நீங்களும் இளமையாக வாழலாம்/மனம் படுத்தும்பாடு

விக்கிமூலம் இலிருந்து
7
மனம்படுத்தும் பாடு


மனதும் தேகமும்

உடலுக்குத்தான் முதுமை வரும். ஆனால் மனதுக்கோ என்றும் இளமை, இனிமை புதுமை என்று கூறுவார்கள்.

ஒரு சிறு பள்ளத்தைத் தாண்டுவதற்கும் தேகமோ தள்ளாடும். ஆனால் மனமோ மலைகளை, கடல்களைக் கூட வேகமுடன் தாண்டும். விரைந்து பல வேலைகளைச் செய்து முடித்து விட்டு மின்னல் வேகத்தில் திரும்பும்.

மனதின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் தேகம் திணறிப்போய் விடுவதுண்டு, ஏன் இப்படி?

அது தான் அறிய முடியாத ரகசியமாகக் கிடக்கிறது.

மாயமாய் மறைந்து நின்று மனம்படுத்தும் பாடு, மாறாத பாடுதான். இருந்தாலும், அதன் வழியறிந்து நிலையுணர்ந்து நாம் பற்றிப் பழகினால் நம் வசமாக்கி விடலாம்.

எப்படி? அதில் தான் எல்லாமே அடங்கிக் கிடக்கிறது.

ரத்தத்தாலும் சதையாலும் ஆன தேகம், நாளுக்கு நாள் முதுமைக்கு ஆளாகிறது. ஆனால் மனமோ தினந்தினம் புதுப்பொலிவு கொண்டு இளமையாகி வருகிறது.

ஆமாம்! மனதுக்குக் கிடைக்கின்ற அனுபவங்கள், புதுப்புது வாய்ப்புகள். பொன்னான சந்தர்ப்பங்கள், பொங்கியெழ வைக்கும் இனிய சூழ்நிலைகள் அநேகம். அநேகம்.

அனுபவங்களின் சேர்க்கையால், அறிவின் பெருக்கத்தால் மனம் தினவெடுத்துக் கிடக்கிறது. உண்மைதான். 90 வயதாக இருந்தாலும், மனம் தெளிவாக, திடமாகவே விளங்குகிறது. இதனால்தான் மனிதன் வாழும் இடமாக மனம் திகழ்கிறது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஆனால், இந்தக் கூற்றுக்கு மாறாக பல முதியவர்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம். புரியாமல் திகைக்கிறோம்.

சில முதியவர்கள் ‘சின்னக் குழந்தை போல்’ ஆகிவிடுவதை; சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி கேட்பவர்களையும் திண்டாடச் செய்வதை; நிகழ்காலத்தில் நடப்பதைக் கூட புரிந்து கொள்ள இயலாதவர்களாகத் தடுமாறுவதை; அருகில் இருப்பவர்கள் பெயர்களையோ அல்லது அன்றைய நிகழ்ச்சிகளையோ நினைவுபடுத்தத் திணறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இத்தகைய செயல்கள், உடல் முதுமையடைந்து விட்டதால் அல்லது முற்றிய நோய் உண்டாக்கிய விபரீதத்தால் அல்லது மூளைக்கு செல்லக்கூடிய இரத்தக் குழாய்கள் தடித்துப் போனதால் ஏற்பட்டிருக்கலாம். இத்தகைய செயல்கள் நடுத்தர வயதுள்ளவர்களுக்குக் கூட ஏற்படுவதும் சகஜமே!

ஆனால் இங்கே ஒரு கருத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கற்பனை முதுமை

வயது ஏறிக் கொண்டு வருகிறது என்றால் முதுமையடைந்து விட்டோம் என்று, பலர் மனதால் முடிவுக்கு வந்து விடுகின்றார்கள், அப்படிப்பட்டப முடிவு - ஒவ்வொரு செயலிலும் ஏறி நிறைந்து கொள்கிறது. இதனால் வர இருக்கின்ற முதுமை விரைந்து உடலுக்குள் வந்து விட்டது போலவும், அதனால் தள்ளாடிப்போய் விட்டது போலவும் கற்பனை முதுமையின் கனத்தால், எல்லோரும் களைத்தே போய் விடுகின்றனர்.

இதனால் ‘வயதான காலத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. பழைய பழக்கத்துடனே வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம்’ என்ற பத்தாம் பசலித்தனமான கொள்கைக்கு வந்து விடுகின்றனர்.

‘கிழட்டு நாய் புதிய தந்திரங்களைக் கற்றுக் கொள்ள முடியாது’ என்பது ஒரு மேனாட்டுப் பழமொழி.

அதுபோலவே, கிழமானவர்கள் புதியதாக எதையும் கற்றுக் கொள்ள முடியாது. புதிய பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தீர்மானித்து விடுகின்றனர்.

ஒரு சிலர் உடல் திறனை உபயோகப்படுத்தும் காரியங்களைக் கற்றுக் கொள்வது என்பது கஷ்டந்தான். அதற்காக, எதையுமே முதுமை ஏற்காது என்ற வாதத்திற்குப் பணிந்து விடுவது- பிடிசோற்றில் பெரிய யானையை மறைக்க முயல்வது போல் ஆகிவிடும்.

