கிரிக்கெட் ஆட்டத்தின் கதை/பந்தாடும் தரை

விக்கிமூலம் இலிருந்து

8. பந்தாடும் தரை (Pitch)

பந்தெறியாளர் ஓடிவந்து பந்தெறிய, அதைப் பந்தாடும் மட்டையுடன் நின்று தடுத்தாடும் ஆட்டக்காரர் ஆட முயலும் தரைப் பகுதியையே பந்தாடும் தரை என்கிறோம். தோன்றிய காலம் எது என்றால் வரலாற்றுக் குறிப்புக்கு அகப்படாமல் கிரிக்கெட் ஆட்டம் வட்டம் போட்டுக் கொண்டிருந்தாலும், ஒரு சில விவரமான குறிப்புக்கள் கிடைத்தவற்றில், ஆச்சரியமான உண்மையை நமக்குத் தெரிவிப்பது இந்தப் பந்தாடும் தரைதான்.

கிரிக்கெட் ஆட்டத்திற்கென்று பல விதிகள் 1744ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டன. அந்தத் தருணத்தில் பந்தாடும் தரையானது இரண்டு விக்கெட்டுகளுக்கும் இடைப்பட்ட தூரமாக அமைக்கப்பட்டு, அதன் நீளம் 22 கெஜம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதுவே இத்தனை ஆண்டுகளும் மாறாமல், ஒரே அளவில் இருந்து வருவதுதான் நமக்கு ஆச்சரியமானதாகும்.

இந்த அளவு முதன் முதலாக எவ்வாறு அமைந்தது என்ற காரணத்தை அறிய விழைபவருக்கு, இங்கிலாந்தில் உள்ள சேக்சன் எனும் பகுதியில் உள்ள நிலப்பகுதியின் துண்டு நிலங்களின் அகல அளவானது, இந்த நீளத்தில் தான் இருந்தன. அந்த அளவே அப்படியே இதற்கும் வந்திருக்கலாம் என்று ஒரு சிலர் அபிப்பிராயப் படுகின்றனர்.

அதேபோல, நிலத்தை அளக்கின்ற சங்கிலியின் நீளமும் 22 கெஜமே அமைந்திருப்பது, இரண்டையும் சம்பந்தப்படுத்தி எண்ணவும் தோன்றுகிறதல்லவா! என்றும் சிலர் கூறுகின்றனர். எந்தக் கருத்து எப்படி இருந்தாலும், இந்த 22 கெஜ நீளமான பந்தாடும் தரையின் நீளத்தின் அளவு இதுவரை மாறாமலே இருந்து வருகிறது.

தற்போது தொடங்குவதற்கு முன்னர், இரண்டு குழுத் தலைவர்களும் ஆடுகின்ற மைதானத்திற்குச் சென்று, நாணயத்தைச் சுண்டியெறிய, ஒருவர் பூவா தலையா என்று கேட்க, கேட்பதில் வெற்றி பெற்றவர், பந்தெறிவதா அல்லது பந்தாடுவதா என்று விரும்பியதைக் கேட்கும் உரிமை பெற்றுத் தேர்ந்தெடுப்பது நடைமுறையில் இருந்து வரும் பழக்கமாகும். ஆனால், 1744ஆம் ஆண்டில் புதுவிதிகள் தோன்றுவதற்கு முன்னதாக, இன்னும் ஒரு புதிய பழக்கமும் நாணயம் சுண்டி எறியும்போது இருந்தது.

நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகின்ற குழுத் தலைவர், முன்னர் கூறிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், எந்த இடத்தில் விளையாடுவது என்று பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் பழக்கமும் இருந்தது. இரண்டு குழுக்கள் பொதுவான மைதானத்தில் ஆட நேரும் போது, இவ்வாறு உரிமையை அப்படித் தந்திருந்தார்கள்.

