பாரதிதாசன் தாலாட்டுகள்/தோழிமார் தாலாட்டு
தொகைமுத்துத் தொங்கலிட்ட தொட்டிலிலே
அன்பே
நகைமுகத்தின் பெண்ணான நன்முத்தே
மானே.
தகையாளர் வையத்தில் தந்த
திருவே
தொகைபோட்டு வாங்கொண்ணாத் தூய் அமிழ்தே!
கண் வளராய்.
கன்னங் கரிய களாப்பழத்தின்
கண்ணிரண்டும்
சின்னஞ் சிறிய ஒளிநெற்றித்
தட்டிலிட்டே.
இன்னும் எமக்கே இனிப்பூட்டிக்
கொண்டிருந்தால்
பொன் “உறக்க நாடு” புலம்பாதோ
கண்மணியே!
தங்கத் திருமுகத்தின் தட்டினிலே
உன்சிரிப்பைப்
பொங்கவைத்தே எம்உளத்தைப் பொங்கவைத்துக்
கொண்டிருந்தால்
திங்கள் முகத்துன் சிரிப்போடு
தாம்கொஞ்ச
அங்“குறக்க நாட்டார்” அவா மறுத்தது
ஆகாதோ?
செங்காந்தளின் அரும்போ சின்னவிரல்?
அவ் விரலை
அங்காந்த வாயால் அமிழ்தாக
உண்கின்றாய்.
கொங்கை அமிழ்து புளித்ததோ
கூறென்றால்
தெங்கின்பாளைச்சிரிப்புத் தேனை
எமக்களித்தாய்.
பஞ்சுமெத்தைப் பட்டுப் பரந்தொரு
மேல்விரிப்பில்
மிஞ்சும் மணமலரின் மேனி
அசையாமல்
பிஞ்சுமா வின்விழியைப் பெண்ணே
இமைக்கதவால்
அஞ்சாது பூட்டி அமைவாகக்
கண்ணுறங்காய்
குடும்பவிளக்கு - 4