உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி/2. கூடைப் பத்தாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

2.கூடைப் பந்தாட்டம்
(BASKET BALL)

1. தரைக்கு மேலாகப் பந்தாடல் (Air Dribble)

தரைக்கும் கைக்குமாக பந்தைத் தட்டி பந்துடன் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே, மேலாகப் பந்தை எறிந்து, அது தரையினைத் தொடுவதற்கு முன், பத்தைப் பிடித்து விளையாடும் முறை.

2. ஆட்டத்தில் உள்ள பந்து (Alive Ball)

ஆட்ட நேரத்தில் ஆட்டக்காரர்களால், ஆடுகளத்திற்குள்ளேயே ஆடப்படும் பந்து. அதாவது நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு அவரது கையிலிருந்து வழங்கப்படும் பந்து, ஆட்டத்தில் உள்ள பந்து என்று கருதப்படும்.

3.பின் பலகை (Back Board)

பத்தடி உயரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இலக்கான இரும்பு வளையத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பின்புறத் தளமான பகுதி இது. இரும்பால் அல்லது பலகையால் அல்லது கண்ணாடி இழையால் அல்லது மற்றும் ஏதாவது ஒரு தரமான பொருளால் உருவாக்கப்பட்ட தட்டையான உறுதியான பகுதியாகும்.

4.பின் ஆடுகளம் (Back Court)

ஒரு குழுவானது தாங்கள் காத்து நிற்கின்ற வளையம் உள்ள ஆடுகளத்தின் ஒரு பகுதியாகும். அதாவது ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டிலிருந்து தங்கள் வளையம் உள்ள கடைக்கோடு வரையில் உள்ள இடைப்பட்ட பகுதியே பின் ஆடுகளப் பகுதியாகும்.

5.கூடைப்பந்து (Basket Ball)

உருண்டை வடிவமான தோலாலான உறையினால் உள்ளே காற்று நிரப்பப்பட்ட காற்றுப் பையுடன், 600 கிராம் முதல் 650 க்கு மிகாத எடையுடன், 75 செ.மீட்டர் முதல் 78 செ.மீட்டர் மிகாத சுற்றளவு உள்ளது கூடைப் பந்தாகும்.

6.இலக்கு வளையம் (Basket Ring)

தரையிலிருந்து 10 அடி உயரத்தில் பின்புறப் பலகையில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு வளையம் . இந்த வளையத் தின் விட்டம் 18 அங்குலம் வளையத்தின் கனம் 20 செ.மீ.

7.தடுத்தல் (Blocking)

பந்துடன் முன்னேறி வரும் எதிராட்டக்காரரைத் தவிர, பந்தில்லாமல் வருபவரை அவர் வழியில் நின்று முன்னேற விடாது தடுத்தல் ஆடுகளத்தினுள் எங்கே நின்று கொண் டிருந்தாலும், எதிராளியின் இயக்கத்தைத் தடுத்திட நேரும் பொழுது உடலின் மேல் படுதல் அல்லது இடிக்கும் நிலை ஏற்பட்டு விடுதல் ஆகும். 

அதற்குத் தண்டனை சாதாரண தவறு என்றால் 2 தனி எறிகள் அல்லது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு ஏற்றாற்போல, தவறுக்குள்ளானவர் எறியும் வாய்ப்பினைப் பெறுவார்.

8.குழுத் தலைவன் (Captain)

குழுவில் உள்ள ஒரு ஆட்டக்காரர்; சில நேரங்களில் ஆட்டக்காரர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர். சில சமயங்களில் நியமிக்கப்படுபவர்.

தனது குழுவின் சார்பாக ஆட்ட அதிகாரிகளிடம் பேசும் உரிமை பெற்றவர். தனது குழுவின் வெற்றிக்காக அவ்வப் போது முடிவெடுக்கும் வல்லமை உடையவர்.

9. மைய ஆட்டக்காரர் (Centre)

ஆடுகளத்தில் இருந்து ஆடுகின்ற 5 ஆட்டக்காரர்களில் ஒருவர் எல்லா இடங்களுக்கும் சென்று ஆடக்கூடிய வல்லமை உடையவர். குறிப்பாக மற்றவர்களைவிட உயரமானவர்.

பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியின்பொழுதெல்லாம், பங்கு பெறும் வாய்ப்புள்ளவர். அதிலும் ஆட்டம் ஆரம்பமாகும் பொழுதும், இரண்டாவது பருவம் தொடங்குவதற்காக எறியப் படும் பந்துக்காகத் தாவும்போதும் இவர் பங்கு பெறுகிறார்.

10. மைய வட்டம் (Centre Circle)

ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோட்டின் மையப் பகுதியில் 1.80 மீட்டர் ஆரமுள்ளதாகப் போட்டிருக்கும் வட்டம்தான் மைய வட்டம் ஆகும்.



ஆட்டத் தொடக்கத்திலும், இடைவேளைக்குப் பிறகு, தொடங்கும் இரண்டாவது பருவத்திலும் பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சி, இந்த மைய வட்டத்திலிருந்துதான் தொடங்குகிறது.

11.மையத்தாண்டல் (Centre Jump)

மைய வட்டத்திலிருந்து இரண்டு குழுவிலுமுள்ள மைய ஆட்டக்காரர்கள் இருவரும் பங்கு பெறுவது பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியாகும்.

