உள்ளடக்கத்துக்குச் செல்

இயல் தமிழ் இன்பம்/மூன்று மடல்கள்

விக்கிமூலம் இலிருந்து

11. மூன்று மடல்கள்

மடல்(கடிதம்) வடிவில் சில செய்திகளை அறிவுறுத்துவது ஒருவகை இலக்கியமாகும். இந்த முறையை அறிஞர்கள் பலர் கையாண்டுள்ளனர். எடுத்துக்காட்டு ஒன்றே ஒன்றாவது காண்போமே. சவகர்லால் நேரு அவர்கள் தம் மகள் இந்திரா அவர்கட்கு மடல் வடிவில் பல செய்திகளை அறியச் செய்த இலக்கியப் படைப்பு பலரும் அறிந்ததாகும். சிலர், அன்னைக்கு - தம்பிக்கு - தங்கைக்கு என்றெல்லாம் தலைப்பிட்டுத் தனித்தனி நூலே எழுதியிருப்பதையும் பலரும் அறிந்திருப்பர்.

இந்தக் கட்டுரையில், ஒருவர் தம் மைந்தனுக்கும், மாணாக்கனுக்கும், நண்பனுக்கும் எழுதியதாகத் தனித் தனி மடல்கள் மூன்று உள்ளன. இந்த முறை படிப்பவர்க்கு அலுப்பு தட்டாமல் ஆர்வம் ஊட்டும் ஒருவகை முயற்சியாகும். இனி முறையே மடல்களைக் காண்பாம்.

மடல் - 1

வரலாற்று அறிவு

அன்புள்ள மைந்த,

நலம். நலம் பல மலர்க!

நின் கடிதமும் நீ படிக்கும் ஊர்ப் பள்ளியில் தந்த தேர்வு மதிப்பெண் பட்டியலும் வந்தன. தேர்வு மதிப்பெண் பட்டியலில் கையொப்பம் இட்டு அனுப்பியுள்ளேன்.

நீ எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாய். மகிழ்ச்சி. ஆனால் வரலாற்றுப் பாடத்தில் மட்டும் தேவைக்குக் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளாய். வரலாற்றுப் பாடத்தையும் கவனித்துப் படிக்க வேண்டும். மாகவி சுப்பிரமணிய பாரதியார் தம் ஆத்திசூடி நூலில் ‘சரித்திரத்தில் தேர்ச்சி கொள்’ என்று எழுதியிருப்பதை நீ அறிந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். இல்லையேல், இப்பொழுதாயினும் அறிந்து, பாரதியாரின் அறிவு மொழியைச் செயலுக்குக் கொண்டு வருவாயாக.

தேர்வில் வெற்றி பெறுவதற்காக மட்டும் வரலாறு படிக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவும் வரலாறு படிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்பித்துத் தேர்வு நடத்துவதே, பிற்கால வாழ்க்கையைப் பயனுள்ள முறையில் அமைத்துக் கொள்வதற்காகத்தான்.

முதலில் வரலாறு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். Yesterday is History என்று ஆங்கிலத்தில் சொல்வது உண்டு. அதாவது, நேற்று வரலாறு என்பது இதன் பொருள்.

இவ்வாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உலகில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் பிற்கால வழிமுறையினர்க்குப் படிப்பினையாக இருக்கும்படி ஒரு மாதிரி வாழ்க்கையாகத் தெரியும்படி எழுதி வைக்கப்பட்டிருப்பதே வரலாறாகும்.

வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்களால் - வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் துணைப் பொருள்களால் - வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் கருவிகளால் வரலாற்றை மூன்று வகைப்படுத்துவது உண்டு. அவையாவன: பட்டப் பகலில் நடந்த வரலாறு - வைகறையில் மூடுபனியில் நடந்த வரலாறு - அமாவாசை நள்ளிரவு இருட்டில் நடந்த வரலாறு என்பன அவை. இம்மூன்றையும் விளக்க வேண்டுமா? சரி விளக்குகிறேன்.

