உள்ளடக்கத்துக்குச் செல்

இயல் தமிழ் இன்பம்/பகைவரை மயக்கிய பாவேந்தர்

விக்கிமூலம் இலிருந்து

9. பகைவரை மயக்கிய பாவேந்தர்

1. வாழ்க்கைக் குறிப்புகள்

பாவேந்தர் பாரதிதாசனாரைப் பற்றிக் கட்டுரை எழுதுபவர்கள், அவருடைய பாடல்களில் உள்ள சிறப்பை எடுத்துக்காட்டியே கட்டுரை எழுதுவார்கள். அவரோடு பல்லாண்டு காலம் நெருங்கிப் பழகியவன். அவர் தொடர் பான வாழ்க்கைக் குறிப்புகள் இரண்டினை மட்டும் இவண் தருகிறேன்.

1.1 பகையின் தோற்றம்

1942-ஆம் ஆண்டு கோடை விடுமுறை நாளில் நடந்த நிகழ்ச்சி ஒன்று முதலில் தரப்பெறும். அப்போது யான் மயிலம் கல்லூரியில் விரிவுரையாளனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். விடுமுறையில் யான் புதுச்சேரிக்கு வந்திருந்தேன். ஒருநாள் புதுச்சேரியைச் சார்ந்த உப்பளம் என்னும் ஊரில் பாரதிதாசனார் தலைமையில் யான் சொற்பொழிவாற்றினேன். ஐயா அவர்கள், முடிவுரையில் என்னைத் தாறுமாறாகத் தாக்கிப் பேசிவிட்டார்கள். நான் பதில் கொடுக்க உடனே எழுந்தேன். என்னை மு. த. வேலாயுதனார் என்பவர் தடுத்து அமரச் செய்துவிட்டார். இளைஞனாகையால் ஐயாவின் மேல் யான் பெரும்பகை கொண்டிருந்தேன்.

1.1.2 காரிருளில் மின்னல்

1942 கோடை விடுமுறையில் இந்தப் பிணக்கு ஏற்பட்டது. விடுமுறை முடிந்ததும் மயிலம் தமிழ்க் கல்லூரிக்குப் பணியாற்றச் சென்றேன். காலையில் கல்லூரி வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, ஆசிரியர்களும் மாணாக்கர்களும் ஓரிடத்தில் வரிசையாக நின்று கூட்டுக் குழு வழிபாட்டுப் பாடல்கள் பாடிய பின்னரே வகுப்புக்குச் செல்வது வழக்கம்.

குழு வழிபாட்டில் முதலில் கடவுள் வணக்கப் பாடலும் அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடலும் பாடப்பெறும். தமிழ் வாழ்த்தாகச் சுப்பிரமணிய பாரதியார் பாடல்கள், சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியப் பாடல்கள், கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் பாடல்கள் முதலியவை மாறி மாறிப் பாடப்படும், மாணாக்கர் இருவர் பாடுவர். முதல் நாள் மாலையே, மறுநாள் காலை பாடப்போகும் பாடல்களை என்னிடம் அறிவித்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை செய்யும் பொறுப்பு என்னிடம் அறிவித்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு தணிக்கை செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சில நாட்களில், பாரதிதாசனார் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பாடுவதற்கு என்னிடம் ஒப்புதல் கேட்பர். ‘அவன் பாடலைப் பாடக்கூடாது. அவன் நாத்திகன் - அவன் பாடலைப் பாடவே கூடாது’ என்று கண்டிப்பாக நான் மறுத்து விடுவது வழக்கம்.