ஆட்ட ஆரம்பத்தின்போதும் இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது பருவத் தொடக்கத்தின் போதும்; தனி எறி நிகழ்ந்திட, அந்த கடைசி எறியின் போது ஏற்படுகிற இரட்டைத் தவறின் போதும் இரண்டு குழுவும் சமமாகத் தவறிழைக்கும் போதும் பந்துக்காகத் தாவல் (Jump Ball) நடைபெறுகிறது.

இரண்டு மைய ஆட்டக்காரரும் மைய வட்டத்தினுள் விதியின்படி நிற்க, அவர்களுக்குக் கைக் கெட்டாதவாறு, நடுவர் பந்தை உயரே தூக்கி எறியவும், அதை இருவரும் தங்கள் குழுவினர் பக்கம் தட்டி விடவும் முயல்வதுமாகும்.

12.ஓய்வு நேரம் (Charged Time-Out)

ஓய்வு வேண்டி ஆட்டத்தின் போது நடுவரிடம் குழுத் தலைவரால் கேட்கப்படுகின்ற விண்ணப்பமாகும்.

ஓய்வு பெறுவதற்காகவும் அல்லது ஆட்டக்காரர் யாராவது காயம்பட்ட நேரத்திலும் அல்லது தவறுக்காளான ஆட்டக்காரர் ஒருவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படும் பொழுதும் பயன்படுத்தப்படுகின்ற நேரமே இந்த ஓய்வு நேர மாகும்.



ஒரு குழு இப்படிக் கேட்கின்ற ஓய்வு நேரத்தை அந்தக் குழுவின் பதிவேட்டுப் பகுதியில் குறிக்கப்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது.

ஒரு பருவத்திற்கு 2 முறை ஓய்வு நேரம் ஒரு குழு கேட்கலாம். ஓய்வு நேரத்திற்குரிய நேரம் 30 நொடிகளாகும்.

13. மோதுதல் (Charging)

தேவையில்லாமல் அல்லது முரட்டுத்தனமாக எதிராட்டக்காரரை இடித்தல் அல்லது மோதுதல். இது தனியார் தவறு (Personal Foul) என்று கூறப்படும்

14. பயிற்சியாளர் (Coach)

ஒரு குழுவில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்திறன் களையும், ஆடும் தந்திர முறைகளையும் சிறப்பாகக் கற்பிக்கும் வல்லுநர் பயிற்சியாளர் என்று அழைக்கப்படுகிறார்.

15. அருகிலிருந்து குறியுடன் எறிதல் (Crip Shot)

இலக்குக்கு அருகில் நின்று, உயரே தாவி, பிறரது இடையூறு எதுவுமின்றி ஒரு கையால் குறியோடு வளையத்திற்குள் பந்தைப் போடுதல் (எறிதல்).

16.நிலைப் பந்து (Dead Ball)

ஏதாவது ஒரு காரணத்திற்காக, ஆடுகளத்தை விட்டு பந்து வெளியே சென்று கிடப்பதை (விடுவதை) நிலைப் பந்து என்று அழைக்கின்றனர்.




பந்து ஆடுகள எல்லைக்கு வெளியே போய், நிலைப்பந்து ஆகிவிட்டாலும், அதனால் போட்டி ஆட்டமானது பாதிக்கப் படுவதில்லை.கூடைப் பந்தாட்டத்தில், நடுவரின் விசில் ஒலி கேட்டதும், ஆடப்படும் பந்து நிலைப் பந்தாகிறது. அதாவது, வளையத்திற்குள் பந்து விழுந்து வெளியேறி வெற்றி எண் பெறுகிற பொழுது: பிடி நிலைப் பந்து (Held ball) என அறிவிக்கப்படுகிற பொழுது, "ஓய்வு நேரம்’ என்கிற போது தவறு அல்லது விதிமீறல் நிகழும் போது: எல்லைக்கு வெளியே பந்து போகிறபோது; தனி நிலைத் தவறுக்காக தனி எறி நிகழும் போது, ஆட்டநேரம் முடிவடைகிறபோது; வளையத்திற்கு பக்கப் பகுதியில் பந்து தங்கிக் கொள்ளும் போது; இன்னும் பல சமயங்களில் பந்து நிலைப்பந்தாகி விடு கிறது.

17. தடுத்தாடும் குழு (Defense)

ஆட்ட நேரத்தில் பந்தைத் தன் வசம் வைத்திருக்காத குழு தடுத்தாடும் குழுவாக மாறி விளையாடுகிறது.

18. ஆட்டத்தைத் தொடங்க தாமதப்படுத்தல் (Delaying The Game)

தேவையில்லாமல், எந்தவிதக் காரணமும் இல்லாமல், ஆட்டம் தொடர்ந்து நடத்தப்படாமல் இருப்பதற்காக ஆட்டக்காரர் அல்லது பயிற்சியாளர் அல்லது மேலாளர் யாராவது ஒருவர் குறுக்கிட்டுக் காரியம் செய்தல்.அதற்கான தண்டனை ஆட்டத்துக்கு ஆட்டம் வேறு படும்




எல்லா ஆட்டங்களிலும், ஆட்டம் தொடர்ந்து நடத்தப் பட விதிமுறைகள் உண்டு அதிலும், இடைவேளை நேரம், ஓய்வு நேரம் என்பதற்கான நேரங்களும் ஒதுக்கப்பட்டிருக் கின்றன. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் காலங்கடத்துவதைத் தான் காலம் கடத்துதல் அல்லது தாமதப்படுத்துதல் என்கிறார்கள்.