பட்டப் பகலில் நடந்த வரலாறு என்பது, இந்தக் காலத்தில் நாம் படிக்கின்ற வரலாற்று நூல் செய்தியாகும். அதாவது, நிகழ்ச்சி நடைபெற்ற காலம் - ஆண்டு - திங்கள் - நாள் - மணி, நிகழ்ச்சி நடைபெற்ற இடம், நிகழ்ச்சியை நடத்தியவர், அதன் காரணம், அதன் விளைவுகள் முதலியவை பற்றி நன்கு வெளிப்படையாக அறிந்து எழுதி வைத்திருக்கும் நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளும் வரலாறாகும்.

வைகறையில் மூடுபனியில் நடந்த வரலாறாவது: இந்த நேரத்தில் எதிரில் யாரோ வருகிறார் என்பதை ஒரு தோற்றமாக உணர்ந்து கொள்ள முடிகிறதே தவிர, தெளிவாக இன்னார் எனப் புரிந்து கொள்ள முடியாதல்லவா? அதுபோல, நிகழ்ச்சி நடந்த நேரம் - இடம் - நிகழ்த்தியவர் முதலிய விவரங்களைப் போதிய அளவு தெளிவாக அறிந்து கொள்ள முடியாமல், இலக்கியங்களிலே கூறப்பட்டிருப்பவற்றைக் கொண்டு உய்த்துணர்வாக அறிந்து கொள்ளும் வரலாறாகும்.

அமாவாசை நள்ளிருளில் நடந்த வரலாறு எனப்படுவதாவது: ஞாயிறு - திங்கள் இவற்றின் ஒளியோ - விளக்கொளியோ இல்லாத நள்ளிருளில் பொருள்களைத் தடவிப் பார்த்துத்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அதுபோல, புதைப்பொருள் - அகழ்வாராய்ச்சி வாயிலாகக் கண்டுபிடித்துத் தோண்டி எடுக்கும் பொருள்களைக் கொண்டு ஒரு தோற்றமாகப் பழங்கால நிலைமைகளைப் புரிந்து கொள்ளும் வரலாறாகும். அரப்பா - மொகஞ்ச தாரோ-சிந்துவெளி நாகரிக்ம் இவ்வாறு கண்டுபிடித்துத் தெரிந்து கொண்ட அமைப்பேயாகும். இது போன்ற பன்ழய நாகரிகங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன்.

இந்த மூன்றனுள், இலக்கியங்களின் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கற்பனையும் கலந்திருக்க லாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், பாரதம், இராமாயணம் போன்றவை இத்தகையனவே. இலக்கிய இன்பத்திற்காக - இலக்கியச் சுவை நயத்திற்காகக் கற்பனை கலப்பது உண்டு. இவற்றுள் உள்ள கற்பனைச் செய்திகளைப் பகுத்தறிவின் வாயிலாக விட்டு விலக்கி, நடந்திருக்கக் கூடியதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலக்கிய ஆசிரியனுக்கும் வரலாற்று ஆசிரியனுக்கும் உள்ள வேறுபாடாவது: கற்பனையும் கலந்து எழுதுபவன் இலக்கிய ஆசிரியன். கற்பனை சிறிதுமின்றி - தன் சொந்தக் கருத்தைச் சிறிதும் புகுத்தாமல், நடந்ததை நடந்தவாறு அப்படியே எழுதி அளிப்பவன் வரலாற்று ஆசிரியனானவன். வரலாற்று ஆசிரியன், கற்பனையையோ - தன் சொந்தக் கருத்தையோ இடையில் புகுத்துவானேயாகில், அவனது எழுத்து, வரலாறு என்ற பெயருக்கு உரியதாகாமல் இலக்கியம் என்னும் பெயர் பெறும் நிலையை அடைந்து விடும். எனவே, வரலாறு அதாவது சரித்திரம் என்பது, நடந்ததை நடந்தவாறு, காலம் - இடம் - நிகழ்த்தியவர் பற்றிய அறிமுகத்துடன் எழுதப்பட்டிருப்பதாகும்.

வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதன் நோக்கத்தை உணர்ந்து, அதனால் கிடைக்கக்கூடிய படிப்பினையின்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

வரலாற்று அறிவினால், எது நல்லது - எது கெட்டது, எது அறம் - எது மறம் என்பவற்றை அறிந்து கொள்ள முடியும்; அறநெறியில் வாழ்ந்தவர்கள் அடைந்த ஆக்கத்தையும், மறநெறியைக் கடைப்பிடித்தவர்கட்குக் கிடைத்த பேரிழப்பையும் தெரிந்த கொள்ள முடியும். அதற்கு ஏற்ப நம் வாழ்க்கையைச் சீரிய - நேரிய முறையில் அமைத்துக்கொண்டு ஆக்கம் பெற இந்த வரலாற்றறிவு நமக்குப் பேருதவி புரியும்.

வரலாற்று நூல்களில் மாபெரும் போர்களைப் பற்றிப் படிக்கிறோம். அப் போர்களால் விளைந்த கேடுகளைப் பற்றியும் படிக்கிறோம். எனவே, போர் கூடாது என்பதை ஆணித்தரமாக அறிய முடிகிறது.

இலக்கியங்களில் உள்ள வரலாற்றுச் செய்திகட்கும் மக்களை வழிநடத்திச் செல்வதில் பங்கு உண்டு. சிலப்பதிகாரத்தால், ஆழ்ந்து ஆய்ந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதையும், மணிமேகலையால் உலகப் பற்றுப் பிணிப்பு கூடாது என்பதையும், பெரிய புராணத்தால் அன்பு நெறியினையும் பாரதத்தால் பங்காளிகட்குள் பகையின்றி ஒற்றுமை வேண்டும் என்பதையும் சூது கூடாது என்பதையும், இராமாயணத்தால் பிறன்மனை நயத்தல் கூடாது என்பதனையும் - சாதி சமய வேறுபாடின்றி அனைவரும் உடன் பிறந்தவர் போல் ஒன்றி வாழ வேண்டும் என்பதையும், அரிச்சந்திரன் கதையால் உண்மையே பேச வேண்டும் என்பதையும், இன்னும், இன்ன பிற வரலாறுகளால், நம் வாழ்க்கையை நன்முறையில் கடைத்தேற்ற உதவும் பல்வேறு படிப்பினைகளையும் அறிந்து பின்பற்ற வேண்டும்.

இதனால்தான், ‘சரித்திரத்தில் தேர்ச்சி கொள்’ என்னும் அறிவுரையை அளித்துப் போந்தார் பாரதியார். வாழ்க நீடூழி.

இங்ஙனம்
உன் தந்தை

மடல் - 2

காலத்தோடு செயல்

அன்புள்ள மாணவ நண்ப,

நலம். நலம் பல பெருகுக.

உன் மடல் கிடைத்தது. உனக்கு வேலை மிகுதியாயிருப்பதால் உடனடியாக மடல் எழுத முடியவில்லை என்று எழுதியிருக்கிறாய். ஆமாம், இந்த வயதில் எவ்வளவு வேலையா யிருப்பினும் முயன்று செய்யத்தானே வேண்டும்? சில நேரம் பல வேலைகள் சுமந்து போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாய். வேலைகள் எல்லாம் சுமையாகக் குவியாமல் இருப்பதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியினை, நீ என்னிடம் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நான் அறிவித்திருப்பதாக நினைவிருக்கிறது. மீண்டும் அதனை ஈண்டு உனக்கு நினைவு செய்கிறேன்.

வேலையில் காலக்கழிவு செய்தல் கூடாது. எந்த வேலையா யிருப்பினும் உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும். பிறகு பார்ப்போம் என்று ஒத்திப்போடும் இயல்பு நம் ஆக்கத்திற்குப் பெருந்தடைக் கல்லாகும். முழு வேலையையும் ஒத்திப்போடுவதற்கு மட்டும் இதனை நான் கூறவில்லை; குறித்த வேலையை அரைகுறையாய் விட்டு வைப்பதற்கும் சேர்த்தே நான் இந்த அறிவுரையினைக் கூறுகின்றேன். அரைக் கிணறு தாண்டலாமா?

