பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னோரும் பிறப்பும்

19

சேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனா யிருந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்தியவனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள.

சோழமன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக் காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்குகின்ற 'இராசராசேச்சுரம்' என்ற பெரிய கோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத்தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்பபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்டபாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப்படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச் சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி. பி. 972- முதல் 989-வரை இஃது உள் நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப்பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும்படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திரசோழனை அவ்வேங்கிநாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு. அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனையும் சிறைபிடித்துக்கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமா நகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான்.