19. வெளியேற்றப்படும் ஆட்டக்காரர் (Disqualified Player)

ஒரு குறிப்பிட்ட போட்டி ஆட்டத்தில் பங்கு பெறக் கூடிய தகுதியை இழந்து விட்டார் என்று ஆடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆட்டத்தைவிட்டு அந்த ஆட்டக்காரர் வெளியேற்றப்படுவார். கூடைப்பந்தாட்டத்தில், ஒரு ஆட்டக்காரர் 5 முறை தவறு இழைத்துவிட்டால் , ஆட்டத்திலிருந்தே வெளியேற்றப் படுகிறார். இதற்கும் மேலாக, பண்பற்ற செயல்களில் ஈடுபடு பவர் விரும்பத்தகாத முறையில் தவறிழைப்பவர் மற்றும் விதிக்குப் புறம்பாக ஆடுகளத்தில் நுழைபவர் எல்லாம் ஆட அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

20.நடுக்கோடு (Division Line)

கூடைப் பந்தாட்ட ஆடுகளத்தின் இரு பக்கக் கடைக் கோடுகளுக்கும் உரிய அதாவது இரு வணையங்களுக்கு உள்ள தூரத்திற்கு இடையிலே உள்ள நடுப்பகுதியில் குறிக்கப் பட்டிருக்கும் கோடுதான் நடுக்கோடு ஆகும்.இந்தக் கோடு ஆடுகளத்தை இருபகுதியாகவும் சமபகுதி யாகவும் பிரித்துக் காட்டுகிறது.



21. இரட்டைத் தவறு (Double Foul)

இரண்டு எதிராட்டக்காரர்கள் சேர்ந்தாற் போல் ஒருவர் மேல் ஒருவர் (விதியை மீறி). ஒரே சமயத்தில் தவறு: இழைத்துக் கொள்கின்ற நிலையையே இரட்டைத் தவறு என்கிறார்கள்.

22. பந்துடன் ஓடல் (Dribble)

பந்தைத் துள்ளவிட்டோ அல்லது எறிந்தோ அல்லது தட்டிக் கொண்டோ அல்லது உருட்டி விட்டோ, ஒரு ஆட்டக்காரர். அந்தப்பந்தை தரையில் பட வைத்து, மீண்டும் தன் கையில் படுமாறு, பிறர் வந்து பந்தைத் தொடுவதற்கு முன், ஆடுவதைத்தான் பந்துடன் ஓடல் என்கிறோம்.

மேற்கூறிய வண்ணம் ஒரு கையில் தான் பந்தை ஆட வேண்டும்.

பந்தை இருகைகளாலும் பிடிக்கின்ற போது அல்லது ஒரு கையில் அல்லது இருகைகளிலும் வந்து பந்து தங்க நேர்ந்தாலும் , பந்துடன் ஓடல் முடிவடைகிறது.

23. கடைக்கோடுகள் (End Lines)

ஆடுகளத்தின் அகலப் பகுதியைக் குறிக்கின்ற கோடாகும் ,ஆடுகளத்தின் நீளப்பகுதி 26 மீட்டர் தூரம் என்றால், அகலப்பகுதி 14 மீட்டர் தூரம் இருக்கும்; ஆடுகளத்தின் இரு புறமும் குறிக்கப் பட்டிருக்கும் கடைசி எல்லைக் கோட்டையே கடைக்கோடு என்கிறோம். இணையாக இருக்கும் இரண்டு கடைக் கோடுகளும், குறைந்தது 3 அடி தூரமாவது இடையூறு எதுவும் இல்லாமல் இருக்கும் பகுதியாக விளங்க வேண்டும்.


24. மிகை நேரப் பருவம்(Extra Period)

ஒவ்வொரு பருவமும் 20 நிமிடமாக, 10 நிமிடம் என 2 பருவங்கள் ஆடி முடித்த பிறகும் (மொத்த நேரம் 50 நிமிடங்கள்) வெற்றி தோல்வி யாருக்கு என்று அறிவிக்க முடியாத சூழ்நிலையில் அந்தச் சமநிலையை மாற்றி வெற்றி தோல்வி அறிய மீண்டும் ஆடுவதற்கு இரு குழுக்களுக்கும் தரப்படு கின்ற ஆட்ட நேரமே மிகை நேரம் என்று கூறப்படுகிறது.

மிகை நேரம், ஒரு பருவத்திற்கு 5 நிமிடமாகும். இது போல் எத்தனை மிகைநேரப் பருவமும் தரச் செய்து ஆட வைக்கலாம்.