வேலையைக் குறையாய் நிறுத்தும் இயல்பு உடையவரிடந்தான் வேலைகள் மலையெனக் குவிந்து விடுவது வழக்கம். முற்பகல் வேலையைப் பிற்பகல் செய்ய, பிற்பகல் வேலையை மறுநாள் செய்ய, - இப்படியே போய்க்கொண்டிருந்தால், எந்த வேலையும் ஒழுங்குறாது. அவசரக்கோலம் அள்ளித் தெளித்த கதையாய்ப் போய்விடும். ‘செய்வன திருந்தச் செய்’ என்பது முதுமொழி யல்லவா?

சிலர் செய்யவேண்டிய வேலையை உரிய காலத்தில் செய்யாமல் காலப் பாழ் செய்து, வேறு இன்பப் பொழுது போக்குக் களியாட்டங்களில் ஈடுபடுவது உண்டு. வெளித் தோற்றத்திற்கு அவர்கள் களியாட்டயர்வதாகக் காணப்படினும், அவர்தம் உள்ளத்தே,. ஐயோ! வேலையை விட்டு விட்டு வந்து விட்டோமே, எப்போது செய்வது-என்ன ஆவது என்ற எண்ணம் உறுத்திக் கொண்டேயிருக்கும். குறை வேலைக்காரர்கள், பொழுது போக்கினால் பெறும் போலி இன்பத்தைக் காட்டிலும், உரிய காலத்தில் முடித்து மன நிறைவு கொள்வதால் உண்டாகும் இன்பமே பேரின்பம்! பேரின்பம்! இந்த உண்மையைப் பலர் உணர்வதில்லை.

சுற்றி வளைக்காமல் சுருங்கச் சொல்லவேண்டு மாயின், எடுத்துக் கொண்ட வேலையை உரிய காலத்திலேயே முற்றும் முடிக்காமல் எச்சமாய் விடுவது-அதாவது-வேலையைக் குறையாக நிறுத்திவைப்பது, நம் திட்டங்களை எல்லாம் முறியடித்து, நம்மைக் குறிக்கோள் அற்றவராக்கி நம் வாழ்வையே சீர்குலைத்து விடும். எனவே, வேலையில் சிறிதும் குறை வைக்கக்கூடாது. வாழ்க்கையில் சிறு பகையிருப்பினும், அது எங்ஙனம் நாளடைவில் பெரிய பகையாக முற்றி நம் தலைக்கே கேடு விளைத்து விடுமோ-அங்ஙனமே குறை வேலையும் செய்துவிடும்.

ஏன், வேறோர் எடுத்துக் காட்டும் உண்டே! தீயை முற்றும் அணைக்காமல் சிறிதளவு எச்சமாய் (குறையாய்) விட்டு வைப்பினும், அது பெருகி வளர்ந்து பெருங்கேடு செய்யுமல்லவா? வினைக் குறையும் அதுபோன்றதே. இதனை நம் வள்ளுவப் பெருந்தகையாரும்,

“வினைபகை என்றிண்டின் எச்சம் நினையுங்கால்
தீ யெச்சம் போலத் தெறும்” (674)

என்னும் குறட்பாவால் தெளிவுறுத்தியுள்ளாரே. எனவே எந்த வேலையினையும் காலம் தாழ்த்துச் செய்தல் கூடாது. உரிய காலத்தில் செய்து விட வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையானவையாகக் கடமைப்பட்டுள்ள செயல்களில் காலத் தாழ்வு கூடாது என்பது மட்டு மன்று. நல்ல பல அறச் செயல்கள் புரிவதிலும் காலத்தாழ்ப்பு கூடாது. காலத் தோடு செய்தல்வேண்டும். இப்போது நாம் இளைஞராய்த் தானே இருக்கிறோம். பிறகு பொறுமையாக அறச் செயல்கள் புரியலாம்-எனச் சோம்பியிருத்தலும் கூடாது-என்கிறார் வள்ளுவர்:

“அன்றறிவாம் என்னாது அறம் செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை” (36)

என்பது திருக்குறள். இதை நாலடியாரும் வற்புறுத்துகிறது.

