அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/புத்திசாலித்தனமான போராட்டம்

விக்கிமூலம் இலிருந்து

3. புத்திசாலித்தனமான போராட்டம்


ஆகாய வெளியில் ஓர் அற்புதமான காட்சி.

ஆவேசமாக சிறகுகளை விரித்துக் கொண்டு, ஆர்ப்பரித்தவாறு பறக்கின்றது கழுகுக் கூட்டம். இரைச்சலை உண்டாக்கி அவைகளிடையே பாய்ச்சலை ஏற்படுத்தியது எது? ஓர் இறைச்சித் துண்டு.

அழகாக, அந்நியோன்னியமாக, ஆனந்தமாக, ஒன்றுபட்டக் கூட்டம் போல ஒற்றுமையாகப் பறந்து வந்த அந்தக் கழுகுகள், ஏன் இப்படி காட்டுத் தனமாக ஒன்றையொன்று தாக்கிக் கொள்கின்றன? கடித்துக் கொள்கின்றன?

அந்த இறைச்சித் துண்டுதான் காரணம்.

தனக்குத்தான் வேண்டும் என்று ஆசையுடன் ஒரு கழுகு கவ்விக்கொண்டு பறக்க, அது தங்களுக்குத்தான் வேண்டும் என்று மற்ற கழுகுகள் சேர்ந்து கொண்டு தாக்க; தாக்குதலை பொருட்படுத்தாது முதலில் பறந்த அந்தக் கழுகு, கொத்தலையும், மோதலையும் தாங்க முடியாமல் தத்தளித்துப் போய், இறைச்சித் துண்டைக் கீழே போட்டுவிட, அதற்கு விடுதலை கிடைத்து விடுகிறது.

கீழே விழுந்த இறைச்சித் துண்டை இன்னொரு கழுகு கல்விக் கொள்ள, அதற்கும் அதே தாக்குதல். அலறிப்

புடைத்துக் கொண்டு, அது அந்த இறைச்சித் துண்டை கீழே போட மற்றொன்று எடுத்துக் கொள்ள, அங்கே ஜீவமரணப் போராட்டம் .

ஆசையோடு உண்ண வேண்டும் என்று துண்டினைப் பெறுகின்ற கழுகுக்கு அவதி. அப்படி தனக்குக் கிடைக்கவில்லையே என்று இழந்துபோன கழுகுகள், இராட்சச வெறி கொண்டு திரிகின்றன. சேர்ந்து திரிந்த சோதரப்பறவை தானே அது என்று எதுவும் எண்ணிப் பார்க்கவில்லை. எதிரியாகப் பாவிக்கத்தான் முயன்றன. முனைந்து தாக்கின. இறந்து போனாலும் பரவாயில்லை என்று கறித்துண்டை இழந்து நின்ற கழுகுகள் அத்தனையும் தாக்கின. தகர்த்தன.

இதிலிருந்து ஒன்றை நாம் உணர முடிகிறது.

இருப்பார்க்கும் இல்லார்க்கும் இடையே மண்ணுலகில் நடை பெறுகின்ற 'பொருள் உரிமைப் போராட்டம்' தான் வானவெளியிலும், வாயில்லா ஜீவராசிகளிடையே நடைபெறுகின்றன.

அறிவு இருக்கிறதோ இல்லையோ, ஆலையாய் எரியும் அனல் வயிற்றுக்கு அன்றாடம் எழுகின்ற அகோரப் பசிதான் அத்தனை இயக்களுக்கும் காரணமாய் அமைந்து விடுகிறது.

பறவைகள் பாய்ச்சலைப் போல் தான் பகுத்தறிவு படைத்த மனிதக் கூட்டத்திலும் பதுக்கலும் பிதுக்கலும், பாய்ச்சலும் பறித்தலுமாய் நிகழ்கின்றன.

