சீனத்தின் குரல்/பழைய வெறி

விக்கிமூலம் இலிருந்து

பழைய வெறி

காலஞ்சென்ற சன் -யாட்-சன் தனக்குப் பிறகு மக்களின் நண்பனாக இருந்து குடியரசை செம்மையாக நடத்துவான் என்று எவ்வளவோ நம்பிக்கையோடிருந்தார் என்பதும், அவர் கண்முன்பாகவே தகாதனச் செய்துவிட்டது மாத்திரமன்னியில் தனக்கு விரோதமாக மாறிவிட்டதையும், சீனம் மீண்டுமோர் நல்லவனைத் தேடியலைய வேண்டியிருக்கின்றதே என்ற சிந்தை கலக்கத்தோடு தன் சிரத்தை சாய்த்தார். அவர் எண்ணியபடி யுவான்-ஷி-கே தன்னை ஒரு சர்வாதிகாரியாக்கிக் கொண்டு மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்துவிட்டான். பழைய மஞ்சு சர்க்கார் வெறியில் பாதி தனக்கும் உண்டெனக் காட்டிக்கொண்டான். தேரைக்குப் பயந்து தேளை மிதித்ததைப் போலாயிற்று சீனத் தின் நிலை. உரத்தக் குரலில் உரிமையைக் கேட்டவர்களை ஒரு வெறி பிடித்த சர்க்கார் என்னென்ன செய்யுமோ அதையே இவனும் செய்யத் தலைப்பட்டான். வயிற்றுவலி போய் குடல்வலியும் கண்வலியும் கூடவே தலைவலியும் வந்ததைப்போலாய் விட்டது. மஞ்சு சர்க்காரைத் தொலைத்த மக்கள் இந்த மாபாதகனை எப்படி தொலைப்பது என்ற பீதியில் மீண்டும் அகப்பட்டுக் கொண்டார்கள். தக்க வீரன் கிடைக்கவில்லை, தவித்தனர். ஜப்பானிடம் ஏராளமான கடன் வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு எதிர்க்க வருகின்றவர்களை பணக் குண்டா லடித்து பல்லைப் பிடிங்கி விடுகின்றான். மறுபடியும் ஓர் பயங்கரச் சூறாவளி சீன நாட்டை வளைத்துக் கொண்டது.