நாம் இப்போது இளமைாய்த்தானே இருக்கிறோம் இன்னும் நாள் ஆகட்டும்-பிறகு நல்வினை செய்வோம் என்று சோம்பியிருந்தலாகாது. கையில் பொருள் உள்ள போதோ மறைக்காமல் அறம் செய்யவேண்டும். இளமையை நம்பக் கூடாது. சூறைக் காற்று வீசின், முற்றி முதிர்ந்த கனி வீழாமல் மரத்திலேயே இருக்க, பச்சிளங்காய் விழுந்து விடுவதும் உண்டு-என்று நாலடியார் நவில்கிறது.

“மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்
முற்றி யிருந்த கனி யொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு” (79)

என்பது பாடல். இதையே, முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானுாறு என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் வேறொரு கோணத்தில் விளக்குகின்றது;

ஓடத்தில் ஏறு முன்பே ஏறுபவரிடம் ஓடக்காரர் கட்டணம் வாங்கி விடவேண்டும். அவரை அக்கரை சேர்ந்தபின் அவருக்கு அக்கறை இல்லாமலும் போகக்கூடும். அதாவது, அவரிடம் கட்டணம் வாங்குவது அரிதாகவும் போய் விடலாம். சுங்கப் பணம் வாங்குவதும் இது போன்றதே. எனவே, எதையும் தாங்கும் இளமை உள்ள போதே கல்வி கற்கவேண்டும். முதுமையில் கற்க முடியாமல் போகலாம் என்று இந்நூல் அறிவுறுத்துகிறது.

“ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமோ-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை
மரம்போக்கிக் கூலிகொண்டார்” (1)

நல்ல பல செயல்கள் உரிய காலத்தில் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதற்கு உரிய காரணங்களுள் சோம்பல் தலையாய காரணமாகும். இந்த மடி அதாவது சோம்பல் கூடாது என வள்ளுவர் ‘மடியின்மை’ என்னும் தலைப்பிட்டுப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இவற்றுள் சில காண்பாம்.

குடி (குடும்பம்) என்னும் அணையா விளக்கு, சோம்பல் என்னும் சிட்டம் கட்டக் கட்ட ஒளி மழுங்கி அணைந்து விடும்-அழிந்து விடும்:

“குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்” (601)

என்பது குறள்.

தமது குடியை உயர்ந்த குடியாக்க விரும்புபவர், சோம்பலுக்குச் சோம்பல் தந்து சுறுசுறுப்புடன் இயங்குவாராக!:

“மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்” (602)

என்பது குறள்.

மடியை (சோம்பலை) மடியிலே கட்டிக்கொண்டிருக்கும் அறிவிலி பிறந்த குடி அவனுக்கும் முந்தி மடிந்துபோகும்:

“மடி மடிக்கொண் டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து” (603)

“பருவத்தே பயிர் செய்” என்னும் ஔவையின் (ஆத்திசூடி-2) அறிவுமொழியும் ஈண்டு எண்ணத் தக்கது.

என் அரிய மாணவ நண்ப! இது காறும் யான் கூறியவற்றை உள்ளத்தில் கொண்டு, உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்துவிடின், துன்பம் இன்றி இன்பம் எய்தலாம். பொன்னினும் சிறந்த பொருள் அருங்காலம், அல்லவா? வாழ்க பல்லாண்டு.

இங்ஙனம்
உன் ஆசிரியன்


மடல் - 3

எண்ணித்துணிக

அன்பு கெழுமிய நண்ப

நலம். நலம் பல பெருகுக, உன் மடல் வந்தது. மனம் சரியில்லை - எதைச் செய்யத் தொடங்கினும் ஒரே குழப்பமாயிருக்கிறது - சூழ்நிலையும் சரியில்லை - என்று மடலில் எழுதியிருக்கிறாய். தெளிவான எண்ணத்தோடு செயல் தொடங்கின் வெற்றி பெறலாம்.

