விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்/எதிரியானாலும் மனிதன் தான்

விக்கிமூலம் இலிருந்து
30. எதிரியானாலும் மனிதன் தான்!

எதிர்த்துப் போட்டியிடுவதன் காரணமாக மற்றவரை எதிரி என்கிறோம், விளையாட்டுலகின் நோக்கமும் போட்டியிடுவதுதானே! ஆனால், வீரர்கள் பலர் தங்களை எதிர்த்துப்போரிடுபவர்களை கடுமையான பகைவர்களாகவே எண்ணிப் போரிடும் இழிநிலைமைக்கும் இறங்கிப் போய் விடுகின்றனர்.

நேர்வழியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், வெற்றி பெற்றால் விழுமிய புகழை அடையவும் முயல்வது வீரனுக்குரிய கடமை. அதுதான் ஆற்றல்மிகு மனிதனுக்குரிய பெருமையுமாகும்.

இங்கே ஒரு பண்பாளனை சந்திக்க இருக்கிறோம். தன்னை எதிர்க்க இருந்த ஒருவீரனை, எதிரியாக, பகைவனாக அவன் நினைக்கவில்லை. ஒரு ஆற்றல் உள்ள மனிதனாகவே நினைத்தான். அதனால் வான்புகழ் அடைந்தான். எப்படி! படியுங்கள்!

1932ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் எனும் இடத்தில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. அதில் 400 மீட்டர் (Hurdles) தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதற்காக, உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இருவர் வந்திருந்தனர். ஒரு வீரன் இங்கிலாந்து நாட்டினன். பெயர் லார்டுடேவிட்டர்கிலி. 1928ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வென்ற வீரன்.

மற்றொரு வீரன் அமெரிக்க நாட்டினன். பெயர் மோர்கன் டெயிலர். இவன் 1924ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற வீரன். இரண்டு வீரர்களும் உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு போட்டியிட்டிருக் கின்றனர். என்றாலும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து, கொண்டு தங்கள் வெற்றியை மீண்டும் நிலைநிறுத்திக் காட்டவேண்டும் என்ற உறுதியுடன் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்திற்கு வந்திருந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளில் வீரர்கள் அணிவகுப்பு நடைபெறும். அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியுடன், வீரர்களுடன் அணிவகுப்பில் நடந்து சென்று வருவது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும்.

மறுநாள் தனது போட்டி நடைபெறவிருந்ததால், அணிவகுப்பில் கலந்து கொள்வதில்லை என்று லார்டு பர்கிலி முடிவு செய்திருந்தான். திட்டப்படி தான் போய்விடக்கூடும் என்பதால்தான் இந்த முடிவு. ஆனால், அமெரிக்க வீரனான மோர்கன் டெயிலர் தனது நாட்டுக் கொடியைப் பிடித்துச் செல்ல வேண்டியிருந்ததால், அணிவகுப்பில் கலந்து கொள்கிறான் என்று சேதியை அறிந்த லார்டு, தன் முடிவை உடனே மாற்றிக் கொண்டான்.

'தனது முதல் எதிரியான மோர்கன், கால் அயர நடந்து களைத்து போகட்டும். நாம் ஓய்வு எடுத்துக் கொண்டு, மறுநாளில் எளிதாக வெற்றிபெற்று விடுவோம்' என்று லார்டின் வீரநெஞ்சம் திட்டம் போடவில்லை.

'அவன் அணிவகுப்பில் கலந்து கொள்கிறான். நானும் கலந்து கொள்வேன்' என்று லார்டு முடிவெடுத்தான். அவ்வாறு தன் முடிவின்படியே நடந்தான். அந்த அணிவகுப்பு நிகழ்ச்சியும் அற்புதமாக நடந்து முடிவு பெற்றது.

மறுநாள் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றது யார் என்றால் இருவருமே இல்லை. பாப் டிஸ்டால் என்ற அயர்லாந்துவீரன் ஒருவன் வென்றான். அமெரிக்கன் மோர்கன் மூன்றாவது இடத்தையும், இங்கிலாந்து வீரன் லார்டு பர்கிலி நான்காவது இடத்தையும் அடைந்தனர்.-

முதலாவது வந்த பாப்டிஸ்டாலும் அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரன்தான். என்றாலும் ஓய்வு எடுத்திருந்தால் நிச்சயம் லார்டு வென்றிருக்கலாம். ஆனாலும், லார்டு தன் எதிரியை மனிதனாக நினைத்தான். மற்றவன் களைத்திருக்கும் நேரம் பார்த்து வெற்றிபெற்று விடலாம் என்ற குயுக்தியை வெறுத்தான்.

சமவாய்ப்பு இருக்கவேண்டும் என்று ஏற்றுக்கொண்டான். தோற்றாலும் வீரனாகத் தோற்றான். வீர மனிதனாக மாபெரும் புகழுடன், வரலாற்றுலகில் வாழ்ந்து வருகிறான்.

பண்புடையோர் வென்றாலும் தோற்றாலும் புகழப் படுகின்றனர் என்பதற்கு லார்டுவே சாட்சி.