அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/அர்த்தம் புரிகிறது

விக்கிமூலம் இலிருந்து
1. அர்த்தம் புரிகிறது!

ஆண்டவன் படைப்பிலே அத்தனைப் பொருட்களும் அர்த்தம் உள்ளவைகளாகவே விளங்குகின்றன. அர்த்தம் இல்லாத பொருட்களோ அல்லது அவசியம் இல்லாத பொருட்களோ இந்த உலகில் எதுவுமே இல்லை.

ஒருவருக்கு உபயோகப்படுகின்ற பொருட்கள் மற்றவர் களுக்குத் தேவையற்றதாகத் தோன்றலாம். தீமை பயப்பதாக கூடத் தெரியலாம். இந்த உலகத்திலே இருக்கவே கூடாது என்றும் கூட மற்றவர்கள் அகற்ற முயலலாம்.

தனக்குத் தேவையில்லை என்பதனாலேயே அதனைத் தரம் தாழ்த்திப் பேசுவது என்பது தரமுள்ள மனிதர்களுக்கு அழகில்லை. தேவையில்லாமல் தற்போது தெரிகின்ற பொருட்கள், இன்னும் சிறிதுகாலம் கழித்துக் கண்கண்ட தெய்வமாகக் கூட உதவலாம்.

அனைத்தையும் அரவணைத்துக் கொண்டு போகின்றவர்கள் தான் அறிவாளிகள் ஆவார்கள். ஆரவாரித்துக் கொண்டு, அலட்சிய நோக்குடன், தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம், என்று குதர்க்கம் பேசுவோர்கள் அறிவிலிகளாகத் தான் வெளிப்படுவார்கள்.

தேவையில்லாத ஒன்று என்றும், தூரத்தே தள்ளிவைக்கப் பட வேண்டிய ஜந்து என்றும் விளையாட்டுக்களைப் பற்றிய பேசுவோர்களும், இப்படி த்தான் அறிவிலிகளாகத் திகழ்ந்து கொள்கிறார்கள்.

அவர்கள் தெரிந்துதான் விளையாட்டுக்களைப் பற்றி அப்படிப் பேசுகின்றார்களா என்றால், அப்படியும் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே புலம்பித்திரியும் புண்ணியவான்கள். என்னவென்று தெரியாமலேயே ஏளனம் பேசி, ஏளனத்துக்கு ஆளாகும் இளிச்சவாயர்கள். அவர்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

விளையாட்டுக்களை மனம் விரும்பி விளையாடுவோர்களைப் பற்றி விதண்டாவாதப் பேசுபவர்கள்; விளையாட்டுக்களில் பயிற்சி பெற்றவர்களைப் பற்றி வெறுப்புடன் தரம் தாழ்த்திப் பேசுபவர்கள், விளையாட்டுக்களில் ஈடுபடுவோரை பற்றி வெவ்வேறு விதமாகப் பேசுபவர்கள் எல்லோருமே ஒரே விதமான தவறைத் தான் செய்து கொண்டு வருகின்றார்கள். அதற்கு என்ன காரணம்?

அவர்கள் விளையாட்டுக்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாததுதான் தலையாய காரணமாகும்.

பலவிதமாகப் பலரும் விளையாட்டுக்களைப் பற்றி பேசுவதைக் கேட்க நேர்ந்த எனக்கும், முதலில் குழப்பமாகத்தான் இருந்தது. மற்றவர்கள் பேசுவதுபோல், ஒன்றுக்கும் உதவாதவைகளா இந்த விளையாட்டுக்கள்? அர்த்தம் எதுவும் இல்லாதவைகளா இந்த விளையாட்டுக்கள் என்று நானும் எண்ணத் தொடங்கினேன்.

ஓராண்டு காலம் விளையாட்டுத் துறையில் பயிற்சிபெற்று, உடலை பாடாய்ப்படுத்தி, உயிரைக் கசக்கிப் படித்து. சென்னை பல்கலைக்கழகத் தேர்வில் முதன்மை நிலை பெற்று முடித்து, ஒர் உயர்ந்த கல்லூரியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியேற்று, இரண்டாயிரம் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இருந்த எனக்கு, இந்தக் கேள்விகளையும், குதர்க்க வாதங்களையும் சந்திக்கும் திறனில்லாமல் போயிற்று. ஏன்?

ஏனென்றால், விளையாட்டுத் துறையில் என்ன இருக்கிறது? எல்லாம் அர்த்தமில்லாத விளையாட்டுக்கள் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகளை மறுக்க சரியாக விளக்கம் எதுவும் கிடைக்காததால் தான்.

அதனை மிகுதிப்படுத்துவது போல ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. என் கல்லூரி வாழ்க்கையின்போது.

