உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி/1. கால் பந்தாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

 1. கால் பந்தாட்டம்
(FOOT BALL)


1.   தாக்கும் குழு (Attacking side)

      எதிர்க் குழுவினருக்குரிய ஆடுகளப் பகுதிக்குள்ளே பந்தைத் தங்கள் வசம் வைத்திருந்து, எதிர்க்குழு இலக்கு நோக்கி உதைத்தாட முயல்பவர்கள், தாக்கும் குழுவினர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

2.   முனைப் பரப்பு (Corner Area)

ஆடுகளத்தின் பக்க கோடும் கடைக் கோடும் இணையும் இடத்தில் கொடிக்கம்பு ஒன்று ஊன்றப்பட்டிருக்கும். ஒவ்வொரு முனையில் இருந்தும், ஆடுகள உட்பகுதியில் 1 கெச ஆரத்தில் கால்வட்டப்பகுதி ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. இது போன்ற முனைப் பரப்புப் பகுதிகள் நான்கு முனைகளிலும் இடம் பெற்றிருக்கின்றன.

முனை உதை (Corner Kick) உதைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் தாக்கும் குழுவினர், இந்தக் கால் வட்டப் பரப்பினுள் பந்தை வைத்துத்தான் உதைக்க வேண்டும். 

3.     முனைக் கொடி (Corner flag)

        ஆடுகளத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொடிக்கம்பு ஊன்றிவைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்பும் மழுங்கிய முனை உள்ளதாகவும், தரைக்கு மேலாக 5 அடி அல்லது 6 அடி உயரத்திற்கும் குறைவில்லாமல், உயரமானதாகவும் இருக்க வேண்டும்.

முனைக் கொடியானது தெளிவான பிரகாசமாக உள்ள வண்ணத் துணியால் ஆக்கப் பட்டிருக்க வேண்டும்.

4.     முனை உதை (Corner Kick)

தடுக்கும் குழுவினரால் (Defending Side) கடைசியாக விளையாடப்பட்டப் பந்தானது, அவர்களது இலக்கிற்குள் செல்லாமல் தரையில் உருண்டோ அல்லது தரைக்கு மேலெழுந்தவாறாகவோ அவர்களுடைய கடைக்கோட்டி ற்கு (Goal Line) வெளியே கடந்து சென்றால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, எதிர்க்குழுவிற்கு முனை உதை வாய்ப்புத் தரப்படுகிறது.

பந்து எந்தப் பக்கமாக கடந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கத்திற்கு அருகில் உள்ள முனைக் கொடிக்கம்பம் உள்ள கால் வட்டப் பரப்பில் இருந்து இந்த முனை உதை உதைக்கப்பட ஆட்டம் தொடங்கும்.

முனை உதை எடுப்பதற்கு செளகரியமாக இருக்கும் பொருட்டு, அங்கிருக்கும் முனைக் கொடிக் கம்பினை அகற்றக் கூடாது. அப்படி யே வைத்தவாறு தான் முனை உதையை உதைக்க வேண்டும்.

முனை உதையின் மூலமாக பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் (Goal) பெறலாம்.
5.     தடுக்கும் குழு (Defending Side)

        எதிர்க்குழுப் பகுதிக்குள்ளே இருந்து அவர்களுடைய இலக்கு நோக்கிப் பந்தை உதைத்தாட முயல்பவர்கள் தாக்கும் குழுவினர் ஆவார். தந்திரமாக முன்னேறி வந்து விட்டாலும், தங்களது இலக்கை நோக்கி பந்தை உதைத்தாட விடாமலும் விடாமுயற்சியுடன் தடை செய்து ஆட முயல்பவர்கள் தடுக்கும் குழுவினர் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

6.     நேர்முகத் தனி உதை (Direct free kick)

        இவ்வாறு நேர்முகத் தனி உதை வாய்ப்புப் பெறுகின்ற குழுவினர், 10 கெச தூரத்திற்குள்ளாக எந்தவிதத் தடையோ அல்லது எதிராளிகள் இடைஞ்சலின்றி, எதிர்க்குழுவின் இலக்கை நோக்கிப் பந்தை உதைத்து இலக்கீனுள் நேராக செலுத்தி வெற்றி எண் பெற வாய்ப்புள்ள முயற்சியாகும்.

        மற்றவர்கள் கால்களில் பட்டு இலக்கினுள் பந்து சென்றால் தான் வெற்றி (கோல்) தரும் என்கின்ற விதிமுறை இல்லாத காரணத்தால் தான், இதற்கு நேர் முகத் தனி உதை என்று அழைக்கப்படுகிறது.

