அந்தமான் கைதி/33

விக்கிமூலம் இலிருந்து


காட்சி 33.


இடம்: திவான் பகதூர் படுக்கை அறை.

காலம்: இரவு

(நடராஜன் சாளரத்தின் வழியே மேல்மாடியில் குதிக்கிறான். தூரத்திலிருந்தே இதைக் கவனித்த பாலுவும் அதே வழியில் பின் தொடருகிறான். மேலே படுக்கை அறையில் மங்கிய தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. பொன்னம்பலம் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறார், லீலா கீழே தரையில் படுத்திருக்கிறாள். நடராஜன் திவான் பகதூர் மீது பாய்ந்து அவர் நெஞ்சில் பிச்சுவாவைச் செலுத்துகிறான். பொன்னம்பலத்தின் ‘ஹா! ஐயோ’...... ஏன்ற கோரக் குரல் எங்கும் எதிரொலிக்கின்றது. வேறொரு ஆள் மேன்மாடியில் குதிக்கும் சப்தம் கேட்ட நடராஜன், இன்னது செய்வதென்றே புரியாமல் பிச்சுவாவைக் கீழே போட்டுவிட்டு மற்றொரு புறம் தாவிக் குதித்து ஓடி விடுகிறான். அதே சமயத்தில் அங்கு வந்த பாலு அங்கு கீழே கிடந்த ரத்தம் தோய்ந்த பிச்சு வாவை நடுக்கத்துடன் எடுக்கிறான். தூக்கத்திலிருந்து கோர சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த லீலா ஒன்றும் புரியாமல் கொலை-கொலை-கொலை' என்று கத்துகிறாள். வேலையாட்கள் எல்லாம் விழித்து வந்து, 'விடாதே பிடி, பிடி’ என்று கூச்சலிட்டுப் பாலுவைச் சூழ்ந்து பிடித்துக்கொள்ளுகிறார்கள். ஒருவன் விளக்கைப் போடுகிறான். வெளிச்சத்தில் பாலுவை ரத்தம் தோய்ந்த பிச்சுவாவுடன் கண்ட)

லீலா : ஹா ஐயோ! இதென்ன! நான் காண்பது கனவா, அல்லது உண்மைதான்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே!

(கீழே சாய்கிறாள்)

பாலு : (தனக்குள்) எல்லாம் விதியின் விளையாட்டு.

கூட்டத்தில் ஒருவன் : ஆளைப்பார், கொலைகாரப் பயலுக்கு வேதாந்தாம் வேறா ஏண்டா நிற்கிறாய்? சீக்கிரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொல்லிப் போலீசை அழைத்துவா? உம், போ சீக்கிரம்.

(ஒருவன் ஓடுகிறான்).

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/33&oldid=1073526" இலிருந்து மீள்விக்கப்பட்டது