உள்ளடக்கத்துக்குச் செல்

ஹெர்க்குலிஸ்/பாதாள உலக யாத்திரை

விக்கிமூலம் இலிருந்து

14. பாதாள உலக யாத்திரை

ஹெர்க்குலிஸுக்கு விதிக்கப்பெற்ற பன்னிரண்ரண்டாவது பணியில், அவன் பாதாள உலகமாகிய புளுட்டோவின் நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. கிரேக்கர்கள் யமனைப் புளுட்டோ என்று அழைத்து வந்தார்கள். அவனுடைய உலகில் சூரியனுடைய ஒளியே கிடையாது ; மங்கலான இருள்தான் படர்ந்திருக்கும். பூமி தேவியின் மகளான பெர்சிபோனி அவனுடைய இராணி. சுவர்க்கமும் நரகமும் அவனுடைய பாதாள உலகில்தான் இருந்தன. நரகத்திற்குக் காவலாக ஒரு பெரிய நாய் இருந்து வந்தது. அதன் பெயர் செரிபரஸ். அதற்கு மூன்று பெருந்தலைகளும், பாம்புபோல் நீண்டு, முள்கம்பிகளைப் போன்ற கூர்மையுமுள்ள ஆணிகள் நிறைந்த வாலும் உண்டு. பார்க்க அச்சம் தருவதாய், நரக வாயிலில் நின்றுகொண்டு. அது மாண்டவர் ஆவிகளைக் காத்து வந்தது. அந்த நாயைப் பிடித்து வர வேண்டும் என்பது யூரிஸ்தியஸ் கட்டளை.


எல்லோரும் பாதாள உலகுக்குச் சென்று வர முடியாது. மகா வீரர்களுக்கும் அது அரிது. எனவே, ஹெர்க்குலிஸ் முதலில் தேவ ஆராதனைகளாலும், தவத்தினாலும், விரதங்களினாலும் தன்னைத் தயாரித்துக்கொண்டான். இவைகளுக்காக அவன் எலியுசிஸ் என்ற இடத்தில் சிறிது காலம் தங்கியிருந் தான்.


ஆர்க்கேடிய நாட்டிலுள்ள மலைகளினிடையே. பூமியிலிருந்து ஓர் ஊற்றுப் பெருகி ஆறாக ஒடுவதாயும், அது சிறிது தூரத்திற்கு அப்பால் மீண்டும் பூமிக்குள்ளேயே மறைந்துவிடுவதாயும், அது மறையும் இடத்திலிருந்து பாதாள உலகுக்குச் செல்ல முடியும் என்றும் அவன் கேள்வியுற்று, அங்கே சென்றான். அந்த ஆற்றின் நீர் கடுமையான விஷம் கலந்தது. அதில் இரும்புப் பாண்டங்கள் விழுந்தால் அவைகளைக்கூட உடைத்தெறியக் கூடிய ஆற்றல் அதற்கு இருந்ததாம். ஹெர்க்குலிஸ் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆற்று நீரில் குதித்துப் பாதாள உலகிலுள்ள மாபெரும் ஏரியை அடைந்தான். அந்த ஏரியை அங்கிருந்த ஓர் ஓடத்தில் கடந்து செல்ல வேண்டும். அந்த ஓடத்தைச் செலுத்தி வந்த கேரன் என்பவன், மாண்டு போனவர்களின் ஆவிகளை மட்டும் தன் ஓடத்தில் ஏற்றிச் செல்லலாம் என்பது புளுட்டோவின் உத்தரவு. வெள்ளைக்குன்று போல் நிமிர்ந்து உயிரோடு நின்றுகொண்டிருந்த ஹெர்க்குலிஸைக் கண்டு, அவன் திடுக்கிட்டான். ‘யார் ஐயா, நீர்? என் ஓடம் இறந்தவர்களுக்கு மட்டும் உரியது!’ என்று அவன் மாவீரனை நோக்கிக் கூறினான்.


ஹெர்க்குலிஸ், ‘நீ என்னை ஓடத்தில் ஏற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும்! சீயஸ் கடவுளின் கட்டளைப்படி நான் இங்குள்ள செரிபரஸ் நாயை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன்!’ என்று சொன்னான்.


‘இங்கே வர அநுமதி பெறாத உம்மை நான் எப்படி ஏற்றிச் செல்ல முடியும்?’ என்று ஓடக்காரன் சீறினான்.


ஹெர்க்குலிஸ் ஒரே பாய்ச்சலாக ஓடத்திற்குத் தாவி, அதில் அமர்ந்துகொண்டு. ‘நீ ஒட்டுகிறாயா, இல்லையா? “ என்று உறுமினான்.


அவனுடைய பலத்தையும் உறுமலையும் மிடுக்கையும் கவனித்த கேரன், ஓடத்தை அக்கரை நோக்கிச் செலுத்தினான். புளுட்டோவின் கட்டடளையை மீறி அவன் இவ்வாறு ஓட்டியதற்காகப் பின்னால் ஓராண்டுச் சிறைத்தண்டனை அநுபவிக்க நேர்ந்தது. ஆயினும், அந்த நேரத்தில், ஹெர்குலிஸ் ஏரியைக் கடந்து விட்டான்.