        குறிப்பு : நேர் முகத் தனி உதை தண்டனையாகத் தரப் படுகின்ற குற்றங்களை, (Intentional Fouls) குற்றங்கள் என்ற பகுதியில் காண்க.

7.     முடிவெடுக்கும் அதிகாரம் (Discretionary Power)

        ஆட்ட நேரத்தில் ஆட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கும் (Fouls) விதி மீறல்களுக்கும் (Infractions) உரிய தண்டனையைத் தர நடுவருக்கு உள்ள முழுச் சுதந்திரமாகும். விதிகளுக்குட்பட்டுத்தான் முடிவெடுக்கலாம் என்பதைவிட விதிகளுக்கு அப்பாற்பட்டும் உரிய முடிவை தகுந்த நேரத்தில் எடுக்கும் அதிகாரம் நடுவர்க்கு வழங்கப்பட்டிருப்பதைத் தான் இந்தச் சொல் குறிக்கின்றது.

8.     மிகை நேரம் (Extra Time)

கால்பந்தாட்டத்தின் மொத்த ஆட்டநேரம் 90 நிமிடங்களாகும். அதாவது ஒரு பருவத்திற்கு (Half) 45 நிமிடங்கள் என 2 பருவங்கள் ஆட வேண்டும். பருவ நேரத்திற்கு இடையில் 5 நிமிடங்கள் இடைவேளை.

இவ்வாறு 90 நிமிடங்கள் ஆடியும், இரு குழுக்களும் சமமான வெற்றி எண்கள் எடுத்திருந்தாலும் அல்லது வெற்றி எண்களே எடுக்காமல் இருந்தாலும் மிகைநேரம் மூலமாக ஆட்டம் தொடரப்படுகின்றது.

ஆட்ட நேர முடிவிற்குப் பிறகு, மிகைநேர ஆட்டம் தொடங்குவதற்கு இடையில் உள்ள இடைவேளை நேரம், நடுவரால் தான் தீர்மானிக்கப்படும்.

மிகைநேரப்பகுதியில் ஆட்டத்தைத் தொடங்கிவைக்க, மீண்டும் நாணயத்தைச் சுண்டியெறிந்து, அதன் மூலம் உதை அல்லது இலக்கு இவற்றில் எது வேண்டும் என்பது குழுத் தலைவர்கள் முடிவு தெரிவிக்க, ஆடும் நேரத்தை இருசமபகுதி யாகப் பிரித்துக்கொள்ள, ஆட்டம் தொடங்கும்.

9.     முறையோடு இடித்தாடல் (Fair Charge)

எதிராட்டக்காரரிடமிருக்கும் பந்தை தன் வசம் கொள்வதற்காக, எதிராளியை சமநிலை இழக்கச் செய்து அவரிடமிருந்து பந்தைப் பெறுவதுதான், இந்த முறையாகும்.

அவ்வாறு எதிராளியை இடித்தாடுகின்ற முறையானது, திராட்டக்காரரின் தோள்களுடன் தோள்களாக, இணையாக இருப்பது போன்ற நிலையில் இடித்தாட வேண்டும். இம் முறை தான். விதிக்கு உட்பட்ட முறையோடு இடித்தாடுவ தாகும்.

10.   தவறுகள் (Fouls)

கால் பந்தாட்டத்தினைக் கட்டுப் படுத்தக் கூடிய விதி முறைகளை மீறுவது தவறாகும். இந்தத் தவறானது, தெரியாமல் செய்வது, தெரிந்தே செய்வது என்று இரண்டு வகைப்படும்.

கால்பந்தாட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ள தவறுகள் மற்றும் குற்றங்கள். (Intentional Fouls) என்னென்ன என்பனவற்றை இங்கே காண்போம்.

தவறுகள் ஐந்தாகும். (Fouls)

1.     அயலிடத்தில் நிற்றல் (Off-side)

2.     இலக்குக் காவலன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு நான்கு காலடிகளுக்கு (Steps) மேல் நடந்து செல்லுதல்.

3.     இலக்குக் காவலனின் கையில் பந்து இல்லாத பொழுது எதிர்க் குழுவினர் அவரைத் தாக்குதல் அல்லது மோதுதல்.

4.     உள்ளெறிதல் (Throw-in) தனி உதை (Free Kick), ஒறுநிலை உதை (Penalty Kick) இவைகளின் போது பந்தை ஆடியவரே மீண்டும் இரண்டாவது முறையாக (பிறர் ஆடும் முன்) தானே தொடர்ந்து ஆடுதல்.