25. விரைவாக எறிந்து வழங்கல் (Fast Break)

தடுத்தாடுகின்ற ஒரு குழுவினர், தங்கள் பகுதியில் பந்து வளையத்தினுள் எதிர்க்குழுவினரால் எறியப்படுகின்ற வாய்ப்பில், வளையத்துள் பந்து விழாத நேரத்தில் அதனைப் பிடித்து. தாங்கள் எறியப் போகும் வளையத்தின் பகுதிக்கு வேகமாகப் பந்தை எறிந்து தமது குழுவினர் ஒருவர் எளிதாக எதிர் இலக்கினுள் போடக் கூடிய சாதகமான சூழ்நிலையை உண்டு பண்ணுவதாகும்.

தனி எறி எடுக்கும் சமயத்தில் தோல்வியடைகிற போது அல்லது ஆட்ட நேரத்தில் இலக்கினுள் பந்து சென்று வெற்றி எண் பெறுகிற பொழுது, இவ்வாறு பந்தைப் பிடித்து வேகமாக எறிந்து வழங்குவதற்கே விரைவாக எறிந்து வழங்குதல் என்று கூறுகிறோம்.

26. களவெற்றி எண் (Field Goal)

விளையாடும் நேரத்தில், ஆட்டக்காரர்கள் குறிபார்த்து எறிகின்ற பந்து மேலே சென்று தாங்கள் எறியக்கூடிய

வளையத்தினுள் விழுந்து அதன் வழியே புகுந்து, வலையினுள் தங்கி, அதன் வழியாகக் கீழே வரும்போது பெறுகின்ற வெற்றி எண்கள் வெற்றி எண் என்று குறிக்கப்படுகிறது.

27. ஆட்டம் இழத்தல் (Forfeit)

நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகும், 'ஆடுங்கள்' என்ற பிறகும் ஆட மறுக்கின்ற ஒரு குழு, அல்லது விதி முறைகளுக் கடங்காமல் நடக்கின்ற குழு, அல்லது ஆட்டத்தைத் தொடர்ந்து ஆட மறுக்கின்ற குழு; அல்லது தொடர்ந்து முரட்டுத்தனமாக ஆடுகின்ற குழு; அல்லது தரக் குறைவாகப் பேசுகின்ற குழு

இவ்வாறு ஏதாவது ஒரு முறையில் மாறாக நடந்து கொள் கின்ற குழுவானது ஆடும் வாய்ப்பை இழப்பதுடன். எதிர்க்குழுவிற்கு அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதென்று அறிவிக்கப்படும் முறைக்கே ஆட்டம் இழத்தல் என்று. கூறப்படுகிறது.

28. தவறு (Foul)

வேண்டுமென்றே தெரிந்தோ அல்லது தெரியாமலோ விதியை மீறுவது 'தவறு' என்று அழைக்கப்படுகிறது.

அதற்கான தண்டனையாக ஒரு தனி எறி அல்லது இரண்டு தனி எறிகள் எறிய வேண்டும் என்பதாக எதிர்க்குழுவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

29. தனி எறி(Free throw)

தனி எறிக் கோட்டின் பினனால் நின்று கொண்டு. எந்தவிதத் தடையுமின்றி, (பந்து தன் கைவசம் வந்த 5 நொடிகளுக்குள்) வளையத்தினுள் எறிந்து 1 வெற்றி எண்ணைப் பெற ஒரு ஆட்டக்காரர் பெறும் உரிமையே தனி எறி என்று அழைக்கப்படுகிறது.

30.தனி எறி கோடு (Free Throw line)

தனி.எறி எறிபவர் நின்று எறிகின்ற இடம்தான் இது.

ஆடுகளத்தின் இருபுறமும் இருக்கின்ற தனி எறிப் பரப்பில் இக்கோடு குறிக்கப்பட்டிருக்கிறது.

தனி எறிப் பரப்பில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் கடைக்கோட்டுக்கு இணையாக இக்கோடு இருப்பதோடல்லாமல், கடைக் கோட்டின் உட்புற விளிம்பிலிருந்து, தனி எறிக் கோட்டின் விளிம்புவரை 5.80 மீ. தூரம் இருக்க வேண்டும்.

தனி எறிக்கோட்டின் நீளம் 3.60 மீட்டர் ஆகும்.

31. தனி எறிப் பரப்பு எல்லைக் கோடு (Free Throw Lane) -

ஆடுகளத்தினுள் குறிக்கப்பட்டிருக்கும் தனி எறிப் பரப்பின் கோடுகள், கடைக்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து 3 மீட்டர் நீளத்தில் இரு புறங்களிலிருந்தும் தொடங்குகின்றன.

தனி எறிக் கோட்டின் மையத்திலிருந்து 1.80 மீட்டர் நீளத்தில் இருபுறமும் நீண்டுள்ள இரு கோடுகளுடனே, முன்னே கூறப்பட்ட தனி எறிப் பரப்பின் கோடுகள் முடிவடைகின்றன.

ஒவ்வொரு தனி எறிப்பரப்பும் தனி எறிக் கோட்டிலுள்ள மையப்புள்ளியில் 1.80 மீட்டர் ஆரத்தால் ஆன அரை வட்டத்தால் ஆக்கப்படுகின்றன. அந்த அரைவட்டம் தனி எறிப்பரப்பிற்குள்ளே விட்டு விட்டுத் தொடங்கும் கோடுகளால் (Broken Lines) குறிக்கப்படுகிறது.

