திருவிளையாடற் புராணம்/40
வரகுணபாண்டியன் நல்லாட்சி செய்து நாட்டைக் காத்து வந்தான். வேட்டை ஆடக் காட்டை நோக்கிச் சென்றான்; இரவுப் பொழுதில் காட்டில் வழியில் படுத்து இருந்த பார்ப்பனன் ஒருவன் நித்திரை செய்ய அவன் மீது குதிரை தன் காலைப் பதித்தது. அவன் பரலோகம் சென்றான். அதனை அறிந்திலன். அரண்மனை அடைந்த அரசன் விழித்து எழுந்தபோது அந்தப் பார்ப்பனனின் உடலத்தைச் சுமந்து கொண்டு அவன் சுற்றத்தினர் அவன் முன்பு வைத்து நடந்தவைகளை எடுத்து உரைத்தனர். வேண்டிய பொருள் ஈடாகக் கொடுத்து அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான். எனினும் பிராமணனைக் கொன்ற பாவம் அவனை விடுவதாக இல்லை. பிரம கத்தி அவனைப் பிடித்துக் கொண்டது. அவனை விடாமல் பின் தொடர்ந்தது.
சோமசுந்தரர் திருச்சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வருந்தினாள். கோயில் சுற்றி அங்கப் பிரதட்சணம் செய்து தன்னை வருத்திக் கொண்டான். பிரம்மகத்தி தீர என்ன என்ன தானங்கள் செய்ய வேண்டும் என்று பிராமணர்கள் கூறினார்களோ அவ்வளவையும் செய்து முடித்தான். தின்றது தான் மிச்சம்; கொன்றது அதன் பாவம் அவனை விடவில்லை. மீண்டும் சிவன் திருக் கோயில் சென்று முறையிட்டான்.
தவறு நினைந்து வருந்தினான். அவனை மன்னிப்பது தம் கடமை என முடிவு செய்து அசரீரி வாக்கால் அவனுக்கு வழி காட்டினார்.
"நீ உன்னை எதிர்த்த சோழராசனுடன் போர் செய்வாய்; அவனைத் துரத்திக் கொண்டு காவிரி நாட்டை அடைவாய்; அவன் புறமுதுகிட்டு, அவன் உயிர் தப்பி ஓடுவான். அவனைத் துரத்தும் நீ வழியில் நம்மையே நாம் பூசிக்கும் தலமாகிய திருவிடைமருதூரில் பாவச் சுமை உன்னைவிட்டு நீங்கப்பொறுவாய் பிரம்மகத்தி உன்னைத் தொடராது; புண்ணியனாய் நீ திரும்பி வருவாய்" என்று. கூறி அருளினார்.
அவ்வாறே சோழனோடு போர் இட்டு அவனைத் துரத்திக் கொண்டு காவிரி நதியை அடைந்தான். அங்கே நீர்த்துறையில் முழுகி அந்நதியின் தென் கரையில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று அக்கோயிலின் கிழக்கு வாயிலைக் கடந்து சென்றார். சென்றதும் அவனைப் பிடித்து வருத்திய பிரம்மகத்தி கோயிலின் புறத்தே அங்கேயே நின்று விட்டது. மறுபடியும் அவன் வருவான் என்று வாயிலில் காத்து இருந்தது. அவனை மேற்கு வாயில் வழியாக மதுரைக்கு வரும்படி ஆண்டவர் வாக்குக் கேட்டது. மேலைக் கோபுரத்திற்கு அரிய சில பணிகள் செய்தும், இங்கே கோயில் திருப்பணிகள் சில செய்தும், அங்கே சில நாட்கள் தங்கி இருந்து பின் மதுரை வந்து சேர்ந்தான்.
பாவம் நீங்கிய புண்ணியனாய்த் திரும்பிய அரசனுக்குப் புது ஆசை ஒன்று உண்டாகியது. புராணங்களில் சிவலோகத்தைப் பற்றிச் சிறப்பித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறான். வாழும் போதே அந்தச் சிவ லோகத்தை ஏன் காணக் கூடாது என்ற ஆசை தோன்றியது.
இறைவனிடம் தன் ஆசையை வெளியிட்டான் அதைத் தீர்ப்பதற்கு மதுரைத் திருக்கோயிலைச் சிவ பெருமான் சிவலோகமாக நந்தியைக் கொண்டு மாற்றினார். கைலயங்கிரிக் காட்சிகளை அவன் மதுரையிலேயே காணமுடிந்தது அங்கே நடக்கும் பூசைகளையும் சிவ வழிபாடுகளையும் இங்கேயே கண்டான். பிறகு அவனுக்கே அந்தக் கற்பனையில் வாழ விருப்பம் இல்லாமல் போய்விட்டது. மறுபடியும் அவன் வேண்டுகோள்படி அம் மனக் காட்சியை இறைவன் மறைத்தருளினார்.
இந்தக் கதையில் ஒர் ஐயம் கேட்பவர்க்கு உண்டாயிற்று. அகத்தியர் இந்தக் கதையைத் தம் மாணவர்க்கு எடுத்து உரைத்தார்.
மதுரைத் திருத்தலத்தில் தீவினைகள் தீராவோ திருவிடை மருதூருக்கு அவனை அனுப்பி வைத்து அவன் பாவச் சுமையைக் கழிப்பித்தது ஏன் என்று கேட்டனர்.
சிவன் உறையும் தலங்கள் அனைத்தும் சீர்மை மிக்கன என்று அறிவுறுத்தற்கும், பாவச் சுமை இங்கேயே குறையும் என்றால் மதுரை நகரத்து மகாஜனங்கள் நிறையப் பாவம் செய்யத் தொடங்குவார்கள்; அதனால் எதையும் செய்யலாம் என்று துணிவார்கள்; அவர்களுக்கு அந்த எண்ணம் உண்டாகக் கூடாது என்பதற்கும் இறைவன் அவனைத்திருவிடை மருதூர்க்குத் திசைதிருப்பியது என்று அகத்தியர் விளக்கிக் கூறினார்.