5.     ஒறுநிலை உதையில் முன்னோக்கிப் பந்தை உதைக்காமல் வேறு திசை நோக்கி உதைத்தல். குற்றங்கள் (Intentional Fouls)

1. முரட்டுத் தனமாகவோ, ஊறு விளைவிக்கக் கூடிய முறையிலோ எதிர்க்குழுவினரைத் தாக்குதல் (Charging)

2. எதிர்க்குழுவினரை வலிய முறையில், ஊறு நேரும் படி உதைத்தலும், உதைக்க முயலுதலும். (Kicking)

3. எதிர்க்குழுவினரைக் கட்டிப்பிடித்தல், இழுத்தல். (Holding) -

4. அடித்தலும் அடிக்க முயலுதலும் (Striking)

5. கைகளாலும் உடலாலும், எதிர்க் குழுவினரை வேகமாகத் தள்ளுதல் (Pushing)

6. காலை இடறி விடுதல் (Tripping)

7. ஆளின் மேல் விழுதல், ஏறிக் குதித்தல்.

8. (வேண்டுமென்றே) விழுதல். கையால் பந்தைத் தடுத்து நிறுத்துதல், தூக்குதல். அடித்தல், தள்ளுதல் .

9. எதிர்க்குழுவினர் பந்தை ஆடிக் கொண்டிருக்கும் பொழுது பின்புறமிருந்து தாக்குதல்.

11. நான்கு காலடிகள்(Four Steps for the Goal Keeper)

ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே (Penalty Area) மட்டும் பந்தைக் கையால் பிடித்தாடலாம் என்ற சாதகமான ஒரு விதி, இலக்குக் காவலனுக்கு மட்டுமே உண்டு. அந்த விதியின்படி பந்தைப் பிடித்து வைத்திருக்கும் இலக்குக் காவலன் பந்துடன் நான்கு காலடிகள் மட்டுமே நடக்கலாம். மீறி அதற்கு மேல் ஓரடி எடுத்து வைத்தாலும், தவறு செய்தவராகி விடுவார்.

ஆகவே தான், நான்கு காலடிகள் என்ற சொல் கால் பந்தாட்டத்தில் முக்கிய சொல்லாக இருந்து வருகிறது.

12. தனி உதை(Free Kick)

ஒரு ஆட்டக்காரர் விதியை மீறி தவறிழைக்கும் பொழுது, அதற்குரிய தண்டனையாக, எதிர்க்குழுவினருக்கு 'தனி உதை’ எடுக்கின்ற வாய்ப்பினை நடுவர் வழங்குவதையே தனி உதை என்கிறோம்.

இத்தகைய வாய்ப்பில், எந்த விதத் தடையும் இல்லாது எதிர்க்குழுவினரின் பகுதியை நோக்கிப் பந்தை உதைத்தற்குரிய தனி வாய்ப்புக்கேத் தனி உதை என்று பெயர்.

13. இலக்குப் பரப்பு (Goal Area)

ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் 6 கெஜ நீளம் கடைக் கோட்டிலும் அதிலிருந்து ஆடுகளத்தினுள் செங்குத் தாக 6 கெச நீளம் குறிக்கப்படும் கோடுகளுக்கிடையே ஏற்படும் இட அளவைத் தான் இலக்குப் பரப்பு என்கிறார்கள். அதாவது 20 கெச நீளமும் 6 கெச அகலமும் கொண்ட பரப்பளவு இது.

இந்தப் பரப்பளவினால் என்ன பயன் என்றால், இது குறியுதை (Goal-Kick) எடுக்க வேண்டிய எல்லையை கட்டுப்படுத்துகின்றது.

இரண்டாவதாக, பந்துடன் இருக்கும் இலக்குக்காவலன், மெதுவாக இடிக்கப்படலாம். ஆனால், பந்துடன் இல்லாத  வரை இலக்குக் காவலனுக்கு எல்லா விதப் பாதுகாப்பும், விதிகளின் துணையும் எப்பொழுதும் உண்டு,

14. குறியுதை(Goal Kick) தாக்கும் குழுவினர் உதைத்தாடிய பந்தானது, இலக்கிற்குள் செல்லாமல், முழுதும் உருண்டு, கடைக்கோட்டிற்கு வெளியே சென்று விட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க தடுக்கும் குழுவில் உள்ள ஒருவர், பந்தை இலக்குப் பரப்பில் வைத்து உதைத்து ஆடுகளத்திற்குள்ளே அனுப்பும் நிலையைத்தான் குறியுதை என்கிறோம் .

கடைக்கோட்டில் எந்தப் பக்கமாகப் பந்து வெளியே சென்றதோ, அந்தப் பக்கமாக, இலக்குப் பரப்பின் கோட்டில் அல்லது பரப்பில் வைத்து உதைக்க வேண்டிய உதையாகும்.