கடைக்கோடும் தனி எறிக் கோடுமான இந்த இரண்டு கோடுகளையும் இணைக்கின்ற மற்ற இரண்டு கோடுகளுக்கு இடையே எழும் பரப்பளவு தான் தனி எறிப் பரப்பு என்று அழைக்கப்படுகிறது (ஆடுகளம் படம் பார்த்துத் தெளிக)

32.முன்புற ஆடுகளம்(Front Court)

ஒரு குழுவின் முன்புற ஆடுகளம் என்பது எதிர்க் குழுவினர் காத்து நிற்கும் வளையம் உள்ள கடைக் கோட்டிலிருந்து, நடுக்கோட்டின் முன் விளிம்பு வரை உள்ள பரப்பே ஆகும் .

33. காப்பாளர் (Guard)

ஒரு குழுவில் உள்ள 5 ஆட்டக்காரர்களில் இரண்டு பேர் காப்பாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் அவர்களில் ஒருவர் இடப்புற காப்பாளர் மற்றொருவர் வலப்புற காப்பாளர்.

அவர்களின் பணியாவது, தாங்கள் காத்து நிற்கின்ற வளையத்தினுள் எதிர்க்குழுவினர் வந்து பந்தை (வளையத்திற்குள்) எறிந்து வெற்றி எண் பெறாமல் தடுத்தாடிக் காப்பது தான்.

34. ஆடும் நேரப் பருவம் (Hall)

ஒரு போட் டி ஆட்டமானது இரண்டு ஆடும் நேரப் பருவமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டத் தொடக்கத்திலிருந்து இடைவேளை நேரம் வரை உள்ளது முதல் பருவம். இதற்கு 20 நிமிடம்.

இடைவேளை முடிந்து தொடங்கி, ஆட்டம் முடியும்வரை உள்ளது இரண்டாம் பருவம், இதற்கு 20 நிமிடம் .

35. பிடி நிலைப் பந்து (Held Ball)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இருவர், ஒரு கையால் அல்லது இரு கைகளால் வலிமையாகப் பந்தைப் பிடித்துக் கொண்டு இழுத்துத் தங்கள் வசமாக்க முயலுகின்ற நிலையே பிடி நிலைப் பந்து எனப்படுகிறது.

அல்லது, முக அருகாமையில் எதிராட்டக் காரர்களால் சுற்றிச் சூழப்பட்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர், யாருக்கும் பந்தை கொடுக்காமல் அல்லது வழங்காமல், தானே 5 வினாடிகளுக்கு மேல் வைத்திருப்பதையும் 'பிடி நிலைப் பந்து' என்று கூறப்படும்.

இதற்குப் பிறகு, பந்துக்காகத் தாவல் எனும் விதிமுறைப் படி மீண்டும் ஆட்டம் தொடரும்.

36. ஆள் மீது மோதுதல் அல்லது ஆளைப் பிடித்தல் (Holding)

ஒரு ஆட்டக்காரர் எதிராட்டக்காரருடன் மோதி உடல் தொடர்பு கொள்வதுடன். அவரது சுயேச்சையான முன்னேறும் முறைக்கும் பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

அதாவது, நிற்கக் கூடாத இடத்திலிருந்து கொண்டு, பந்தைத் தடுக்க அல்லது எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் ஏற்படும் மோதலே ஆளைப்பிடித்தல் எனும் தவறினை கொடுக்கிறது. 37.இடைவேளை நேரம்(Intermission)

ஆடுகின்ற முதல் பருவ முடிவு நேரத்திற்கும், தொடங்க இருக்கும் இரண்டாம் பருவத் தொடக்க நேரத்திற்கும் இடைப்பட்ட நேரமே இடைவேளை நேரமாகும்.

இவ்வாறு ஆடும் நேரங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற இடைவேளை நேரம் 10 நிமிடங்களாகும்.

38. பந்துக்குத் தாவுதல் (Jump Ball)

ஆட்ட அதிகாரி ஒருவரால், எதிரெதிரே நிற்கும் இரண்டு எதிராட்டக்காரர்களுக்கு இடையிலே நின்று, அவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் பந்தை எறிந்து ஆட்டத்தைத் தொடங்கும் முறைக்கே பந்துக்குத் தாவுதல் என்று கூறப்படுகிறது.

ஆட்டம் துவங்குகிற பொழுதும் இரண்டாவது பகுதியில் ஆட்டம் துவங்குகிற பொழுதும் மிகை நேரத்திற்குப் பிறகு ஆட்டத் தொடக்க நேரத்திலும் 'பிடி நிலைப் பந்து' ஏற்பட்டு அதன்பிறகு ஆட்டம் தொடங்குகிற பொழுதும், ஆட்ட நேரத்தில் சில சமயங்களில் ஆட்டம் நின்று மீண்டும் தொடங்கப்படுகிற நேரத்திலும் 'பந்துக்குத் தாவுதல்' நடைபெறுகிறது.

பந்துக்காகத் தாவும் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிற ஆட்டக் காரர்கள். இருவரில் ஒருவர் பந்தைத் தொடுவதற்குள் மற்றவர் அந்த வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது.

ஒருமுறை பந்தைத் தொட்டுவிட்ட ஒருவர், இரண்டாவது முறையும் தொடர்ந்து தானே ஆடக் கூடாது.

