பாரதிதாசன் தாலாட்டுகள்/மலர்க்குழற் பாட்டி தாலாட்டு
Appearance
உச்சி விளாம்பழத்தின் உட்சுளையும்
கற்கண்டும்
பச்சைஏலப்பொடியும் பாங்காய்க்
கலந்தள்ளி
இச்செச் செனஉண்ணும் இன்பந்தான்
நீகொடுக்கும்
பிச்சைமுத்துக் கீடாமோ என்னருமைப்
பெண்ணரசே!
தஞ்சைத் தமிழன் தரும் ஓவியம்
கண்டேன்
மிஞ்சு பலிவரத்தின் மின்னும்கல் தச்
சறிவேன்,
அஞ்சுமுறை கண்டாலும் ஆவலறா
உன்படிவம்
வஞ்சியே இப்பெரிய வையப்
படிவம்!
முகிழாத முன்மணக்கும் முல்லை
மணமும்
துகள் தீர்ந்த சந்தனத்துச் சோலை
மணமும்
முகநிலவு மேலேநான் உன்உச்சி
மோந்தால்
மகிழ மகிழ வருமணத்துக்
கீடாமோ!
எமையாள் இனத்தாரின் யாழின்
இசையும்
குமிக்கும் ஒருவேய்ங் குழலின்
இசையும்
தமிழின் இசையும் சரியாமோ
என்றன்
அமிழ்தே மலர்வாய்நீ அங்காப்பின்
ஓசைக்கே?
இன்பத்து முக்கனியே என்னன்பே
கண்ணுறங்கு!
தென்பாண்டியர்மரபின் செல்வமே
கண்ணுறங்கே
குடும்பவிளக்கு - 4