குறியுதையால் நேரே இலக்கிற்குள் பந்தை செலுத்தி வெற்றி எண் (Goal) பெற முடியாது.

15. கடைக் கோடுகள் (Goal Lines) ஆடுகளத்தின் கடைசி எல்லையைக் குறிக்கின்ற கோடுகள். இந்தக் கோடுகளின் மையத்தில் தான் இலக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆடுகள எல்லையைக் குறிக்கப் பயன்படுவதுடன், மற்றொரு முக்கியமான பணிக்கும் இக்கோடுகள் உதவுகின்றன.

இந்தக் கடைக் கோடுகளைக் கடந்து பந்து வெளியே செல்ல தாக்கும் குழுவினர்கள் காரணமாக இருந்தால் தடுக்கும் குழுவினர் குறியுதை பெற்று ஆட்டத்தைத் தொடங்கு வார்கள். பந்து வெளியே செல்ல தடுக்கும் குழுவினர்கள் காரணமாக இருந்தால், தாக்கும் குழுவினர் முனை உதை வாய்ப்புக்கிடைக்க மீண்டும் ஆட்டத்தைத் துவங்குவார்கள்.

16. விழுந்தெழும் பங்தை உதைத்தல் (Half Volley)

பிறர் ஆடிய பந்தானது கீழே தரையில் விழுந்து, மேலே கிளம்புகின்ற பொழுது, உடனே உதைத்தாடும் தன்மையால் தான் இப்பெயர் பெற்றிருக்கிறது.

17. நடுக்கோடு அல்லது பாதி வழிக்கோடு (Halfway Line)

இந்த கோடு. கால்பந்தாட்ட ஆடுகளத்தை இரு சரிபாதியாகப் பிரிக்கின்றது.

இதன் மைய இடத்தில் தான் மையவட்டம் போடப்பட்டிருக்கிறது. இந்த மையப்பகுதியிலிருந்து தான் ஆரம்ப நிலை உதை (Kick off) எடுக்கப்படுகிறது.

இந்தக் கோடு இரு பகுதியாக ஆடுகளத்தைப் பிரிப்பதால், இரண்டு குழுக்களுக்கும் உள்ள ஆடுகளப் பகுதியானது பிரித்துத் தரப்படுகின்றது. அவரவர் பகுதியில் அவரவர் நிற்கும் வரை யாரும் அயலிடம் (off-side) என்ற தவறுக்கு. ஆளாகாமல் காக்கப்படுகின்றார்கள்.

18. முரட்டுத்தனமான மோதல் (Illegal charging)

எதிராட்டக்காரர் மீது முரட்டுத்தனமாக மோதி ஆடுதல்: அதாவது, கைகளைப் பயன்படுத்தித் தள்ளுதல், இரண்டு கால்களையும், தரைக்கு மேலாகத் தூக்கியவாறு எதிராளி மீது தாக்குதல்; அல்லது பந்திடம் ஒருவரும் இல்லாத போது அவர் மீது மோதுதல் அல்லது அபாயம் நேர்வது போல் ஆடுதல். 19. ஆரம்ப நிலை உதை (Kick- off)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் தங்களுடைய பகுதியிலே, தங்களுக்குரிய ஆடும் இடங்களிலே (Position) நின்று கொண்டிருக்க, பந்தை உதைக்கும் வாய்ப்பு பெற்றக் குழுவில் உள்ள இருவர், மைய வட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பந்தின் அருகில் நிற்க, நடுவரின் விசில் ஒலி சைகைக்குப் பிறகு, அந்தப் பந்தை உதைத்தாடும் முறைக்குத்தான் ஆரம்ப நிலை உதை என்று பெயர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலும்; ஒவ்வொரு முறையும் விதியின்படி பந்து இலக்கினுள் உதைக்கப்பட்டு வெற்றி எண்ணாக (Goal) மாறிய பின்னும்; முதல் பகுதி நேரம் முடிந்த பிறகு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பமாகும். இரண்டாவது பகுதியின் தொடக்கத்திலும்; சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கவும், இந்த ஆரம்ப நிலை உதை பயன்படுகிறது.

20. மறைமுகத் தனியுதை (Indirect Free-kick)

எதிராட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கு எதிராக, தவறுக்குள்ளான குழுவினருக்கு நடுவரால் வழங்கப் படுவது மறைமுகத் தனியுதை என்னும் வாய்ப்பாகும்.

இவ்வாறு உதைக்கின்ற மறைமுகத் தனி உதை என்னும் வாய்ப்பினால், பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் Goal பெற முடியாது. ஆனால், பந்து இலக்கினுள் நுழையுமுன்னர் வேறொரு ஆட்டக்காரர் அப்பந்தைக் காலால் தொட்டோ அல்லது விளையாடியோ இருக்க வேண்டும். 

