நண்பர்கள் சண்முகம்.தேவராஜ், அந்தப் பகுதிகளை நன்கறிந்ததால் உதவியாக இருந்தார். அவர் பெயர் ஜேப்பியார்!

ஆதித்தனார் என்னைப் புரிந்து கொண்டதும் அங்கு தான்! சில பெரிய பொறுப்புகளை ஒப்படைத்தார்; இனிது நிறைவேற்றினேன். தேர்தலன்று நாகர்கோயிலில் இருப்பது தவறென்று கருதிச் சென்னை திரும்பிவிட்டோம். காலையில் அண்ணா வீட்டுக்குச் சென்றோம். மாடியில் பின்புறமுள்ள மிகச் சிறிய அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நோய் முற்றி, உடல்நிலை மிகமிகச் சீர்கேடுற்ற நேரம்.

“கருணானந்தம், டைகர் பாம் வச்சிருப்பியே. கழுத்திலே பின்பக்கம், பிடரி, தோளிலே கொஞ்சம் தேச்சு விடு. ரொம்ப வலிக்குது” என்கிறார் அண்ணா. ஒரு பழைய காட்சி என்: நினைவுக்கு வருகிறது. அண்ணாவின் முழங்காலுக்குக் கீழே ஒரு நாற்காலியில் இடிபட்டு வீங்கியிருந்தது ஒருநாள். என்னிடம் வேட்டியை விலக்கிக் காலைக் காட்டினார். வழக்கமாக என் ஜிப்பா பாக்கெட்டில் வைத்திருக்கும் டப்பாவிலிருந்து டைகர்பாம் எடுத்ததுதான் தாமதம். “அய்யோ, அய்யோ! அது வேண்டாய்யா. காலை எரியுமய்யா!” என்று கத்திக் கொண்டே, குழந்தை போல அண்ணா எழுந்தோடினார். “எரியாதுண்ணா” என்று கூவிக் கொண்டே நானும் பின்னாலேயே ஒட, அண்ணா வேட்டியால் காலை மறைத்துக் கொண்டு வீக்கத்தைக் காண்பிக்க மறுத்தார். அதே அண்ணா, இப்போது, தானே அந்தத் தைலம் தேய்க்கச் சொல்கிறார் எனில், நோயின் பரிமாணந்தான் என்னே!

“எனக்கு, இப்ப தானே ஒடம்பு சரியில்லே? நம்ம கருணாநிதி எப்பவும் நோஞ்சான். மத்த மந்திரிகளுக் கெல்லாம் நல்ல ஒடம் புண்ணு நெனச்சா-இப்ப பாரு, நம்ம கோவிந்தசாமி, நாகர்கோயில்லே ரத்த ரத்தமர் வாந்தியெடுத்து (6.1.69 அன்று) hospitalலே அட்மிட் ஆயிட்டாரு. இந்த முத்துசாமி - நல்ல இளவயசு. அவருக்கும் ரொம்ப சரியில்லியாம். என்னய்யா இது?” என்று அலுத்துக் கொண்டார் அண்ணா.

அறையிலிருந்து வெளியில் வரும்போது நான் ஒரு ஸ்டுவில் இடித்துக் கீழே தள்ளினேன். “ஏன் சார்! பார்த்து வரக்கூடாதா?” என்று கலைஞர் கடிந்து கொண்டார். அந்தச் சூழ்நிலையிலும் அண்ணா தமது இயல்பான நகைச் சுவையைக் கைவிடாமல் “அட, அவருமேலே தப்பில்லய்யா! அவரும், மன்னை நாராயணசாமியும், எதையும் இடிக்காமே நடக்க முடியாது! அவங்க மேலே தப்பில்லே! ஒடம்பு அதுக்கு இடங்கொடுக்கிறதில்லே என்கிற காரணந்தான்!” என்று நகையாடுகிறார்.

மன்னை மாமாவும் நானும் சேர்கமாகச் சிரித்தோம், ரசிக்க விருப்பமில்லாத அளவுக்கு அண்ணாவின் நலம் குன்றிப் போனதால்!