உள்ளடக்கத்துக்குச் செல்

நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சுவர்ணலிங்கம் அவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

திரு. சுவர்ணலிங்கம் அவர்கள்

இவர் சிங்களத் தீவில் பிறந்து வளர்ந்தவர். சிறுவயதிலேயே நாடகமாட வேண்டுமென்று இச்சைகொண்டவர். ஆயினும் 1911-வது வருடம் சுகுணவிலாச சபை சிங்களத்திற்குப் போய் நாடகங்கள் ஆடியதை பார்த்தபின் அந்த இச்சை மேலிட்டவராய் 1913-வது வருடம் இலங்கை சுபோதவிலாச சபை என்னும் நாடகசபையை அங்கு ஸ்தாபித்ததில் மிக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டார். அதுமுதல் சுகுணவிலாச சபை இலங்கைக்குப் போனபோதெல்லாம் அவர்கள் ஆடிய நாடகங்களை மிகவும் கவனமாய் பார்த்து அவைகளில் தாமும் ஆட ஆரம்பித்தார். அப்படி இவர் ஆடிய நாடகங்களில் முக்கியமானவை மனோகரன், வேதாள உலகம், சிம்ஹௗ நாதன், விரும்பியவிதமே, தேரோட்டி மகன் முதலியவைகளாம். அவைகளில் எப்பொழுதும் முக்கிய பாத்திரங்களையே மேற்கொள்ளாது வெவ்வேறுவிதமான பல பாத்திரங்களை நடித்துள்ளார். அவ்வாறு இவர் நடித்த முக்கிய பாத்திரங்கள் தத்தன், ஈயாகாமன், சித்திரசேனன், அச்சுதன் என்பனவாம். இவரது நடிக்கும் திறமையின் ஒரு முக்கிய குணம் என்ன வென்றால் வெவ்வேறுவிதமான பலவித நாடக பாத்திரங்களை நடித்ததேயாம். அதற்கு உதாரணமாக மேற்சொன்ன பாத்திரங்களன்றி பரதன், கூனி, செம்படவன். விஸ்வாமித்திரர், வள்ளித்திருமணத்தில் கடைசி தம்பி, எல்லாள மகாராஜா, சந்திரஹரி முதலியவைகளையும் நடித்து நல்ல பெயர்பெற்றிருக்கிறார். இன்னும் 101 வயதுக்கிழவன், பிரதமர் சேன நாயகா, கள்ளிறக்குபவன், கதிர்காமர் முதலியவைகளையும் நடித்து நல்ல பெயர் பெற்றிருக்கிறார். இவ்வாறு பலவிதமான நாடகங்களில் நடித்து பெயர் பெறுவது ஓர் அருமையான குணமாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே மற்றொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர்.

இவர் மனோகரனாக நடித்தபோது ஒருமுறை ஆங்கில போர் படைக்கல உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து அதை கடைசி வரை பார்த்திருந்து நாடக முடிவில் இவர் நடித்ததைப்பற்றி மேடையின் மீதேறி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். இப்போது வயதாகியும் இலங்கைத் தீவில் அநேக நாடகசபைகளில் நடித்து வருகிறார். இலங்கை நாடக அபிமானிகள் இவரது நடிப்பை புகழ்ந்து இவருக்கு கலையரசு, நாடககலாமணி என்ற பட்டப்பெயர்களை கொடுத்திருக்கின்றனர். சுருக்கிச் சொல்லு மிடத்து இலங்கையில் எங்கு தமிழ் நாடகம் நடந்தாலும் இவரது உதவியை நாடாதவர்கள் ஒருவருமில்லை, இவருக்கு பல சமயங்களில் நாடக அபிமானிகள் பொற்பதக்கம் முதலிய வைகளை அளித்து மரியாதை செய்திருக்கின்றனர். இவர் என்னைப்பற்றி யாருடன் பேசுவதாயிருந்தாலும் தன் குருநாதர் என்று சுட்டி பேசியிருக்கிறாராம். அப்பட்டபெயரை வகிக்க எனக்குத் திறமையுண்டோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆயினும் இதை இங்கு எழுதியதன் காரணம் இவருக்கு என்மீதுள்ள அன்பேயாம் என்று நினைக்கிறேன், இவர் தற்காலத்தில் தன் முதிர்வயதிலும் பல நாடக சபைகளுக்கு போஷகராயிருந்து அவைகளை உற்சாகப்படுத்தி வருகிறார். ஒருமுறை சிங்களத்து நாடக அபிமானியாகிய ஒரு பெரியார் 'இந்தியாவில் தமிழ்நாட்டில் சம்பந்த முதலியார் எப்படி பெயர் எடுத்தாரோ அப்படியே இலங்கையில் சொர்ணலிங்கம் பெயர் பெற்றிருக்கிறார்" என்று கூறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகத்தின் பெருமையை இலங்கைவாசிகள் நன்றாய் அறியும்படி விடா முயற்சிகொண்டு உழைக்கவேண்டுமென்று எல்லாம்வல்ல ஈசன் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.