21. ஆரம்ப நிலை உதை (Kick- off)

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் தங்களுடைய பகுதியிலே, தங்களுக்குரிய ஆடும் இடங்களிலே (Position) நின்று கொண்டிருக்க, பந்தை உதைக்கும் வாய்ப்பு பெற்றக் குழுவில் உள்ள இருவர், மைய வட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பந்தின் அருகில் நிற்க, நடுவரின் விசில் ஒலி சைகைக்குப் பிறகு, அந்தப் பந்தை உதைத்தாடும் முறைக்குத் தான் ஆரம்ப நிலை உதை என்று பெயர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலும்; ஒவ்வொரு முறையும் விதியின்படி பந்து இலக்கினுள் உதைக்கப்பட்டு வெற்றி எண்ணாக (Goal) மாறிய பின்னும்; முதல் பகுதி நேரம் முடிந்த பிறகு இடைவேளைக்குப் பிறகு ஆரம்பமாகும். இரண்டாவது பகுதியின் தொடக்கத்திலும்; சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கவும், இந்த ஆரம்ப நிலை உதை பயன்படுகிறது.

22. எல்லைக் கோட்டு நடுவர்கள் அல்லது துணை நடுவர்கள் (Linesmen)

விளையாடும் நேரத்தில் ஆடுகளத்தின் எல்லைக் கோடு களைக் குறித்துக் காட்டுகின்ற பக்கக்கோடுகள். கடைக்கோடுகள் இவற்றினைக் கடந்து பந்து வெளியே சென்றதை, கொடி அசைத்து நடுவருக்குக் காட்டுகின்ற பணியைச் செய்யும் அதிகாரிகள் எல்லைக் கோட்டு நடுவர்கள் அல்லது துணை நடுவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஒருபோட்டிக்கு இவ்வாறு பணியாற்ற இரண்டு துணை நடுவர்கள் இருப்பார்


இவர்கள் இருவகையாக அழைக்கப்படுவார்கள். பதிவு பெற்ற நடுவர்கள் (Neutral Linesmen). பதிவு பெறாத நடுவர்கள் (Club Linesmen). பதிவு பெற்ற நடுவர்கள் துணை நடுவர்களாக மாறி, எல்லைக் கோட்டு நடுவர்களாகப் பணியாற்றுவார்கள். 'அயலிடம்' மற்றும் ஆட்டக்காரர்களின் முரட்டுத்தனம் போன்ற செயல்களையும் கண்டு அவ்வப்போது நடுவருக்கு. அறிவிப்பார்கள்.

பதிவு பெறாத நடுவர்கள் பந்து எல்லைக்கோட்டைக் கடந்ததா இல்லையா என்பதை மட்டுமே அறிவிப்பார்கள்

23. அயலிடம் (Off-side)

தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவார்.

ஒரு ஆட்டக்காரர் தான் பந்தைப் பெறுகிற பொழுது எங்கு நின்று கொண்டிருந்தார் என்பதைவிட, எந்த சமயத்தில் அவர் எங்கு நின்று கொண்டு தனது குழுவினரிடம் இருந்து பந்தைப் பெற்றார் என்பதைக் கண்டறிந்தே அவர் அயலிடத்தில் இருந்ததாக அறிவிக்கப்படும்.

அயலிடத்தில் ஒரு ஆட்டக்காரர் நிற்கவில்லை என்பதாக கீழ்க்காணும் விதிகளின்படி அறிந்து கொள்ளலாம்.

1. தன்னுடைய சொந்தப் பகுதியில் நிற்கும் பொழுது.

2. தான் நிற்கும் இடத்திற்கு முன்னதாக எதிர்க்குழுவைச் சேர்ந்த யாராவது இருவர் இலக்குக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கும் பொழுது.

3. தான் அயலிடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது, எதிர்க்குழுவினரின் மேல் பந்து பட்டுத் தன்னிடத் தில் வந்தாலும், தன்னால் பந்து கடைசியாக ஆடப்படும் பொழுதும் அவர் 'அயலிடம்' ஆவதில்லை.

4. குறியுதை, முனையுதை, உள்ளெறிதல், நடுவரால் பந்தை தூக்கிப் போடப்படுதல் போன்ற சூழ்நிலைகளில் அவர் தானே பந்தை எடுத்தாடும் போது அவர் அயலிடம் ஆவதில்லை.