39.(பன் முறைத் தவறு) (Multiple Foul)

ஒரு எதிர் ஆட்டக்காரரின் மேல், எதிர்க்கு ழுவைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஆட்டக்காரர்கள் ஏறக்குறைய ஒரே சமயத்தில் தவறிழைப்பதே பன்முறைத் தவறு என்று குறிக்கப்படுகின்றது.

தவறிழைத்தவர்கள் அத்தனை பேர் மேலும் ஒவ்வொரு "தனியார் தவறு' என்ற குறிப்பு குறிக்கப்படும். எத்தனைத் தவறுகள் சாட்டப்பட்டாலும், அந்தத் தவறுக்கு உள்ளான ஆட்டக்காரருககு இரண்டு தனி எறிகள் தான் தரப்படும்.

40.தாக்கும் குழு (Offense)

பந்தைத் தங்கள் வசம் வைத்திருக்கின்ற குழுவானது தாக்கி ஆடும் குழு என்று பெயர் பெறுகிறது.

41.எல்லைகளுக்கு வெளியே(Out of Bounds)

ஒரு ஆட்டக்காரர் அல்லது பந்து, ஆடுகளத்தின் எல்லைக் கோட்டையோ அல்லது வெளியேயுள்ள தரையையோ தொடும் பொழுது எல்லைக்கு வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது,

எல்லைக்கு வெளியேயுள்ள ஒரு ஆட்டக்காரரைப் பந்து தொடும் பொழுதும்; அல்லது எல்லைக்கு அப்பாலுள்ள ஆட்களையோ, தரையையோ அல்லது பொருளையோ அல்லது வளையம் உள்ள பலகையின் பின்பக்கத்தையோ அல்லது அதைத் தாங்கியுள்ள பகுதியையோ பந்து தொடும் பொழுதும், பந்து எல்லைக்கு வெளியே சென்றதாகக் கருதப்படும். 42. சொந்த இலக்கு (Own Basket)

ஒரு குழுவானது தான் பந்தை எறிந்து வெற்றி எண் பெறுகிற வாய்ப்பளிக்கும் உரிமை பெற்ற ஒரு வளையத்தை 'சொந்த இலக்கு' என்பதாக ஏற்றுக்கொள்கிறது.

43. வழங்குதல் (Pass)

கூடைப் பந்தாட்டத்தில் பந்தை எறிந்து வழங்குவது ஒரு முக்கியமான திறன் நுணுக்கமாகும். ஒரு குழுவைச் சேர்ந்தவர்களிடையே பந்தை மாறி மாறி வழங்கிக் கொண்டு, விதிகளை மீறாமல், எறியும் வளையத்தை நோக்கி முன்னேறிச் செல்வது தான் வழங்குதல் ஆகும்.

44. சுற்றுப் பார்வை(Peripheral Vision)

ஒருவர் தனக்கு முன் புறத்தில் உள்ளவர்களை அல்லது பொருள்களைத் தவிர, சுற்று முற்றும் உள்ள நிலையை ஒரு நொடியில் பார்த்து அறிந்து கொள்ளும் பார்வைக்கு 'சுற்றுப் பார்வை' என்று பெயர். அதாவது, பந்தைத் தன்வசம் வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர், எதிராட்டக்காரர்களின் இயக்கங்கள் எவ்வாறு உள்ளன. தனது குழு ஆட்டக்காரர்கள் யார் யார் எங்கெங்கே இருக்கின்றார்கள் என்பதை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளாமல், ஓரவிழியால், பக்கவாட்டில் பார்ப்பது என்பார்களே அது போல, பார்வையை சுழற்றி மறைமுகமாகக் கண்ணோட்டம் விட்டு அறிந்து கொண்டு ஆடும் திறமைக்குத் தான் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டிருக் கிறது.

45.தனியார் தவறு (Personal Foul)

ஒரு ஆட்டக்காரர், பந்து ஆட்டத்தில் இருக்கும்பொழுது எதிராட்டக்காரர் மேல் தொடுவது அல்லது படுவது போன்ற நிலையில் இயங்கினால், அது தனியார் தவறு என்று அறிவிக்கப் படுகிறது.

அதாவது, ஒரு ஆட்டக்காரர் பந்து ஆட்டத்தில் உள்ள பொழுது, எதிராளியைப் பிடிப்பதோ, தள்ளுவதோ, இடித்து மோதுவதோ, இடறிவிடுவதோ, எதிராளியின் முன்னேற்றத்தைக் கையால், தோளால், இடுப்பால் அல்லது முழங்கால்கள் முதலியவற்றால் நீட்டித் தடை செய்வதோ எல்லாம் தவறான செயல்களாகும்.

தவறு செய்தவர் தனது எண்ணை நடுவர் கூறியவுடனே, கையை உயர்த்திக் காட்டி விடவேண்டும்.

தண்டனை : பந்தை வளையம் நோக்கிக் குறிபார்த்து எறியாத நேரத்தில் தவறு இழைக்கப்பட்டால் தவறுக்கு உள்ளான குழுவிற்கு தவறு நடந்த இடத்கிற்கு அருகில் உள்ளப் பக்கக் கோட்டின் எல்லைக்கு வெளியேயிருந்து பந்தை உள்ளெறிகின்ற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பந்தைக் குறிபார்த்து எறியும் பொழுது தவறு இழைக்கப் பட்டால், அந்த எறி வெற்றி பெற்றால், அது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். தனியாக அதற்கு தனி எறி தண்டனை கிடையாது.