ஒருநாள் சொற்பொழிவிற்காக நான் வெளியூர் சென்றிருந்தேன்; மறுநாள் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் வந்து சேரவேண்டும் எனக் குறிவைத்து விரைவாகக் கல்லூரிக்கு வந்துவிட்டேன். நான் கல்லூரிக்குள் நுழையும்போது குழு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. பாடல்கள் என்னால் தணிக்கை செய்யப்படவில்லை. நான் வந்தபோது இறை வணக்கப் பாடல் பாடிக் கொண்டிருந்தனர்; அடுத்துத் தமிழ் வாழ்த்துப் பாடல் பாடினர். அந்தத் தமிழ் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் யான் மெய்ம் மறந்து போனேன்; மயிர்க்கூச்செறிந்து மகிழ்ச்சியில் திளைத்தேன். அந்தப் பாடல், பாவேந்தர் பாரதிதாசனார் இயற்றியதும், இப்போது புதுவை மாநில அரசால் இறைவணக்கப் பாடலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுக் கூட்டங்களில் பாடப்படுவதுமாகிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாடல் தான் அப்பாடல் முழுவதும் வருமாறு:-

“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரரின் வீரமும் வெற்றியும் நீயே



தாழ்ந்திடும் நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீ; உயிர் நான் மறப்பேனோ

செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தாயெனில் நைந்து போகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே

முந்தைய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!”

இந்தப் பாடலைக் கேட்ட பின்னர் பாவேந்தர் மீது எனக்கிருந்த பகையுணர்வு சிறிது சிறிதாகக் குறைந்து. பின்னர் அறவே மறைந்தது. அவர்பால் எனக்கு ஒருவகைப் பற்று ஏற்பட்டது. கார் இருளில் மின்னல்போலப் பகைமையிடையே இந்தப் பற்று ஏற்பட்டது. ஆனால், மின்னல் போல் மறைந்து விடாமல் இன்று வரையும் நீடித்து நிலைத்திருக்கின்றது. பகைவனை மயக்கிப் பகை மாற்றிய சிறப்புப் பாடலாகும் இது. இந்தப் பாடல் ஒன்றே கவிஞரின் புகழுக்குச் சான்று பகரப் போதுமே! அவரது தமிழ்ப்பற்றை என்னென்று வியப்பது!

1.2 நாட்டுப் பற்று

பாவேந்தர் என்னிடம் கூறிய மிகவும் சுவையான செய்தி ஒன்று உள்ளது. இதை நான் கூட்டங்களில் கூடக் கூறியிருக்கிறேன். அதாவது:

பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியை ஆண்டு கொண்டிருந்த போது, (பிரிட்டிஷ்) இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மிடுக்காக நடந்து கொண்டிருந்தது. அத்தகைய போராட்டம் புதுச்சேரியில் நடக்காதபடிப் பிரெஞ்சுக்கார ஆட்சியினர் கண்காணித்து வந்தனர். குறிப்பாக, அரசு ஊழியர்கள் கதர் உடையும் காந்தி குல்லாவும் அணியக்கூடாது என்பது கடுமையான ஆணையாகும்.

ஆனால், பிரெஞ்சு அரசுக் கல்வித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நம் கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிவாராம். பிரெஞ்சுக்காரக் கல்வித்துறைத் தலைவர் விடுமுறையான ஒருநாளில் தமது வீட்டில் ஆசிரியர் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தாராம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கூட்டத்திற்கு வர வேண்டுமாம்.

அவ்வாறே ஆசிரியர்கள், குறித்த நாளில் துறைத் தலைவரின் வீட்டில் சென்று அமர்ந்திருந்தனராம். அப்போது, கவிஞர் கதராடையும் காந்தி குல்லாவும் அணிந்து கொண்டு போய் ஆசிரியர்களுடன் அமர்ந்தாராம். ஆசிரியர்கள் சுப்புரத்தினம் என்னும் இயற்பெயருடைய கவிஞரைப் பார்த்து, ‘டேய் சுப்புரத்தினம்! இந்த உடையுடன் இங்கே இருக்காதே - போய் வேறு உடை உடுத்திக்கொண்டு வா அல்லது வீட்டுக்குப் போய்விடு. துரை (கல்வித்துறைத் தலைவர்) வந்து பார்த்தால் உன்னைத் தொலைத்து விடுவான். உன் வேலைக்கே சீட்டுக் கிழித்துவிடுவான் - எழுந்து போ போ - என்று வற்புறுத்தினார்களாம்.