தண்டனை : ஒருவர் அயலிடத்தில் நின்றதாக நடுவரால் தீர்மானிக்கப்பட்டால், அதற்குத் தண்டனையாக எதிர்க் குழுவினர் மறைமுகத் தனி உதை உதைக்கும் வாய்ப்பினைப் பெறுமாறு நடுவர் ஆணையிடுவார். தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து எதிர்க்குழுவில் உள்ள ஒருவர் உதைக்க, ஆட்டம் தொடரும்.

24. தடை விதி (Obstruction Rule)

ஆட்ட நேரத்தில், பந்தைத் தானும் விளையாடாமல், எதிராட்டக்காரரையும் ஆட விடாமல் தடுத்துக் கொண்டிருப் பதையே தடை செய்வது என்கிறார்கள். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடுதல். அல்லது எதிராளி இயக்கத்தை உடம்பால் குறுக்கிட்டுத் தடை செய்தல். இதற்குத் தண்டனையாக மறைமுகத் தனியுதை வாய்ப்பு எதிர்க்குழுவினருக்கு வழங்கப்படும்.

25. ஒறுநிலைப் பரப்பு (Penalty Area)

ஒவ்வொரு இலக்குக் கம்பத்தில் இருந்தும் கடைக்கோட்டில் 18 கெஜ தூரம் தள்ளி நேராகக் கோடு இழுத்துப் பின், செங்குத்தாக ஆடுகளத்தினுள் 18 கெஜ தூர நீளம் உள்ள கோடு ஒன்றைக் குறிக்க வேண்டும் . இவ்வாறு இருபுற மும் குறிக்கப்பட்ட இருகோடுகளின் முனைகளையும் ஆடுகளத்தினுள்ளே, கடைக் கோட்டுக்கு இணையாக இணைக்கப்பட வேண்டும். இதற்கு இடையில் ஏற்படுகின்ற பரப்பே ஒறுநிலைப் பரப்பாகும்.

பரப்பின் பயன்கள் :

1 . ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைத் தடுக்கும் குழுவினர் இப்பகுதியில் செய்தால் ஒறுநிலை உதை (Penalty Kick) எனும் தண்டனையைப் பெறுவர்.

2. கைகளினால் பந்தைப் பிடிக்கலாம் என்று இலக்குக் காவலனுக்காக ஒரு விதி, அப் பரப்பில் மட்டுமே இருக்கிறது.

3. ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, தடுக்கின்ற இலக்குக் காவலன், உதைக்கின்ற ஆட்டக்காரர் ஆகிய இருவரைத் தவிர, மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் இப்பரப்பிற்கு வெளியிலே தான் நிற்க வேண்டும். -

4. குறியுதை (Goal Kick) எடுக்கப்படும் பொழுது, தடுக்கும் குழுவினரைத் தவிர, மற்ற தாக்கும் குழு ஆட்டக் காரர்கள் அனைவரும் இப்பரப்பிற்கு வெளியே தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.

26. ஒறுநிலை வளைவு (Penalty Arc)

ஒறுநிலை வளைவு என்பது ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 10 கெஜ ஆரத்தில் வரையப்பட்ட கால் வட்டப் பகுதியாகும். இது ஆடுகளத்தினுள்ளே ஒறுநிலைப்பரப்பிற்கு வெளியே இருக்கும் பகுதியாகும்.

இது ஒது நிலைப்பரப்பின் ஒரு பகுதி அல்ல என்றாலும் ஒறு நிலை உதை எடுக்கப்படுகின்ற நேரத்தில் ஒறுநிலைப் புள் வரியிலிருந்து 10 கெஜ துரத்திற்கு அப்பால் எல்லா ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற எல்லையை சுட்டிக் காட்டவே இந்த வளைவுப் பகுதி பயன்படுகிறது.

27. ஒறுநிலை உதை (Penalty Kick)

தடுக்கும் குழுவினரில் யாரேனும் ஒருவர் தங்களது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டுமென்றே தடுக்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் ஏதாவது ஒன்றைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, எதிர்க் கழுவினருக்கும் 'ஒறுநிலை உதை' வாய்ப்பு வழங்கப்படும். ஆட்டநேரத்தில் அந்த நேரத்தில் பந்து எந்த நிலையில் இருந்தது என்பதைப் பற்றி கவலைப்படாமல், நடுவர் ஒறுநிலை உதை எடுக்கின்ற தண்டனையை அளிப்பார்.

ஒறுநிலை உதை எடுக்கப்படும் முறை

1. ஒறுநிலைப் புள்ளியில் பந்தை வைத்துத் தான் ஒறுநிலை உதை எடுக்கப்பட வேண்டும்.