எறி வெற்றி பெறாது போனால், இரண்டு முறை அல்லது மூன்று முறை தனி எறி எறியும் வாய்ப்பு வழங்கப்படும்.

ஒரு ஆட்டக்காரர் 5 முறை 'தனியார் தவறு' பெற நேர்ந்தால் அவர் ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படுகிறார்.

46. சுழல் தப்படி (Pivot)

பந்துடன் முன்னேறிச் செல்லும் ஒரு ஆட்டக்காரரை எதிர்க்குழுவினர் முன்னே நின்று விதி பிறழாமல் தடுத்து நிறுத்துவது முறையான ஆட்டமாகும். அந்த இக்கட்டான நிலையில் அவர்களை ஏமாற்றிச் செல்வது தான் சிறப்பான ஆட்டமாகும் அப்படி ஏமாற்றி முன்னேறிச் செல்ல முடியாத நேரத்திலும் அல்லது பந்தை வளையத்திற்குள் எறிய இயலாத சமயத்திலும். தன்னுடைய குழுவினருக்கு சாதகமான முறையில் எறிந்து வழங்கவும் அல்லது பந்தைத் தட்டிக் கொண்டு மீண்டும் ஓடவும் கூடிய ஏற்ற நிலையில் கால்களை நிலைப்படுத்தி நின்று கொள்ளும் அசைவுக்கு சுழல்தப்படி என்று பெயர்.

அதாவது ஒரு கால் நிலையாக நிற்க, மற்றொரு காலை வசதியான நிலைமையில் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் விருப்பமான இடத்தில் மாற்றி வைக்கும் வகையில் நின்று கொள்வது தான் சுழல்தப்படி முறையாகும்

இதில் நிலையான கால் எது ? சுழல் கால் எது ?

பந்தைப் பிடிக்கும் பொழுது, ஒரு கால் மேலேயும் இன்னொரு கால் தரையிலும் இருந்தால், கடைசியாக எந்தக் கால் தரையில் படுகிறதோ, அது தான் நிலையான காலாகும். மற்றொன்று சுழலும் காலாகும்.

பந்தைப் பிடிக்கும் பொழுது, இரண்டு கால்களும் ஒரே நேரத்தில் சேர்ந்தாற்போல் தரையை மிதித்தால், எந்தக்காலும் நிலையான கால் (Pivot Foot) ஆகலாம்.

நிலையான காலை சிறிதேனும் நகர்த்தி விட்டால், அதற்கு இடம் மாறியது (Moving) என்று தவறு குறிக்கப்படும் .

47.ஆடுகளம்(Playing Court)

ஆட்ட நேரத்தில் தடை செய்யும் எந்தப் பொருள்களும் அருகிலே இல்லாமல் செ. பனிடப்படுகின்ற கூடைப் பந்தாட்ட ஆடுகளம், பொதுவாக 26 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு நீண்ட சதுர வடிவமுள்ள பகுதியாகும்.

புல்தரை ஆடுகளம் ஆடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. உள்ளாடும் அரங்கத்தில் ஆடுகளம் அமைந்தால், அந்த அரங்கத்தின் மேற் கூரையின் அளவு குறைந்தது 7 மீட்டர் உயரமாவது இருக்க வேண்டும்.

48.நடுவர் (Referee)

கூடைப் பந்தாட்டத்திற்கு இரண்டு நடுவர்கள் உண்டு. விதிகளுக்குட்பட்டு, அவர்கள் ஆட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தி நடத்தி முடிப்பார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, எந்த ஆடுகளப் பகுதியில் தாங்கள் இருந்து செயல்பட வேண்டும் என்று பகுத்துக் கொண்டு கண்காணிப்பார்கள்.

எந்த நடுவரும் அவரவருக்கான பகுதியில் தான் கண்காணிக்க வேண்டும். மற்றவர் பகுதியில் எடுக்கின்ற முடிவு பற்றி கேள்விகள் எழுப்பவோ, அல்லது அதனை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரமில்லை.

இரண்டு நடுவர்களும் ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் ஒரு விதிமீறலைப் பற்றி முடிவெடுக்கும் பொழுது, அந்த முடிவு பல வகையானத் தண்டனைகளைத் தருமானால், அவற்றில் கடுமையான தண்டனை எதுவோ, அதையே செயல்படுத்த வேண்டும்.

49. வெற்றி எண் குறிப்பாளர் (Scorer)

முதன் முதலில் ஆடுகளத்தில் இறங்கி விளையாடும் நிரந்தர ஆட்டக்காரர்கள். மாற்றாட்டக்காரர்கள் பெயர்களைக் குறிப்பது: ஆடும் நேரத்தில் பெறுகின்ற கள வெற்றி எண்களை (Field Goal) தனி எறியில் பெறுகிற வெற்றி எண்களைக் குறித்தல் : ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் தரப்படுகின்ற தனியார் தவறுகள். தனிநிலைத் தவறுகளைக் குறித்தல்: 5வது முறை தவறைப் பெறுகின்ற ஆட்டக்காரர் பற்றி நடுவருக்கு அறிவித்தல்; ஒவ்வொரு குழுவும் எடுக்கின்ற ஒய்வு நேரங்களைக் குறித்தல் போன்றவற்றைக் குறிக்கின்ற அதிகாரிக்கு வெற்றி எண் குறிப்பாளர் என்பது பெயராகும்.