கல்லூரி ஆண்டு மலருக்காக மாணவர்கள் ஆசிரியர்கள் தங்கள் தங்கள் கருத்துக்களை விளக்கும் கவிதைகள் கட்டுரைகள் தரலாம் என்று வெளிவந்த ஒர் அறிக்கையைத் தொடர்ந்து, நான் ஒரு கவிதை எழுதித் தந்தேன். அந்தக் கவிதையானது விளையாட்டையும் உடல்நலம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

அதனை வாங்கிப் பார்த்து, வாய்விட்டுப் படித்தார் மலர் பொறுப்பாளர் ஒருவர். தமிழ்ப் பேராசிரியர். 'கவிதை நன்றாக இருக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தது'. என்று கேட்டார். எனது எழுத்துக்குக் கிடைத்த முதல் அவமானம் இது. விளையாடுபவர்களுக்கு மூளை எதுவும் கிடையாது என்ற அர்த்தத்தில் அவர் பேசினார்.

அதற்குப் பிறகு எங்களிடையே நடைபெற்ற ஆரவாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஒரு சில கேள்விகள் என் முகத்தில் அடித்தாற்போல் வந்து விழுந்தன.

விளையாட்டு வாத்தியாருக்குத் தமிழ் என்ன தெரியும்? இந்த விளையாட்டில் என்ன இருக்கிறது? இது ஒரு சவால்!

தமிழ்தெரியும் என்று நிரூபிப்பதற்காகத் தமிழ் இலக்கியத்தில் M.A. பட்டம் வாங்கி அவருக்குக் காட்டினேன். விளையாட்டில் என்ன இருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலை எப்படித் தருவது?

அதற்காக விளையாட்டுக்கள் பற்றி எழுதப் பட்டிருக்கும் ஆங்கில நூல்களையெல்லாம் தேடித் திரிந்து படிக்க ஆரம்பித்தேன். அந்தக் கேள்விக்குப் பதிலை ஒரேவரியில் கூறிவிட முடியுமா என்ன?

விளையாட்டுக்களைப் பற்றித் தமிழில் நூல்களாக எழுதத் தொடங்கினேன். நூறு நூல்களை விளையாட்டுத் துறை இலக்கியமாக எழுதித் தள்ளினேன், புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடும் பொறுப்பை மட்டும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. விற்பனை செய்யும் வேலையையும் ஏற்றுக் கொண்டகால், ஆயிரக்கிணக்கில் சம்பளம் தரும் ஆபீசர் வேலைகளையும் விட்டு விட்டு வெளிவர வேண்டியதாயிற்று.

இருபது ஆண்டுகளாகப் படித்துப் படித்து. யோசித்து, எழுதி எழுதி என் வாழ்நாளை விளையாட்டுக்காகப் பயன் படுத்திக் கொண்டு வருகிறேன், இந்தச் சூழ்நிலையில் விளையாட்டுகள் அர்த்தமற்றவைகளா என்று பலர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

விளையாட்டுக்கள் என்பவை வாழ்க்கையின் பிரதிபலிப்பு. எவ்வாறு சுவாசம் இல்லாமல் உடல் இல்லையோ, அது போலவே விளையாட்டு இல்லாமல் வாழ்க்கை இல்லை.

ஒரு நாணயத்தில் இரண்டு பக்கமும் தெளிவாக இருந்தால் தான் அந்தக்காசு செல்லுபடியாகும். இல்லையேல் அது செல்லாக் காசாகும்.

விளையாடத் தெரியாத மனிதர் எவ்வளவு தான் உயர்ந்த செல்வந்தராக இருந்தாலும், உருப்படியில்லாத வாழ்க்கையைத் தான் அவர் வாழ்கிறார்,

விளையாட்டு வாழ்க்கையைக் கற்பிக்கிறது. விளையாட்டு வாழ்க்கையின் சூட்சமத்தை விளக்கிக் காட்டுகிறது. அது வாழ்வின் வசந்தத்தை வலை போட்டுப் பிடித்துக் கொண்டு வந்து தருகிறது. அது வாழ்க்கையின் இன்ப நேரங்களை இரட்டித்துத் தருகின்றது. அது ஆரவாரமில்லாத ஆரோக்கிய உலகிலே மனிதர்களை நடமாட வைக்கிறது.

அர்த்தம் உள்ளவைதான் இந்த விளையாட்டுக்கள். அர்த்தம் இல்லாதவை என்று ஆர்ப்பரிப்பவர்களுக்கு அதன் இனிய பகுதிகளை, இனி தொடரலாம். விளக்குவதற்காகவே எழுதப்படுகின்றது.