இருப்பவரை நோக்கி இல்லாதவர்கள் கூட்டம் பாய்கின்ற ஏதோ ஒரு கொள்கை என்ற பெயரால், இலட்சியம் என்ற குரலால், எல்லாமே வேகவெறியுடன் நடைபெறுகின்றன.

இருப்பவர்கள் ஒரு கூட்டமாக இணைந்து கொள்கின்றார்கள். இல்லாதவர்கள் எல்லோரும் ஒரு கும்பலாகக் குமைந்து கொள்கின்றார்கள், அங்கே நடப்பது ஜீவ மரணப் போராட்டம். புலியாட்டம். அத்துடன் கிலி ஒட்டமும் நடக்கிறது.

இதைத்தான் விளையாட்டுக்கள் எல்லாமே பிரதிபலிக்கின்றன.

இரண்டாகப் பிரிந்து கொண்டு தாக்கிக் கொள்கின்ற பறவைகள் போல, ஒருவரை ஒருவர் தாக்கித் தாழ்த்திக் கொண்டு, உரிமையைப் பெற்று முன்னேற முயல்வது போலவே, விளையாட்டுலகிலும் இருக்கிறது. ஆமாம்! அது மனித வாழ்க்கையைத் தானே நிலைக் கண்ணாடியாக நின்று பிரதிபலித்துக் காட்டுகிறது.

எல்லா விளையாட்டுக்களிலும் இருக்கின்ற பந்து தான் இதற்கு உதாரணம்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு அணிகள் உண்டு. இரண்டு அணியினருமே பந்தினைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளத் தான் முயல்கின்றனர்.

பந்தை வைத்திருப்பவர்கள் தாக்கப் படுகின்றார்கள், தேக்கப்படுகின்றார்கள். தடுக்கப்படுகின்றார்கள். இடிக்கவும் படுகின்றார்கள். பந்தின் தொடர்பை விட்டு விடும் போது, அவர்கள் பெறுகின்ற தாக்குதலும் முற்றுகைப் போக்குகளும் விடுபட்டுப் போகின்றன.

இவ்வாறு, ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அதனால் உண்டாகும் அவதிகளைத் தீர்த்துக் கொள்ள, நல்ல வழியொன்றை விளையாட்டுக்கள் கற்றுத் தருகின்றன.

பந்து என்பது மிகவும் முக்கியம். அதைத் தன் பக்கம் வைத்துக் கொண்டிருப்பது முக்கியமான இலட்சியம். அப்படி பந்தைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் திறமை, நுணுக்கம் ஆற்றல், ஆண்மை, அறிவார்ந்த உழைப்பு எல்லாமே அடங்கிக் கிடக்கின்றன.

பந்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பயங்கரத் தாக்குதல்களிலிருந்தும் விடுபட வேண்டும். எப்படி?

பந்தை பயன்படுத்துகின்ற போதே, மற்றவர்களான தன் குழுவினருக்கு பந்தைத் தந்தாட வேண்டும். அதாவது மற்ற எதிரிகள் தாக்குதல் வருவதற்கு முன்னதாகவே கொடுத்து ஆடவேண்டும்.

இந்த அற்புத ரகசியத்தைத் தான் விளையாட்டுக்கள் கற்றுத் தருகின்றன.

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தமாமே!

எனும் திருமூலர் பாடலைப் பாடுங்கள்.

அதுபோலவே

பந்தைத் தொடத் தொட பாய்ந்திடும் ஆனந்தம்
பந்தை விடவிட பரமானந்தமாமே!

என்றும் நாம் பாடலாம்.

பந்து என்பதை நாம் ஆசையாகக் கொள்ளலாம். பொருளாகவும் கொள்ளலாம்.

இரண்டுமே நமக்கு வேண்டியவை தான். ஆனால் திண்டாடவும் செய்பவை தான். அவை இருந்தாலும் துன்பம்.

இல்லாவிட்டாலும் துன்பம். என்றாலும், நாம் அதைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாடும் போது, பந்துடன் இருந்தால் மோதல். பந்துப் பக்கமே போகாவிட்டால், பார்ப்பவர்களுக்குக் கேலி. அது ஆண்மையற்ற ஒருவராய் அடுத்தவருக்குக் காட்டி விடுமே!