50. கைத்திரை (Screen)

பந்துடன் முன்னேறிச் செல்லும் ஒரு ஆட்டக்காரரை அவர் விரும்பிச் செல்லும் இடம் சென்று சேராமல், கைகளை அசைத்து நிறுத்தும் முறைக்கு கைத்திரை என்று பெயர். அதாவது, பந்துடன் முன்னேறுபவரின் பாதையை நேரே நின்று மறைக்காமல், 3 அடிக்கு அப்பால் நின்று, கைகளை முகத்திற்கு நேரே அசைத்து ஆட்டி குறியை மறைக்கலாம். அப்படிக் கைத்திரை இடும் பொழுது, அவர் கண்களுக்கு அருகே கைகளை நீட்டி மறைக்கக் கூடாது.

51. குறியுடன் உதை (Shooting)

பந்தைக் குறியுடன், பத்தடி உயரத்தில் பொருத்தப் பட்டிருக்கும் வளையத்திற்குள் விதிகளை மீறாமல் எறியும் முயற்சிக்கு குறியுடன் எறிதல் என்பது பெயராகும்.

52. மாற்றாட்டக்காரர்கள் (Substitutes)

ஒரு குழுவில் 10 ஆட்டக்காரர்கள் இருப்பார்சள் அதில் 5 பேர் நிரந்தர ஆட்டக்காரர்கள். மீதி 5 பேர்கள் மாற்றாட்டக் காரர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஏற்கனவே குறிப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ள மாற்றாட்டக்காரர்கள் நேரம் கழித்து வந்தாலும். அவர்கள் ஆட்டத்தில் ஆடுகின்ற வாய்ப்பைப் பெறு வார்கள்.

மாற்றாட்டக்காரர்கள் ஆடுகளத்தில் சென்று ஆடும் வாய்ப்பினைக் கீழே காணும் சமயங்களில் பெறுகின்றார்கள்.

1. பந்து நிலைப் பந்தாக மாறுகிறபொழுது (Held Ball)

2. தவறு நிகழ்ந்த நேரத்தில்

8. ஒய்வு நேரத்தில்

4 காயம்பட்ட ஆட்டக்காரரை மாற்றும் சமயத்தில்.

ஆடுகளத்திற்குள் நுழைவதற்கு முன், குறிப்பாளருக்கு அறிவித்துவிட்டே செல்ல வேண்டும் . ஆட்ட அதிகாரியிடமும் கூற வேண்டும். அவர் 20 வினாடிகளுக்குள் ஆடுகளத்திற்குள் நுழைந்து விட வேண்டும்.

53.தனிநிலைத் தவறு (Technical Foul)

ஆட்டத்தில் பங்கு பெறாத அல்லது பங்கு பெறும் ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் மீது மோதி உடல் தொடர்பு இல்லாதபொழுது ஏற்படுகின்ற தவறு தனிநிலைத் தவறு என்று அழைக்கப்படுகின்றது.

தனிநிலைத் தவறு ஏற்படக் கூடிய காரணங்கள் :

1. நடுவர்களை மரியாதை குறைவாகப் பேசுதல் அல்லது அவர்கள் கடமைகளில் குறுக்கிட்டுத் தடை செய்தல். 2. நிந்தனையான சொற்களைப் பயன்படுத்துதல்,

3. பந்தை ஆட்டத்தில் இட தாமதம் செய்தல்.

4. தவறு சாட்டப்பட்ட ஆட்டக்காரர் தன்கையை உயர்த்திக் காட்டாமல் அலட்சியம் செய்தல்,

5. குறிப்பாளர் நடுவரிடம் முன் கூட்டியே அறிவிக்காமல், தனது 'ஆடும் எண்ணை' மாற்றுதல்.

6. மாற்றாட்டக்காரர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் ஆடுகளத்தினுள் ஆடச் செல்லுதல் போன்றவையாகும்.

54. ஓய்வு நேரம் (Time Out)

ஒரு குழு தமக்கு ஓய்வு வேண்டும் என்று நடுவரிட ம் கேட்க உரிமை உண்டு. அவ்வாறு ஒரு ஆட்டப்பகுதி நேரத்தில் (Half) இரண்டு முறை ஒய்வு கேட்கலாம்.

அந்த ஓய்வு நேரம் 30 வினாடிகளாகும். பந்து நிலைப் பந்து ஆனவுடன் தான் ஒய்வு நேரம் கேட்க வேண்டும்.

55. நேரக் காப்பாளர் (Timer)

ஆட்டத்திற்கென்று அங்கீகரிக்கப்பட்டுள்ள கடிகாரத்தை வைத்துக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டு. நடுவர்களுக்கு ஆட்டத்தை நடத்திட உதவி செய்பவர் நேரக் காப்பாளர் ஆவார்.

56.விதிமீறல் (Violation)

விதிமீறல் என்பது விதியின் வழியில் சிறிது பிறழ்ந்து நடப்பதாகும். ஆனால் அது தவறல்ல.