உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கவி திலகம் அ. மருதகாசி பாடல்கள்/தன்னிகரற்ற இன்னிசைக் கவிஞர்

விக்கிமூலம் இலிருந்து

தன்னிகரற்ற இன்னிசைக் கவிஞர்


"பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின் மிசை இல்லையடா"

- என்று புத்துலகக் கவி பாரதியார் அன்று பாட்டின் பெருமையை வியந்து, பாராட்டிப் பாடினார். இன்று அந்த வரிகளுக்கு விளக்கமாக தமிழ்த் திரையுலகில் முடிசூடாப் பெருங்கவியாக விளங்கி வருகின்ற மதிப்புமிகு அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் விளங்குகின்றன. ஒரு காலத்தில் தமிழ்த் திரைப் பாடல்கள் இலக்கியமாக முடியுமா? என்ற வினா எழுந்ததுண்டு. அதற்கு, முடியும் என்று தங்களுடைய ஆற்றலால், அரிய படைப்புகளால் விடையளித்த கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர், பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் என்றால் மிகை இல்லை. அதற்குச் சான்றாக அவரின் இந்தத் திரைப்படப்பாடல் தொகுப்பு விளங்குகிறது. நான் சின்னஞ் சிறுவனாக உலவிய போது, செந்தமிழை உண்டு களிக்கக் கள்வெறி கொண்டு திரிந்தபோது, பாடி மகிழ்ந்த பாடல்களிலே அண்ணன் மருதகாசி அவர்களின் பாடல்கள் முன்னிடம் பெற்று இருந்தன.

"வாராய் நீ வாராய்!
போகுமிடம் வெகுதூரமில்லை நீவாராய்"
"மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா
தம்பிப்பயலே!-இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவலே!"
"உலவுந் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே!"
"கண்வழி புகுத்து கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?"
"மாசிலா உண்மைக் காதலே!
மாறுமோ செல்வம் வந்த போதிலே!"
"தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? - காதல்
கண்கள் உறங்கிடுமா?"
"இதுதான் உலகமடா! - மனிதா
இதுதான் உலகமடா! - பொருள்
இருந்தால் வந்து கூடும்! - அதை
இழந்தால் விலகி ஓடும்!"
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே!
வேற்றுமையை வளர்ப்பதாலே விளையும் தீமையே"

என்று இப்படி எண்ணற்ற பாடல்களை என் இதயத்தேரில் ஏற்றி, ஊர்வலம் வந்த அந்த நாட்களை இன்று நினைத்தாலும் என் நெஞ்சில் இனிமை சுரக்கிறது.

"மணப்பாறை மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயல் காட்டை உழுதுபோடு சின்னக்கண்ணு!-பசுந்
தழையைப் போட்டு பாடுபடு செல்லக்கண்ணு"

போன்ற பாடலும்,

"ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே!"
"தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்!
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!"

"விவசாயி! விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி!"

என்பன போன்ற பாடல்களும் அன்று காடுகரையெல்லாம். எதிரொலித்து மணமூட்டின, ஏன்? இன்றும் தான்!

"அந்தப் பாடலாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு வருமா?" என்று கூட ஏங்கியிருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு என்னையுமறியாமல் ஒரு நாள் திடீரென்று எனக்குக் கிடைத்தது. 1965-ம் ஆண்டு என்ற நினைவு. என் நண்பர் ஒருவருடன், திரைப்பட நடிகர் V. K. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் செல்கின்றேன், இரவு நேரம். திரு V. K. R. உடன் இன்னொரு பெரியவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அழைத்துச் சென்ற நண்பர் திரு V.K.R அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துகிறார். அந்த நொடியே அவர் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், திடுமென எழுந்து என் கரங்களை சகோதர பாசத்தோடு, உரிமையோடு பற்றிக் கொண்டு உறவு கொண்டாடி நலம் விழைகிறார். முன் பின் அறியாத இளைஞனாகிய என்னை, அத்துணை பாசத்தோடு அரவணைத்துப் பாராட்டத் தொடங்கிய அவர்தான் பெருங் கவிஞர் மருதகாசி என்று அறிந்து, திகைத்துப் போய் விடுகின்றேன். அந்தக் கவிதைப் பெருமகனின் பணிவு, இன்னும் என்னுள் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றது. ஏறக்குறைய 4000 பாடல்களை அரிய கவிதை இலக்கியச் சொத்தாக வழங்கி இருக்கின்ற அவரின் ஆற்றலால் தமிழ்க் கவிதை உலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இன்னிசைத் துணையோடு எதிரொலித்து வரும் அந்தப் படைப்புகளெல்லாம் நூல் வடிவம் பெறவில்லையே என்று ஏங்கிக் கிடந்த, எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். திரைப்படப் பாடல்களை மக்கள் இலக்கியமாக ஆக்குவதில் முயன்று வெற்றி கண்டவர்களில், குறிப்பிடத் தகுந்தவர் அண்ணன் மருதகாசி அவர்கள்.

எளிமை, இனிமை, அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப அமையும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், அதனுள் சமூகப்பார்வை பிணைத்து வெற்றி காணும் திறமை அவருக்கே உரிய தனித் திறமையாகும்.

"அழகை ரசிப்பதில் கவிஞன் நான்!
அன்பு காட்டினால் அடிமை நான்!
பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன்
பரந்த நோக்கம் உள்ளவன் நான்!"

என்ற அவரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாகவே இன்றும் அவர் வாழ்ந்து வருகின்றார்.

எந்தவிதப் பின்னணிகளும் இல்லாமல் எந்தவிதப் பெரிய மனிதர்கள் அரவணைப்பும் இல்லாமல், தன் திறமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு, பல்லாயிரம் விழுதுகளுடன் படர்ந்து நிற்கின்ற ஒரு ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கின்ற பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள் இன்றைய கவிதை உலகில் குறிப்பாக தமிழ்த் திரைப்பட உலகில் தலையாய வழிகாட்டி என்றால் மிகை இல்லை. தன்னிகரில்லா இந்த இன்னிசைப் பெருங்கவிஞரின் உழைப்பால், ஆற்றலால் தமிழன்னை, பெரிதும் புன்னகைத்துப் பூரிப்படைந்துள்ளாள்! வழி காட்டுதற்குரிய இக்கவிஞரின் வழிநடந்து வாழ்வோம். இப்பெருமகனை வணங்கி வாழ்த்துவோம்.

வெல்க பெருங்கவிஞர் மருதகாசி கொள்கைகள்!

அன்பன்.

பொன்னடியான்

"முல்லைச்சரம்"
43, துரைசாமி சாலை,
வடபழனி, சென்னை-26