2. அப்பொழுது, பந்தை உதைக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரர், அதைத் தடுக்க இருக்கின்ற தடுக்கும் குழு இலக்குக் காவலர் இவர்கள் இருவரைத் தவிர, மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே அதாவது, 10 கெச தூரத்திற்கு அப்பால் போய் நிற்க வேண்டும்.

3. பந்து எத்தப்படுகின்ற நேரம் வரை, இலக்குக் கம்பங்களுக்கு இடையே கடைக் கோட்டின் மேல் நின்று கொண்டிருக்கும் இலக்குக் காவலன், தன்னுடைய கால்களை அசைக்காமல் நிற்க வேண்டும் ,

4. பந்தை உதைக்கும் ஆட்டக்காரர் முன்புறம் நோக்கியே பந்தை உதைக்க வேண்டும். 5. ஒறுநிலை உதையால் பந்தை நேராக இலக்கினுள் உதைத்து வெற்றி எண் (Goal) பெறலாம்.

23. ஒறுநிலைப் புள்ளி (Penalty Kick-Mark)

ஒரு இலக்கினைக் குறிக்கும் இரண்டு இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்ட கடைக்கோட்டின் மையத்திலிருந்து 12 கெச தூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே ஒரு புள்ளியைக் (இடத்தைக்) குறிக்க வேண்டும். அந்த இடமே ஒறுநிலைப் புள்ளி எனப்படும்.

இந்தப் புள்ளியில் பந்தை வைத்துத்தான் ஒறுநிலை உதை எடுக்கப்பட வேண்டும்.

29 ஆடும் கால அளவு (Period)

ஒவ்வொரு ஆடும் கால அளவாக ஒரு பருவம் 45 நிமிடங்கள் என்று ஒரு போட்டி ஆட்டத்திற்கு இரண்டு பருவங்கள் உண்டு. அதாவது ஒரு ஆட்டத்தின் மொத்த ஆட்டத்தின் மொத்த ஆடும் நேரம் 90 நிமிடங்களாகும்.

இரண்டு பருவங்களுக்கு இடையில் உள்ள இடைவேளை நேரம் 5 நிமிடங்களாகும்.

90 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் ஆடவேண்டும் என்றால், இரு குழுக்களும் மனம் ஒத்துப் போனால், தேவையான அளவு குறைத்துக் கொள்ளலாம். அந்தக் கால அளவை இரண்டு சம பருவங்களாகப் பிரித்துக் கொண்டு ஆட வேண்டும்.

30. நிலை உதை (Place Kick)

ஆட்டம் தொடங்குவதற்கு முன், இரண்டு குழுவினரும் தங்கள் தங்களது பகுதிகளில் நின்று கொண்டிருக்க வேண்டும். நாணயம் சுண்டுவதின்மூலம் வெற்றி பெற்று, ஆடுகளப் பகுதியா அல்லது நிலை உதையா என்று தேர்ந்தெடுத்து, நிலை உதை உதைத்து ஆட்டத்தைத் தொடங்க இருக்கும் குழுவினரில் இருவர், ஆடுகள மையத்தில், வைத்திருக்கும் பந்தை ஆடிடவர வேண்டும்.

மற்ற எதிர்க்குழு ஆட்டக்காரர்களை அனைவரும் பந்தில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பாலே நின்று கொண்டிருக்க வேண்டும்.

நடுவரின் விசில் ஒலிக்குப்பிறகு நிலைப் பந்தாக வைக்கப் பட்டிருக்கும் பந்தை, ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் பகுதிக்குள் செல்லுமாறு பந்தை உதைக்க ஆட்டம் தொடங்கு கிறது. இதற்குத்தான் ஆரம்ப நிலை உதை என்று பெயர்.

ஆரம்ப நிலை உதை மூலம் உதைக்கப்படும் பந்து அதன் சுற்றளவு முழுவதையும் ஒரு முறை உருண்டு கடந்தால் தான் ஆட்டம் ஆரம்பமானது என்று கருதப்படும்.

மற்ற ஆட்டக்காரர்கள் பந்தை ஆடுவதற்கு முன்பாக, முதலில் நிலை உதையைத் தொடங்கிய ஆட்டக்காரரே இரண்டாவது முறையாகத் தானே ஆடக்கூடாது.