ஒரு குழு தனது சொந்த மைதானத்தில் ஆட நேர்ந்தால், விளையாட அங்கே வருகின்ற மற்றொரு குழுவிற்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பினை முதலிலேயே அளித்ததுமல்லாமல், எந்த இடத்தில் ஆடவேண்டும் என்று பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் கூட அளித்து வந்தார்கள். இப்படி செய்வதானது, விளையாட வருகின்ற குழுவிற்கு அதிகமான உரிமையைத் தருவதாக அமைந்து, இன்னொரு குழு இருக்கின்ற உரிமையையும் இழக்கும்படி ஆகின்றது என்பதாக அமைந்து, 1811ம் ஆண்டு. அந்த விதியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினர்.

இரண்டில் ஒன்றைத் தோந்தெடுக்கும் உரிமையை இரண்டு குழுத் தலைவர்களுக்கும் விட்டுவிட்டுப், பந்தாடும் தரையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையானது நடுவர்களிடம் விடப்பட்டது. இந்த விதியும், தயாரிக்கப்பட்டு செப்பனிடப்பட்ட பந்தாடும் தரைக்கே பொருத்தமானதாக அமைந்தது.

அடுத்ததாக, பந்தாடும் தரையில் எல்லைக்கோடுகள் (Crease) அமைந்த விதம் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், கிரிக்கெட் ஆட்டம் ஆடப்பட்டபொழுது, விக்கெட்டுக்கு முன்னால் தற்போது குறித்து வைக்கப்பட்டிருக்கும் கோடுகளுக்குப் பதிலாக, சிறு குழி ஒன்று பறித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது, பந்தடித்தாடும் ஆட்டக்காரர் ஒரு ஒட்டம் எடுக்க, ஒரு விக்கெட்டிலிருந்து மற்றொரு விக்கெட்டை நோக்கி ஓடி வந்து விக்கெட்டுக்கு முன்னால் உள்ள கோட்டைத் தொட்டால் போதும். ஆனால் அந்தக் காலத்தில் ஓடி வந்து அந்தக் குழியில் பந்தாடும் மட்டையை வைத்தால்தான் ஓட்டம் குறிக்கப்படும். அதற்குள் பந்தைத் தடுத்தாடுவார் அந்தக் குழியில் பந்தைப் போட்டுவிட்டால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழக்க வேண்டும்.

இந்த ஆட்டமுறை அமைப்பானது 1802ம் ஆண்டு தோன்றிய விதி ஒன்றினால் சற்று மாற்றம் பெற்றது. இந்தக் கோடானது, விக்கெட்டுக்கு முன்புறம் 46 அங்குல தூரத்தில் குறிக்கப்பட வகை செய்யப்பட்டது. இந்த 46 அங்குல நீளம் எப்படி வந்தது என்றால், அந்தக் காலத்தில், இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட துணிகள் 46 அங்குல அகலத்தில் தான் இருந்து வந்தன. அந்த அகல அளவையே இதற்கும் நீள அளவாக வைத்து விட்டார்கள் என்று கூறப்படுகிறது.

1819ம் ஆண்டு, அந்த நீள அளவு சற்று விரிவு பெற்றது. அதாவது 48 அங்குலமாக நீண்டு கொண்டது. விக்கெட்டிலிருந்து பந்தடித்தாடும் எல்லைக்கோடானது (popping Crease) 4 அடி தூரத்திற்கு வந்து, அந்த அளவிலேயே இன்றும் தொடர்ந்து வருகிறது. அத்துடன் விக்கெட்டின் குறிக்கம்பிலிருந்து (Stump) இருபுறமும் 6 அடி தூரம் (1.83மீ) விரிவுபடுத்தி விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

அதுபோல, பந்தெறி எல்லைக்கோடும் (Bowling crease) கொஞ்சங் கொஞ்சமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. 1744ம் ஆண்டுதான், பந்தெறி எல்லைக்கோடும் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தது. விக்கெட்டுக்கு இருபுறமும் 3 அடி தூரம் நீட்டப்படவேண்டும் என்பது தான் முதன் முதலாக வந்த விதியாகும்.

அப்பொழுது, கோட்டுக்குப் பதிலாக, புல்தரையை வெட்டிக் கோடு போல ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த முறை 1830ம் ஆண்டிலிருந்து மாறி வெள்ளை வண்ணம் அடித்து கோட்டைக் குறிக்க வேண்டும் என்ற முறையும் அமுலுக்கு வந்தது.