திருவள்ளுவனார் என்ன கூறியுள்ளார்? ‘எண்ணித் துணிக கருமம்’ என்றார். எண்ணுதலோ அதாவது சிந்திப்பதோ தெளிவு பெறுவதற்குத்தான். இந்தச் செயலை மேற்கொள்ளின், ஆக்கம் கிடைக்குமா அல்லது அழிவு நேருமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். இன்னாருடன் சேர்ந்து செய்யலாமா என்றும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

தொழிலை எந்த இடத்தில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் - எந்தக் காலத்தில் தொடங்கினால் மேன் மேலும் வளரும் - என இடமும் காலமுங்கூட நன்கு எண்ணிப் பார்த்துத் தேர்ந்தெடுத்துத் தொடங்கவேண்டும்.

முன்பின் ஆய்வு இன்றித் திடீரெனத் தொடங்கின் தற்செயலாய் வெற்றி கிடைப்பினும் கிடைக்கலாம். ஆனால் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஒன்று கிடக்க ஒன்று நேர்ந்து விடலாம். எனவே, எதையும் ‘அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாக’ ஆக்கி விடலாகாது.

நம் செயலுக்குத் துணைபுரிய, ஆராயாமல், எவரையும் எளிதில் நம்பிவிடக் கூடாது. நம்பிக்கையானவர் எனத் துணிந்த பின்னரே சேர்த்துக் கொள்ளவேண்டும்.

திடுதிப்பென்று எதையும் தொடங்கிவிடின், பொருள் இழப்புக்கேயன்றி உயிர் இழப்பிற்கும் ஆளாக நேரிடும். ‘ஆய்ந்தோய்ந்து பாராதவன்தான் சாவ மருந்துண்பவன்’ என்பது மக்களிடையே வழங்கும் ஒரு பழமொழி. திருவள்ளுவருங்கூட இதைக் கூறியிருக்கிறாரே.

“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்” (791)

என்பது அவரது குறட்பா.

உலகியலில், ஆராய்ந்து - சிந்தித்துப் பார்க்காமல் கொண்ட திடீர் நட்பாலும் திடீர்க் காதலாலும் வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்ட எடுத்துக்காட்டுகள் மிகப் பல உண்டு.

பிறர்க்கு நல்லது செய்தல் என்னும் பெயரால் ஆராயாது எல்லாருக்குமே நன்மை செய்து விடுதல் கூடாது. இந்த நன்மையின் துணைகொண்டு, நன்மை செய்தவருக்கோ மற்றும் பிறர்க்கோ தீமை செய்யும் கொடியவர்களும் உண்டு. ஆராயாமல் அவர்க்குச் செய்த நன்மை, பாம்புக்குப் பால் வார்த்த கதையாக ஆகிவிடுவதும் உண்டு.

ஆராயாமல் ‘தடாபுடா’ என்று செயலைத் தொடங்கி விடின், பின்னர்ப் பேரிழப்போ பெரும் பழியோ நேரின் அதன் பின்பு பலர் துணையாக நின்று முட்டுக்கொடுத்துக் காக்க முயன்றாலும் உய்யும் வழி கிடைக்காமல் போய்விடலாம்.

சிலர், எது நல்லது - எது கெட்டது என்று எண்ணாமல் - ஒரு தெளிவு இன்றி - ஒரு சூழ்வும் (ஆலோசனையும்) இன்றி, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையை விட்டு விட்டு, கடைப்பிடிக்கக் கூடாத வழியில் சென்று இடர்ப்படுகின்றனர். ‘முன்யோசனை’ வேண்டும் என்பது இதுபோல் இடர்ப்பாடு எய்தாமல் வெற்றி பெறுவதற்குத்தான். ஆய்வு இன்றி ஆதாயத்தை எதிர்பார்த்துச் செயலைத் தொடங்கி, இறுதியில் முதலையே இழந்துவிட்டவர்களின் வரலாறுகள் பல உண்டு.