31. ஆடுகளம்(Play Field)

ஆடுகளத்தின் அமைப்பு நீண்ட சதுர வடிவம் ஆகும். பொதுவாக அதன் நீளம் 130 கெசத்திற்கு மேற்படாமலும், 100 கெசத்திற்குக் குறையாமலும்; அதன் அகலம் 100 கெசத்திற்கு மேற்படாமலும் 50 கெசத்திற்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

அகில உலகப் போட்டிகளில் பயன்படுத்தப்படுகின்ற ஆடுகளத்தின் அளவு நீளம் : 120 கெசத்திற்கு மிகாமலும் 110 கெசத்திற்குக் குறையாமலும்; அகலம் 80 கெசத்திற்கு மிகாமலும் 70 கெசத்திற்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

ஆனால் அகில உலகப் போட்டிகளின் அளவு என்று ஆடுகளம் அமைக்கப்படுவது அதிக அளவு என்றால் 110 மீ x 75 மீ; குறைந்த அளவு என்றால் 100 மீ x 84 மீ.

32. ஆட்டக்காரர்கள் (Players)

ஒரு குழுவில் 11 ஆட்டக்காரர்கள் இடம் பெறுவர். அவர்களில் ஒருவர் இலக்குக் காவலராக ஆடுவார்.

நட்புப் போட்டியில் ஆடுகின்ற ஒவ்வொரு குழுவிலும் 2 மாற்றாட்டக்காரர்கள் (Substitutes) உண்டு.

ஆட்ட நேரத்திற்கு முன் நடுவரிடம் 5 பேர்களுக்குக் குறையாமல் மாற்றாட்டக்காரர்களின் பெயர்களைக் கொடுத்து விட வேண்டும். அவர்களில் இருவர் மாற்றாட்டக்காரர்களாக ஆடுவார்கள்.

33. நடுவர் பந்தை ஆட்டத்தில் இடுதல் (Referee Drop The Ball)

கடைக்கோட்டையோ அல்லது பக்கக் கோட்டையோ கடந்து ஆடுகளத்திற்கு வெளியே போன பந்தை யார் கடைசியாக விளையடினார் என்று அறிய முடியாது போகிற நேரத்தில், ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, எதிரெதிர்க்குழுவைச் சேர்ந்த இருவருக்கிடையே, பந்து கடந்து சென்ற இடத்திலிருந்து, பந்தைச் சற்று மேலாகத் தூக்கிப் போட்டு தரையில் படச் செய்து, அவர்களை ஆட வைக்கின்ற செயலுக்குத்தான் நடுவர் பந்தை ஆட்டத்திலிடுதல் என்று கூறப்படுகிறது. 34. ஆட்டக் காலணி (Shoe)

ஒவ்வொரு ஆட்டக்காரரும் விதிகளுக்குட்பட்ட காலணி களையே அணிந்து ஆட வேண்டும் பிற ஆட்டக்காரர்களுக்கு அபாயம் விளைவிக்கின்ற எந்தப் பொருளையும் ஒரு ஆட்டக் காரர் அணிந்து கொள்ளக் கூடாது.

காலணியின் அடித்தட்டும் குமிழ்களும் தோலினால் அல்லது மென்மையான ரப்பரால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். காலணியின் முன்பகுதி பின் பகுதியில் உள்ள குமிழ்கள் அல்லது அடித்தட்டுகள் எல்லால் ¾ அங்குல உயரத்திற்கு மேல் உயர்ந்திருக்கக் கூடாது.

35.உள்ளெறிதல் (Throw-in)

தரைமேல் உருண்டோ அல்லது தரைக்கு மேலாகவோ ஆடுகளத்தின் பக்கக் கோட்டைக் கடந்து, பந்தின் முழுப் பாகமும் கடந்து சென்றால், கடைசியாகப் பந்தைத் தொட்டு விளையாடிய குழுவினரின் எதிராட்டக்காரர்களுக்குப் பந்தை உள்ளே எறிந்து ஆட்டத்தைத் தெடங்குகின்ற வாய்ப்பை நடுவர் வழங்குவார்.

பக்கக் கோட்டைக் கடந்து பந்து சென்ற இடத்திலிருந்து பந்தை உள்ளே எறிவதற்குத் தான் உள்ளெறிதல் என்று பெயர்.

பந்தை உள்ளெறியும் சமயத்தில், ஆடுகளத்தை நோக்கியிருந்தபடி தான் எறிய வேண்டும். பந்தை எறியும் பொழுது இரு கைகளையும் உபயோகித்து, தலைக்கு மேலாக வைத்தே எறிய வேண்டும். பந்தை உள்ளே எறிந்தவர் பிறர் ஆடும் முன், தானே இரண்டாவது முறையாக விளையாடக் கூடாது.

உள்ளெறிதலால் பந்தை நேராக இலக்கினுள் எறிந்து வெற்றி எண் பெற முடியாது.

36. பக்கக் கோடு(Touch line)

ஆடுகளத்தின் பக்க வாட்டில் உள்ள நீண்ட எல்லைக் கோட்டுக்கு பக்கக்கோடு என்று பெயர்.