சொன்னால் நம்பமாட்டீர்கள்/கொதிக்கும் சோற்றுப்பானை
வயசுக் கோளாறு காரணமாக என் நண்பர் ஒருவருக்கு ஒரு பெண் சிநேகிதமானாள். மிக நெருங்கிய - நட்புக் கொண்டதனால் நண்பருக்குப் பணச் செலவும் அதிகமாயிற்று. இரண்டு மூன்று ஆண்டுகள் இந்நிலை தொடர்ந்து இருந்தது. செய்வது தவறு என்று என் நண்பருக்குத் தெரிந்தாலும் உறவை முறித்துக் கொள்ள முடியவில்லை.
‘பெண் மயக்கம்’ ஏற்படும்போது யாருடைய உபதேசமும் செவியில் ஏறாது. எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் பெண் விஷயத்தில் இடறி விழுந்து விடுவது இயற்கை. சிலருடைய விவகாரம் வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய விவகாரம் தெரிவதில்லை. புராணத்தில், இதிகாசத்தில், சரித்திரத்தில், சமூகத்தில் இதற்கு எத்தனையோ சான்றுகள் கூறலாம். .
நண்பருக்கு ஏற்பட்ட பெண் மயக்கம் தெளியப் பலவாறு முயன்றேன். ”எப்படி இதிலிருந்து விடுபடுவது?” என்று சிந்தித்துக் கொண்டே நண்பர் தன்னை அறியாமல் மீண்டும் “அங்கேயே” வட்டமிட்டார். இந்நிலையில் ஒருநாள் ஒரு நகைக் கடையிலிருந்து என் நண்பரின் காதலி டெலிபோனில் உடனே அங்கு வரும்படி நண்பரைக் கூப்பிட்டாள்.
அவரும் அவசரமாகப் போனார். சுமார் 3000 ரூபாய்க்கு தங்க நகைகள் (காப்பு, சங்கிலி, போன்றவைகள்) எடுத்து வைத்திருந்தாள் காதலி, என்ன விஷயம் என்று நண்பர் கேட்டார்.
அவளுக்குச் சொந்த ஊரில் ஒரு பெரியம்மா, பெரியம்மாவின் மகளுக்குக் கலியாணம். மணப்பெண்ணுக்குப் போட சில நகைகள் தேவை. இந்த நகைகளைக் காட்டி அவர்களுக்குப் பிடித்தால் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். நகையை எடுத்துப் போக நண்பர் கையெழுத்துப் போட்டால் கடைக்காரர் சம்மதிப்பார். இதுதான் விஷயம் என்று காதலி சொன்னாள்.
‘பூ ஒரு கையெழுத்துத்தானே என்று நண்பர் மறு பேச்சு பேசாமல் கையெழுத்தைப் போட்டு விட்டு, நகையை வாங்கி அவளிடம் கொடுத்து விட்டார். அன்று முழுவதும் காதலி வீட்டில் ஒரே குதூகலம். நண்பருக்குக் கோலாகலம்.
அவள் சொன்னபடி தன் குடும்பத்தாருடன் பெரியம்மாவின் ஊருக்குப் புறப்பட்டுப் போனாள். அந்த ஊர் சென்னையிலிருந்து 400 மைல் தொலைவிலுள்ளது.
ஒருவாரம் கழித்துத் திரும்பி வந்தாள். குடும்பத்தினருடன் வந்தது தெரிந்து நண்பர் ஆர்வத்துடன் காதலியைக் காணச் சென்றார். நண்பரைக் கண்டதும் அந்த காதலியின் குடும்பத்தினர் அனைவரும் விம்மலும் விக்கலும் விசும்பலுமாக அழுகையுடன் கொண்டுபோன நகை திருட்டுப் போய்விட்டது என்று பிரலாபித்தார்கள். நண்பருக்குச் சந்தேகம் தோன்றி விட்டது.
அவர் எதுவும் பேசவில்லை. இரண்டு மூன்று நாட்கள் எப்போதும் போல் அந்த வீட்டுக்குப் போய் வந்து கொண்டிருந்தார். நகை அவர்கள் வீட்டில்தான் இருக்கிறது என்பதும் நண்பருக்கு நிச்சயமாயிற்று.
இந்நிலையில் நகைக் கடைக்காரர் போலீசில் கிரிமினல் கம்பிளைண்ட் கொடுத்து விட்டார். நண்பர் அவர் அன்புக்காதலியிடமும் அவள் குடும்பத்தாரிடமும் நிலைமை மோசமாகப் போகும், நகையைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று எவ்வளவோ மன்றாடினார். அவர்கள் சாதித்து விட்டார்கள்.
நண்பரிடம் அப்போது பணம் கைவசம் இல்லை. அதனால் நேராக என்னிடம் வந்து விஷயத்தைச்சொன்னார். நான் நண்பரை போலீஸ் கமிஷனரிடம் கூட்டிச் சென்றேன். உண்மையைச் சொன்னேன். நகை நிச்சயமாக அவர்கள் வீட்டில் தான் இருக்கிறதா? என்று கமிஷனர் கேட்டார்.