ஆகவே, பந்தை விளையாடவும் வேண்டும். ஆனால் பதைபதைப்பு குழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

ஆசை நமக்கு வேண்டும். ஆனால் அது நம்மை அவதிக்குள்ளே ஆழ்த்தி விடக் கூடாது.

பொருள் நமக்கு வேண்டும். ஆனால் அதுநம்மை பாடாய் படுத்தி விடக் கூடாது.

நமக்கு எதிரிகள் உண்டு. எதிர்ப்புகள் உண்டு. தாக்கும் சக்திகள் உண்டு. தடுக்கும் சக்திகளும் உண்டு. இவற்றையெல்லாம் மனதில் எண்ணி, நாம் சர்வ ஜாக்ரதையாக விளையாட வேண்டும் என்பது போலவே, உலகில் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே, விளையாட்டில் பந்துகள் இடம் பெற்றிருக்கின்றன.

இதை நாம் இப்படியும் கொள்ளலாம்.

உலகிலே நன்மை தீமை என்ற இரண்டு எதிரெதிர் சக்திகள் இருக்கின்றன. நல்ல தெய்வங்கள். கெட்ட சாத்தான்கள் என்ற இரண்டும் இருக்கின்றன, அவைகளுக்கிடையே மனிதர்கள் பந்தாக உதை படுகின்றனர். விளையாடப்படுகின்றனர்.

எதுவும் செய்யாது, இடர்பட்டுத் துள்ளும் பந்தாக இருப்பது போலவே மனிதர்களும், உலக மகா சக்திகளின் இடையிலே, பந்துகளாக விளையாடப் படுகின்றனர்.

இப்படி நாம் எத்தனையோ கற்பனைகளையும் கருத்துக்களையும் கொள்ளலாம்.

பந்து என்பதற்கு உறவு என்றும் பொருள் கூறுவார்கள். உலகம் உருண்டை என்பதை பந்து வடிவம் என்றும் பாங்காக விவரித்துக் காட்டுவார்கள்.

இத்தகைய பந்து தான், விளையாட்டுக்களில் இடம் பிடித்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, வழி நடத்திக் கொண்டும் இருக்கிறது.

பந்தைப் பக்குவமாகப் பெறுபவரும், மற்றவர்களிடம் பத்திரமாக ஆடுபவரும், நேரம் அறிந்து மற்றவர்களிடம் தள்ளி விடுபவரும் நிம்மதியாக விளையாடுகின்றார்கள். நேர்த்தியாக கடந்து கொண்டு, கீர்த்தியையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

பந்தை முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பயன்படுத்துபவர்கள், இடரிலும் இன்னலிலும், எதிர்பாராத மாற்றத்திலும், தடுமாற்றத்திலும் துன்புற்று வாழ்கின்றார்கள்.

ஆகவே, நல்ல வாழ்க்கையை நடத்திட விரும்புவோர், இந்தப் பந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டால், போதும்.எப்படி எப்படியெல்லாம் மனப்பக்குவம் அடைகின்றார்கள், பண்பாட்டினைப் பெறுகின்றார்கள், பரமானந்தம் கொள்கின்றார்கள், பகுத்தறிவை மிகுதிப்படுத்திக் கொள்கின்றார்கள் என்கிற பரிசுகளையெல்லாம் பெறுகின்றார்கள் என்று நாம் அறிந்து மகிழலாம்.

பந்து படுத்துவது பாடுகள் அல்ல. அவை கொடுப்பது பண்பாடுகள் என்றே நாம் உறுதியாகக் கூறலாம். விளையாட்டுக்கள் எப்பொழுதும் அர்த்தமுள்ளவைதான் என்பதற்கு பந்து ஒரு உண்மை சொரூபமாகவே விளங்குகிறது.