கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/15
இரண்டாவது உலகப்போர் 1989-ம் ஆண்டு ஆரம்பமானது. ஏதேச்சாதிகார ஆணவத்தால் பிரிட்டிஷ் பேரரசு காந்தியடிகளையும் கேளாமல், காங்கிரஸ் கட்சியையும் அழைத்துப் பேசாமல், காங்கிரஸ் கட்சி அமைத்துள்ள அமைச்சரவைகளையும் கலந்து ஆலோசியாமல், இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தி விட்டார்.
இந்த சர்வாதிகார அகம்பாவப் போக்கினை எதிர்த்துக் காங்கிரஸ் அமைச்சரவைகள் தங்களது மந்திரி சபைகளைக் கலைத்துப் பதவிகளைத் துறந்தன. பிரிட்டிஷாரின் இந்த எஜமானப்போக்கு மக்களுக்குக் கோபத்தையும் கொதிப்பையும் உருவாக்கிற்று!
காந்தியடிகள் அதனால் பேச்சுரிமைப் போராட்டத்தை 1940-ம் ஆண்டு துவக்கினார். வெள்ளைக்காரர்களின் இந்த தான்தோன்றித்தனத்தை விளக்கி நாடெங்கும் பொதுக் கூட்டங்களை நடத்தும்படி அவர் ஆணையிட்டார்.
இந்த பேச்சுரிமைக்கு அரசு தடை போட்டால், வீதிக்கு வீதி, சந்துக்கு சந்து, கிராமத்துக்கு கிராமமாக கூட்டம் நடத்தாமல், தனி நபர்கள் ஆங்காங்கே சென்று வெள்ளைக்காரர்களின் கொடுங்கோல் ஆநியாயங்களை எதிர்த்து மக்களிடம் விளக்குங்கள் என்று உத்தரவிட்டார்.
இந்தப் போராட்டத்திற்கு அகிம்சை அண்ணல் தனி நபர் சத்தியாக்கிரகம் என்று பெயரிட்டார். இந்த தனி நபர் பேச்சுரிமைப் போரை வினோபயோவே, ஜவஹர்லால் நேரு போன்றவர்களைத் தலைமையேற்று நடத்துமாறு காந்தியடிகள் கேட்டுக் கொண்டார்.கவியரசி சரோஜினி தேவி இந்த தனிநபர் இயக்கத்தை திட்டமிட்டு ஆங்காங்கே நடத்திடப் பணிபுரிந்தார்! அவரது முயற்சி இயக்கத்தின் வேகத்தை மென்மேலும் தீவிரமாக்கியது.
சத்தியாக்கிரம் செய்து மீண்டும் சிறையேகினார்! சிறை புகுந்த சரோஜினி தேவிக்கு மேலும் உடல்நலம் சீர்குலைந்தது; பிரிட்டிஷ் அரசு அவரை உடனே சிறையிலே இருந்து விடுவித்து விட்டது.
சத்தியாக்கிரகப் போராளிகள் எல்லாரும் சிறையிலே மெலிந்து, நலிந்து, குலைந்து, வாடும் போது, தாம் மட்டும் வெளியே இருப்பதா என்று நினைத்தக் கவிக்குவில் மீண்டும் சத்தியாக்கிரக அறப்போரிலே கலந்து சிறைப்புகத் திட்டமிட்டார். காந்தியடிகள் அம்மையாரைத் தடுத்து நிறுத்தி, ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு பணித்தார்.
தலைவர் உத்தரவுக்கு ஏற்ப, சிறைபுகும் எண்ணத்தைக் கைவிட்டார் நாயுடு. அதனால், வெளியிலே இருந்தவாறு, தொண்டர்களுக்கு ஊக்கமூட்டிப் போராட்டத்தை நடத்திடும் தூண்டுகோலாகவே அவர் செயல்பட்டார்.
அப்போது இந்தியருடன் சமரசப் பேச்சை நடத்திட இங்கிலாந்திலே இருந்து ஸ்டாப் போர்டு கிரிப்ஸ் என்பவர் 1942ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா வந்தார். தலைவர்களை விடுதலை செய்யுமாறும், அவர்களுடன் கலந்துரையாடிக் கருத்தறிய வேண்டும் என்றும் கிரிப்ஸ் வந்ததை அறிந்த வெள்ளையர் ஆட்சி காங்கிரஸ் தலைவர்களை சிறையினின்று விடுதலை செய்தது.
ஸ்டாப்ஃபோர்டு கிரிப்ஸ் திட்டத்தைக் காந்தியடிகள் நிராகரித்தார்! கிரிப்ஸ் தூது தோல்வி கண்டதால், பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தார்கள் அடுத்த அடக்குமுறைத் திட்டத்தை எப்படி உருவாக்கலாம் என்று யோசனை செய்து கொண்டே இருந்தார்கள்.
அரசியல் நிலமைகளையும், போர்க்காலச் சூழல்களது போக்கையும் கண்ட அகிம்சா மூர்த்தி காந்திமகான், இது தான் தக்க சமயம் என்று எண்ணி 'Quit India' வெள்ளையனே வெளியேறு, 'பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே வெளியேறு' என்ற போராட்டத்தைத் துவக்கத் திட்டமிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் க்ட்சி 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் நாள் பம்பாய் மாநகரில் கூடி, "ஹரிஜன்" பத்திரிகையிலே மகாத்மா எழுதிய அரசியல் கிளர்ச்சித் திட்டத்தைத் தீர்மானமாக நிறைவேற்றியது.
அந்தத் தீர்மானம் தான் 'க்விட் இண்டியா' என்ற வெள்ளையனே வெளியேறு' தீர்மானமாகும். காந்தியடிகள் இந்தத் தீர்மானத்தின் மீது பேசும்போது, 'இது தான் எனது இறுதிப் போராட்டம் என்று போர்ப்பிரகடனமாக திட்டத்தை ஆதரித்தார்.
அவ்வளவுதான், மறுநாள் விடியல் நேரம்; புலராத பொழுது; அதிகாலை பொழுது காந்தி பெருமானும், பல முக்கிய தலைவர்களும், சரோஜினி தேவியும் கைது செய்யப்பட்டு, பலாத்காரமாக சிறையில் அடைக்கப்பட்டார்கள்! மக்களும் நாடெங்கும் தீப்பொறி பறக்கும் காற்றுபோல முக்கிய நகரங்களிலே வந்து சூழ்ந்து கொண்டார்கள்.
மறுநாள் தலைவர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீபோல நாடெங்கும் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட மக்கள் ஆங்காங்கே கூடினார்கள். பெரும் புரட்சியாளர்களாக மாறிவிட்டார்கள்.இரயில் வண்டிகளைக் கவிழ்த்தார்கள்; பெட்டிகளுக்குத் தீ வைத்தார்கள்; போலீஸ் நிலையங்களைத் தாக்கினார்கள். காவல் நிலயங்களும் எரிந்தன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றைப் பார்த்து சும்மாவா இருக்கும்? ராணுவத்தைக் கொண்டு வந்தது அரசு கடுமையான அடக்கமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது; துப்பாக்கி வேட்டுத் தர்பார் சர்வ சாதாரணமாக நடந்தன. போராட்டத்தை நடத்தும், அறிவாளர்களும், தலைவர்களும் சிறையிலே அடைத்து வைக்கப்பட்டதால், அதனை நடத்துவதற்கான தலைவர்கள் இல்லை; அதனால் ஆகஸ்ட் புரட்சி தணிந்தது!