எதையும் புதிதாகக் கற்க முடியாது என்றால், எதையும் கற்க அவர்களுக்கு மனமில்லை என்பதுதானே பொருள். அறுபது வயதில் புதிய மொழியைக் கற்க முடியாது என்று கூறலாம். ஆனால் புதியமொழி பேசும் இடத்தில் போய் வாழ நேரிடும்போது, கற்கத்தானே வேண்டும்? அந்த மொழியைப் பேசித்தானே ஆக வேண்டும்.

பேசினால்தான் சாப்பாடு என்ற நிலை வரும்போது, வயதாவது மண்ணாவது? தேவை என்றால் தேகமும் பணியும். மனமும் மடங்கும். அடங்கும். வழி தேடி வாழும்.

 வாழ்க்கைக்குத் தேவை என்றால் புதியவையும் கற்கத் தூண்டும். அதற்கும் மேலாக புதியனவற்றைக் கண்டு பிடிக்கவும் தூண்டும் என்பது தான் உண்மை நிலையாகவும் இருக்கும்.

வயதாகும் போது உடலில் வலிமை குறைவதும், அடிக்கடி களைப்பு நேரிடுவதும் இயற்கைதான்.

அதனால் தான் முதியவர்கள் வாழ்க்கை முறையில் புதியன புக முடியாது என்பார்கள். ஆனால் முதியவர்களே தங்களது பழைய பழக்கவழக்கங்களையே விடாமல் கடைபிடித்துக் கொண்டு அதாவது அந்த வலைக்குள்ளே தாங்களாகவே கட்டுண்டு கிடக்கின்றார்கள்.

தங்களைப் பற்றியே நினைத்துக் கொண்ட, தாங்களாகவே பழையன எனும் சேற்றிலே புரளும்போது, புதியன புக ஏது இடம்? அந்தப் பழமையே புதுமையை மறைக்கிறது. முதுமையை விரைவுபடுத்துகிறது. மனதையும் கொடுமைப்படுத்துகிறது.

முதுமைக்குள் இளமை

முதுமையில் இளமையைக் காண்பது எப்படி? எப்பொழுதும் இளமையாகவே இருப்பது எப்படி?

இப்படித்தான்.

மாறிக் கொள்வது. தன்னை மாற்றிக்கொள்வது

புதிய பழக்கங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது.

பழைய வழக்கங்களை புதிய வழிகளில் பழகிக் கொண்டு, தம்மை மாற்றிக் கொள்வது.

மனதால் ஒருவர் மாறிவிடும்போது, உடலைத் தாக்கிய முதுமை சற்று பின்வாங்கவே செய்யும்.

மனிதன் பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவன். அன்றாடம் செய்கின்ற காரியங்களையே செய்து செய்து, செக்கு மாடாக சுற்றிப் பழகியவன்.

சிறு குழந்தைப் பிராயத்திலிருந்தே ‘நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் வற்புறுத்துகிறோம். கல்வி முறையும் அதைத் தான் வற்புறுத்துகிறது. சமுதாயமும் அதைத்தான் கட்டாயப்படுத்துகிறது.’

நல்ல பழக்கங்கள் என்பது உடலை வலிமையாக வைத்துக் கொள்ள, உள்ளத்தைத் தூய்மையாகப் பாதுகாக்க, நினைவுகளில் தெய்வாம்சத்தை நிலை நிறுத்திக் கொள்ள உதவுவதே காரணம்.

இளமைக் காலத்திற்கும், எழுச்சி மிக்க போராட்டப் பருவத்திற்கும், சிறு வயது பழக்க வழக்கங்கள் சரிதான். முதுமைக் காலத்தில் அவை ஓரளவு பயன்படும். அதற்கும் மேலே புதுப் பழக்கம் வேண்டுமே?

அது தான். மாற்றத்திற்கு உடன்படும் மனதும், மாறிக்கொள்ளும் பழக்க வழக்கமும்.

நடுத்தர வயதில் வாழ்க்கைக்காக வேலைப் பிரச்சினைகள். வீட்டுப் பளு, குழந்தை மனைவி குடும்ப பாரங்கள் இவற்றினூடே உழன்று கொண்டிருந்த பழக்க வழக்கம் - முதிய பருவத்திலும் முட்டிக் கொண்டு நிற்க முடியாது தான்.

துடிப்போடு உடல் பாரத்தைத் தாங்க முடியாது. ஓடி ஆடி உழைக்க உடல் இடம் கொடுக்காது. அப்பொழுது பழைய வாழ்க்கை முறைகளையே பின்பற்றி வாழ முடியுமா?

அதற்காக, கொஞ்சம் மாறித்தானே ஆகவேண்டும்? முடிந்தவரை பழக்கத்தை மாற்றிக் கொண்டு தானே ஆகவேண்டும்!

முதுமைக்குள் இளமையை முகிழ வைப்பது இலேசான காரியமா என்ன?

நினைத்தால் இலேசுதான். எளிதுதான்.

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு தான்.

மனம் படுத்தும் பாடு பணம் படுத்தும் பாட்டை விட அதிகம் தான்.

நினைத்தால் முடியும். நிகழ்த்திக் காட்டவும் முடியும்.

அதுவும் மனிதனால் தான் முடியும்? எப்படி?

மனிதன் என்பவன் அறிவு ஜீவியல்லவா!