சொன்னால் நம்பமாட்டீர்கள்/பெரியார் தந்த பத்து ரூபாய்
பெரியார், ஈ.வெ.ரா. அவர்களை மிகவும் தாக்கிப் பேசுவது என் சுபாவம். சொல்லப் போனால் என் அளவு தாக்கிப் பேசுபவர் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம், இருந்தாலும் பெரியாரின் தைரியத்தைக் கண்டு அவரிடம் எனக்குத் தனி மரியாதை உண்டு.
ஒரு சமயம் திருச்சிக்குப் போயிருந்தபோது பெரியாரைப் பார்க்கப்போனேன். அதுதான் முதன் முன்ற நான் அவரைச் சந்திப்பது.
என்னைக் கண்டதும் அந்தத் தள்ளாத வயதிலும் எழுந்து நின்று அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தார்.
”நான் உங்களை அதிகமாகத் தாக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறேன். மன்னிக்க வேண்டும்,” என்று கூறினேன்.
“இதுக்கு எதுக்கு மன்னிப்பு?” உங்க எண்ணத்தை நீங்க சொல்றீங்க. எதாயிருந்தாலும் பயப்படாம சொல்லுங்கள். ஆமா. கதையெல்லாம் சொல்லிப் பேசுவீங்களாமே?” என்று பெரியார் கேட்டார்.
”ஏதோ சில கதைகள், பேசும்போது தானாக வரும், நான் அதிகம் படித்தவன் அல்ல,” என்றேன்.
“எனக்குக் கூட அந்தப்பாணி ரொம்பப் பிடிக்கும். ரொம்ப படிச்சவன் மனசு திறந்து பேசமாட்டான். உங்க பேச்சைநான் ஒரு நாள் கேட்கனுமே” என்றார்.
”ஐயாவுக்கு முன்னாலே நான் என்ன பேச முடியும்?” என்றேன்.
”ஏன் என்னைத் தாக்கிப் பேகங்கள். நான் கோப்ப் படமாட்டேன். ரசிப்பேன்” என்றார்.
“சரி, சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்,” என்று கூறிவிட்டு அன்புடன் விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்த ஒரு மாதத்தில் ”பெரியார் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் ஒன்றில் பேச அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றுக் கொண்டுவிட்டு அதன் பிறகு கொஞ்சம் குழப்பமடைந்தேன். பெரியாரை நேரில் வைத்துக் கொண்டு அவரையே எப்படித் தாக்குவது? என்ற யோசனையில் ஆழ்ந்தேன். எனினும் கூட்டத்திற்குப் பெரிய விளம்பரம் செய்து விட்டார்கள். ‘வந்தது வரட்டும்’ என்று கூட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.
கூட்டடத்திற்கு வந்திருந்த மக்களில் பெரும்பாலோர் பெரியார் பக்தர்கள். பலர் கறுப்புச் சட்டை வேறு போட்டு பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
எதிரில் உட்கார்ந்திருந்த சிலருடைய மீசை அச்சத்தைக் கொடுத்தது. இத்தனைக்கும் மத்தியில் இருட்டில் பூரண சந்திரன் போல பெரியார் ஒரு பறங்கிப் பழமாகக் காட்சியளித்தார்.
அன்புடன் என்னை அவரும் அவர் அருமையாக வளர்க்கும் நாய்க்குட்டியும் வரவேற்றார்கள். பலர் பெரியாரைப் புகழ்ந்து பேசினார்கள். கூட்டம் ஒரே உற்சாகமாக இருந்தது. என் முறை வந்ததும் நான் எழுந்தேன். என்னைக் கண்டதும் சபையில் ஒரு கலகலப்பு ஏற்பட்டது. பேச ஆரம்பித்தேன்.
“தலைவர் அவர்களே, பெரியார் அவர்களே, நான் என்ன பேசினாலும் பொறுமையுடன் கேட்பது என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு வந்திருக்கும் பெரியார் பக்தர்களே.” என்று ஆரம்பித்ததும் சபையில் களைகட்டியது.
“நான் ஒரு முட்டாள்” என்றதும் மீண்டும் கரகோஷம், “ஆமாம், நான் அறிவாளியாக இருந்தால் இந்தக் கூட்டத்திற்கு வந்து மாட்டிக்கொள்ளுவேனா?” என்றதும் , பெரியார், “முட்டாளைத்தான் நாங்க மதிப்போம். இங்கே எல்லோரும் முட்டாள்கள்தான்,” என்றாரே பார்க்கலாம். கூட்டத்தில் வெடிச் சிரிப்பு ஏற்பட்டது.
“பெரியார்கடவுள் இல்லை என்பவர், நான் கடவுள் உண்டு என்று நினைப்பவன். தமிழ் மக்கள் பலர் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு நேர் மாறான எண்ணம் கொண்டவர் பெரியார். இவருடைய செய்கை பலருக்குப் பிடிக்காது. இவர் சொல்வது அநேகருக்கு வேம்பாக இருக்கிறது.