“ஆமா” என்றோம் அழுத்தமாக
உடனே ஒரு போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு அந்தப் பெண்ணின் வீட்டைச்சோதனை போடும்படி உத்தரவிட்டார்.
போலீஸ் அதிகாரி பெண்ணின் வீட்டிற்குப் போனதும் அவருக்கு ஏக உபசாரம் நடைபெற்றிருக்கிறது. வந்த விஷயத்தை அதிகாரி சொல்லியிருக்கிறார். “அதற்கென்ன நன்றாகப் பாருங்கள்” என்று அங்குள்ள பெண்கள் அனைவரும் குழைந்திருக்கிறார்கள்.
அதிகாரி வீட்டைச் சோதனை போட்டு விட்டு “நகைகள் ஒன்றும் இல்லை” என்று வந்து விட்டார்.
மேற்படி அதிகாரி உஷாரானவர்தான். எதற்கும் மசியக்கூடியவரல்ல. இருந்தும் அவர் ஏமாந்து விட்டார் என்றுதான் நாங்கள் நினைத்தோம்.
போலீஸ் கமிஷனரிடம் நான் வாதாடினேன். கமிஷனர் எங்களுக்காக மிகவும் பரிதாபப்பட்டார். இரண்டு நாள் தவணை கொடுங்கள். நான் கண்டு பிடித்துச் சொல்கிறேன்” என்று அவரிடம் தவணை வாங்கிக் கொண்டு சென்றேன்.
என் நண்பரின் காதலி வீட்டில் ஒரு சமையல் ஆள் உண்டு. அவளுக்கு நண்பர் நிறையச் செய்திருக்கிறார். அவள் மார்க்கட்டுக்குப் போகும் நேரம் நண்பருக்குத் தெரியும். மார்க்கெட்டுக்கு அருகில் நானும் நண்பரும் காத்திருந்தோம். சமையல்காரி வந்தாள். அவளிடம் ரூ.100 கொடுத்தோம்.
நைசாகப் பேசி அன்று அதிகாரி வந்தபோது நகையை எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் என்ற விஷத்தையும் தெரிந்து கொண்டேம். சமையல்காரியும் நாங்களும் சந்தித்ததையாரிடமும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்து கொண்டோம்.
மறுநாள் போலீஸ் கமிஷனரைச் சந்தித்தேன். தயவு செய்து இன்று மீண்டும் அந்த வீட்டைச் சோதனை செய்யும்படி உத்தரவிட வேண்டும் அதிகாரியுடன் நானும் செல்ல அனுமதி வேண்டும். என்றேன். கமிஷனர் அவர்கள் அருள் கூர்ந்து அப்படியே செய்தார்கள்.
அதிகாரியும் நானும் மேற்படி பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். எங்கள் இருவருக்கும் பலத்த உபசாரம் நடந்தது. அதிகாரி பல இடங்களில் தேடினார் நானும் கூடவே இருந்தேன். பெண்களும் ஆர்வத்துடன் பீரோ, மேஜை.பெட்டி எல்லாவற்றையும் திறந்து காட்டினார்கள். -
ஒரு இடத்திலும் நகை இல்லை. அதிகாரி என்னைப் பார்த்தார். நான், “சரி சமையற் கட்டில் தேடலாம்” என்று கூறிச் சட்டென்று சமையல் அறைக்குள் நுழைந்தேன். அங்குள்ள டப்பாக்கள், பெட்டிகள் எல்லாவற்றையும் அதிகாரி சோதனை செய்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.
“இனி என்ன செய்வது?” என்றார் அதிகாரி.
“இதனுள்தான் இருக்கிறது” என்று அடுப்பில் சோறுவெந்து கொண்டிருக்கும் தவலையைக் காட்டினேன்.
“உலை கொதிக்கும் தவலையிலா இருக்கும்?” என்று அதிகாரி கேட்டார்.
அதற்குள் பெண்கள், “சோறு வேகிறது, அதற்குள் நகை எப்படி இருக்க முடியும்” என்று அதிகாரியை ஒட்டி உரசிப் பேசினார்கள். நான் ஒரே அடியாக, “சோற்றுத்தவலையைக் கீழே இறக்கிச் சோதனை போடுங்கள்” என்று சத்தம் போட்டேன்.
அதிகாரியும் வேறு வழியின்றிச் சோற்றுத் தவலையைக் கீழே இறக்கச்சொல்லி சோற்றை கீழே கவிழ்த்தார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள், அத்தனை நகைகளும் பொலபொலவென்று கொதிக்கும் சோறுடன் சேர்ந்து கொட்டின
அன்றே என் நண்பரின் பெண் மயக்கம் தீர்ந்தது. சோதனை போட வேண்டிய இடங்களில், இனி சோறு கொதித்துக் கொண்டிருக்கும் பானைக் குள்ளும் சோதனை போடவேண்டும் என்ற புதிய விஷயம் ஒன்ற போலீசாருக்கும் புலனாயிற்று.