விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-12-25
மனத்தைப் பற்றி விளக்குவதற்கு நான் கடைப் பிடித்திருக்கிற வழியைப்பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். மனம் மிக சூட்சுமமானது. அதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதனால் அதைக் குறித்து மனவியல் என்கிற புதிய சாஸ்திரம் கூறுகின்ற கருத்துக்களை எடுத்து விளக்குவதிலே நான் ஒரு உத்தியைப் பின்பற்றி இருக்கிறேன். அமைதியாக இருக்கும் கிணற்றிலே அல்லது குளத்திலே ஒரு சிறு கல்லைப் போட்டால் அந்தக் கல் விழுந்த இடத்தைச் சுற்றி வட்டமாக அலை உண்டாகிறதல்லவா? எல்லோரும் இதைக் கவனித்திருக்கலாம். இந்த அலை வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே போகும். இந்த வட்டத்தைப் போலவே மனத்தைப் பற்றிய அறிவும் சிறிது சிறிதாக விரியும் முறையிலே நான் எழுத முயன்றிருக்கிறேன். கூறியவற்றையே சில சமயங்களில் திருப்பி நினைவுக்குக் கொண்டு வரும் வகையிலே அவற்றை நன்கு பதிய வைக்கவும் ஆசைப் பட்டிருக்கிறேன். முன்பு நான் எழுதியுள்ள மனவியல் நூல்களிலெல்லாம் இந்த உத்தியைக் காணலாம். அது ஓரளவிற்கு எனது நோக்கத்திற்கு வெற்றி யளித்திருக்கிறதென்று கண்டேன். ஆகவே அதை இந்நூலிலும் பின்பற்றியிருக்கிறேன். இதை மட்டும் கூறிக்கொண்டு, மேலும் தடை செய்யாமல், உங்களை நூலைப் படிக்குமாறு விட்டு விடுகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையிலே ஒரு திடுக்கிடும்படியான செய்தி வெளியாயிற்று, உலகத்திலே பயித்தியம் அதிகமாகிக் கொண்டு வருகிறதாம். சாதாரண மனிதன் ஒருவன் இப்படிக் கூறியிருந்தால் அதைப்பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவனையே ஒரு பயித்தியம் என்று கூறிவிட்டுச் சும்மா இருந்து விடலாம். ஆனால் இந்தச் செய்தியைக் கூறியவன் அப்படிப் பட்ட சாதாரண ஆள் அல்ல. உன்மையில் அதைத் தனி மனிதன் யாரும் கூறவில்லை. மனித உள்ளத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக பிரான்ஸ் நாட்டிலே ஏற்பட்டுள்ள சிறந்த கழகம் அப்படிப்பட்ட கருத்தை அண்மையிலே தனது அறிக்கையிலே கூறியிருக்கிறது. அதைத்தான் பத்திரிகைக்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தக் கழகத்தின் அறிக்கை கூறுவதாவது: “அமெரிக்கர்களிலே இருநூறு பேருக்கு ஒருவரும்,
|