ஆயினும் தமிழ் மக்கள் இவரிடம் தாயன்பு காட்டுகிறார்கள். எதிரிலிருப்பவர்களை முண்டங்களே என்கிறார். ‘முட்டாள்கள்’ என்கிறார். ஆயினும் மக்கள் அன்பு காட்டுகிறார்களே எப்படி? அதுதான்தாயன்பு.
“என் நண்பர் ஒருவருக்கு ஒரு மகன் இருந்தான், அவன் தாயாரைத் தொந்தரவு செய்து பணம் நகை முதலியவற்றை வாங்கிச் சென்று செலவழிப்பது வழக்கம். ஒரு சமயம் அவனுடைய தாய், பணமும் இல்லை, நகைகளும் இல்லை என்று சொல்லிவிட்டாள். உடனே அந்தச் சத்புத்திரனுக்குக் கோபம் வந்து விட்டது. ருத்ரமூர்த்தியாகித் தாயின் தலைமயிரைப் பிடித்து இழுத்து வீதியில் போட்டு நாலு மொத்து மொத்திவிட்டு ஒடிவிட்டான்.
காலையில் ஒடிப்போன பையன் வீட்டுக்கு வரவேயில்லை, சாப்பிடவும் இல்லை. அடிபட்ட தாயாருக்குத் தான் அடிப்பட்டது கூட மறந்து போய்விட்டது. ‘பையன் இன்னும்’ சாப்பிட வரவில்லையே?’ என்ற கவலை வந்து விட்டது.
உடனே பக்கத்து விட்டுக்காரரிடம் போய், தம்பி, நம்ம குப்புசாமி காலையில் சாப்பிடாமல், வெளியே போனவனை இன்னும் காணோம்.
நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கூட்டிக் கொண்டு வருகிறீர்களா? உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு என்று கெஞ்சினாளாம்.
“அது யாரு குப்புசாமி? இன்று காலையில் உன்னைப் போட்டு அடித்தானே அந்தச் சண்டாளப் பயலா? அவன் சாப்பிடவில்லை என்று கவலைப்படுகிறாயாக்கும். போ, போ.” என்று பக்கத்து வீட்டுக்காரர் ரொம்பவும் கோபமாய்ப் பேசினார்.
ஆனாலும் அந்த அம்மாள் விடாமல், “ஐயோ? அவன் ரொம்ப சின்னப் பிள்ளைங்க, தெரிஞ்சது அவ்வளவுதானுங்க. நீங்க கொஞ்சம் தயவு பண்ணி அவனைத் தேடிக் கூட்டியாங்க.” என்று காலில் விழுந்து கெஞ்சினாளாம்.
தாயன்பு என்பது அப்படிப்பட்டது. தமிழ் மக்கள் அந்தத் தாயன்பைத்தான் பெரியாரிடம் காட்டுகிறார்கள்.
“தமிழ் மக்களை அவர் முட்டாள் என்றாலும் முண்டங்களே என்றாலும் தமிழ் காட்டுமிராண்டி மொழி யென்றாலும் திருக்குறள் மட்டமான நூல் என்றாலும் கம்பனைக் கடிந்தாலும் முருகனை, ராமனை, சீதையைக் கேவலமாகப் பேசினாலும் தமிழ் மக்கள் பெரியாரிடம் அன்பு காட்டுகிறார்கள். இதுதான் தாயன்பு என்பதாகும்” என்று கூறி, பெரியாரைக் கொஞ்சமும் தாட்சண்யம் பார்க்காமல் தாக்கிப் பேசினேன்.
பெரியாரும் மகிழ்ச்சியாக என் பேச்சைக் கேட்டு ரசித்தார். நான் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்படலானேன். “இந்தாங்க இதைப் பெட்ரோலுக்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்று 10 ரூபாய் கொடுத்தார். நான் மறுத்தும் கேளாமல் என் பையில் போட்டுவிட்டார்.
சிலமாதங்கள் கழித்து, கும்பகோணத்திற்கு நானும் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒரு கூட்டத்திற்குப் போயிருந்தோம். எங்களுக்குக் கும்கோணம் ஏ.ஆர்.ஆர். சீவல் கம்பெனி அதிபர் திரு. இராமசாமி அவர்கள் வீட்டில் மதிய உணவுக்கு ஏற்பாடாகி இருந்தது.
நாங்கள் அங்கு சென்றபோது பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் அங்கு வந்திருந்தார்கள். பெரியாருடன் ஒவ்வொருவராகப் போட்டோ எடுத்துக் கொண்டு, அதற்காகப் பத்து ரூபாய் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
நானும் பெரியாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். எல்லோரைப் போலவே ரூபாய் பத்து நானும் பெரியாரிடம் கொடுத்தேன். “நீங்களுமா?” என்றார் பெரியார்.
“ஆமா இந்த பத்து ரூபாய் உங்களுடையதுதான். திரும்பி உங்களிடமே வருகிறது” என்றேன். “ரொம்ப மகிழ்ச்சி” என்று சொல்லிப் பெரியார் சிரித்துக் கொண்டார்.