பாதாள உலகிலிருந்த ஆவிகள் அவனைக் கண்டு வெருவி ஓடத் தொடங்கின. அவன் அவைகளுக்குத் திருப்தியுண்டாவதற்காக அங்கிருந்த மாடுகளில் ஒன்றைப் பிடித்துப் பலியிட்டான். மாடுகளின் காவற்காரன் அதைக் கண்டு ஹெர்க்குலிஸைச் சண்டைக்கிழுத்தான். ஹெர்க்குலிஸ், அவனை ஒரு கையால் மேலேதூக்கி, தன் விரல்களால் அவனுடைய நெஞ்சின் எலும்புகளை ஒடிக்கத் தொடங்கினான். அந்தநேரத்தில், புளுட்டோவின் இராணியான பெர்சி டோனி, அாண்மனையிலிருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்தாள். ஹெர்க்குலிஸைக் கண்டதும் அவள் அவனை வரவேற்று காவற்காரனை உயிருடன் விட்டு விடும்படி கேட்டுக் கொண்டாள். அவ்வாறே ஹெர்க்குலிஸ் அவனைக் கீழே எறிந்துவிட்டு, இராணியுடன் அரண்மனைக்குள்ளே சென்று, பாதாள உலக மன்னனான புளுட்டோவைக் கண்டான்.


வாழ்க மன்னா நான் அரசன் பூரிஸ்தியஸின் ஆணையின்மேல் இங்கு வந்திருக்கிறேன். உன்னிடமுள்ள ரெரிபரஸ் நாயைக் கொண்டு செல்ல அநுமதிக்க வேண்டும்! என்று அவன் புளுட்டோவிடம் கேட்டான்.


புலூட்டோ, ‘ஹெர்க்குலிஸ் ! நீ மகா வீரன் என்று மட்டும் நான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். இப்பொழுது நீ ஒரு பைத்தியக்காரன் என்றும் தெரிகிறது! அந்த முத்தலை நாயைக் கொடுத்துவிட்டால், பிறகு இங்கே காவல் காப்பது யார்? என்று கேட்டான்.


மன்னவா! உனக்குப் பணி செய்ய இங்கே எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் தன்னந்தனியாக என் பணிகளை நிறைவேற்றி வருகிறேன். தேவாதி தேவனாகிய என் தந்தையாகிய யேஸ் கடவுளின் கட்டளைப்படியே நான் யூரிஸ்தியஸுக்குத் தொண்டு செய்கிறேன். இதுவரை பதினொரு பணிகளை நிறைவேற்றிவிட்டேன். இது இறுதிப் பணி. என் பணிக்காக நான் உலகின் பல பாகங்களைச் சுற்றி வந்துவிட்டேன். அகரன் அட்லஸ் சுமந்துகொண்டிருக்கும் வான மண்டலத்தை நானும் சுமந்து பார்த்துவிட்டேன். இப்பொழுது, நரக வாயிலைக் காத்து நிற்கும் நாயைக் கொண்டு வா! என்று எனக்குக் கட்டளையிட்டிருப்பதால், அதை நான் எப்படியாவது கொண்டுசெல்ல வேண்டும். அல்லது நான் இங்கேயே மடிய வேண்டும்!' 'அப்படியானால் செரிபாஸ் நாயை நீ கொண்டு செல்வதில் எனக்கு ஆட்சேபமில்லை. உன்னால் முடிந்தால், அதை பிடித்துக்கொண்டு போகலாம். ஆனால், விரைவிலே அதை நீ மீண்டும் இங்கே கொண்டுவந்துவிட வேண்டும்!’


இந்த உரையைக் கேட்டவுடன் ஹெர்க்குலிஸ் அவனையும் இராணியையும் வணங்கிவிட்டு, செரிபரஸ் நின்ற இடத்திற்குச் சென்றான, அது தன் மூன்று வாய்களாலும் பலமாகக் குரைக்கத் தொடங்கிற்று. அலன் தன் கை வலிமையை அதற்குச் சிறிதளவு காட்டி, அதைப் பிடித்து இழுத்துக்கொண்டு, பாதளத்தை விட்டு வெளியேறிச் சென்றான்.



செரிபரஸ் கதிரொளியையே அதுவரை கண்டதில்லை. கதிரொளியில் அதை எவரும் பார்த்ததுமில்லை. யூரிஸ்தியஸ் அதன் கோரமான உடலையும், மூன்று தலைகளையும், பாம்பு- வாலையும் பார்த்தவுடன், திகிலடைந்து, அதைத் திரும்ப யமலோகத்திற்கே கொண்டுசெல்லும்படி கூறினான். ஹெர்க்குலிஸ், செய்து முடிக்க வேண்டிய பணிகளை யெல்லாம் நிறைவேற்றிவிட்டதால், மேற்கொண்டு அவன் மைசீன் கோட்டைக்குள் துழையக்கூடாது என்றும் அவன் கட்டளையிட்டான்.


ஹெர்க்குலிஸ் நாயைத் தூக்கிக்கொண்டு பாதாளம் சென்றான். அங்கே படர்ந்திருந்த இருளைக் கண்ட பிறகுதான் செரிபரஸுக்கு மீண்டும் உயிர் வந்தது! பூமியிலுள்ள சூரியனின் ஒளி அதற்குக் சிறிதும் பிடிக்கவில்லை!