இப்படியே யோசனை - ஆராய்வு செய்து கொண்டிருந்தால் செயல் ஒன்றும் நடைபெறாது: துணிந்து செயலைத் தொடங்கிவிட வேண்டும்; செயலைத் தொடங்கிவிடின், பிறகு அவ்வப்போது நிலைமைக்கு ஏற்ப ஆய்வு செய்து செயல்படலாம் - என்று எண்ணித் தொடங்கிவிட்டுப் பின்னர்த் தலைமேல் கைவைத்துக் கொண்டு அழாத குறையாய் அமர்ந்துவிடக் கூடாது. இதனால்தான் திருவள்ளுவர்

“எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு” (467)

என்ற அறிவுரையை உலகுக்கு அளித்துப் போந்தார்.

தன் வலிமை, தன் படை வலிமை, பகைவர் வலிமை ஆகியவற்றையெல்லாம் ஒத்திட்டு நோக்கி ஆராயாது, திடீரெனப் பகைவர் நாட்டின்மீது படையெடுக்கும் ஓர் அரசின் செயல் பயிரைப் பாத்தி கட்டி வளர்ப்பதைப்போல் பகைவர்க்கு எளிதில் வெற்றி வாய்ப்பை உண்டாக்கி விடலாம்.

ஆராயாமல் ஆர அமர எண்ணிப் போர் தொடுப்பது எப்போது என்றால், பகைவர் திடீரெனப் படையெடுத்து வந்துவிட்ட போதாகும். பகைவர் படை தம் ஊருக்குள் எதிர்பாராது புகுந்துவிட்டபோது, மணிக்கணக்கில் - நாள் கணக்கில் பலரும் அமர்ந்துகொண்டு என்ன செய்யலாம் - எவ்வாறு செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருத்தலாகாது. இந்தச் சூழ்நிலையில் நேரத்தை நீட்டினால், ‘அரசன் சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறிபோய் விடும்’ என்னும் பட்டறிவு மொழிக்கு ஏற்பத் தோல்வியையே தழுவ நேரிடும். இத்தகைய சூழ்நிலையில், Quick Decision விரைந்து முடிவெடுத்தல், Quick Action - விரைந்து செயல்படுதல், Quick Result - விரைந்த பயன் என்ற முறையில் உடனே செயல்பட வேண்டும். ஆனால், இது போன்ற உடனடிச் சூழ்நிலை இல்லாத காலத்தில், அரசுத்தலைவரும் அமைச்சர்களும் படைத் தளபதிகளும் நன்கு ஆய்ந்து முடிவெடுத்த பின்னரே செயலில் இறங்கவேண்டும். வெற்றி பெறாவிடினும் தோல்வி அடையாமலாவது சரி நிகர் சமமாய் இருக்கவேண்டுமல்லவா?

உறவு கருதியோ - நீண்ட நாள் நட்பு கருதியோ, தகுதி யற்றவரை ஆராயாது செயலில் ஈடுபடுத்தலாகாது. இவர்கட்கு வேண்டுமானால் ஏதாவது உதவி செய்யலாம். மற்றப்படி சிறந்த செயல் செய்வதற்கு, உறவு - நட்பு - சாதி - சமயம் என்பவற்றைப் பார்க்காமல், எவர் நன்கு செயல் ஆற்றுவார் என்பதைத் தேர்ந்தறிந்து அவரிடமே செயலை ஒப்புக் கொடுக்கவேண்டும்.

ஆராயாது கண்டவரைச் செயலில் ஈடுபடுத்தினால், அவர்கள் மறைமுகமாகத் தாம் பொருள்சேர்த்துக் கொண்டு நழுவி விட்டாலும் விடலாம். இவ்வாறு ஏமாந்து போனவர்களின் இரங்கத்தக்க வரலாறு எத்தனையோ உண்டு. ‘தாரம் இழந்தவனைப் பெண் பார்க்க அனுப்பினால், அவன் தனக்குப் பார்ப்பான்’ என்னும் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

எனவே, எந்தச் செயலிலும் ஈடுபடுவதற்கு முன், நன்றாகச் சிந்திக்க வேண்டும்; சிந்தித்து நல்ல முடிபாகத் தெளிவு பெறவேண்டும். இவ்வாறு செய்யின் வெற்றி உறுதி. ஆமாம். எண்ணத்தில் தெளிவுவேண்டும். வாழ்த்துகள்.

இங்ஙனம்,
உன் அன்பு நண்பன்