1821ம் ஆண்டு, அந்தக் கோடு 3 அடி 31/2 அங்குல தூரம் நீட்டப்படவேண்டும் என்ற விதிமுறை வந்தது.

அதற்குப் பிறகு 1902ம் ஆண்டு, மீண்டும் ஒரு புதிய விதி வந்தது. அதன்படி, விக்கெட்டுக்கு இருபுறமும் 4 அடி தூரம் கோட்டினை நீட்டிவிட வேண்டும் என்பதே!

1939ம் ஆண்டிலிருந்து பந்தெறியும் எல்லைக்கோட்டின் முழு நீளம் 8 அடி 8 அங்குலம் ஆகிவிட்டது. அதாவது விக்கெட்டுக்கு இருபுறமும் 4 அடி 4 அங்குலமாகும். தற்பொழுதுள்ள விதியும் இதுவேதான். விக்கெட்டில் உள்ள நடுகுறிக் கம்பிலிருந்து இருபுறமும் 4 அடி 4 அங்குல நீளம் அந்தக் கோடு விரிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதே

பந்தாடும் தரையில் இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த பொழுதே, பந்தாடும் தரையை எவ்வாறு பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் என்றும் விதிகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் வந்திருக்கின்றன.

ஆரம்ப நாட்களில் பந்தாடும் தரைபற்றி அவ்வளவாக யாரும் அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆட்டத்தில் வேகமும் போட்டியும் அதிகமாக ஆக, பந்தாடும் தரை பற்றிய நினைவும் மிகுதியாக இடம் பெறலாயிற்று. 1788ம் ஆண்டில் தோன்றிய ஒரு விதியின்படி, பந்தாடும் தரையில் புல் செதுக்கல், தண்ணி விடுதல், உருளையால் உருட்டுதல், மூடிவைத்தல் போன்ற எல்லா காரியங்களுக்கும் இரு குழுத் தலைவர்களும் ஏகமனதாக சம்மதித்தால்தான் நிகழ்த்தலாம் என்பதாக வந்தது.

அதன் பின்னர் , பந்தடித்தாடும் தரையில் ஈரப்பகுதியைப் போக்கிட, மரத்தூளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டது. 1849ம் ஆண்டு மேலும் ஒரு மாற்றம். ஏதாவது ஒரு குழு விரும்பினாலும் ஒவ்வொரு முறை ஆட்டம் (Innings) தொடங்குவதற்கு முன்னும் பந்தாடும் தரை கூட்டி உருட்டப்படவேண்டும் என்பதாக மலர்ந்தது.

பின்னர், இரண்டு 'முறை ஆட்டத்திற்கு' இடையில், பந்தடித்தாட விரும்பும் குழு விரும்பினால், பந்தாடும் தரை உருட்டப்படலாம் என்று 1860ம் ஆண்டு புதிய விதிமுறை புகுத்தப்பட்டது.

1863ம் ஆண்டு அந்த விதியில் மேலும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, போட்டி ஆட்டம் தொடங்கும் ஒவ்வொரு நாள் ஆரம்பத்திலும் 10 நிமிடத்திற்குள் பந்தாடும் தரையை உருட்டிவிட வேண்டும் என்பதாக வந்தது. 1910ம் ஆண்டு, ஒடி வந்து பந்தெறிவோர் காலடியில் விழுகின்ற பள்ளத்தை நிரவிவிடவும், பந்தடித்தாடுபவர் நின்றாடும் இடத்தில் ஏற்படும் குழியையும் சரி செய்யவும் விதி மாற்றம் ஏற்பட்டது.

1931ம் ஆண்டு, 7 நிமிடத்திற்குள்ளே பந்தாடும் தரை உருட்டப்படவேண்டும் என்ற தற்போதைய விதிமுறை ஏற்பட்டது. இவ்வாறாக பந்தாடும் தரை, பல மாற்றங்களைப் பெற்று, ஆட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும் தோன்றிட வழி வகுத்துத் தந்தது.