ஆனால் கவிஞர் சிறிதும் அசைந்து கொடுக்க வில்லையாம்; துரை வந்து பார்க்கட்டும். எனக்குச் சீட்டுக் கிழிக்கட்டும் - நான் எதற்கும் தயார் என்று கூறினாராம். மீண்டும் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டும் கவிஞர் நகராமல் ஒரே உறுதியுடன் இருந்து விட்டாராம்.

பின்னர்ச் சிறிது நேரத்தில் பிரெஞ்சுக்காரத் தலைவர் ஆசிரியர்கள் அமர்ந்திருந்த கூட்டத்துக்கு வந்தாராம். வந்ததும் கவிஞர் சுப்புரத்தினத்தை நெடுநேரம் ஏற இறங்கக் கவனித்துப் பார்த்தாராம்; பிறகு அவ்விடத்தினின்றும் அகன்று உள்ளே சென்றாராம்.

தலைவர் உள்ளே சென்றதும் ஆசிரியர்கள் மிகவும் அஞ்சி, கவிஞரை நோக்கி, “டேய் சுப்புரத்தின்ம்! பார்த்தாயா? துரை எதற்கு உள்ளே போயிருக்கிறான் தெரியுமா? உனக்கு ‘டிஸ்மிஸ்’ ஆர்டர் எழுதிக்கொண்டு வரத்தான் போயிருக்கிறான். இனிமேலாவது எழுந்து போய்விடு. உன்னை மன்னித்தாலும் மன்னிப்பான். இல்லாவிடின் உன்னோடு எங்களுக்கும் ஏதாவது தொல்லை நேரிடலாம்”, என்று சொல்லிப் பார்த்தார்களாம். அப்போதும் கவிஞர் எழுந்து செல்லாமல் (‘ஆணி அடித்துக் கொண்டும்’ வேர் பாய்ந்தும்) அதே இடத்தில் அமர்ந்திருந்தாராம்.

சிறிது நேரத்தில் துரை தம் மனைவியை அழைத்து கொண்டு வந்து கவிஞரைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினாராம்: ‘இதோ பார் இவரை! கதர் ஆடையும் கதர் குல்லாவும் அணியக் கூடாது; அணிந்தால் வேலை போய்விடும் என்று நாம் விதி செய்துள்ளோம். அப்படியிருந்தும், இவர் எதற்கும் அஞ்சாமல் கதர் உடையுடன் என் எதிரிலேயே வந்திருக்கிறார். இவருடைய உறுதியான துணிவையும் நாட்டுப் பற்றையும் பார்! இப்படியொரு நாட்டுப் பற்றுடையவர் இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை’ என்று தம் மனைவியிடம் கூறிக் கவிஞரை மெச்சினாராம். அதன்பிறகுதான் ஆசிரியர்கள் அச்சம் நீங்கி மூச்சு விட்டார்களாம்.

இங்கே நாம், கவிஞரின் உறுதியான நாட்டுப் பற்றைப் பெரிதும் வியப்பதா? அல்லது, கல்வித்துறைத் தலைவரின் பெருந்தன்மையைப் பற்றிப் பெரிதும் வியப்பதா? ஒன்றும் புரியவில்லையே. சரி - இருவரையுமே வியப்போம். இச்செய்தியைக் கவிஞர் என்னிடம் நேரில் கூறியபோது நான் அவரை மிகவும் பாராட்டினேன்.

பகைவனாயிருந்த என்னைப் பணிய வைத்தாற் போலவே பிரெஞ்சுக்காரக் கல்வித்துறைத் தலைவரையும் வியப்படையச் செய்துவிட்ட பாவேந்தர் பாரதிதாசனாரின் புகழ் என்றென்றும் வாழ்க.